அநாதிப் பொருளியல் -3 பாசவுண்மை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

Sutra 3 -EraNam

அழிவிலுண்மை அநாதிப் பொருளியல் 3 : பாசவுண்மை

முனைவர் கி. லோகநாதன்( உலகன்) 1997


அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 3-1

பாசவுண்மை


இனி பதியுண்டு, எண்ணிறந்த சித்துப் பொருட்களாகிய பசுக்களும் உண்டு, ஆனால் இப் பதியே, ஈசுவரனாக தானே சித்துமாய் அசித்துமாய் நின்று, ஓர் சிலந்தி தன்னுளிருந்தே எவ்வாறு அசித்தாகிய வலையினை உருவாக்குகின்றதோ அதேப் போன்று, தன்னுளிருந்தே அசித்தாகிய பாசத் தளைகளை உருவாக்குவன் ஆகவே அவை அநாதி பொருட்களன்று எனும் கூற்றை மறுக்க வெழுந்தது அடுத்து வரும் சூத்திரம். பதியைனைப் போல பசுக்களைப் போல பசுக்களை அணுத்துவப் படுத்தும் பாசங்களும் அநாதியே என்றும் அவைதான் யாவை என்றும் ஏரண நியதி பிழையாது நிறுத்தும் இச் சூத்திரம்


சூத்திரம் 3: பாசவுண்மை


சுட்டறிவி னான்மாச் சுட்டறி பெற்றிமை

உற்றிடல் பரனினெதிரா உயிரோ டநாதியே

நிற்றிடல் நீக்கரு பண்பின் பாசம்

விட்டிடல் வேண்டும் விருப்பும் தேற்றி


என்பது சூத்திரம். என் நுதலிற்றோவெனின், சர்ச வியாபியாய் எங்கும் பிரகாசித்து அனைத்தினொடும் அநந்நியமாய் நின்று சுட்டு யாண்டும் இல்லா பார்வையற்ற பார்வையின் சத்தறிவே தன் அறிவாய், சிவஞானமே தன் ஞானமாய் நிற்கக்கூடிய வல்லைமையுடைய ஆன்மா, பல்வகை சுட்டறிவுகளின் வழியே அறிந்து அல்லற்படும் பெற்றித்தாய் இருப்பதற்குக் காரணம் பதியினைப் போல பசுக்களைப் போல அநாதியே இருக்கும் பாசங்களால் ஆன்மாக்கள் பந்திக்கப்பட்டு இருப்பதே என்பதை உணர்த்துதல் கருதிற்று என்பதாம்



முதற் படிமெய்:


மேற்கோள்;


ஆன்மா அநாதியே ஆணவ மலத்தால் கட்டுண்ட ஒன்று என்பதாம்


ஏது:


சிவஞானந் தவிர்த்த பிற ஞானநிலைகளில் அறியாமையோடு வரும் சுட்டறியும் பண்பு இருப்பதின், எவ்வுணர்வும் இல்லா கேவலாவத்தையிலும் ஆன்மா இருப்பதின்


எடு 3:1-1


பார்வையற்ற பார்வை தவிர்த்த ஏனைய பார்வைகட்கு ஓர் வரம்பு இருப்பதின், இருந்தறிவு எண்ணறிவு என்ற வகையில் தோன்றும் அறிவுகட்கெல்லாம், ஓர் வரம்புண்டு என்பதுத் தெளிவு. இந்த வரம்பினை அறியாதே அறியும் ஆன்மா அந்த வரம்பினைக் கடக்கவே தான் எவ்வித வரம்பும் இல்லா ஞானம் கிட்டும் என்றும், பின் நோக்கிச் சென்று தன் ஆதி நிலை இதனால் எவ்வித உணர்வும் இல்லாத சுத்த கேவல நிலை என்றும் ஒருவாறு உணர்ந்து நிற்கும். இதனால் தன்னுள் அறியாமை இருள் பண்டே செறிந்திருக்கின்ற தென்று உணர்ந்து, அதனை துடைத்து ஒழிக்கவே தான் எவ்வித அறியாமையும் இல்லா சுத்த ஞானம் தனக்குறியதாக அமையும் என்று உணர்ந்து கற்றுக் கற்று மேம்பட முனைந்து நிற்கும் என்றவாறு. கற்றல் கண் ஊக்கம் இவ்வாறு இயல்பாகவே அமையும் ஒன்று என்பதாம்


எடு 3:1-2


கற்றல் என்பது அறியாமை நீக்கம் ஆகும். அது அகத்தேத் தோன்றும் ஓர் நுதிப்பின்பாற் பட்டது. இந்த நுதிப்பே ‘அது தான் ஆக வேண்டும்’ என்றவாறு ஆன்மாவை ஊக்க, ஆங்கு தோன்றும் குறிப்பே (intentitonality) கற்றல் எனும் வினை மெய்யாகுவதற்குக் காரணமாக அமைகின்றது. இப்படிப்பட்ட கற்றல் வினைகள், தன்னைத் தானேக் கடந்து தனக்கு அப்பாலாக நிற்கும் தன்னின் ஓர் எதிர்நிலையைத் தான் அடைதல் கருத்தது. ஆக எல்லா கற்றல் வினைகளும் ஆன்மாவிற்கு தன்னுள் செறிந்திருக்கின்ற அறியாமையை அதனால் தான் ஒருவாறு கட்டுண்டும் ஒன்றால் பந்திக்கப்பட்டும் இருப்பதை உணர்த்தாமல் உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறு அறிவை பந்தித்து ஆன்மாவை அஞ்ஞான இருளில் கிடத்துவதே ஆணவம் எனும் மலமாகும். இங்கு ‘மலம்’ என்பது அறிவில் இருளைச் சேர்ப்பது என்று பொருள்படும்.


எடு 3:1-3


இனி ஆன்மா கற்றுக் கற்று அறியாமை நீக்குவதோடு, பொறிலியப் பார்வை கடந்து நூலியப் பார்வை என்றும் இன்னும் அதற்கு மேலான பார்வைகள் என்றும் பெற்று காணாது நின்ற புவனங்களையும் கண்டு கண்டு ஞானம் வளர்ப்பதின், இந்த ஆணவ மலத்தின் வலுப்பிடி படிப்படியாக குறைவதைக் காண்கின்றோம். இந்த ஞான வளர்ச்சியினைக் கருத்திற் கொண்டு பின்னோக்கிச் செல்லச் செல்ல, தொடக்கத்தில் ஆன்மா முற்றாக இந்த ஆணவ மலத்தின் வலுப்பிடியில் இருந்திருக்க வேண்டும் என்றும் அப்பொழுது எவ்வித உணர்வும் ஒளியும் இல்லாத அந்தகாரத்தில் கிடந்திருக்க வேண்டும் என்றும் அறிய வருகின்றோம்.


எடு 3:1-4


இனி இதனால் இந்த மூல அந்தகாரத்தைத் துமித்து, ஆணவ மலத்தின் வலுப்பிடியை சிறிது தளர்த்தி ஒளி பாய்ச்சி உணர்வினை ஆகவே பார்வையினைத் தருவது, இறையருட் பதிவே என்றும் அறியக் கிடக்கின்றது. மேலும் இதனால் ஆணவ மலத்தை இறைவன் படைக்கவில்லை என்றும் ஆகின்றது. யாண்டும் ஒரே படித்தாக ஆதியும் அந்தமும் இல்லா, இடையே எவ்வித மாற்றமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய இறைவன், ஆன்மாக்களின் அறிவினைப் போக்கி அறியாமை இருளை பதிவிக்கும் சக்தியாக இருக்க முடியாது. ஒளியைத் தந்து இருளைக் கடியும் ஆதவன் போன்ற பதியாகிய இறைவன், தானே இருக்கின்ற ஞானச் சுடர்களை எல்லாம் போக்கும் ஒர் சக்தியாக எழ மாட்டான். ஆணவ மலம் இறைவனுக்கு ஓர் பகை பொருளாகும் என்பதாலும் அதனை படைக்கின்றவனாக இறைவன் இறுக்க மாட்டான் என்பது தெளிவு.


எடு 3:1-5


இனி பதியாகிய இறைவன் பஞ்கிருத்தியனாக இருக்க, ஆன்மாக்களின் மூல அந்தகாரத்தை விளக்க இன்னொரு அநாதி பொருளாக ஆணவ மலத்தைக் கொள்வது மிகை-- இறைவனது திரோபவமே போதுமானது எனில், அது ஏற்புடைத்து அன்று. ஆன்மா ஓர் வகையான உணர்வோடு இரூக்க, ஓர் வகையான பார்வைப் பெற்று முனைப்புடன் நின்று கற்றலில் ஊக்கங்கொண்டு நிற்கும் போது, தானே வினைமுதல் தானே நுதிப்பினைத் தேற்றி அதனை அடைய முயல்வதும் தானே என. இறையருளைக் காணாது நிற்குமாறு ஆன்மாக்களை ஆட்டுவதே மறைத்தல் எனும் திரோபவம் ஆகும்-- தன்னையேத் தான் திரையிட்டு மறைத்து தன்னை மறைபொருளாகவே இருத்துவது ஆகும். ஆன்மாக்கள் இதனை உணர்ந்தும் உணராதும் இருப்பதால் தான் , தானே பரன் என்றவாறு செயற்பட்டு முன்னேறும் என்றும் கண்டுள்ளோம். ஆணவ மலம் அந்தகாரத்தைத் தந்து எல்லா முயர்சிகளையும் முடக்க, திரோபவமோ, மறைப்பைக் காட்டி அதனைப் போக்க வேண்டும் என்றவாறு ஊக்கத்தின் மூலமாக இருக்கின்றது.


எடு 3:1-6


இனி பதியாகிய இறைவன், சர்வேஸ்வரனாக சாத்வீகம் இராசசம் தாமதம் எனும் முக்குணத்து பிரகிருதி மாயையே தன் உடம்பாகக் கொண்டிருக்க, இந்த தாமத குணம் மிகுந்திருக்கவேதான் ஆன்மாக்கள் அறிவில் அஞ்ஞான இருள் இருக்கின்றது ஆகவே ஆணவமலம் என்ற ஒன்று அநாதிப் பொருளாக இல்லை எனின், அதுவும் அடாது என்பதாம். முக்குணங்களில் ஒன்றாகிய தமத குணமும் ஓர் குணமே என்பதால், அறிவு ஏதாவது ஓர் வகையில் ஆனால் சற்று குறைந்த அல்லது மங்கிய நிலையில் இருக்கவேதான் அது தாமத குணமாகின்றது. இங்கு அறிவே இல்லாத நிலை அல்ல என்பதைக் காண்க. ஆணவ மலம் சுத்த அந்தாரத்தைத் தோற்றுவித்து இந்த முக்குணங்களே வெளிப்படா வகையில் ஒடுக்குவதின், அது ஓர் குணமே அல்ல என்பதொடு அந்த குணங்களையும் ஒடுக்கி வெளிப்படாது ஆக்கும் திறத்த ஒன்றுமாம்


தொடரும்




அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 3-2


3.2 இரண்டாம் படிமெய்


மேற்கோள்


இனி அஞ்ஞானவிருளைத் தரும் ஆணவ மலத்திற்கு வேறாக சிவப்பிரகாசத்தின் மூல மாயையும் அநாதியாக உண்டென்பது


ஏது:


இல்லையேல் பார்வைகளும் அவற்றால் எழும் பல்வேறு வினைகளும் பிறவும் மெய்ப்பொருட்களாக உலகில் நிலவாதாம்.


எடு 3.2: 1


பார்வைகள் இருப்பதின் அவற்றின் காரணமாக ஞானம் நேயம் ஞாதுரு என்று வகுக்க வரும் பொருள் வேறுபாடுகளும் உண்டாம். இங்கு ஞானம் என்பது அஞ்ஞான இருளைக் கிழித்தெறிந்து அறிவெனும் உணர்வாய் சிவப்பிரகாசமாய் நிற்பது. நேயம் என்பது அந்த ஞானபிரகாசம் எழுவதற்குக் காரணமாக இருக்கும் பொருள். ஒளிப் படர, அது யாதில் பட்டு ஒளிர்கின்றதோ அது பொழுது ‘அது’ எனும் பொருள் உணர்வு உதிக்கின்றது. இங்கு ஞாதுரு என்பது இந்த நேயத்தை விளக்கும் ஞானப்பிரகாசத்தை ஓர் உணர்வாகப் பெற்று மகிழும் ஓர் சித்துப்பொருள் ஆகும். இவ்வாறு ஞானங்களாய் நேயங்களாய் ஞாதுருக்களாய் பொருட்கள் திரட்சிப்பெற்று ஓர் உருப்பெற்று இத்தகைய வடிவங்களாய் நிற்பதற்கு மூலமாக நிறபது மூலமாயை என்பதாம் - கடத்திற்கு மூலமாகிய மண் போல , பல்வேறு அணிகட்கு மூலமாக இருக்கும் பொன்போல இதுவாம்.


எடு 3.2: 2


மேலும் ஞானத்திற்கும் காரணமாக நிற்பது மூலமாயையின் ஓர் பகுதியாகிய சுத்தமாயை என்றும், இவ்வாறு ஞானம் சுடர்வதற்கு நிலைக்களனாக நிற்கும் பருப்பொருட்களின் மூலமாக அசுத்தமாயை உண்டென்றும் கொளத்தகும். இங்கு பார்வைகள் வழி ஞானம் பிறக்க வழிசெய்யும் தனுக்கள் அந்தகரணங்கள் புறக்கரணங்கள் என்பவற்றோடு பலவேறு கருப்பொருட்கள், அவற்றிற்கு உரியதாய் விளங்கும் உரிப்பொருட்கள் இவற்றின் திரட்சியாகிய பலவேறு புவனங்கள் ஆகியவற்றின் மூலப்பொருள் அசுத்தமாயையாம். இந்த அசுத்தமாயையைத் திரித்து பல பொருட்களை உண்டாக்கும் மந்திர சொரூபங்கள், ஞானப் பிரகாசமாய் நிற்பதை பல்வேறு மொழிகளில் இருத்ததி அறிவிற் படுத்துதற்கு மூலமாக இருப்பது சுத்தமாயை என்றும் கொளத்தகும்.


எடு 3.2: 3


இனி இந்த மாயாவிருத்திகளின் வழி பிறக்கும் அறிவெல்லாம், ஓர் வகைய மயக்க அறிவுகளாகவே இருப்பதின், உயிர்களை மயக்கும் திறத்து இம்மாயா விருத்திகள் அதன் காரணமாக ஓர் தனித்த அநாதிப் பொருள் அல்ல, மாறாக ஆணவ மலத்தின் பிறிதொரு திரிபே எனின், அது அடாது. இந்த மூல மாயை எக்காரணம் கொண்டும் அந்தகாரத்தைத் தரும் ஆணவ மலத்தின் ஓர் கூறாக இருக்க முடியாது. மயக்க அறிவுகள் அல்லது உணர்வுகள் என்றாலும் அவை அறிவுகளே உணர்வுகளே யாகும். ஆணவ மலத் தாக்கத்தால் இந்த மயக்கங்கள் தோன்றலாம் எனினும், அவை ஆணவ மலத்தின் ஓர் கூறாக ஆகா. ஆணவ மலம் என்பது தோன்றி நிற்கும் அறிவுகளை உணர்வுகளை எல்லாம் விழுங்கி, எவ்விதப் பார்வையும் ஆகவே அறிவும் பிரகாசிக்க ஒட்டாது செய்து அந்தகாரமே நிலவும் படி செய்யும் ஒன்றாகும். இதற்கு மாறாக மூல மாயை, சுத்த மாயை என்றும் அசுத்த மாயை என்றும் திரிந்து ஞானப்பிரகாசம் யாதாவதோர் வகையில் ஆன்மாவிற்கு உரித்தாக்குவதின் அது ஆணவ மலத்தின் ஓர் கூறாக அல்லது திரிபாக இருக்க முடியாது என்பதாம். யாண்டும் ஒன்றிற்கொன்று விரோதிகளாகும்-- ஆணவ மலம் இருளைத் தர, மூல மாயை வெளிச்சத்தைத் தர இவை இரண்டும் ஒரே பொருள் ஆகாது.


எடு 3.2: 4


இனி ஆணவ மலத்தால் வரும் அந்தகாரத்தைத் துமித்து ஆங்கு ஒளி விளங்கும்படிச் செய்வது இறையருள் பதிவே என, இந்தப் பதிக்கு வேறாக ஞானப் பிரகாசம் புணர்த்தும் மூல மாயை எனும் அநாதி பொருள் உண்டெனக் கொள்ளல் மிகை எனின், அதுவும் அடாது என்பதாம். இறைவனாகிய பதியும், ஆன்மாக்களும் சித்துப் பொருட்களாக இருக்க, மூல மாயை என்றும் அதன் திரிபுகளாக கொளப்படும் சுத்த மாயை அசுத்த மாயை என்பனவும் அசித்துப் பொருட்களாகும். சித்தினிடத்து அசித்துத் தோன்றாது என்பதின்,. யாண்டும் சித்தாகவே இருக்கும் பதியிடமிருந்து எவ்வாற்றினும் அசித்துப் பொருளாகிய இந்த மூல மாயை தோன்றாது என்பதாம். இறைவன் அதனை ஆட்சி செய்து பல பொருட்களை- ஓர் குயவன் மண்ணைத் திரித்து கடம் குடம் போன்றவற்றை உருவாக்குவது போல, உருவாக்கலாம் எனினும். இறைவனிடமிருந்து தனித்த ஓர் பொருளாக இருந்தால் தான் இதுவும் முடியும் என்பதைக் காண்க.


எடு 3.2: 5


இனி இந்த அந்தகாரத்து ஆணவ மலம் போல, இந்த மூல மாயையும் அநாதியே என்பதாம், இல்லது தோன்றாது என்பதினும், ஞான இருளையேத் தரும் ஆணவ மலத்திற்கு எதிராக ஞானவொளியத் தரும் மூல மாயை மலத்திற்க்கு வேறாகவும் எதிராகவும் ஏறகன்வே இருந்திருக்க வேண்டும், ஆகவே ஆணவ மலத்தைப் போல இதுவும் அநாதியே இருந்திருக்க வேண்டும், இறைவன் அதன்ப் படைக்காது ஆனால் சுத்த மாயை என்றும் அசுத்த மாயை என்றும் திரித்து, சுத்த மாயையிலிருந்து அக்கரங்களை அக்கர சக்கரங்களை உருவாக்கியும், அசுத்த மாயையை அவற்றைக் கொண்டு தாக்கி நிலன் நீர் வளி விசும்பு தீ போன்ற பஞ்சபூதங்களைப் படைத்து அவற்றிலிருந்து பருப்பொருட்கள் போன்றவற்றைப் படைத்து இந்த அண்ட சராசரத்தையே தோற்றுவித்து ஆடுகின்றான. அதன்வழி ஆன்மாகளின் அஞ்ஞான இருளைப் போக்க பல்வேறு கற்றல் வினைகளையும் ஊக்கிவிக்கின்றான என்பதைக் காண்க.


எடு 3.2: 6


இனி இந்த மூல மாயை இப்படி அண்ட சாராசரங்கட்கெல்லாம் இடந் தந்து குடிலாக இருப்பதின், அதனை குடிலை என்றும் கூறுவர். மேலும் வண்ணகங்கள் வடிவங்கள் ஓசைகள் இவற்றின் வழியே வரும் இசைகள் என்றவாறும படைத்து பல்வேறு வேட்கைகளை எழுப்பி அவற்றைப் போக்கும் வகையில் புசிப்புக்களைத் தருவதுமாக அவை இருக்க, சார்ந்ததின் வண்ணமாக திகழும் பண்பின் ஆன்மாக்கள், இப்படிப்பட்ட புலன்கள் வழி வரும் இன்பங்களில் மயங்கி, கற்றுத் தேற்ற வேண்டியது மெய்யறிவுகளே என்றும் அவற்றால் வரும் ஞானப்பிரகாசங்கள் வழி ஆணவ மலத் தாக்கத்தைப் போக்கி சுத்தமாகி மீண்டும் பிறவாமை அருளப் பெற்று இறைவனை அடைவதே கடமை என்பதை மறந்து, பலவேறு போகங்களிலேயே ஆன்மாக்கள் மயங்கி கிடக்குமாறு செய்வதின், இந்த மூல மாயை மாயா மலம் என்றும் பகரப் படும்.


தொடரும்


அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 3-3

3.3 மூன்றாம் படிமெய்

மேற்கோள்:

இனி இவற்றிற்கு வேறாக ஆனால் மூல மாயையே தன் தாரகமாகக் கொண்டு கிடப்பதாக மூல கன்மம் அநாதிப் பொருளாக உண்டென்பது.

ஏது:

இல்லையேல் உலகில் ஆன்மாக்களின் தனுவும் செய்யப்படும் வினைகளும் இயற்கையாக மெய்யாகும் நிகழ்ச்சிகளும் மரபு வழிப் பட்டவையாக மெய்யாகாது போம் என்றவாறு.


எடு 3:3-1

உலகத்தில் மெய்யாகும் நிகழ்ச்சிகட்கும் வினைகட்கும் பொதுவாய பண்புகளாவன புடைபெயர்ச்சியும் தாறுமாறாக இல்லாது ஓர் நியதிக்குள், சங்கிலித் தொடர்போல பாரம்பரியமாக மெய்யாகும் வகையில் ஓர் மரபுவழிப் படுவதாகும். இவை அனைத்தும் பரவினைகளாகிய இறைவனின் பஞ்கிருத்தியங்கள் வழி மெய்யாகுபவை எனினும், ஆன்மாக்கள் வழி மெய்யாகும் செய்வினைகள், வினைமுதலாக ஓர் ஆன்மாவைக் கொண்டிருக்கின்றன. அவை செய்யப்படும் பொழுது, இது தனது செயல் என்றவாறு தற்கிழமைப் படுத்தப்படுவதும் உண்டு. மேலும் இவ்வினைகள் வழி இன்பத் துன்ப உணர்வுகளும் புண்ணியம் பாவம் என்ற அறஞ்சான்ற உணர்வுகளும் உதிப்பதின் மேலும் இவை வினைமுதலாகிய அந்த ஆன்மாவிற்கே உரித்தாதலின், ஆங்கு இவ்வாறு கட்டுகின்ற ஓர் பொருள் இருந்தாக வேண்டும், அதுவே ‘கன்மத் தளை’ என்பது.

எடு 3:3-2

இனி ‘கன்மத் தளை’ என்னுமோர் பாசப்பொருள் இல்லை, ஆன்மாவின் செய்வினை என்பதே ஓர் பிழையான கருத்து, உலகில் இருப்பதெல்லாம் பரவினைகளாகிய பஞ்சகிருத்தியங்களே, அவை ஆன்மாவின் மாட்டு வெளிப்பட அவை பிழையாக ஆன்மவினைகள் என உணரப்படுகின்றன என்பதொடு இவை கால இடம் என்ற வரையறையின்றி எங்கும் யானடும் உலகெல்லாம் வியாபித்து நடந்து கொண்டே இருப்பதின், நியதி எனும் தத்துவம் உண்டு ஆனால், ஆன்மாக்களை பந்திக்கும் கன்மத் தளை என்று ஒன்று இல்லை எனின், அற்றன்று. அநாதியே நிமலனாகிய இறைவனுக்கு பாவம் என்றும் புண்ணியம் என்றும், அறம் என்றும் அதற்குப் புறம்பாகிய மறம் என்றும் பகுக்க வரும் செயல்கள் இல்லையாம். இனி ஓர் செயல் அதனைச் செய்யும் ஆன்மாவின் நோக்கின் காரணமாகவே அது நல்லது என்றும் தீயது என்றும் இருவினைப் படும் என்பதின், அவை அன்பே வடிவாகிய அருளே வடிவாகிய இறைவனால் செய்யப்படுபவை ஆகா. ஆணவ மலத்தால் கட்டுண்டு அறியாமை இருளில் கிடக்கும் ஆன்மாவே அந்த மலத்தின் இழுப்பிற்கு ஆட்பட்டு பாவ காரியங்களைச் செய்ய வல்லதாகலின், இருவினைகட்கு அப்பாற்பட்ட பரவினைகட்கு வேறாக ஆன்மாவே வினைமுதலாக நின்று செய்யும் செய்வினைகள் உண்டென்பதாம்

எடு 3:3-3

இனி இச்செய்வினைகளில் பாரம்பரியக் கட்டு உண்டாம். ஓர் நோக்கினைத் தேற்றி அதனை அடைவான் பொருட்டு ஓர் வினையில் படும் பொழுது, ஒன்றினைச் செய்து முடித்து, அதன் பயனைக் கண்டு செய்வினையை சிறிது மாற்றி ஆயினும் முற்செய்த வினையொடு தொடர்பு அறாது செய்யவே தான் முடிவில் இச்சித்ததை அடைய முடியும். இங்கு ஓர் காரியம் பல செய்வினைகளின் தொடர்ச்சியாக வருவதைக் காண்க. ஒன்றினைச் செய்து முடிக்க அதன் வழி அதற்கு வேறாக ஆனால் மூல நாட்டத்தை அடைய உதவும் வகையில் அடுத்து வரும் வினை அமைய. இவ்வாறு செய்யப்படும் வினைகட்கு ஓர் தொடர்ச்சி உண்டாம். ஓர் வினை மெய்யாகி முடிய அதன் அடிப்படையில் பிறிதோர் வினை தோன்றி இவ்வாறு சங்கிலித் தொடர்போல இச்சித்தை அடைய உதவும் காரியங்கள் இருப்பதின், இந்த தொடர்ச்சிகுக் காரணமாக ஒன்று இருக்க வேண்டும் என்பது. அதுவே இந்த கன்மத் தளை என்பதாம்-- செயல் வழி பிறப்பதின், ஓர் தொடர்ச்சி உறவைத் தருவதின் அது ‘கன்மத் தளை’ எனப்பட்டது. இத் தொடர்ச்சி வீடுபேறு அடையும் வரை இருப்பதின், மரணம் எய்தி மறுபிறப்பு அடையும் போதும் இத் தொடர்ச்சு உண்டென கன்மத் தளையும் உண்டாம்.

எடு 3:3-4

இனி ஓர் வித்தினை விதைக்க. அது விளையும் போது நெல் நெல்லாகவும் கம்பு கம்பாகவும் மாறாது விளைவதின், வித்துக்குள் இவ்வாறு ஓர் அடிப்படை வரம்பினை நிறுத்தும் கட்டுகள் உண்டென்பது, இனி இவ்வாறே ஏனைய உயிர்களிடையேயும் என்பதால், உயிர்கள் தம்மோடு மறுபிறப்பிற்கு ஏதுவாக இத்தகைய கட்டுகளை கொண்டிருக்க வேண்டும். இதுவே ஓர் பிறப்பின் வடிவைத் தரும் ‘அச்சு” என்பது. இல்லது தோன்றாது என்பதின் இதுவும் ஏற்கனவே மூலமாயையில் பதிந்து கிடக்கும் ஒன்றாக அநாதிப் பொருளாக இருக்கவேண்டும். மிக மிக நுண்ணியதாக அதிக உறுப்புகள் இன்றி தோன்றும் நுண்ணுயிரிலும் அதற்கு அமையும் தனுவில் ஓர் கட்டு இருப்பதின், அது ஓர் அச்சு வழியே பிறப்பதாகும். இனி அச்சு மாறிப் பிறத்தல் உண்டென்பதின், இந்த அச்சு எனப்படுவது , மந்திரசொரூபங்களாக இருக்க வேண்டும் என்பதொடு, தனுவொன்றை உற்பவிக்க உதவும் மூல மாயையில் அடங்கி இருக்கும் ஒன்றாகவும் இருக்க வேண்டும். தனு ஒன்றை ஓர் ஆன்மாவிற்கு முதன் முதலில் அருளும் இறைவன், கன்மத் தளைகளாக பயன்படும் மந்திரசொரூபங்களுடனேயே மூல மாயையிலிருந்து அந்த மூலத் தனுவை அருளுகின்றான். இனி அச்சு மாறுவதும் உலகத்தில் நடக்கும் ஓர் உண்மையென, செய்யப்படும் வினைகளே இந்த அச்சுகளை மாற்றும் தன்மையவாம்

எடு 3:3-5

இனி இது உண்மையெனில், அச்சு மாறினாலும் ஓர் அச்சுடனேயே பிறக்க வேண்டும் என்பதொடு, பிறப்பறுத்து வீடுபேறு அடைதல் யாண்டும் இயலாது ஆகி, பிறந்து இறந்து இந்த பொல்லாத சம்சாரத் தளையில் கட்டுண்டவாறே கிடக்கும்படி இந்த கன்மத் தளை செய்யும் ஆகவே அது பிழையான ஓர் கருத்து எனில், அதுவும் பொருந்துவது அல்ல, ஓர் நோக்கினைத் தேற்றி தனக்கென ஓர் செயலைச் செய்யும் பொழுது ஈட்டப்படும் கன்மங்களே ஆகாமியம் என்பது. இதில் மறுபிறப்பிற்கு ஏதுவாக அமையும் ஓர் பகுதியே பராப்த கன்மம் எனப்படுவது. இவற்றின் மூலமாக ஓர் கிடங்குபோல் வற்றாது கன்மக் கட்டுகளை தந்து கொண்டே இருப்பது மூலமாயையில் உள்ள சஞ்சிதம் என்படுவது. இங்கு தனக்கென ஓர் செயலைச் செய்யாது அருளே வடிவாகி செய்வதெல்லாம் சிவச் செயலேயாக, ஆகாமியம் ஈட்டபப்டாது போய் அதனால் பிராப்தமும் இல்லாது போகின்றது. இனி இறையருளின் ஞானபிழம்பாக ஆன்மா சிவஞானம் மகிழும் பொழுது அது தனுவிலும் படர, அங்கு ஏறகனவே இருக்கின்ற கனமச் சுவடுகள் அழிக்கப்பட்டு வெளியேற்றப் பட ஆன்மாவிற்கு மீண்டும் ஓர் தனுவோடு மறுபிறப்பு இல்லாது போய்விடும் என்பதைக் காண்க.

எடு 3:3-6

இனி இதுவும் ஏற்படைத்து அல்ல, ஆன்மா அநாதி என்பதால் வீடுபேற்றின் பிறகும் அது அழியாது இருக்கின்றது ஆகவே அது யாதாவதோர் தனுவில் தான் இருக்கவேண்டும், ஆகவே கன்மத் தளைகள் முற்றிலும் நீக்கப்படாது எனின், அற்றன்று. ஓர் ஆன்மா சிவஞானம் பெற்று ஞானப்பிழம்பாகச் சுடரும் பொழுது. அந்த கன்மத் தளைகளில். மீண்டும் ஓர் தனுவோடு பிறவாது மந்திர சொருபமாகே தொடரும் பண்பினை மகிழும் வகையில், கன்மத் தளை இல்லாது போம் என்றது. மீண்டும் மீண்டும் ஓர் தனுவோடு பிறந்து பின் இறந்து அல்லற்படுவதிலிருந்து விடுதலை அடைதலே மீண்டும் பிறவாமை ஆகும். முத்தி அடையும் ஆன்மா மீண்டும் ஓர் தனுவோடு பிறவா வகையில் ஆனால் மந்திரத் திருமேனியில் தெய்வ உலகமாகிய மந்திர உலகில் வாழும் வகையில் மந்திர ஈட்டம் மகிழ்வது கூடும் என்பதால், முரண்பாடுகள் யாதும் இல்லை என்பது. இங்கு ‘கன்மத் தளை’ என்பது, மீண்டும் மீண்டும் அசுத்த மாயா விருத்தியாகிய ஓர் தனுவில் பிறக்குமாறு செய்யும் கட்டுகள் ஆகும். அது நீக்கப்பட, தனுவோடு கூடிய மறுபிறப்பு இல்லாது போம் என்பதுவும் ஆன்மா அழியாது மந்திர சொரூபியாகவேத் தொடரும் என்பதுவும் தெளிவாகின்றது.

தொடரும்


அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 3-4


3.4 நாங்காம் படிமெய்


மேற்கோள்;


இனி இந்த கன்மத் தளைகட்கு வேறாக அவற்றோடு இயங்கும் சிவதத்துவங்கலாகிய நாதமும் விந்துவும் அநாதிப் பொருட்களாக உண்டென்பது.


ஏது:


இல்லையேல் உயிர்கள் ஆணென பெண்ணென இரண்டும் கலந்த அலியென பிறவாது போம்


எடு 3:4-1

பொறிலியப் பார்வை தொடங்கி பார்வையற்ற பார்வை வரை பலவகைப் பார்வைகளை மகிழும் ஆன்மா, அவற்றின் வழி சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் எனப்படும் அவத்தைகளையும் அனுபூதிகளாக உற்று ஞானம் பெறும். இவற்றில் கருப்பொருள் உலகோடு கனாவுலகு புராணவுலகு அருட்சோதியுலகு என்றவாறு பலவகையான உலகுகளையும் கண்டு பொருளறிவினைப் பெருக்கும். இவற்றில் ஐம்பொறிகள் வழி அறிய வரும் உருவுலகும், ஞானக் கண்ணின் கடப்புரு காண் திறத்தின் அறியவரும் அருவப்பொருள் உலகென்றும், மேலும் யாதாவதோர் வகையில் தரிசனமாகும் திருட்டவுலகென்றும், மறைந்தே சூக்குமாக நிற்கும் அதிருட்டவுலகென்றும் வரும். மேலும் இவ்வுலகுகளின் நுழைவுகள் தரும் ஞானவிளக்கங்களை நிறுத்தவும் அறிவிற் படுத்தி சொற்படுத்தவும் பல்வேறு மொழிகள் இருக்கவும் வேண்டும். ஆக இவ்வாறெல்லாம் பார்வைகளும் பார்வைப்படு உலகுகளும் அவத்தைகளும் மொழிகளும் நிற்பதின் , இவற்றிற்கெல்லாம் மூலமாக இருப்பது மந்திரங்களே யாம் என்றவாறு. இம்மந்திரங்களே எல்லா வகை உலகுகலையும் ஊடுறுவி மேலே விளக்கப்பட்ட அனுபூதிகளை எல்லாம் தரும் என்றவாறு.

எடு 3:4-2

இனி இவ்வாறு பலவகை உலகங்களாக பிரிந்து விரிந்து மூலமாயை திரிபுற்று நிற்க, இந்த உலகங்களிலும் அதன் உறுப்புக்களாக நிற்கும் தனி பொருட்களிலும், அவயவி-அவயவம் என்றவாறு ஓர் அமைப்பு உண்டென்பது காணக் கிடக்கின்றது. பொருட்கள் அனைத்தும் இவ்வாறான முழுசுகளாம்(gestalts) இனி இவ்வாறு பொருட்களை உருவாக்கும் மந்திரங்கள் செயல்பட்டு வடிவமில்லா மூலமாயைத் திரித்து வடிவுகளை பல்வேறு இயல்புகளை குணங்களைத் தருவதின் அவை ‘யந்திரங்கள்’ எனப்படும். இந்த யந்திரங்கள் அனைத்தும் 51 அக்கரங்களில் சில அக்கரங்களைத் தேர்ந்து தொகுத்து சக்கரங்கள் ஆக்கி செயல்பட வைப்பதாகும். இங்கு எழுத்துக்கள் தனித் தனியே இருக்க, அவற்றில் சிலவற்றைத் தேர்ந்து சொற்களாக்குவது போலும், இந்த சொற்களில் சிலவற்றைத் தேர்ந்து கிளவிகள் ஆக்குவது போலும் இங்கு.


எடு 3:4-3

இனி ஓர் உடம்பொடு உலகில் உலாவரும் உயிர்கள் ஆணென பெண்ணென அலியென உருப்பெற்றும் அதற்கேற்ப குணம் பெற்றும் வருவதின், இத்தகைய உடல்களை சனிப்பிக்கும் யந்திரங்களும் மூல மாயையைத் தாரகமாகக் கொண்டு இருக்கவேண்டும். இவையே சிவதத்துவங்களாகிய நாதமும் விந்துவும் ஆகும். இவை நாதத்தின் உகாரம் என்றும் விந்துவின் அகாரம் என்றும் இவற்றை இணைக்கும் மந்திரம் மகாரம் என்றும் அழைக்கப்படும். இவை ஓரெழுத்து எனப்படும் ஓங்காரத்தின் விருத்திகள் என்றும் கூறப்படும், இவற்றை இங்கு உகார யந்திரம் அகார யந்திரம் என்று கூறுவதும் பொருந்தும், இறைவன் இந்த நாதத்தோடு ஒன்றித்து நிற்க ‘சிவன்’ என்றும் விந்துவோடு ஒன்றித்து நிற்க ‘சக்தி’ என்றும் அர்த்தநரியாக இணைந்து நிற்கும்போது சிவசக்தி என்றும் கூறப்படும். இனி சுத்த நாதவிந்துவின் புணர்ச்சி சிவலிங்கமாக மூல மாயையில் வடிவெடுக்க, ஆணென பெண்ணென பால்பாகுபாட்டொடு உயிர்கள் அசுத்தமாயையில் வடிவெடுக்கும் என்பதாம்.

எடு 3:4-4

இனி இந்த நாத விந்துக்கள் மூல இழுப்புக்களாகிய இடகலை பிங்கலை சுழிமுனை நாடி மேரு நாடி என்றவாறு பல மூல நாட்டங்களை அகத்தே இருத்தி ஆன்மாக்களை இச்சை வயப்பட்டனவாக ஆக்கி பலவேறு பார்வைகளை உடைத்தாய், அதற்கேற்ப அறிவுகள் அனுபூதிகள் உடைத்தாய் ஆக்கும் என்பதொடு இனி நாட்டங்களே வினைகள் பிறப்பதற்கு மூலமாக இருக்க, இவையே உயிர்கள் பலவகையான வினைகள ஆற்றும்படி ஊக்குவிக்கும் என்பதுவுமாம். இனி இடகலை நாடியின் எழு அதிகார வேட்கையின் அறிவு வேட்கையின் தொழிற்பாடுகள் நாதத்தால் என, இன்ப நாட்டத்தின் பிங்கலை நாடியின் தொழிற்பாடுகள் விந்துவின் ஆட்சியால் வருவதென, இரண்டும் கலந்து வரும் சுழிமுனை நாடிச் செலவின் தொழிற்பாடுகள் ஞான வேட்கையாக இருக்கும் என்பர். இவற்றைக் கடந்து மேரு அல்லது குரு நாடியின் ஆட்சிக்கு ஆளாகுவர், நாதமும் விந்துவும் பிரியாது கலந்தே இருக்கும் ஓங்காரத்தின் ஆட்சிக்கு ஆளாகி வேண்டுவதெல்லாம் வீடுபேறு மற்றொன்றுமில்லை என்றவாறு வாழ்வர் என்பதாம்

எடு 3:4-5

இவ்வாறு உற்பவிக்கும் முத்தி வேட்கை, இந்த முடிவான நிலைக்கு முன், முத்தி முன்னறிவாகவே நின்று ஆன்மாக்களின் ஞான வாழ்க்கையை நிறுத்தும். இதற்குக் கீழான வேட்கைகளில் சந்தான விருத்திக்கு மூலமாகிய எல்லா உயிர்கள் மாட்டும் வலுவாக நிற்கும் காம வேட்கையும் இந்த நாத விந்துக்களால் உருவாகுவதேயாம். நாதம் மிக்கிருக்க விந்து குறைந்திருக்க அமையும் பிறப்ப ஆண் பிறப்பென, விந்து மிக்கிருக்க நாதம் குறைந்திருக்க அமையும் பிறப்பு பெண் பிறப்பாகும். இங்கு ஆண்பிறப்பில் விந்து குறை இருப்பதால் அங்கு விந்து பசி உண்டாம். பெண் பிறப்பில் நாதம் குறைந்திருக்க நாதப் பசி உண்டாம். இந்தப் பசிகளே காமவேட்கையாய் அரும்பி, ஓர் ஆணை பெண்னை நாட வைப்பதும் ஓர் பெண்ணை ஆணை நாட வைப்பதும், இருவரும் கலந்து புணர்ந்து வாழ்ந்து அதன் வழி சந்தான விருத்தி நடப்பதுமாக இந்த நாத விந்து நர்த்தனம் நடக்கின்றது. இனி இவ்வாறு மிக்கும் குறைந்தும் இல்லாது போய்விடின் ஆணுமல்லா பெண்ணுமல்லா அலி பிறப்புகள் உண்டாகும். இவ்வாறே உற்று அறியும் திறத்து ஓர் அறிவு உயிர்களாகிய தாவரங்களிடையேயும் என்பதைக் காண்க.

எடு 3:4-6

இனி இந்த அக்கரசக்கரங்களாகிய யந்திரங்களின் தொழிற்பாட்டினாலேயே எல்லா பொருட்களின் மூலங்களாக ஏறக்குறைய 150 தனிமங்களின் தோற்றமும் எனக் கண்டு கொள்க. மூலமாயை சுத்த மாயை அசுத்த மாயை என்று பிரிந்த போது அவை உருப்பெற்று திரண்டு நில்லாது சத்தி மயமாகவே இருக்கும். இந்த சுத்த சத்தியை பகுத்து வகுத்து திரித்து உருக்கி கலக்கி திரட்டியே பொன் வெள்ளி காரியம் நீர் என்றவாறு பல தனிமங்கள் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலான உலகியல் பொருட்கள், இந்த அண்ட சராசரமாயும் அவற்றை நிரப்பும் தனிபொருட்களாகவும் தொகுதிகளாகும் நிற்கும் எல்லா உருவ அருவ பொருட்களும் இந்த யன்ந்திரங்கள் வழி மூல மாயையை திரித்து உருவாக்கப்படுபவையே யாகும். அதேப் போல பிறவகை யந்திரங்கள் வழி இந்த திரட்சி வடிவங்களை கட்டி நிற்கும் யந்திரங்களை அகற்ற, மூல மாயையின் சத்தி வடிவம் வெளிப்பட்டு வெடித்து பெருஞ்சேதத்தையே கொண்டு வரும் என்பதைக் காண்க. அணுகுண்டு போன்றவை எல்லாம் இத்தகையவே என்று காண்க.

தொடரும்


அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 3-5

3.5 ஐந்தாம் படிமெய்

மேற்கோள்

தானே தனக்குத் தலைவனாகிய தற்பரனாகிய பதி ஒன்றே பலவல்ல எனினும் ஆன்மாக்களை இரட்சிக்கும் பொருட்டு பல மூர்த்திகளாக வெளிபட்டு அருளுவன் என்பது.

ஏது:

மூலமாயை மூலகன்மம் அக்கரங்கள் சக்கரங்கள் சிவதத்துவவங்களாகிய நாத விந்துக்கள் போன்றவை அறிவில்லாத அசித்துக்கள் என்பதின்

எடு 3:5-1

ஆன்மாக்கள் பொறிலியப் பார்வை தொடங்கி பார்வையற்ற பார்வை வரை பல பார்வைகளை உடையன என்று கண்டுள்ளோம். இவ்வாறான பார்வைகள் வளர்ந்து மலர்ந்து உயர்ந்து செல்வதற்ககு இறையருளே மூல காரணம் என்றும் அறிந்துள்ளோம். இனி இது எவ்வாறு நடக்கின்ரதெனில், இந்த பார்வைகள் ஊடே உடங்கியைந்து பார்க்கின்றவனாக இறைவன் நின்று, ஓர் உயிர் ஒன்றினை எவ்வாறு காண்கின்றதோ அவ்வாறே பிழையற தானும் கண்டு உயிர்கள் பண்பினையும் பக்குவத்தையும் அறிவன். இவ்வாறு அறிந்த பின், அந்த உயிர்களை அடுத்த பக்குவ நிலைக்கும் உயர்த்த, அந்த உயிர் காணுமாறு அதன் பார்வைக்குள் ஓர் நுதிப்பினை பதிவிப்பன் என்பதொடு, அதனை அந்த உயிர் பற்றி அது தானாக வேண்டும் என்ற விருப்பில் தக்க வினைகளை ஆற்றவும் முடுக்குவன் என்பது.


எடு 3:5-2


இனி இவ்வாறு ஆன்மாக்களின் அறிவிலே உற்பவிக்கும் நுதிப்புக்கள் அனைத்தும் சுட்டுணர்வுகளையே தேற்றுவதின், ஆன்மாக்களோடு அவையே தானாக நின்று உள்ளதை உள்ளவாறே காணும் இறைவனும் சுட்டுணர்வினன் ஆகின்றான் ஆகவே பிழையாக உணர்தலும் நடக்கும் எனின், அற்றன்று. ஆன்மாக்களின் பார்வையூடே இரண்டறக் கலந்து நின்று காணுகின்ற இறைவனுக்கு யாண்டும் அவனுக்கு இயல்பாக அமைந்த சுட்டு யாதும் இல்லாத பார்வையற்ற பார்வை வழியே தான் காணுவன் ஆகவே ஆங்கு பிழைகள் தோன்றுவதற்கு இடமில்லை என்றறிக. யாண்டும் மாறாது ஒரே படித்தாய் நின்றவாறு எல்லா ஆன்மாக்களளயும் தனது பார்வையாகிய சுட்டில்லா பார்வை வழியாகவே அறிந்து ஆடுமாறு இறைவன் பலவாறு ஆன்மாக்களை ஆட்டுகின்றான். இதனால் இறைவன் மாட்டு பிழையுற உணர்தல் யாண்டுமில்லை என்றவாறு.


எடு 3:5-3


இனி இவ்வாறு இறைவன பதிவிக்கும் நுதிப்புக்கள் வழியே தான் வினைகள் ஆற்ரப்படுவதின், கற்று அறியாமை இருள் போக்கலும் இதன் வழியே தான் நடக்கின்றது என்பது தெளிவு. மூல மாயையின் விருத்திகளை இயல்புகளைக் கற்று, அதனைப் பற்றிய அஞ்ஞானம் நீக்குதல் பொருட்கல்வி என, எண்ணிறந்த சித்துப்பொருட்களாகிய ஆன்மாக்களைப் பற்றி, அவற்றின் குணம் திறன் ஆகியவை பற்றி கற்று அறியாமை போக்குதல் தற்கல்வி ஆகின்றது. இனி இவறிற்கு மேலாக இறைவன தன்னையே ஆன்மாக்களுக்கு உணர்த்தி பதிக் கல்வி தேற்றும் வகையில் தன்னையே ஆன்மாக்களின் பக்குவதிற்கு ஏற்ற முறையில் பல வடிவங்களில் காட்டியருளி அதன் வழி தன்னைப் பற்றிய ஞானத்தை வளர்த்து அறியாமை போக்குவன் என்பதாம். இவையே பல மூர்த்தங்களாக வெளிப்பட்டு, ஆன்மாக்க்ளை ஈர்த்து அந்த மூர்த்தங்கட்கு கோயில் எழுப்பி திருவிழா எடுத்தல் வழிபாடுகள் பல நடத்தல் என்றவாறு சமயஞ் சார்ந்த வாழ்க்கையை ஊக்குவிப்பன் என்றவாறு


எடு 3:5-4


இனி உலகில் நடக்கின்ற அனைத்தும் பரவினைகளாகிய பஞ்சகிரித்திய்ங்கள் என்றும் அவை அருளல் மறைத்தல் என்ற இரு மூலவினைகளின் வழி தோன்ற்றுவித்தல் நிலைப்பித்தல் அழித்தல் என்ற மூவினைகள் என்றவாறு இந்த ஐந்தொழிகள் இருக்கும் என்றும் கண்டோம். இனி இவற்றின் உலகியல் வாழ்வியல் விருத்திகளாக மக்களது வாழ்க்கையில் நடக்கின்றவை திருவிளையாடல்கள் என்று கூறப்படும். இந்த திருவிளையாடல்கள் ஊனக் கண் பார்வைக்கு தோன்றாதெனினும் , நுதல்விழிப் பார்வைக்கு தெய்வங்களால் நடத்தப்டும் நாடகங்கள் என்று தென்படும் என்பதாம். இதனால் உறக்கனவுகள் விழிக்கனவுகள் என்றவாறும் மெய்யாகும் நுதல்விழிப் பார்வைக்கு இந்த தெய்வங்கள் தோன்றுவதோடு வாழ்க்கயில் உலகில் நடக்கும் அனைத்தையும் அவையே செய்து முடிக்கின்றன என்ற அறிவும் மெய்யாகும் என்றது. இவ்வாறு தனக்கென எவ்வுருவும் இல்லா இறைவன் பலவேறு மூர்த்தங்களாக வடிவெடுப்பதின் காரணம், இப்படிப்பட்ட திருவிளையாடல்களை நடத்தி உயிர்களுக்கு ஞானம் புகட்டி முடிவில் வீடுபேறு அருளி இரட்சிப்பதற்கே என்றறிக.



எடு 3:5-5


இனி இந்த மூர்த்தங்கள் சிறுதெய்வங்கள் பெருதெய்வங்கள் என்றும் ஆண் தெய்வங்கள பெண் தெய்வங்கள் இரண்டும் கலந்த அர்த்த்நாரி தெய்வங்கள் என்றும் மேலும் மானிட உருவ அமைப்பை மாத்திரம் கொண்டவையாக மற்றும் பல மிருகங்களின் உருவக் கூறுகளையும் கொண்டிருப்பவையாக மற்றும் இன்னும் பலவகையாக இருக்கின்றன. இனி இவ்வாறு வருவது எவ்வாறு எனின், தனக்கென எவ்வடிவமும் இல்லா இறைவன் பல அக்கரங்களால் இயன்ற யந்திரங்களோடு ஒன்றித்து நிற்கவே தான் இப்படிப்பட்ட மூர்த்த வடிவங்கள் உளதாகின்றன. இந்த அக்கரசக்கரங்களோடு சிவ தத்துவமாகிய நாதம் சேர்ந்திருக்க ஆண் வடிவங்களும் விந்து சேர்ந்திருக்க பெண் வடிவங்களும் இரண்டும் கலந்திருக்க அலிவடிவங்களும் உருவாகின்றனவாம். இவற்றோடு இன்னும் சில தெய்வ இயல்புகளை உணர்த்த மிருக வடிவங்களையும் உலகில் எவ்வாறும் வெளிப்படாதிருக்கின்ற இன்னும் பல கூறுகளை உடையவனவாக படைக்கப்படுகின்றனவாம்


எடு 3:5-6


இனி இப்பேற்பட்ட தெய்வ வடிவங்களுக்கு வேறாகவும் எதிராகவும் அசுரர்கள் அரக்கர்கள் என்றவாறு பெண்ணும் ஆணுமாய் மற்றும் மிருகங்களோடு கலந்தும் கலவாதுமாக பல விகார கொடூர வடிவங்களை உடைத்தாய் இந்த தெய்வ உலகு விளங்குகின்றது. ஆனால் இங்கு இவையும் அக்கரசக்கரங்களால் இறைவன் தோற்றுவிக்கும் மூர்த்தங்களே என, அவை சுரர்கட்கு மாறாக எதிராக இருப்பதற்கு காரணம், அவை சுத்தமாயையைத் தாரகமாகக் கொண்டு சுத்தமாக இல்லாது, ஆணவ மலம் ஊடுருவி திரிக்க இவ்வாறு தெய்வங்கட்கு பகை வடிவங்களாக விகார வடிவங்களாக எழுகின்றன என்பதாம் இதனால் தான் புராணங்களிலும் இதிகாசங்களிலும், தெய்வங்களுக்கும் இந்த அசுர சக்திகட்கும் பலவகையான போர்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன என்பதொடு வெற்றி யாண்டும் இந்த தெய்வ வடிவங்களுக்கே யாம். இனி இவ்வாறு சுர அசுர வடிவங்களாக தோற்றுவிக்கும் இறைவன் தன்னையே ஆன்மாக்களுக்கு சோபான முறையில் படிப்படியாக காட்டி அருளி அவர்கள் ஞானத்தை உயர்த்த, மேலான பக்குவத்தில் இவ்வாறான மூர்த்தங்களைப் போக்கி தன்னை மந்திர சொரூபத்திலேயே காட்டி அருளுவன் என்பதுமாம். மேலும் இதனையும் கடந்து முடிவில் தன்னை அருட்பெருஞ்சோதியாக காட்டி சிவஞானம் போதிக்கவும் செய்வன் என்பதாம்


தொடரும்


அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 3-6


3.6 ஆறாம் படிமெய்

மேற்கோள்;

இனி இவ்வாறான பாசத் தளைகளில் கட்டுண்டு பல்வேறு திருவிளையாடல்கட்கு ஆளாகும் ஆன்மா அவற்றினின்று விட்டு நீங்கிடல் வேண்டும் எனும் விருப்பொடும் நிற்கும் என்பது

ஏது:

எல்லா ஆன்மாக்கள் அகத்தும் முத்தி முன்னறிவு உண்டென்பதின்


எ-டு 3.6:1


மேலே அநாதிப் பொருட்களாக உண்டென நிறுத்தப்பட்ட ஆணவ மலம் மூலமாயை மூலகன்மம் என்பவற்றோடு கூடிய தொடக்கு ஆன்மாவின் அறிவினை சுட்டறிவாகவே திகழ வைக்கும். மேலும் சிவதத்துவங்களாகிய நாத விந்துக்களை அசைத்து பல்வேறு மூர்த்திகளை உற்பவித்து ஆன்மாக்களை ஆட்சி செய்து உள்ளுணர்வாக பல ஞானங்களை உணர்த்தும் போதும் அவையும் பெரும்பாலும் சுட்டுணர்வாகவே திகழ்கின்றன. அதனால் அமையும் பார்வைகளும் சுட்டுப் பார்வைகளாகவே இருக்கின்றன. இனி இவ்வாறு இந்த ஆன்மாக்கள் இப்படிப்பட்ட சுட்டு திகழும் பார்வைகள் வழி சுட்டுணர்வுகளையே பெற்று மகிழ்ந்து சிறக்குங்கால், அவை அனைத்தும் அசத்தே சத்தல்ல என்ற தெளிவு பிறக்கும்போது, அவற்றை விட்டு நீங்கி என்றும் மாறா படித்தாக நிற்கும் சத்தறிவினையே பெற்று மகிழ வேண்டும் என்ற விருப்பும் உடன் வரும் என்றது. இதனால் இந்த அநாதிபொருட்களின் பிடியிலிருந்து நீங்க வேண்டும் என்ற வேட்கையும் எழும் என்றது.


எ-டு 3.6:2


இனி பொறிலியப் பார்வை நூலியப் பார்வை நுதலியப் பார்வை என்றவாறும் இன்னும் பலவாறும் பல பார்வைகளை அடுத்தடுத்து பெற்று காணமுடியாதிருந்த பலவற்றைக் கண்டு அறிவின் ஆழத்தை பரப்பினை விரிவினை அதிகரிதுக் கொண்டு செல்லும் ஆன்மா, அதனையே மறித்து நோக்கி சிந்தித்துத் தெளிய, தான கட்டுப்பட்ட ஓர் சித்துபொருள், தன் அறிவினை பார்வையினை கட்டி விடுவதாக இந்த பாசத் தளைகளே இருக்கின்றன என்று அறிய வர, இந்த பாசங்களின் வலுவான பிடியிலிருந்து கழன்று, சுத்தமாகி அனைத்தையும் பிழையற கண்டு மகிழ வேண்டும் என்ற விருப்பினைத் தேற்றும். அதுபொழுது சுட்டுகள் திகழும் பார்வைகட்கு மாறாக வேறாக எவ்வித சுட்டும் இல்லாத பார்வையற்ற பார்வையைத் தான் அடைய வேண்டும் என்ற விருப்பினையும் தேற்றி அதனை அடைவான் பொருட்டு பல தவங்கள் செய்யும் என்றவாறு.


எ-டு 3.6:3


இனி பார்வையற்ற பார்வையின் எவ்வித சுட்டும் இல்லாத பரஞானமே சிவஞானம் என, அதுவே ஞானத்தின் எல்லை என, அதனை அடையும் வேட்கையே முத்தி முன்னறிவு என்பதும் தெளிவாகின்றது. என்று ஆன்மாக்கள் அகத்தே உணர்வு உதிக்கின்றதோ அன்றே இந்த முத்தி முன்னறிவும் புதைந்து கிடக்கும் ஒன்றாக அங்கே இருந்தவாறு ஆன்மாவை பதமுத்திகள் வழியாக பரமுத்திக்கு இட்டுச் செல்லும் ஓர் ஆழமான ஊந்தலாக இருந்துகொண்டே இருக்கும். அறிவு வளர வளர, இந்த முத்தி முன்னறிவும் படிப்படியாகத் தெளிவாக முடிவில் ஆன்மா முமுக்சுவாக எழுந்து வேண்டுவதெலாம் வீடுபேறே என்றவாறு துணிந்து, அதனை அடைவான் பொருட்டு ஞான மறைப்பாக செயல்படும் இந்த பாசத் தளைகளிலிருந்து கழன்று விடுபட்டு சுத்தமாகி அசத்தறிவையே மகிழ்வது போக்கி சத்தறிவாகிய சிவஞானத்தையே மகிழவேண்டும் என்ற விருப்பில் பல தவங்கள செய்தவாறு வாழும் என்றது.


எ-டு 3.6:4


இனி இவ்வாறான முத்தி முன்னறிவோடும், அது ஊந்தும் முத்தியை அடையவேண்டும் எனும் வேட்கையொடும் வருவதே எல்லா வகைக் கட்டுகளையும் கடந்து இறைவனோடு ஒன்றித்து இறைவனே தானாக நிற்க வேண்டும் என்ற வேட்கையையும் உள்ளடக்கிய மெய்யான எண் சித்திகளை அடைய வேண்டும் எனும் வேட்கையுமாம். அணிமா இலகிமா கரிமா மகிமா பிராத்தி பிரகாமியம் ஈசத்துவம் வசித்துவம் எனும் இச்சித்திகள் கால இட கட்டுகளை நீக்குவதோடு அதிகாரம் ஆற்றல் போன்ற ஏனைய பாசத் தளைகளால் வருகின்ற குறைகளையும் நீக்கும் என்பதாம். சுட்டுணர்வு தரும் கால இட கட்டுகளால்தான் இந்த சித்திகள் முற்றிலும் வெளிப்படாது ஆன்மாக்கள் அகத்தே புதையுண்டே கிடக்கின்றன. இந்தப் புதைவு நிலைக்குக் காரணம் இந்த பாசத் தளைகளேயென, எண் சித்திகளை அடைந்து தான் யார்க்கும் குடியல்லாத ஓர் தலைமகனாக வாழ்வதற்கு எடுக்கப்படும் முயற்சியே சிவயோகம் என, ஆன்மாக்கள் இயல்பாகவே சிவயோகம் தலைப்படும் திறத்தன என்பதாம்


எ-டு 3.6:5


இந்த எண் சித்திகளில் அணிமா இலகிமா என்பவை தொலைவில் உணர்தல், இன்னொரு ஆன்மாவுடன் ஒன்றித்து நின்று அதனை எங்கிருந்தாலும் உள்ளவாக் கண்டு உணர்தல் அதாவது கூடுவிட்டு கூடு பாய்தல் என்பவை சுட்டுணர்வின் கால இடக் கட்டுகளைப் போக்குவனவாகும். மகிமா எனும் சித்தி சர்வ வியாபகம் தந்து அறிவிற்கு மலபந்தங்களால் உள்ள வரம்புகளை நீக்கி அனைத்தையும் எவ்வித தடையும் மறைப்பும் இன்றி அறியத் தரும் சித்தியாகும். இங்கு கன்ம மலமே அறிவிற்கு வரம்பு தருவதின் , அந்த கன்ம மலக் கட்டை நீக்குவதாக மகிமா சித்தி விளங்குகின்றது. இதனோடு ஒத்து வருவதே கரிமா எனும் சித்தியாகும். மகிமா காலக் கட்டையும் நீக்கி திரிகால ஞானியாக ஆன்மா விளங்க உதவும் என கரிமாவோ கால உணர்வினையே ஆன்ம அறிவில் இல்லாது போக்கி அதனின் காலங் கடந்த நிலையில் சுத்த மோனத்தின் சிவஞானம் புசிக்கத் தரும் சித்தியாகும்.


எ-டு 3.6:6


இனி பிராத்தி என்பது, இறைவனால் யாது அருளப்படுகின்றதோ அதனையே அடைந்து மகிழும் நிலை போக்கி. பராசத்தியோடு ஒன்றித்து நின்று தான் இச்சித்ததை அடைந்து மகிழும் வல்லமையைப் பெறுவதாகும். இவ்வாறான சித்தி அமைய இச்சித்ததை எல்லாம் அடைந்து மகிழ அதனின் இச்சையே தோன்றா வகையில் ஆன்மா சுத்தமாகிட அதுபொழுது அமைவதே பிரகாமியம் எனும் சித்தியாகும். இது தனக்கென வாழ்வது போக்கி பிறருக்கென வாழும் திறத்தினைத் தந்து சுயநலம் போக்கி பொதுநலம் வளர்ப்பதாகும். இதனால் அமைவதே ஈசனோடு ஒன்றித்து ஈசனே தானெனெ நின்று, செய்வதெல்லாம் சிவச் செயலேயாக பரவினைகளே யாக வாழ்வதாகும். இது ஈசத்துவ சித்தி என, அன்பே மேலிட்டு நிற்க சகல வல்லமையும் அந்த ஈசத்திவத்தோடு வர, பிற எல்லா உய்ரிகளாலும் தொழப்படும் வகையில் இறைவனையே தன் ஆன்மாவில் காட்டி நிற்கச் செய்வதே வசித்துவம் ஆகும்.


இவ்வாறான எண் சித்திகளை அடைந்து மகிழும் ஆன்மாவிற்கு வீடுபேறு நிச்சயம் என்றும் அறிக.


மேற்கொண்டு இவற்றை பற்றி திருமந்திரம் போன்ற ஞான நூற்களைக் கற்று தெரிந்து கொள்க


மூன்றாம் சூத்திரம் ஏரணவுரை முற்றும்







பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 7 ஜனவரி 2013, 13:35 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,376 முறைகள் அணுகப்பட்டது.