அடுத்த குறள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

உ.வே.சா.நினைவு மஞ்சரி

முதல் பாகம்

8. அடுத்த குறள்


கும்பகோணம் காலேஜில் ஶ்ரீமான் ராவ்பகதூர் ஸாது சேஷையரென்னும் கனவான் பிரின்ஸிபாலுக்கு அடுத்தபடி பலகாலம் புரொபஸராக இருந்தார். அவர் 1880-ஆம் வருஷம் மே மாதம் தம்முடைய மூத்த குமாரிக்குக் கல்யாணம் செய்வித்தார். அது திருப்பாதிரிப்புலியூரில் மிக்க விமரிசையாக நடைபெற்றது. அவர் பலபேர்களுக்கு உபகாரம் செய்தவர்; நல்ல செல்வாக்குடையவர். ஆதலின் அக்கலயாணத்திற்குப் பல முன்சீபுகளும் சப்ஜட்ஜுகளும் வக்கீல்களும் பிரபுக்களும் மிராசுதார்களும் வந்திருந்தார்கள். காலேஜ் ஆசிரியர்களும் ஸம்ஸ்கிருத வித்துவான்களும் தமிழ் வித்துவான்களும் சங்கீத வித்துவான்களும் வந்திருந்தனர். அக்காலத்தில் கும்பகோணம் காலேஜில் இருந்த நானும் மற்ற ஆசிரியர்களுடன் போயிருந்தேன்.


நான்கு நாட்களும் கல்யாணம் பெரிய அரசகுடும்பத்துத் திருமணத்தைப் போலவே மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வந்தவர்களுக்கு நடந்த உபசாரங்களுக்கு அளவே இல்லை. ஐந்தாவது நாள் யாவரும் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தார்கள். ஆனால் சென்னை ஹைகோர்ட்டில் ஜட்ஜாக இருந்த ஶ்ரீ ஸர் தி.முத்துசாமி ஐயர் அன்று கல்யாணம் விசாரிக்க வரப்போகிறாரென்று தெரிந்தமையால் யாவரும் தங்கள் பிரயாணத்தை நிறுத்திக்கொண்டார்கள். முத்துசாமி ஐயரைப் பார்க்கவேண்டுமென்ற அவா எல்லாருக்குமுண்டாயிற்று.


அக்காலத்தில் முத்துசாமி ஐயருடைய புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. அவர் ஏழையாக இருந்ததையும், முதலில் சொற்பச் சம்பளம் பெற்றுக் கணக்குப் பிள்ளை வேலை பார்த்ததையும், விளக்குக் கம்பத்தின் கீழிருந்து படித்ததையும் கதை கதையாகச் சொல்லிக் கொள்வார்கள்; "படித்தால் முத்துசாமி ஐயரைப் போல் படிக்க வேண்டும்." என்று யாவரும் கூறுவார்கள். அவர் சென்னைக்குச் சென்று ஜட்ஜ் உத்தியோகம் பார்த்துவரும் திறமையைப் பற்றிப்பலர் பலவிதமாகப் பாராட்டிப் பேசிக்கொண்டிருப்பார்கள். வெளிப்பார்வைக்கு அவர் மிக்க அடக்கமுடையவராக இருந்தாலும் அவருடைய அபிப்பிராயத்தை ஒருவராலும் மாற்ற முடியாதென்றும் சொல்லுவார்கள். வக்கீல்களுக்கும் முன்சீபுகள் முதலிய உத்தியோகஸ்தர்களுக்கும் அவரைப் பற்றிப் பேசுவது ஒரு பெருமையாக இருந்தது. அவருடைய பேராற்றல், சட்ட ஞானம், அடக்கம் முதலியவற்றைப் பற்றி ஶ்ரீமான் ராய்பகதூர் பூண்டி அரங்கநாத முதலியார் போன்ற பெரியோர் முக்கியமான சந்தர்ப்பங்களில் பாராட்டிக் கூறுவர்.


"இவ்வளவு உயர்ந்த உத்தியோகத்தைப் பெற்றும் இவர் தம்முடைய வைதிக ஒழுக்கங்களை விடவில்லையாம். பழைய ஏழைமை நிலையை மறக்கவில்லையாம். தமது இளமையில் தம்மைப் பாதுகாத்தவர்களுக்கெல்லாம் உபகாரம் செய்து வருகிறாராம்." என்று சிலர் சொல்வார்கள்.


"இவரைச் சீமைக்குக் கூப்பிட்டார்களாம். இவர் வரமுடியாதென்று சொல்லிவிட்டாராம்." என்று சிலர் சிறிது கற்பனையையும் சேர்த்துக்கொண்டு கூறுவார்கள்.


"இவர் தெய்வ அம்சமுடையவர். இல்லாமற் போனால் இப்படி வரமுடியுமா!" என்று ஆச்சரியப்படுவோர் சிலர்.


இவ்வாறு அவரைப்பற்றிப் பெருமையோடும் வியப்போடும் அங்கங்கே தமிழ்நாட்டினர் பாராட்டிக்கொண்டே இருந்தார்கள். அத்தகைய பாராட்டுக்குரிய பெரியார் வருவதாக இருந்தால் பாராமற் போக எப்படி மனம் வரும்? "அவர் எப்படிப் பேசுகிறார்? எப்படி உடை உடுத்துக்கொண்டிருக்கிறர்? எப்படி நடக்கிறார்? என்று கவனிக்க வேண்டுமென்பது பலர் எண்ணம்.


பிற்பகல் இரண்டு மணிக்கு முத்துசாமி ஐயர் சென்னையிலிருந்து திருப்பாதிரிப் புலியூருக்கு வந்து சேர்ந்தார். ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஸாது சேஷையர் போய் அவரை வரவேற்றனர். கல்யாண வீட்டின் முன்பு பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது நடுவிலே ஒரு மேஜையும் அதைச் சுற்றிலும் நான்கு நாற்காலிகளும் இருந்தன. முத்துசாமி ஐயரை ஶ்ரீ ஸாது சேஷையரும் வேறு இரண்டு பெரிய உத்தியோகஸ்தர்களும் அழைத்துக்கொண்டு வந்தார்கள். நான்குபேரும் நான்கு நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.


பலபேர் அந்தப் பந்தலில் அந்த் அநால்வரையும் நெருங்காமல் சிறிது தூரத்திலிருந்து முத்துசாமி ஐயரைப் பார்த்தபடியே இருந்தார்கள். பெரிய உத்தியோகஸ்தர்கள் கூட அச்சத்தினால் அவரை அணுகத் துணியவில்லை. அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன்.


முத்துசாமி ஐயர் வெள்ளைத் தலைப்பாகை தரித்திருந்தார். நெடுஞ்சட்டையையும் அதன்மேல் ஐயம்பேட்டைப் பட்டுருமாலையையும் அணிந்திருந்தார். இடையில் தூய வெள்ளை வஸ்திரத்தைப் பஞ்சகச்சமாக உடுத்தி இருந்தார். காலில் "பாபாஸ்" ஜோடு போட்டிருந்தார். கையில் ஒரு பிரம்பு இருந்தது. ஆஜானுபாகுவான அவருடைய உருவத்தில் ஒரு தனிச்சிறப்பு விளங்கியது. அவருடைய தூய்மையும் எளிமையும் அவருக்கு உள்ள மதிப்பை அதிகப்படுத்தின. அவர் வெள்ளைக்காரரைப் போல உடையணிந்திருப்பாரென்றும் ஆடம்பரமான உடைகளை உடுத்தியிருப்பாரென்றும் பலர் எண்ணி யிருந்தனர். அத்தகையவர்கள் அவருடைய உடை முதலியவற்றைக் கண்டு வியப்பை அடைந்தார்கள்.

பந்தலுக்கு நடுவில் வீற்றிருந்த நால்வரும் தமக்குள்ளே மெல்லப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பேசுகிறார்களென்பதைத் தெரிந்து கொள்ள எல்லோரும் ஆவலுள்ளவராக இருந்தனர்.


அந்தக் கூட்டத்தில் ஷாப்பு ராஜப்பையரென்ற முதியவர் ஒருவர் இருந்தார்; அவர் கும்பகோண வாசி; திவான் ஸர்.டி.மாதவராவ், மைஸுர்த் திவான் ரங்காசாரியார், புதுக்கோட்டைத்திவான் அ.சேஷையா சாஸ்திரியார் முதலிய மேதாவிகளின் பழக்கத்தை உடையவர். தமிழ், ஸம்ஸ்கிருதம், ஆங்கிலமென்னும் மூன்று பாஷைகளிலும் தேர்ச்சி பெற்றவர். மிகவும் இனிமையாகச் சம்பாஷணை செய்யும் ஆற்றலுடையவர். அவர் கூட்டத்திலிருந்து நடுவிலுள்ளவர்களை நோக்கிச் சென்றார்.


அவர் செல்வதைப் பார்த்த சிலர், "இந்தக் கிழம் எதற்காக அங்கே போகிறது? எவ்வளவு துணிச்சல்!" என்று தமக்குள் இகழ்ந்து பேசலாயினர். முத்துசாமி ஐயருக்குப் பின்புறத்திலிருந்து சென்றாராதலின் ராஜப்பையரை அவர் கவனிக்கவில்லை. உடனே அம்முதியவர் முத்துசாமி ஐயருக்கு முன்பக்கத்திலே போய், அங்கிருந்து மேஜையினருகே சென்றார். தம் கண்ணில் அவர் பட்டவுடன், "ராஜப்பையர்வாள்! வாருங்கோ, செளக்கியமா?" என்று கேட்டார் முத்துசாமி ஐயர்.


ராஜப்பையரைப் பற்றித் தாழ்வாக எண்ணியவர்கள் பிரமித்துப் போனார்கள். அங்கே இருந்த ஒரு பெரிய உத்தியோகஸ்தர் ஒரு நாற்காலியை எடுத்து மேஜையின் அருகே போட்டார். "உட்காருங்கள்" என்று முத்துசாமி ஐயர் சொல்லவே அந்த முதியவர் உட்கார்ந்தார். அவர் மெல்லப் பேசத்தொடங்கினார்:


"உங்களைக் கண்டவுடன் இங்கே உள்ளவர்களுக்கு உண்டாகும் சந்தோஷம் சொல்லி முடியாது. சந்திரனைக் கண்ட கடல்போல யாவருக்கும் ஆனந்தம் பொங்குகிறது. எல்லோரும் உங்களுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார்கள். நீங்கள் சென்னபட்டணத்தில் உயர்ந்த பதவி வகித்து வருவதை அறிந்து எல்லோரும் மகிழ்கிறார்கள். உங்களுக்குக் கிடைத்த கெளரவத்தால் இந்த ராஜதானி முழுவதும் சந்தோஷிக்கிறது. தஞ்சை ஜில்லாவாசிகள் தங்கள் ஜில்லாவிலே பிறந்த நீங்கள் இவ்வாறு உலகமெல்லாம் கொன்டாடும்படி இருப்பது பற்றி எண்ணி எண்ணிப் பூரிக்கிறார்கள்.


*"தம்மிற்றம்மக்களறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கெல்லாமினிது."


என்று குறளில் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதை இப்போது உங்கள் விஷயத்தில் பிரத்தியக்ஷமாகப் பார்க்கிறோம். உங்களுடைய மேதை உலகத்துக்குக்கெல்லாம் இனிதாக விளங்குகின்றது."


கிழவர் பேசிக்கொண்டே இருந்தார். "இந்தக் கிழவர் என்ன தைரியமாகப் பேசுகிறார்! எவ்வளவு உசிதமாகப் பாராட்டுகிறார்." என்று அங்கிருந்தவர்கள் எண்ணித் தம் கவனம் முழுவதையும் அந்த எழுபது பிராயமுள்ள கிழவர் மீதும் ஜட்ஜ் முத்துசாமி ஐயர் மீதும் செலுத்தினர்.


கிழவர் பேசி நிறுத்தினார்.; முத்துசாமி ஐயர், "ஐயர்வாள், நீங்கள் ஒரு குற:ள் சொன்னீர்களே; அதற்கு அடுத்த குறளையும் சொல்லி அதனுடைய அர்த்தத்தையும் சொல்லுங்கள் பாரக்கலாம்." என்றார்.


நான் இந்த சம்பாஷணையில் மிக்க ஊக்கத்தோடு கருத்தைப் பதித்திருந்தேன். அந்த முதியவர் ஒரு குறளைச் சொல்லிப் பாராட்டும்போது எனக்குத் தனி மகிழ்ச்சி உண்டாயிற்று. அதன்பிறகு அதற்குப் பதிலாக அடுத்த குறளைச் சொல்லும்படி முத்துசாமி ஐயர் கூறினதைக் கேட்டவுடன் எனக்கு மிக்க வியப்பு ஏற்பட்டது. "இவருக்குக் குறளில் இவ்வளவு ஞாபகம் இருக்கிறதே: அடுத்த குறளில் இந்த ஸந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான செய்தியிருப்பதை இவர் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறாரே!" என்று நினைத்தேன்.


"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன் மகனைச்
சான்றோனெனக் கேட்ட தாய்."


என்பது அடுத்த குறள்தானே? அதற்குப் பொருள் சொல்லுங்கள்!" என்று முத்துசாமி ஐயர் மறுபடியும் சொன்னார்.


அங்கிருந்த கனவான்களிற் பலர், "நாமும் காலேஜில் தமிழ் படித்தோம்; திருக்குறளையும் படித்தோமே; நமக்கு இவ்வளவு ஞாபகம் இல்லையே; இவர் எப்போதும் இங்கிலீஷிலே பழகுகின்றவர்; தமிழ்ச்செய்யுளை மறக்கவில்லையே!" என்று பேசிக்கொண்டது என் காதிலே பட்டது.


ராஜப்பையர், "ஆமாம்! உங்களைப்பெற்ற தஞ்சாவூர் ஜில்லா இப்போது மிகவும் சந்தோஷிப்பதற்கு நீங்கள் மற்றொரு குறளை உதாரணமாகக் காட்டுகிறீர்கள். தன்னுடைய பிள்ளை அறிவிற்சிறந்தவனென்று உலகத்தார் கூறக்கேட்ட தாய் அப்பிள்ளையைப் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் பன்மடங்கு அதிக மகிழ்ச்சியை அடைவாளென்று அந்தக் குறளிலே சொல்லியிருக்கிறது. நீங்கள் உங்கள் ஜில்லாவைத் தாய் போல எண்ணியிருப்பதையும் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டீர்கள். நீங்கள் தீர்க்காயுளோடு வாழவேண்டும்." என்று வாழ்த்தினார்.


அன்று இரவு அங்கே விருந்துணவு ஆனபிறகு முத்துசாமி ஐயர் விடைபெற்று மாயூரம் சென்றார். "அடுத்த குறளைச் சொல்லுங்கள்." என்று அவர் அன்று கூறியபோது அவருடைய தமிழபிமானத்தையும் சந்தர்ப்பத்திற்கேற்பச் சுருக்கமாகப் பேசும் திறமையையும் உணர்ந்தேன். அவர் குறளைக் கூறியதுபோலத் தாமும் சொல்லவேண்டுமென்று அதுமுதல் சிலமாதங்கள் சில ஆசிரியர்களும் கனவான்களும் முயன்றார்கள். அவருடைய தமிழபிமானம் இயல்பானது. இவர்களுடையதோ அத்தகையதன்று. வெறும் கெளரவத்திற்காகத் தமிழ் படிப்பது, புகழ் பெறுவதென்பது சாத்தியமாகுமா?


அந்தக் காலத்துக்குப் பிறகு பலமுறை முத்துசாமி ஐயரை நான் பார்த்திருக்கிறேன். அவரோடு பேசிப்பழகவேண்டுமென்ற அவா எனக்கு நெடுநாளாக இருந்தது. சிலப்பதிகாரப் பதிப்பு நடந்து கொண்டிருந்தபோது நான் ஒருமுறை சென்னைக்கு வந்திருந்தேன். அப்போது ஸாது சேஷையரும் வந்திருந்தார். அவரோடு அப்பெரியாரைத் தரிசிக்கலாமென்று ஒருமுறை சென்றேன். ஒரு பெரிய ஹாலில் நாற்காலி மேஜைகள் இருக்குமென்றும் அங்கே அவர் இருந்துவேலை பார்த்துக்கொண்டிருப்பாரென்றும் எண்ணினேன். அங்கே போனபோது நான் பாரத்த காட்சி வேறுவிதமாக இருந்தது. "ஹால்" இருந்தது; மேஜை நாற்காலிகளும் இருந்தன; ஆனால் அப்பெரியார் அங்கே காணப்படவில்லை. முன்பக்கத்தில் தரையின் மேல் கோரைப்பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. அங்கே அவர் ஒரு தூணில் சாய்ந்து கீழே உட்கார்ந்திருந்தார்; ஒரு கைமேஜையை முன்னால் வைத்துக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் சிறிய சிறிய காகிதத்துண்டுகள் சில சில குறிப்புக்களோடு வைக்கப்பெற்றிருந்தன. அருகில் நாலைந்து பென்ஸில்கள் இருந்தன. தனியே ஒரு காகிதத்தில் கொட்டைப்பாக்குச் சீவல் மாத்திரம் இருந்தது.


முத்துசாமி ஐயர் எங்கேனும் பிரசங்கம் செய்வதாக இருந்தால் முன்பே நன்றாக ஆராய்ந்து குறிப்பெடுத்துக்கொண்டு போவாரென்று சொல்வார்கள். அன்று அப்பேரறிஞர் தம்மைச் சுற்றிலும் கரடாக்காகிதங்களைச் சிறிய சிறிய அளவில் கிழித்துக் குறிப்பெடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்த போது நான் கேள்வியுற்றது உண்மை என்றே புலப்பட்டது.


நான் அப்பெரியாருக்கு வந்தனம் புரிந்தேன். ஸாது சேஷையர் என்னைப்பற்றி அவரிடம் சொன்னார். "அடுத்த குறளைச் சொல்லுங்கள்." என்று அவர் கூறியது என் நினைவிலே நின்றமையின் நான் செய்யும் தமிழ்ப்பணி அப்பெரியாருடைய ஆசீர்வாதம் இருந்தால் நன்றாக நடைபெறுமென்ற உறுதி எனக்கு இருந்தது. நான் பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து அச்சிட்டு வருவதைச் சேஷையர் அவரிடம் தெரிவித்தார். அவர், "நல்ல காரியந்தான். இந்தக் காலத்திலே படிக்கிறது, வேலைப்பார்க்கத்தானென்று எல்லோரும் நினைக்கிறார்கள். வேலை கிடைத்துவிட்டால் செளக்கியமாகச் சாப்பிட்டுக்கொண்டு இருந்துவிடுகிறார்கள். புத்திக்கு வேலை கொடுப்பதே இல்லை. தமிழ்ப்பாஷையிலே இப்படி வேலை செய்து வருவது மிகவும் நல்லது." என்று ஆசீர்வாதம் செய்தார். நான் ஒரு பெரும்பேறு பெற்றவனைப்போல இன்புற்றேன்.


பெரும்பாலும் மெளனமாகவே இருந்து தம்காரியங்களைக் குறைவின்றி நிறைவேற்றும் அவ்வுத்தமருடைய ஆசி எனக்கு மனவுறுதியையும் ஊக்கத்தையும் உண்டுபண்ணியது. தாம் பிறந்த நாட்டுக்குப் பெருமை அளித்த அப்பெரியார் தமிழினிடத்தில் மிக்க அன்பும் பழக்கமும் உடையவராக இருந்தாரென்பதை ஆங்கிலம் படித்த யாவரும் உணர்ந்துகொள்ள வேண்டுவது மிகவும் அவசியம்.

*"தம் மக்களது அறிவுடைமை பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கெல்லாம் தம்மினும் இனிதாம்" என்பது பரிமேலழகர் உரை.


--Geetha Sambasivam 23:58, 31 அக்டோபர் 2011 (UTC)

 

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=அடுத்த_குறள்&oldid=8603" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 31 அக்டோபர் 2011, 23:58 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,334 முறைகள் அணுகப்பட்டது.