வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் 4

From மரபு விக்கி

Jump to: navigation, search

 ஸ்ரீரங்கம் கோயிலின் சரித்திரத்தை ஆராயப் புகுந்தோமானால் இந்திய சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற முக்கியக் கோயில்களில் ஒன்றாகும் என்பது புலனாகும். வைணவர்களுக்கு முக்கியக் கோயிலான இது எப்போது கட்டப்பட்டது என்ற சரியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இதன் மகிமை பேசப்படுகிறது. வேத வேதாந்தக் கருத்துக்களைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியாகவும் இருந்து வந்திருக்கிறது. பல மஹான்கள், பல ஆசாரியர்கள் உருவாகி இந்தக் கோயிலின் தொண்டாற்றி வந்திருக்கிறார்கள். என்றாலும் இதன் பூர்வ சரித்திரம் குறித்த ஆதாரபூர்வத் தகவல்கள் கிட்டாதது நம் துரதிர்ஷ்டமே எனக் கூற வேண்டும். இங்கே ஏராளமான கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். ஆகவே கொஞ்சம் வெளிச்சம் கிட்டலாம். எனினும் நமக்கு இந்தக் கோயிலின் ஒவ்வொரு பிரகாரங்கள் குறித்தும், மதில்கள் குறித்தும் கிடைக்கும் விபரங்களில் இருந்து அவ்வப்போது சோழ, பாண்டிய மன்னர்களால் இந்தக் கோயில் பல திருப்பணிகளைக் கண்டிருப்பது தெரிய வருகிறது.


நான்காம் திருமதிலைக் கட்டியவர் திருமங்கை ஆழ்வார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில் பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட சந்நிதிகள் தென்மேற்கு மூலையில் ஏற்படுத்தி இருக்கின்றனர். இதில் ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள ஆண்டாளின் திருச்சந்நிதி பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது. கி.பி. பனிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதிநான்காம் நூற்றாண்டிற்கு அது கட்டப்பட்டிருக்கும் என அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது. இதைத் தவிர நான்காம் திருமதில் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் என்கின்றனர். கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைப்பதாகச் சொல்கின்றனர். கோயிலின் முக்கியத்துவம் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் இந்தக் கோயில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சோழ மன்னர்களின் குல தெய்வமாக ஸ்ரீரங்கநாதப் பெருமானும், அவர்கள் முடி சூடிக்கொள்ளும் பரம்பரைக் கோயிலாக சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலும் இருந்து வந்திருக்கிறது. ஆகவே ரங்கராஜனும், நடராஜனும் சோழர்கள் வாழ்வில் இரு கண்களைப் போலவே இருந்து வந்திருக்கின்றனர்.


சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஆகும். இம்மன்னன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக் குத்துவிளக்கு ஒன்று அளித்ததோடு அல்லாமல் கற்பூரம், பருத்தித் திரிநூல் வாங்க, குத்துவிளக்குப் பராமரிப்பு, விளக்கு ஏற்றும் செலவு என 51 பொற்காசுகளையும் வழங்கி இருந்திருக்கிறான். அதோடு கோயிலில் மூன்று இரவுகள் வேதம் ஓதப் படுவதற்காகவும் தானம் வழங்கி இருக்கிறான். இவனுக்கு அடுத்துச் சிறப்பாகச் சொல்லும்படி தானம் வழங்கிய மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின் தானம் ஆகும். கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060---1063 ஆம் ஆண்டில் இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது ராஜமஹேந்திரன் திருவீதி என வழங்கப் படுகிறது. கிட்டத்தட்ட இந்தச் சமயம் தான் ஸ்ரீபெரும்புதூரில் உடையவர் என அழைக்கப்படும் ஸ்ரீராமாநுஜர் தோன்றிப் பல்லாண்டுகள் வாழ்ந்து வைணவத்தையும், ஸ்ரீரங்கநாதர் கோயிலையும் நெறிப்படுத்தியதாகச் சொல்லப் படுகிறது. இதற்குத் தனியாக வருவோம். இப்போது கோயிலின் சரித்திரங்களை முதலில் பார்ப்போம்.


ஸ்ரீராமாநுஜர் காலத்தில் சோழ மரபின் வம்சாவளியில் நேரடி வாரிசு இல்லாமல் போக, சாளுக்கிய—சோழ மரபில் வந்த இரண்டாம் ராஜேந்திரன் என்பவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேரிட்டது. சோழ குலத்தின் நேரடி வாரிசு ஆன அதி ராஜேந்திரன் சந்ததி இல்லாமல் இறந்து போனான். முதலாம் ராஜேந்திரனின் மகளைத் திருமணம் செய்து கொண்ட ராஜராஜ நரேந்திரனின் மகனான இவன் சிறு வயதிலிருந்தே சோழ நாட்டிலேயே வளர்ந்து வந்தவன். தன் மாமன் இறந்ததும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் இவனுக்கு மக்கள் ஆதரவு பெருமளவு இருந்து வந்ததால் அமைச்சர்கள் இவனைத் தேர்ந்தெடுத்துக் குலோத்துங்கன் என்ற பட்டப் பெயர் சூட்டி முடிசூட்டினார்கள். இவனை முதலாய்க் கொண்டு தான் தமிழ்நாட்டில் கீழைச்சாளுக்கிய—சோழப் பரம்பரையின் ஆட்சி தொடங்கியது. முதன்முதல் வேற்று நாட்டு இளவரசன் தமிழ்நாட்டு அரசனாக முடி சூடியதும் இவன் காலத்தில் தான். இவனுக்கும் ஸ்ரீராமாநுஜருக்கும் பகைமை இருந்து வந்ததாய்க் கோயில் ஒழுகு சொல்கிறது. இது குறித்துப் பின்னர் பார்க்கப் போகிறோம்.


ஆனால் இந்தச் சளுக்கிய சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும், ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து வந்ததைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் அடிக்கடி சச்சரவுகள்; வாதப் பிரதிவாதங்கள். மூன்றாம் குலோத்துங்கனின் இருபதாண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு ஒன்றின் மூலம் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக அலுவலர்கள், ஜம்புகேஸ்வரக் கோயில் ஆட்சியாளர்களோடு சமரமாகப் பூசல்களைத் தீர்த்துக்கொள்ளும்படிக் கட்டளை இட்டிருக்கிறான். இத்தனைக்கும் ஒரிசா வரை சோழ ஆட்சி பரவி இருந்தாலும் தெற்கே இருந்து இலங்கையின் துணையோடு பாண்டியர்களும், கீழ்த்திசையில் ஆட்சி புரிந்த கங்கர்களும், அடிக்கடி சோழர்களைத் தாக்கி வந்தனர். இதில் கி.பி. 1223 முதல் 1225 வரையிலும் ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டுக் கோயிலின் நிர்வாகம் முற்றிலும் சிதைந்து பாழ்பட்டுப் போனது என்பதை அறிகிறோம்.


சளுக்கிய சோழ வம்சத்தினர் ஹொய்சளர்களின் துணை கொண்டு கோயிலை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு வர நினைத்தாலும் அவர்களால் இயலவில்லை. அப்போது தான் பாண்டியர்கள் வேறு தலை எடுத்துச் சோழர்களை நிமிர முடியாமல் செய்து வந்தனர். பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அரசனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1216---1238 ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் அவன் கர்நாடகம் என இப்போது அழைக்கப் படும் பிரதேசங்களைக் கைப்பற்றினான். அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டுக் காலத்தில் அவனுடைய படைகள் திருவரங்கம் கோயிலை கங்கர்களிடமிருந்து விடுவித்தது. ஆனாலும் கோயிலின் திருப்பணிகளில் ஹொய்சளர்களின் ஈடுபாடு குறையவில்லை. அவர்கள் பல திருப்பணிகளைச் செய்ததாகக் கலவெட்டுக்கள் பல குறிப்பிடுகின்றன. கி.பி. 1240ஆம் ஆண்டுக் காலத்தில் ஹொய்சள மன்னன் சோமேசுவரன் என்பான் அவனது 16-ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் இக்கோயிலுக்கு ஒரு நந்தவனம் ஏற்படுத்தி மூன்றாம் பிரகாரத்தில் ஒரு சாலையையும் ஏற்படுத்தியுள்ளான். கி.பி.1262 வரை ஆட்சி புரிந்த சோமேசுவரனுக்குப் பின்னர் வந்த ஹொய்சள மன்னன் இராமநாதர் என்பார்(கி.பி.1263—1297) வரை ஆட்சி புரிந்தார். இவர் படைத்தலைவர்களாகிய இரு சகோதரர்கள் கோயிலுக்குப் பல வகையான தானங்கள் வழங்கியுள்ளனர் என்பதைக் கோயில் வரலாற்று நூல் கூறுவதாக அறிகிறோம். இந்தச் சமயம் தான் மிகவும் அழகு வாய்ந்த வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதியும் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.


தங்களின் எழுச்சியால் பெருமையும், கர்வமும் கொண்ட பாண்டிய மன்னர்களோ, தங்கள் பக்தியிலும் அந்த ஆடம்பரத்தைக் காட்டினார்கள் எனக் கூறுகின்றனர். அதன் மூலம் இந்தக் கோயிலுக்குப் பலவகையான நன்மைகளே கிட்டின. முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251—1268) வரை ஆண்டு வந்தான். இவன் பல கட்டிடங்களை இந்தக் கோயிலில் எழுப்பியுள்ளான் என்பதோடு பல்வகையான அலங்காரங்களையும் செய்ததோடு தாராளமாக நன்கொடைகளையும் வழங்கினான். இதனால் அவன் புகழ் மிகவும் பெரிய அளவில் பேசப்படுகின்றது என்பதோடு அவன் காலத்துக் கல்வெட்டுக்களும் அவன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்மயமாகச் செய்தான் என்று பாராட்டுகிறது. திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவை இவனால் கட்டப்பட்டதாக அறிகிறோம். இந்தக் கட்டிடங்களும், இரண்டாம் பிரகாரமும் பொன்னால் வேயப்பட்டதாகவும் அறிகிறோம். இத்தோடு நில்லாமல் ஆதிசேடன் திருவுருவம், பொன்னாலாகிய பிரபை, பொன்னாலான பீடம், பொன் மகர தோரணம், பொன் கருட வாகனம் ஆகியனவும் பொன்னாலேயே அவனால் வழங்கப் பட்டிருக்கிறது. ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டரசனைப் போரில் எதிர்கொண்டு வெற்றி பெற்று அவனுடைய கருவூலத்தில் இருந்து கைப்பற்றிய பல பொருள்களைக் கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு மரகத மாலை, பொன் கிரீடம், முத்தாரம், முத்து விதானம், பொன் பட்டாடை, பொன் தேர், பொன்னால் நிவேதனப் பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றை வழங்கியுள்ளான். விலையுயர்ந்த பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும் திருவரங்கத் திருமேனியை அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறான்.


இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும்படி செய்த இன்னொரு நிகழ்வு தெப்போற்சவம் தான். அரங்கன் தெப்போற்சவம் காண வேண்டித் தங்கத்தினாலேயே படகு அமைத்தான். தனக்கும் சேர்த்து அப்படி ஒரு படகை அமைத்துக் கொண்டிருக்கிறான். காவிரியில் இரு படகுகளையும் விட்டான். தனது பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி அதன் முதுகில் மன்னன் அமர்ந்தான். மற்றொரு படகில் ஏராளமான ஆபரணங்களும், அணிமணிகளும், பொற்காசுகளும் அவனால் நிரப்பப்பட்டுக் குவிந்து கிடந்தன. தன்னுடைய படகினது நீர்மட்டத்திற்கு மற்றொரு படகும் வரும் வரையில் அந்தப் படகில் பொன்னைச் சொரிந்து கொண்டே இருந்தான். பின்னர் அப்பொன்னையும், அணிமணிகளையும் இக்கோயில் கருவூலத்திற்குத் தானமாக வழங்கினான். தன்னுடைய எடை அளவிற்குத் தங்கத்தினாலே திருவரங்கநாதரின் விக்ரஹம் செய்து அதையும் தன் பெயரால் வழங்க வைத்துக் கோயிலுக்கு அளித்தான். இவ்வாறு அவன் செய்த பல திருப்பணிகளை இக்கோயில் வரலாற்று நூல் கூறுகின்றது.


இவனை அடுத்து 25 ஆண்டுகள் வரை எந்தவிதக் குழப்பமும், தொந்திரவும் இன்றி அரங்கநாதர் நிம்மதியாக இருந்து வந்தார். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1268—1308 ஆம் ஆண்டுக் காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டுக்கும், முக்கியமாய்த் தென்னகத்துக் கோயில்களுக்கும் மாபெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. முதன்முதல் வெளிநாட்டிலிருந்து, போர்ச்சுக்கீசிய யாத்திரீகனான மார்க்கோபோலோ வந்து இப்பகுதியின் சிறப்பையும் செல்வச் செழிப்பையும் வியந்து எழுதியுள்ளது நாம் அனைவரும் அறிவோம். பாண்டிய நாட்டு மக்க்களையும், மன்னனையும் பற்றி அவர் எழுதியுள்ளவை அக்காலத்தில் நாட்டின் பெரும் செல்வத்தை மட்டும் குறிப்பிடாமல் மக்களின் உயர்ந்த பண்பையும் குறிப்பிடுகின்றது அல்லவா! தமிழ்நாட்டின் பெரும் செல்வ வளத்தையும் முத்துக்குளித்துறையின் வளத்தையும் பற்றிப் பெருமையாகப் பேசிய மார்க்கோபோலோ தமிழகத்து மக்கள் அனைவரும் இருமுறை குளித்துச் சுத்தமாக இருந்ததாகவும், குளிக்காதவர்களைத் தூய்மைக்குறைவுள்ளவர்களாகக் கருதியதையும், நீர் அருந்துகையில் உதட்டுக்கு மேல் வைத்துத் தூக்கிக் குடித்ததையும், மன்னனாகவே இருந்தாலும் தரையில் அமர்வதைக் கெளரவக் குறைவாய்க் கருதாததையும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார். அதான் திருஷ்டிப் பட்டதோ என்னமோ! குலசேகர பாண்டியன் காலத்திலேயே பாண்டிய நாட்டில் பிரச்னைகள் ஆரம்பித்தன. இவனுக்குப் பட்டமஹிஷி மூலம் ஒரு மகனும், ஆசை நாயகி மூலம் இன்னொரு மகனும் இருந்தனர். பட்டத்து இளவரசன் சுந்தரபாண்டியன் என்னும் பெயருள்ளவன். நியாயமாய் இவனே பட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் “எம்மண்டலமும் கொண்டருளிய” என்னும் பட்டம் பெற்ற குலசேகரனோ, தன் ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனுக்கே அரசு உரிமையை அளித்தான். இது இரு சகோதரர்களுக்குள் பகைமையை உண்டாக்கியது என்பதோடு அந்நியரைத் தென்னகத்தில் வரவும் வழி வகுத்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஸ்ரீரங்கம் கோயிலும், சிதம்பரம் கோயிலும், மதுரை மீனாக்ஷி கோயிலும். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் இதன் அரசியல் பின்னணியையும் வரும் நாட்களில் பார்ப்போம்.



பின் குறிப்பு:


மேற்கண்ட தகவல்கள் ஆதாரம்: அறநிலையத் துறையால் வெளியிடப் பட்ட திருவரங்கம் திருக்கோயில் புத்தகம்,

வைணவஸ்ரீ, மற்றும்

பேராசிரியர் நாகசாமி அவர்களின் ராமாநுஜர் பற்றிய புத்தகத்தின் விசேஷக் குறிப்புகள் கொண்ட வலைத்தளம்.


http://adhipiran.com/ramanujar-tamil.html


--Geetha Sambasivam 12:51, 6 ஜனவரி 2013 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 6 January 2013, at 12:53. This page has been accessed 2,459 times.