வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ஶ்ரீதர ஐயாவாள் 4

From மரபு விக்கி

Jump to: navigation, search
Aiyaval.jpg
Imagesmahalingam.jpg
 சதாசிவ பிரம்மேந்திராள் மற்றும் கோவிந்தபுரம் போதேந்திராளின் சமகாலத்தவர் ஶ்ரீதர ஐயாவாள். ஐயாவாள் அவர்கள் கங்கையைத் தம் வீட்டுக் கிணற்றுக்குக் கொண்டு வந்தவர். அது எப்படி என அறிவதற்கு முன்னர் ஐயாவாளின் பிறப்பு குறித்தும், அவரின் மற்றப் பெருமைகள் குறித்தும் பார்ப்போம். ஐயாவாளின் தந்தையார் ஶ்ரீ லிங்கார்யர் என்பார் மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்துவானாக இருந்து வந்தார். ஐயாவாள் அவருக்கு ஏக புத்திரராக அவதரித்தார். சதா சிவநாமத்தையே ஜபித்துக்கொண்டிருந்த ஐயாவாளுக்குச் சிறு வயதிலேயே அனைத்து வித்தைகளும் கைவரப் பெற்றன. வித்தைகளால் ஏற்பட்ட தேஜஸ் அவரைச் சுற்றி வியாபித்தது. சிறந்த சிவபக்தராக விளங்கிய ஐயாவாளுக்கு விரைவில் விவாஹமும் ஆயிற்று. தந்தை மரணமடைய, தந்தையின் வேலை மகனை நாடி வந்தது. ஐயாவாளின் மகிமை புரிந்த மன்னன் திவான் பதவியையே மனமுவந்து அளிக்க அதில் ஈடுபாடில்லாமல் இருந்த ஐயாவாள் அவர்கள் விரைவில் தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் தன் தாயார், மனைவி ஆகியோரின் பரிபூரண சம்மதத்தோடு தானமாக அளித்துவிட்டார். இனி இவ்வுலகில் வாழவேண்டித் தாம் பிக்ஷாடனம் செய்ய வேண்டும், இறைவன் புகழைக் காலக்ஷேபம் செய்து பரப்ப வேண்டும். பல புண்ணிய தீர்த்தங்களுக்கும் சென்று தீர்த்தாடனம், க்ஷேத்திராடனம் செய்து காலம் கழிக்க வேண்டும் என நிச்சயித்துக்கொண்டு தன் மனைவியோடும், தாயோடும் மைசூரை விட்டுக் கிளம்பினார். பல க்ஷேத்திரங்களுக்கும் போய் பக்தி, ஞானம் ஆகியவற்றைக் குறித்து உபதேசம் செய்து கொண்டு திருச்சிக்கு வந்தார். திருச்சியில் சில காலம் தங்க நினைத்தார். அப்போது அங்கே நாயக்க வம்சத்தைச் சேர்ந்த அரசன் ஒருவன் ஆண்டு கொண்டிருந்தான்.


ஐயாவாளின் சிவபக்தியைக் குறித்து அசூயை கொண்ட பண்டிதர்கள் சிலர் மன்னனிடம் ஐயாவாளுக்கு சைவ சித்தாந்தத்தின் மேல் பற்று அதிகம் என்று குறை கூறினார்கள். என்றாலும் அவரின் மகத்துவமும் அவர்களுக்குப் புரிந்தது. மன்னனோ இத்தகையதொரு மகானைக் குறை கூறுவதா என எண்ணினான். எனினும் பண்டிதர்களின் எண்ணத்தை அறிந்து கொண்ட அவன் ஶ்ரீமாத்ருபூதேஸ்வரரை ஶ்ரீ கிருஷ்ணனாக அலங்கரித்து வீதிவலம் வரச் செய்ய, மலைக்கோட்டை வீதியில் குடியிருந்த ஐயாவாள் வீட்டு வாசலுக்கு வீதி வலம் வந்து சேர்ந்தது. ஆழ்நிலை தியானத்தில் இருந்த ஐயாவாள் உள்ளுணர்ச்சியால் உந்தப்பட்டு தியானத்தினின்று எழுந்தார். மாத்ருபூதேஸ்வரர் கண்ணனாக அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு "க்ருஷ்ண துவாதச மஞ்சரி" என்னும் துதியை மனமுருகப் பாடினார். மன்னன் அவரின் பக்தி கண்டு மெய் சிலிர்த்தான். அதே ஊரில் வசித்த அந்தணன் ஒருவனுக்குப் பல வருஷங்கள் பிள்ளைப்பேறில்லாமல் பிறந்த ஓர் ஆண் குழந்தைக்குத் திடீரென்று மாந்தம் வந்து மூச்சுப் பேச்சற்று மரணநிலைக்குத் தள்ளப்பட்டது. தலைசிறந்த ஜோசியக்காரர்கள் அனைவராலும் தீர்காயுசு என்று கூறப்பட்ட பிள்ளை இறக்கப்போகிறான் என்ற எண்ணத்தில் பெற்றோர் கதறி அழுது கொண்டிருந்தனர். காவிரியில் குளித்துவிட்டு அந்தப் பக்கமாக வந்த ஐயாவாள், இதை அறிந்து கொண்டு தம் அந்தக்கரணத்தில் பகவானை தியானம் செய்தார். "தாராவளி" என்னும் நக்ஷத்ர சங்க்யை உள்ள ஸ்லோகத்தினால் பரமேஸ்வரனைப் பாடி தீர்த்தத்தைக் குழந்தை மீது ப்ரோக்ஷித்தார். தம் கரங்களால் விபூதியைக் குழந்தைக்கு இட்டுவிட்டார். குழந்தை சற்று நேரத்தில் மயக்கத்திலிருந்து விழித்து எழுந்தது.


இது போன்ற செயல்களாலும், ஐயாவாளின் பாண்டித்தியத்தாலும் அவரின் பக்திபூர்வமான காலக்ஷேபங்களாலும் மனம் மகிழ்ந்த அரசன் அவரை அங்கேயே தங்கச் சொல்லத் தம்முடைய நிலைக்கு ஒரே இடத்தில் தங்குவது சரிப்பட்டு வராது என்று ஐயாவாள் அன்றிரவே திருச்சியை விட்டுப் புறப்பட்டார். அரசன் மனம் வருந்த அவன் கனவில் ஐயாவாள் நாகாபரணத்தோடு ஈசன் உருவில் காட்சி கொடுத்துத் தாம் வந்த காரியம் தடைப்படாது நிறைவேறத் தாம் ஒரே இடத்தில் தங்க இயலாது என்றும் பக்தியைப் பரப்புவதே தமக்கு முக்கியம் எனவும் கூற மன்னனும் தெளிந்தான். க்ஷேத்ராடனம் செய்து வந்த காலத்தில் ஐயாவாளின் தாயார் மரணமடைந்தார். அதன் பின்னர் ஐயாவாள் தஞ்சைக்கு வந்து சேர்ந்தார். அங்கே அப்போது மஹாராஷ்டிர அரசர்கள் வம்சத்தில் வந்த ஷஹாஜி அரசன் ஆண்டு வந்தான். சிலகாலம் தஞ்சையில் தங்கிய ஐயாவாள் அங்கே இருந்த சப்தமும், ஆரவாரமும் தமக்கு இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்து கொண்டு சிற்றூர்களுக்குப் பயணமானார். கும்பகோணம், திருபுவனம், திருநாகேஸ்வரம் போன்ற ஊர்களைத் தரிசித்துக்கொண்டு திருவிசலூர் வந்து சேர்ந்தார். அந்த ஊரின் அமைப்பும் சூழ்நிலையும் அவருடைய தியானம் செய்யும் மனதுக்கு நிம்மதியை அளிப்பதாக உணர்ந்ததால் ஐயாவாள் அங்கேயே அக்ரஹாரத்தில் தங்கினார். என்றாலும் அடிக்கடி மன்னன் அவரையும் மற்ற வேதவித்துவான்களையும் தஞ்சைக்கு அழைத்து வாதவிவாதங்கள் செய்ய வைத்தான். அனைவரிலும் ஐயாவாளே சிறப்பாக இருந்து வந்தார். எத்தனை முக்கிய ஸ்தானம் வகித்தாலும் அரசவைக்கும் அரசன் அளிக்கும் கெளரவத்துக்கும் ஐயாவாள் மயங்கவே இல்லை. சமஸ்கிருதத்தில் பதமணி மஞ்சரி என்னும் நிகண்டையும், "ஷஹாஜி சரித்திரம்" என்னும் நூலையும் எழுதினார். மற்ற வித்வான்களுக்கு இவர் மேல் பொறாமை வளர்ந்தது. ஒருநாள் வீட்டில் இவர் நாம சங்கீர்த்தனம் செய்யும் வேளையில் மன்னனிடமிருந்து காவலாள் வந்தான். இவரை பாகவதர் என நினைத்துக்கொண்டு, "பாகவதரே! உள்ளே திவான் இருந்தால் கூப்பிடுங்கள்!" என்று அதிகாரம் செய்ய, இவரோ, "திவான் இறந்துவிட்டார்; பாகவதர் தான் இருக்கிறார்." என்று மன்னனுக்குச் செய்தி அனுப்பினார். அவருடைய மனம் அரசபதவிகளில் மயங்காமல் இருப்பது கண்டு மகிழ்ந்த மன்னன் அவரை இருக்குமிடத்திற்கே வந்து வணங்கிச் சென்றான். அப்போது அந்த ஊருக்கு போதேந்திர ஸ்வாமிகள் விஜயம் செய்தார். போதேந்திர ஸ்வாமிகள் தம் குருவின் ஆக்ஞைப்படி நாம சித்தாந்தம் செய்ய வேண்டித் தல யாத்திரையாக சேதுவுக்குக் கிளம்பினார். ராமேஸ்வரத்தில் தங்கி நாம சங்கீர்த்தனம் செய்துவிட்டுப் பின்னர் வ்ருஷபாத்ரி, பழநி, ஶ்ரீரங்கம், திருவானைக்கா போன்ற க்ஷேத்திரங்கள் வந்தவர் ஐயாவாளின் புகழைக் கேட்டு அவரைக்காண விரும்பி திருவிசலூர் வந்து சேர்ந்தார்.


போதேந்திராள் திருவிடைமருதூர் வந்ததும் ஐயாவாளைப் பற்றியும் அவரின் சிவபக்தி குறித்தும் அறிய நேர்ந்தது. உடனே அவரைக் காண வேண்டிக் காத்திருக்கையில் ஒரு பிரதோஷ தினத்தன்று ஶ்ரீமஹாலிங்க ஸ்வாமியைக்காண வந்த ஐயாவாள் சுவாமிகளைக் கண்டு வணங்கி நிற்கத் தன்னிலையையும் ஆஸ்ரம கெளரவத்தையும் மறந்து போதேந்திராள் ஐயாவாளைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின்னர் காஞ்சி சென்ற போதேந்திராளுக்கு ஐயாவாளையும் அவர் தம் வித்வத்தையும் அதன் மூலம் தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியையும் மறக்க முடியாமல் தவித்தார். ஆனால் மடத்தின் பொறுப்பு அவரைத் தடுத்தது. ஆகவே தம் சிஷ்யர் ஒருவரைப் பீடாதிபதியாக்கி விட்டு போதேந்திராள் திருவிடைமருதூரை அடுத்த கோவிந்தபுரத்தை அடைந்தார். ஶ்ரீதா ஐயாவாளும் திருவிசலூரில் இருந்தார். சிவனின் மஹிமை கூறும் "ஆக்யா ஷஷ்டி" என்னும் ஐயாவாளின் நூலைக் கண்ட போதேந்திராள் அவரிடம் ஶ்ரீராம நாமத்தில் ருசி இல்லையோ என வினவ, ஐயாவாளும் அதற்கு விடையாக மஹேசனே ராம நாமத்தை ஒரு கணம் கூட நாவை விட்டுப் பிரிக்க முடியாது என்று ரசிக்கையில் ராம நாமத்தின் ருசியை எவரால் விவரிக்க இயலும்? என்னும் பொருள்படப் பாடல் ஒன்றைப் பாடினார்.


இவர்கள் இருவரோடு அவ்வப்போது ஶ்ரீசதாசிவ பிரம்மேந்திராளும் கலந்து கொள்வார். பல பக்தர்களையும் ஶ்ரீதர ஐயாவாளின் கருணையும், ஏழை எளிய ஜனங்களிடம் அவர் வைத்திருந்த பற்றும் கவர்ந்தன. போதேந்திராளோடு ஶ்ரீதர ஐயாவாளும் பல நகரங்களுக்கும் சென்று பகவந்நாம ஸ்மரணையை ஜனங்களிடம் ஏற்படுத்தினார்.. தினமும் உஞ்சவ்ருத்தி எடுத்து ஸ்வயம்பாகம் செய்து போதேந்திராளுக்கு பிக்ஷை செய்வித்துத் தாமும் உணவு உட்கொள்ளுவார். பின்னர் பல இடங்களுக்கும் சென்று உபதேசங்கள், பகவந்நாம ஸ்மரணை போன்றவற்றை ஏற்படுத்திவிட்டு மீண்டும் திருவிடமருதூர் திரும்பினார்கள். ஐயாவாள் திருவிசலூரில் தங்கினார். அக்ரஹாரப் பண்டிதர்களுக்கு அவரிடம் பொறாமை அதிகரித்தது. பலவிதங்களிலும் தொல்லை கொடுத்தனர். அவமதித்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து செய்த கோகுலாஷ்டமி உற்சவத்திற்கு ஶ்ரீதர ஐயாவாளை அழைக்காமல் அவமதித்தனர். அன்றிரவு ஶ்ரீகிருஷ்ணர் படத்தை அலங்கரித்து வீதி வலம் வருகையில் ஐயாவாள் தரிசிக்க வெளியே வந்தார். நமஸ்கரித்து தீபாராதனை செய்ய அவரை அவமதித்து உம்முடைய உபசாரம் கிருஷ்ணனுக்குத் தேவை இல்லை என்று கூறிவிட்டு நீர் உண்மையான பக்தர் எனில் கிருஷ்ணனை அழையும், வருவான் எனக் கேலி செய்து நகர்ந்தனர். பதிலே பேசாமல் தம் வீட்டுக்குள் சென்ற ஐயாவாள் கிருஷ்ணரை மனமுருகிப் பிராரத்தித்தார்.


அடுத்த வீட்டு வாசல் செல்கையில் ஊர்வலப் படத்தில் கிருஷ்ணன் உருவம் மறைந்துவிட்டது. பயந்து போன அனைவரும் என்ன செய்வதெனத் தெரியாமல் ஐயாவாள் தான் ஏதோ செய்துவிட்டார் என அவர் வீட்டில் நுழைய ஊஞ்சலில் கிருஷ்ணர் உருவம் தெரிந்தது. டோலோத்ஸவம் செய்து கொண்டிருந்தார் ஐயாவாள். ஊஞ்சலில் இருந்தக் கிருஷ்ண உருவம் அவர்கள் வீதியுலாவிற்குக் கொண்டு வந்ததே என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள் ஐயாவாளின் பெருமையைப் புரிந்து கொண்டு மன்னிப்புக் கேட்டனர். ஐயாவாளின் பெருமையை திருவிசலூர் கர்க்கடேஸ்வரர் ஊர் உலகறியச் செய்ய நினைத்தார். கந்தர்வன் ஒருவன் சாபத்தால் நண்டாக மாறி சாபம் தீர சிவ வழிபாடு செய்ய அவனுக்கு முக்தி அளித்த அண்ணல், ஐயாவாளுக்கும் கருணை காட்ட நினைத்தார். அந்த வருடம் ஊரில் மழையே பெய்யவில்லை. ஐயாவாள் ஈசன் சந்நிதியில் ஒரு நண்டுக்கே அருள் புரிந்த ஈசன் ஜனங்களைத் துன்புறுத்தலாமா என வேண்டிக்கொண்டு 'குலீராஷ்டகம்' என்னும் ஸ்லோகம் பாடக் கடுமையான மழை பொழிந்தது. தினமும் மஹாலிங்க ஸ்வாமியைக் காணக் காவிரியின் எதிர்க்கரைக்குச் செல்வார் ஐயாவாள். ஒரு சமயம் காவிரியின் வெள்ளப் பெருக்கின் காரணமாக மஹாலிங்க ஸ்வாமியை தரிசனம் செய்ய முடியாமல் வருந்திய ஐயாவாளுக்குக் கோயில் அர்ச்சகர் உருவில் ஈசனே வந்து பிரசாதம் கொடுத்துச் சென்றார். காவிரி வெள்ளத்தில் செல்ல முடியாமல் தாம் தவிக்க அர்ச்சகர் எப்படி வந்தார் என வியந்த ஐயாவாள் மறுநாள் விசாரித்தபோது உண்மை புரிந்தது. பரமனே தனக்குச் செய்த இந்த தயையை நினைந்த ஐயாவாள் 'தயா சதகம்" என்னும் ஸ்தோத்திரத்தை இயற்றினார்.

 

சாட்சாத் ஶ்ரீ பரமேஸ்வரனின் அவதாரமாகவே கருதப்பட்ட ஐயாவாள் அவர்கள், சகல ஜீவராசிகளீடமும் கருணையோடு இருந்து வந்தார். ஒரு தரம் ஐயாவாளின் வீட்டில் சிராத்தம் செய்ய வேண்டி இருந்தது. ஐயாவாள் காவேரிக்கு ஸ்நாநத்திற்குச் சென்றார். அங்கே வழியில் ஒரு புலையன் பசி தாங்காமல் களைத்துக் கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்தான். அதைக் கண்ட ஐயாவாளின் மனம் பொறுக்காமல் அந்தப் புலையனை வீட்டிற்கு அழைத்து வந்து, சிராத்த பிராமணர்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட உணவை அவனுக்குப் படைத்துவிட்டார். பின்னர் சிராத்த உணவைப் புலையனுக்கு அளித்த காரணத்தால் மீண்டும் வீட்டைச் சுத்தம் செய்து, புதியதாய்ச் சமையல் செய்து சிராத்தம் தொடங்கிச் செய்யலானார். இதைத் தெரிந்து கொண்ட வைதீகர்கள் ஐயாவாள் செய்யத் தகாத காரியத்தைச் செய்துவிட்டதாகவும், சாஸ்திர சம்பிரதாயத்துக்குப் புறம்பான ஒன்றைச் செய்த அவர் வீட்டு சிராத்தத்தை நாங்கள் நடத்தித் தர மாட்டோம் எனவும் கூறிவிட்டனர். வேறு வழியின்றி சிராத்த பிராமணர்கள் அமரும் இடத்தில் பித்ருக்களின் ஸ்தானத்தில் கூர்ச்சங்களைப் போட்டார் ஐயாவாள். அவற்றில் பிரம்மா, விஷ்ணு, விஸ்வேதேவர் ஆகியோரை ஆவாஹனம் செய்தார். ஆச்சரிய வசமாக மூவரும் ப்ரத்யக்ஷமாகத் தோன்றினார்கள். ;ப்ராமணர்களின் இடத்தில் அமர்ந்து கொண்டு ஸ்ராத்தத்தை நடத்திக் கொடுத்தனர்.


அதை அறிந்த அக்ரஹார ப்ராமணர்கள் ஐயாவாள் ஏதோ மந்திர சித்து வேலை செய்திருப்பதாய்க் கூறி ஏளனம் செய்தனர். திரிமூர்த்திகளும் நேரே வந்திருந்து ஸ்ராத்தத்தை நடத்திக் கொடுத்ததை நம்பவே இல்லை. தக்க தருணம் வரட்டும் எனக் காத்திருந்தனர். மீண்டும் இன்னொரு சிராத்தம் வந்தது. அப்போதும் ஐயாவாள் எவ்வளவு விநயமாகக் கேட்டுக்கொண்டும் வர மறுத்தனர். புலையனுக்கு போஜனம் செய்ய்வித்த பாவம் இருப்பதால் தங்களால் வர இயலாது என்று கூறினார்கள். இதற்கு என்ன பரிஹாரம் என ஐயாவாள் கேட்க, கங்கா ஸ்நாநம் செய்து கங்கைக்கரையில் பிராயச்சித்தங்கள் செய்துவிட்டு வருமாறு கூறினார்கள். சிராத்தத்திற்குச் சில நாட்களே உள்ள நிலையில் அவ்வளவு தூரம் யாத்திரை செய்துவிட்டுத் திரும்பக் காலமும் இல்லை என்றும், தம் உடல்நிலையும் தூரப் பிரயாணம் செய்யத் தக்கதாய் இல்லை எனவும் ஐயாவாள் கூறிவிட்டு, கங்கையைத் தம் வீட்டிற்கே வரவழைப்பதாய்க் கூறினார். இது என்ன ஏமாற்று வேலை என எண்ணிக்கொண்ட ப்ராமணர்கள், அவரிடம் சண்டை போட, அவரோ மிக்க மன வருத்தத்துடன், தம் வீட்டுக் கிணற்றடிக்கு வந்து "கங்காஷ்டகம்" என்னும் ஸ்தோத்திரத்தை மனமுருகிப் பாடலானார். உடனேயே கிணற்றிலிருந்து ஊற்றுப் போல் கங்கை பொங்கி வந்து வழிந்து பின் வீதிக்கும் சென்று வீதி வழி ஓட ஆரம்பித்தாள். பயந்து போன அக்ரஹாரவாசிகள் அவரிடம் மிகவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள ஐயாவாளும் கங்கையைத் தம் வீட்டுக்கிணற்றிலேயே அடங்குமாறு பிரார்த்தித்துக் கொண்டார். இதை நினைவு செய்யும் விதத்தில் ஒவ்வொரு கார்த்திகை மாத அமாவாசைக்கும், அந்தப் புண்ய தீர்த்தம் அங்கு பெருகி ஜனங்களைப் புனிதப் படுத்தி வருகிறது.


சில நாட்கள் சென்றன. வழக்கம்போல் அர்த்தஜாம தரிசனத்திறகாக திருவிடமருதூர் வந்த ஐயாவாள் , மஹாலிங்க ஸ்வாமியிடம் மனமுருகி, "சம்சார பந்தத்தில் மாட்டிக்கொண்டு தாம் இதுவரை பட்ட கஷ்டங்கள் போதுமென்றும் இந்த வாழ்க்கை என்னும் நாடகத்தில் ஆடிக் களைத்துவிட்டதாகவும் கூறித் தம்மை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டு ஶ்ரீமஹாலிங்கரை ஆலிங்கனம் செய்து கொள்ள, அப்படியே அந்த இடத்திலேயே ஜோதிஸ்வரூபமாக மறைந்தார் ஐயாவாள்.

 

பல புத்தகங்கள் மற்றும் கூகுள் தேடல் உதவியுடன் தொகுத்தது. .


--Geetha Sambasivam 20:41, 21 அக்டோபர் 2011 (UTC)

Category:தெய்வீகப்_பெரியார்கள்

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 22 October 2011, at 18:13. This page has been accessed 1,546 times.