வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ஸ்ரீ லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோவில் - திருமீயச்சூர்

From மரபு விக்கி

Jump to: navigation, search

பவள சங்கரி 


அருள்மிகு ஸ்ரீ லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோவில் - திருமீயச்சூர்

மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே! - ஓம் அன்னையே! லலிதாம்பிகையே! வெற்றி வாணியே!


Sree-lalithambigai-temple.jpg


சிவத்தலம் பெயர் -திருமீயச்சூர் இளங்கோவில்
இறைவன் பெயர் - சகலபுவனேஸ்வரர்
இறைவி பெயர் - மின்னு மேகலையாள்

காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரைத் தொழுது வினையை வீட்டுமே

வேடமுடைய பெருமா நுறையு மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
பாடலாய தமிழீரைந்து மொழிந்துள்கி
ஆடு மடியாரகல் வானுலகம் அடைவாரே.
Lalithambigai.jpg

யாதுமாகி,எங்கும் நீக்கமற நிறைந்த எம் தாய் அகிலாண்ட ஈசுவரி, அவளன்றி ஓர் அணுவும் அசையாது, அகில உலகையும் அருளாட்சி செய்யும் , ஸ்ரீபுரம் எனும் திருமீயச்சூரில் எழுந்தருளி எண்ணியவற்கு எண்ணியவாறே, அருள் புரியும் நாயகியின் கடைக்கண் பார்வை வேண்டி ஆங்கு படை எடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.


புவனமெங்கிலும் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும், அன்னையின், ’ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்’, உருவான புண்ணியத் தலம் இதுவே1 நான்கு வேதங்களுக்கும் இணையான இம்மந்திரத்தை இத்தலத்தில் வந்து பாராயணம் செய்து புண்ணியங்கள் பல பெற்றவர் எண்ணற்றவர். அகத்திய மாமுனி நவரத்தின மாலை இயற்றிய தலமும் இதுவே. காவிரிசூழ் பொழில் சோலைகள், வயல்களின் நடுவே அமைந்து அற்புதமாய் காட்சியளிக்கும் திருமீயச்சூர் என்ற இத்திருத்தலம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.


பாதாளலிங்கம் உட்பட இருபத்தி ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளதும், நவக்கிரகங்கள் இல்லாத சிவத்தலமாகவும், ஒரே கோவிலில் இரண்டு சிவன் சன்னதிகள் அமைந்துள்ளதும் யானையின் பின்புறம் [கஜபிருஷ்ட விமானம்] போன்ற அமைப்பை உடைய விமானத்தையும் , இப்படி பல்வேறு தனித்தன்மைகளுடன், சூரியனுக்கு சாபவிமோசனம் கிடைத்த தலமாகவும், சூரியனுக்கு சனி, எமன், வாலி, சுக்ரீவன், அருணன், கருடன் ஆகியோர் பிறந்த தலமாகவும் இப்படி பல்வேறு பெருமைகள் பெற்ற தலமாகும்.


மயிலாடுதுறை - திருவாரூர் செல்லும் பாதையும், கும்பகோணம் - காரைக்கால் செல்லும் பாதையும் சந்திக்கும் பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 1 கி.மீ தொலைவில் திருமீயச்சூர் அமைந்துள்ளது. பேரளத்திலிருந்து திருமீயச்சூருக்குச் செல்லும் பாதை,மிக அழகான, பசுமையான வயல்வெளிகளின் இடையே அமைந்த பாதை மனதிற்கு இதமான ஒரு அமைதியை ஏற்படுத்துவதும் இயற்கை.


திருமீயச்சூர் சன்னதித் தெருவின் வலது புறம் அமைந்துள்ள சூரியனால் உருவாக்கப்பட்ட சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் சூரியன் தன் சாபம் நீங்க, அன்றாடம் இக்குளத்தில் நீராடி, தவமிருந்து இறைவனை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றது. இத்திருக்குளத்தின், கிழக்கில் சூரியனும் மேற்கில் விநாயகரும் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்கள்.

Meganatha swamy.jpg


ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. நெடிதுயர்ந்த கொடிமரத்தை வணங்கி , அடுத்து நந்தி தேவரை வணங்கி. கோபுரத்தின் தென்புறம் அமைந்துள்ள காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சி அன்னையையும் தரிசித்து விட்டு உள் நுழைந்தால், மேகநாதசுவாமி ஆலயம் காட்சி கொடுக்கின்றது. மகாமண்டபத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் மேகநாதரைக் காணக் கண்கோடி வேண்டும். ஸ்ரீமேகநாதசுவாமியை திருஞானசம்பந்தர் பதினொரு பதிகங்களிலும், திருநாவுக்கரசு சுவாமிகள் பத்து பதிகங்களிலும் பாடித் துதித்துள்ளனர்.


இக்கோவிலில் ரத சப்தமி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலின் மற்றுமொரு தனிச்சிறப்பு, ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகும், சித்திரை மாதம் 21 முதல் 27 முடிய (7 நாட்கள்) உள்ள நாட்களில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் காலை 5.55 லிருந்து 6.02 வரை ராஜகோபுர வாயில் வழியே கருவறையிலுள்ள திருமேகநாதசுவாமியின் மீது ஒளிர்வது அதிசயமாகும். இச்சமயம் நடைபெறும் சூரியனார் பூசையில் தேவருலகினரும் கலந்து கொள்வதாக ஐதீகம்.


உட்பிரகாரத்தில், தெற்கு புறம், பன்னிரு நாகர்கள் திருவுருவங்கள் பாங்குற அமைந்துள்ளன. நவக்கிரக வழிபாட்டிற்குப் பதிலாக இக்கோவிலில் நாகர் வழிபாடு நடத்தப்படுகிறது. நவக்கிரக வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இக்கோவில் கட்டப்பட்டு இருப்பதால் ஸ்ரீநாகர் பூசையே இன்றளவும் நடத்தப்படுகிறது. அருகில் சமயக்குரவர்கள் நால்வருடன், சேக்கிழார் பெருமானும் அமர்ந்து காட்சியளிக்கின்றனர்.

மகா மண்டபத்தில் பாதாளலிங்கமும் கோவிலின் பிரகாரத்தில் பஞ்சபூதலிங்கங்களும், திருக்காளத்தி, திருவண்ணாமலை போன்ற தலங்களில் அமைந்துள்ளதைப் போன்று இங்கும் இருபத்து ஐந்து சிவலிங்கங்களும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சப்த கன்னியர் பூசித்த ஏழு சிவலிங்கங்களும், மேற்கில் அட்டலிங்கமும் உள்ளது.

Smiling amman.jpg

சேத்திர புராணேசுவரர் இக்கோவிலின் தனிப்பட்ட சிறப்பாகும். இது போன்றதொரு சிறப்பு வேறு எந்த கோவிலிலும் உள்ளதா என்பது ஐயமே! அம்பாளின் முகவாயினை, சுவாமி தன் வலக்கரத்தினால் தீண்டிக் கொண்டிருப்பது போன்ற தோற்றம் கொண்ட திருவுருவக் காட்சியே அது. இத்திருக்கோலத்தின் அற்புதக் காட்சியாக, அம்மனை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாகவும், இடது புறமிருந்து பார்த்தால் சிரிப்பது போன்றும் தோன்றமளிக்கும். அற்புதமான இந்த சிலையமைப்பு மிக வித்தியாசமான ஒன்றாகும். மனித வாழ்க்கையில் இன்பமும்,துன்பமும், மாறி, மாறி வருவதைக் குறிப்பதாகவே இவ்வடிவம் அமைந்திருக்கலாம், என்று தோன்றுகிறது.சூரியன் பெற்ற சாபத்தின் விளைவாக ஏற்பட்ட சம்பவத்தின் காரணமாக அம்மன் கோபமாகவும், சாந்தமாகவும் காட்சியளிப்பதாக புராணக்கதைகள் கூறுகின்றன. அருகில் பஞ்சபூதலிங்கங்களில் ஒன்றான தேயுலிங்கமும் , தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர்.
Sm ammam writeup.jpg

கருவறையின் விமான அமைப்பு, யானையின் பின்புறத் தோற்றம் போன்று மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு மட்டுமே உரித்தான மற்றுமொரு சிறப்பம்சம், பிரகாரத்தை வலம் வரும் போது வடமேற்கு மூலையிலிருந்து , இரு சன்னதிகளிலிருந்து மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். திருமேகநாத சுவாமி சன்னதியும், திரு சகலபுவனேசுவரர் சன்னதியும் இரண்டும் அருகருகே அமைந்திருப்பதும், இன்னொரு சன்னதியில் மேற்கு நோக்கிய , கூப்பிய கரங்களுடன் உள்ள மகா விஷ்ணுவையும் ஒரு சேர தரிசனம் செய்ய முடிவது மிகச் சிறப்பாகும். அங்கிருந்து வடக்குப் புறத்தில் சண்டிகேசுவரரையும், சகலபுவனேசுவரரையும், ஸ்ரீ மின்னும் மேகலையையும் தரிசிக்கலாம். ஸ்ரீமகாலட்சுமியால் வணங்கப்பெற்ற சகல புவனேசுவரரை திருநாவுக்கரசர் 10 பதிகங்களில் பாடியுள்ளார். இரு மூர்த்தங்களுக்கும் இடையில், சாந்த நாயகியான துர்க்கை அம்மனை தரிசிக்கலாம்.


இங்கு மற்றுமொரு சுவாரசிய சம்பவமாக வழங்கப்படுவது, துர்க்கையம்மனின் இடது கரத்தில் அழகுற வீற்றிருக்கும் கிளி. அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையிடம் நாம் வைக்கும் கோரிக்கையை துர்க்கையம்மனிடம் மனமுறுக வேண்டினால் அம்மன் கையில் உள்ள கிளி தூது சென்று, லலிதாம்பிகையிடம் வரம் பெற்று வரும் என்பதும் ஐதீகம். புண்ணியம் கிடைக்கப் பெற்றவர்கள் இவ்வரிய காட்சியை புறக்கண்ணிலும் காண முடியும் என்கின்றனர்.


வடக்குத் திருமாலைப் பகுதியில் நடராசப் பெருமானின் கம்பீரமான திருமூர்த்தம் கண்டு தரிசிக்கலாம். அடுத்து இக்கோவிலின் பிரதான நாயகியான , ஸ்ரீ லலிதா சகசுரநாமம் முதன்முதலில் இயற்றப்பட்ட, மகா மண்டபத்தையுடைய அம்மனின் சன்னதியை தரிசிக்கலாம். அன்னையின் ஆலயத்தினுள் நுழையும் போதே நம் மனதில் ஒரு ஆழ்ந்த அமைதியும், நிம்மதியும் பரவுவதை உணர முடிகிறது. சர்வாலங்காரப்பிரியையாக அம்மன் காட்சியளிப்பது மன நிறைவை ஏற்படுத்துவதும் நிதர்சனம். வலது காலை மடக்கி, இடது காலை நீட்டி பதுமத்தில் வைத்தபடி கம்பீரமாகக் காட்சியளிக்கும், அழகே உருவான அம்மனைக் காணக் கண் கோடி வேண்டும்.

Thirumeychur-lalithambikai-sannathi.jpg

நால்வேதங்களுக்கும் இணையான ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் உருவான தலம் இத்தலம். எவருமே வெல்ல முடியாத பண்டாசுரன் எனும் அரக்கனை வென்றபின் மனோன்மணி வடிவாகக் காட்சியளிக்கும் அன்னையையே இங்கு நாம் தரிசிக்கிறோம். அகத்திய மாமுனிவர் “ மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ” என்ற புகழ் பெற்ற ஸ்ரீ லலிதா நவரத்தினமாலை பாடிய தலமும் இதுவே!


விஜயதசமியன்று, அம்மன் சன்னதியில், மிகப்பெரிய அளவில், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் ஆகிய அன்னங்களைப் படையலிட்டு,சக்கரைப் பொங்கலின் இடையே குளம் போல் 3 டின் அளவிற்கு நெய் விட்டு அதில் லலிதாம்பிகையை தரிசனம் செய்வது அற்புதக் காட்சியாகும்.


வாழ்வில் ஒரு முறையேனும் இவ்வன்னையின் அற்புதக் காட்சியை தரிசிக்கவில்லையென்றால் பிறந்த பயனை அடையவில்லையென்றே சொல்லலாம்!


இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடை அரற்கு
ஏற்றம் கோயில்கண்டீர் இளங்கோயிலே.

2. வந்தனை அடைக்கும் அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்
சிந்தனை திருத்தும் திருமீயச்சூர்
எம் தமை உடையார் இளங்கோயிலே.

3. பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை உரித்மு அனலாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எம் தமை உடையார் இளங்கோயிலே.

4. நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டு உகந்தான் திருமீயச்சூர்
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே.

5. வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல் விரித்தாடுவர்
செவ்வ வண்ணம் திகழ் திருமீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே.

6. பொன் அம்கொன்றையும் பூ அணி மாலையும்
பின்னும் செஞ்சடை மேற் பிறை சூடிற்று
மின்னு மேகலையாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அகலார் இளங்கோயிலே.

7. படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்த வெண் நீற்றினன்
விடைகொள் ஊர்தியினான் திருமீயச்சூர்
இடை கொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே.

8. ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர்
வேறு கொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும்
கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே.

9. வேதத்தான் என்பர் வேள்வியுள் உளான் என்பர்
பூதத்தான் என்பர் புண்ணியன் தன்னையே
கீதத்தான் கிளரும் திருமீயச்சூர்
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே.

10. கடுக்கண்டன் கயிலாய மலைதனை
எடுக்கல் உற்ற இராவணன் ஈட் அற
விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:02, 10 அக்டோபர் 2011 (UTC)











--

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 10 October 2011, at 15:13. This page has been accessed 1,976 times.