அன்றொருநாள்: ஆகஸ்ட் 03 & 25 & 31:1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான்


இன்று ஸுபாஷிணி ஸ்பெஷல். அவருடைய தாயகமாகிய மலேஷியா விடுதலை அடைந்த தினம். ஒரு ஒப்புமை நோக்கில் பார்த்தால், இந்திய/மலேஷிய தேசாபிமான ஒற்றுமைகளும், வேற்றுமைகளும், அவற்றின் தாக்கங்களும், காலச்சுவடுகளும் வியப்புக்குறிய வரலாற்று உண்மைகளை புலப்படுத்தலாம். அதனால், மின் தமிழர்களிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். ‘அன்றொருநாள்: ஆகஸ்ட் 03’ இழையை, பின்னூட்டங்களுடன், ஒரு முறை படித்து விடுங்கள். அன்றைய இழைக்கு அவரும், விஜயராகவனும் பட்டை தீட்டியிருக்கிறார்கள். உடனடி உதவிக்கு, அவர்கள் அளித்த உசாத்துணைகளையும், இங்கு பதிவு செய்துள்ளேன். விஜயராகவன் விஷயதானம் செய்தார், ஸுபாஷிணியின் உவகை மதுரை மல்லிகை போல் மணந்தது. தேசாபிமானம் ஓடுகிறதல்லவா, இரத்தத்துடன் கலந்து. அதை பிரமேயமாக வைத்துக்கொண்டு துவங்குகிறது இன்றைய ‘அன்றைய தினம்’. ஒரு தத்துவஞானி கூறினர், ஆகஸ்ட் 25, 1950 அன்று சிங்கப்பூரில்:


“ இந்தியாவை விட்டு வெளியேறிய மாதிரி, பிரிட்டன் ஆசியாவை விட்டு, மரியாதையாக, ஓடி விடவேண்டும், விரட்டப்படுவதற்கு முன்னால்...நல்லிணக்கம் தலையெடுக்கவேண்டும்; பண்டித நேருவின் வழிகாட்டலில் ஆசியாவின் நடுவு நிலை கெட்டிக்கப்படவேண்டும். அவருடைய ஆளுமை நன்றாகத்தான் இருக்கிறது...கொரிய போரும், மலேயாவின் பயங்கரவாதத்தின் தாக்கமும், பிரிட்டனின்/ ஐரோப்பிய ராணுவங்களை இங்கேயெல்லாம் அனுப்பி, ஐரோப்பாவை வலிவிழக்கச்செய்யும் ...மூன்றாவது உலகயுத்தம் வராமல் தடுக்கவேண்டும். ஏனெனில், அது அணுகுண்டு போடவைக்கும்...ஐ.நா. சைனாவை ஏற்றுக்கொள்ள வேண்டும்...” ~ பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்.


ஏழு வருடங்கள் கழிந்து, ஆகஸ்ட் 31, 1957 மலேஷிய விடுதலை தினம். விழா எடுப்பது தான் இன்றைய இழையின் நோக்கம். பெளத்தம், ஹிந்து மதம், இந்திய வணிகம், சீன நாகரிகம், தமிழர் வாழும் முறை, சிங்கப்பூருடன் தொடர்பு/அது விட்டுப்போனது/ இந்தோனேஷ்யாவுடன் பிரச்னைகள்/ இஸ்லாமிய அணுகுமுறை/ அக்காலத்து ஜப்பான் வந்து போன கசப்பு/ ஆங்கிலேய கலோனிய ஆட்சிமுறையும் அடக்கு முறையும்/ கம்யூனிஸ்ட் கெரில்லாப்போர்/ சின் பெங்க் என்ற புரட்சிக்காரன்/ குறுநிலமன்னர்கள் போன்ற தலைப்புகளில் காலச்சுவடுகளை ஒழும்க்குப்படுத்தி எழுதத்தொடங்கினால், ஒரு நூலே எழுதவேண்டும். அதற்கு, ஒரு முறையாவது அங்கு சென்று, பலரை கண்டு, மூல நூல்களை தேடி, இயங்க வேண்டும். அது சாத்தியமில்லை; அதுவும் இன்றே! எனவே, ஒரு சிறிய தேசாபிமான அறிமுகம்:


“ஹரி மெர்டக்கா.”:

ஆகஸ்ட் 30, 1957 அன்று இரவு 11:58: பிரதமராகப்போகும் துங்கு அப்துல் ரஹ்மான் ராயல் ஸெலங்கோர் கிளப் படங்க் ~கோலாலம்பூருக்கு வருகை. ஜனசமுத்திரம். அலையன்ஸ் கட்சி யுவர்கள் அணி, அணியாக; இரு நிமிட இருள்; நடு நிசி; எங்கும் பகல் போல் வெளிச்சம். யூனியன் ஜாக் கொடி சம்பிரதாயமாக இறக்கப்பட்டது. எல்லோரும் ‘நெகரகு’ என்ற தேசீய கீதம் பாட, மலேயாவின் புதிய கொடி ‘பட்டொளி வீசி பறந்தது’. கூட்டத்தின் கோரஸ் முழக்கம் ஏழு முறை: ‘மெர்டெகா’. ஒளி என திகழ்ந்த பிரதமர் , ‘இந்த நன்னாள் மலேயாவின் மக்களின் வாழ்விலே இன்பத்திருவிழா’ என்று வாழ்த்தி சொற்பொழிவாற்றினார். ஆகஸ்ட் 31 காலையில் மெர்டெகா ஸ்டேடியத்தில் 20 ஆயிரம் மக்கள் கூடினர். இங்கிலாந்து மஹாராணியின் ஆணை படி வந்திருந்த கிளெவ்செஸ்டர் பிரபு விடுதலை நீட்டோலையை பிரதமரிடம் நீட்ட, அவரும் விடுதலை பிரகடனத்தை அறை கூவினார். கூட்டத்தின் கோரஸ் முழக்கம் ஏழு முறை: ‘மெர்டெகா’. காதில் விழுகிறது, இன்று எனக்கு. உமக்கு? எல்லோரும் ‘நெகரகு’ என்ற தேசீய கீதம் பாட, மலேயாவின் பழகிய கொடி உயர பறந்து அசைந்தாட, மக்களும் நடனமாடினர். பின்னர், இஸ்லாமிய தொழுகைக்காக ஒரு இசைக்குரல் அழைக்க, இறை வந்தனம் அளிக்கப்பட்டது.


ஒரு ஃப்ளேஷ்பேக்:


துங்கு அப்துர் ரஹ்மான், டன் டத்தோ ஸர் டன் செங்க் லாக், டன் வீ.டி.சம்பந்தம் ஆகியோர் , கம்யூனிசம் வலிவிழந்த்தைச் சுட்டிக்காட்டியதால், விடுதலை பற்றிய முடிவு ஃபெப்ரவரி 8, 1956 அன்றே எடுக்கப்பட்டது. நிர்வாகத்திட்டங்கள் செவ்வனே இருக்க வேண்டி, விடுதலை தினம் ஆகஸ்ட் 31, 1957 என்று குறிக்கப்பட்டது. ஐயன்மீர். பனிரெண்டு வருடங்கள் முன்னால், இந்தியாவின் விடுதலை தினம் ஆகஸ்ட் 15, 1948 என்று முடிவு எடுக்கப்பட்டது. பெருந்தலைகள் அதை ஒரு வருடம் முன்னால், ஆகஸ்ட் 15, 1947 என்று தெனாலிராமன் குதிரையின் கதையாக செய்து விட்டனரே. என்னத்தை சொல்வது, இந்த பரிதாபத்தை? ஆகஸ்ட் 8, 14, 15.17 இழைகளை மறுபடியம் படிக்க முனைந்தால், மேலும் எழுத எனக்கு ஏன் திராணியில்லை என்று புரியும். அது பழங்கதை. தொடர்கதை ஆகிவிட்டது, திட்டமிடாமலே.


வருடந்தோறும், விடுதலை விழா எடுக்குபோது அற்புதமான கற்பனையோடு புத்தம்புதிய இலக்குகளுடன் ஆடிப்பாடி மகிழும் மலேஷிய மக்களுக்கு, ஸுபாஷிணி மூலமாக த.ம.அ. வின்/மின் தமிழர்களின் வாழ்த்துக்களை தெரிவிப்போமாக. த.ம.க.வுக்கு வித்து இட்டதுடன், மலர் மாலையாக நமக்கு ஸுபாஷிணியை தத்து அளித்த டத்தோ நாடாயிற்றே, அது.


இன்னம்பூரான்

31 08 2011

http://3.bp.blogspot.com/_BFUviP-FYqE/TIJPm2CHi6I/AAAAAAAAAA0/JlTG0X7fBTE/s1600/scan0014.jpg



--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:43, 1 செப்டெம்பர் 2012 (UTC)










பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 1 செப்டெம்பர் 2012, 10:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,812 முறைகள் அணுகப்பட்டது.