ஸ்ரீ பாடி படவட்டம்மன் திருக்கோவில் - சென்னைமரபு விக்கி இருந்துஅருள்மிகு ஸ்ரீ பாடி படவட்டம்மன் திருக்கோவில் தல புராணம் : ஓம் பூர் புவஸ்ஸூவ : - தத்ஸவிதுர்வரேண்யம் - பர்கோ தேவஸ்யதீமஹி - தியோயோந: ப்ரசோதயாத்” தாயிற்சிறந்த கோவில் இல்லை அகில உலகையும் கட்டி ஆள்பவள்.அன்னை ஸ்ரீ ரேணுகா தேவி/சீதளா தேவி, சகல உலகிற்கும் அன்னையான நம் கருமாரி எனும் ஆதிபராசக்தி ரேணுகாதேவி என்பது. கழுத்தளவு சிரசுடன், அக்னி சுவாலையுடன் ஐந்து தலை நாகம் அலங்கரிக்க, வெட்டுப்பட்ட கழுத்துடன் திருக்காட்சி புரிபவளாகவும் , அக்னி சுவாலையுடன் திருநாகார் இல்லாமல் காட்சி தருபவளாகவும் இருந்தருள்வதை நாம் பல பெரிய கோவில்களிலும், வீதியோர நடைபாதை கோவில்களிலும் காண முடிகிறது. இவைகளுக்கு நேர்மாராக அக்னி சுவாலையும் இல்லாமல் ஐந்து தலை நாகமும் இல்லாமல் பெயர் காரணத்திற்காக பொருந்திய நிலையில், தனிப்பெரும் சிறப்பொடு வட்ட வடிவ பிரதிமையில் முகம் மட்டுமே காணப்படுவதால் ஸ்ரீ படவட்டம்மன் என்ற பெயருடன் அருள் பாலித்து வருவதாக சான்றோர் இயம்புகின்றனர். உருவப் பொருத்தம் மட்டுமன்றி மூதாதையர் மூலம் கூறப்படும் செவிவழி செய்தியும் உண்டு. மன்னர் காலத்தில் படைகள் போருக்குச் செல்லும் வழியில் இரவு நேரங்களில் தங்குவதற்கு கூடாரங்கள் அமைப்பது வழக்கம். அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களுக்கு அருகில் அமைந்திருக்கும் கோவில்களில் , வீரர்கள் வெற்றி வேண்டி வழிபட்டு வணங்கிச் செல்லுவது வழக்கமாம். அதனாலேயே அது போன்று வழித் தடங்களில் இருந்த கோவில்கள் படைவீட்டு அம்மன் கோவில் ஆனதாம் நாளடைவில் அந்த பெயர் மருவி படவட்டம்மன் ஆகியிருக்கலாம். இக்கோவிலின் தல விருட்சமாக உள்ள வேம்பின் மூலமாக இத் திருக்கோவில் சில நூற்றண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிய முடிகிறது. வேம்படியில் புற்று உருவாக சிறு மேடையில் திறந்த வெளியில் அம்மன் தரிசனம் அருளிய போது சென்னை - திருவள்ளூர் பாதை ஒத்தையடிப் பாதையாக இருந்துள்ளது. கருவறை, விமான மூலவர் மண்டபம் என்று விசுவரூபம் எடுத்து நிற்கும் இன்றைய நாளில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், வெகு தூரப்பயணம் மேற் கொள்ளும் அன்பர்கள் விபத்துகள் நேராமல் இருக்க பிரார்த்தனை செய்வதாலும், தங்கள் வாகனங்களுக்கு பூசை செய்து வழிபடுவதாலும் அம்மன் நெடுஞ்சாலை நாயகியாய் சிறப்புற்று அருள் வழங்கி வருகிறாள். நோய் தீர்ப்பது, குழந்தை வரம் அருள்வது என்று பல அற்புதங்கள் நிகழ்த்திய நிகழ்வுகளையும் பக்தர்கள் மனம் குளிர இயம்புகின்றனர். கடந்த 2008 ம் ஆண்டில் இக்கோவிலில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. 21.10.2008 அன்று, செவ்வாய் தினம் இரவு நீண்ட திருநாகம் ஒன்று அம்மன் திரு உருவத்தின் பின் இருந்து காட்சி அளித்துள்ளதை, அலங்காரம் கலைக்கும் போது வந்த ப்க்தர்கள் பலரும் கண்டு அச்சத்துடன் பேரானந்தமும் அடைந்திருக்கிறார்கள். இத்திருக்கோவில் கொரட்டூர் புகை வண்டி நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரமும், கோயம்பேட்டில் இருந்து 5 கி.மீ. தூரமும் , சென்னை- பாரிமுனை - அம்பத்தூர் பாதையில் 12 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைகள் மூலம் அபிசேகம், சந்தன காப்பு, குங்கும காப்பு செய்தும், வாமை பொங்கல் இடுதல், கூழ் வார்த்தல், அன்னதானம் செய்தல் போன்ற கைங்கர்யங்களைச் செய்து வருகின்றனர். இத்திருக்கோவில் காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும் , மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டு நிர்வாக அதிகாரியால் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இக்கோவிலின் சிறப்பு அம்சமாக விளங்கும் ஆடி மாதம் 1008 பால்குட விழாவும் மற்றும் சூலம் தரித்து தீச்சட்டி ஏந்தி அம்மனின் பிரார்த்தனையை நிறைவேற்றி வருவதையும் காண முடிகிறது. அனு தினமும் 1008 முறை காயத்ரீ மந்திர செபமும் , ஸ்ரீ லலிதா சகஸ்வர நாமாவளி பாராயணமும் மற்றும் அம்மன் அருளால் எழுதப்பட்ட 108 போற்றிகளையும் சொல்லி வழிபாடு செய்து அம்மன் அருள் பெற்று வருகின்றனர்.
ஓம் அடியவர்க்கு அருள்பவளே போற்றி ஓம் ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி!!!
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 23:43, 28 ஜூலை 2011 (UTC)
|