வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வ.ஐ.சுப்பிரமணியம் - மறைவு.

From மரபு விக்கி

Jump to: navigation, search

 வ.ஐ.சுப்பிரமணியம் - மறைவு


தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய்.
சுப்பிரமணியத்தின் மறைவு என்பது பேரிழப்பு. 20-ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் அரசியல் ஆதாயத்துக்காக அல்லாமல், உண்மையான பற்றுடன்தமிழ்த் தொண்டாற்றிய மூவர் எஸ். வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் மற்றும் ரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோர்.


அவர்களுக்கு அடுத்தபடியாகப் பங்களிப்பு நல்கியவர் யார் என்று கேட்டால், வையாபுரிப் பிள்ளையின் அன்புக்குப் பாத்திரமான மாணக்கராக விளங்கிய "வி.ஐ.எஸ்.' என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட வ.அய். சுப்பிரமணியம்தான். அவர் தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பதவி ஏற்றதும், அவரைப் பேட்டி காணச் சென்ற அனுபவம் எனக்கு உண்டு. ""என்னை எதற்காகப் பேட்டி காண்கிறீர்கள்? என்கிற கேள்விக்கு, ""நீங்கள் ஒரு தலைசிறந்த இலக்கிய ஆய்வாளர், அறிஞர் அதனால்தான் என்று பதிலளித்தேன்.


""இலக்கியத்துக்கும் உங்கள் வார இதழுக்கும் என்ன சம்பந்தம்? என்கிற அவரது பதில் கேள்வி என்னை வாயடைக்க வைத்துவிட்டது. காலந் தவறாமை என்பதில் கறாராக இருந்தவர் "ஐயா' வி.ஐ.எஸ். எந்தவிதப் பரிந்துரையும் இல்லாமல், திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக
இவரை நியமித்தவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இரண்டாவது முறை இவருக்குப் பதவி நீட்டிப்பும் கொடுத்தார். முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க வி.ஐ.எஸ். முன்பே நேரம் கேட்டுப் பெற்றிருந்தார். குறித்த நேரத்துக்கு முன்பே தலைமைச் செயலகத்துக்கு வந்து விட்டிருந்தார் வி.ஐ.எஸ். தான் வந்திருக்கும் செய்தியை உதவியாளரிடம் தெரிவித்து விட்டார். தனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து 15 நிமிடமாகியும் அவர் அழைக்கப்படவில்லை. வேறு யார் யாரோ முதல்வர் அறைக்குச் செல்வதும் வருவதுமாக இருந்தனர். எதுவும் பேசாமல் எழுந்தார்


அன்றைய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரான
வி.ஐ.எஸ். நேராக கவர்னர் மாளிகைக்குச் சென்று, தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநர் குரானாவிடம் தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்து விட்டார். தான் எடுத்த முடிவிலிருந்து மாறவும் இல்லை. அதுதான் அவர். ஐயா வி.ஐ.எஸ். பற்றி இன்னொரு செய்தி. அவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அளித்த அறிக்கை ஒன்றில் "திராவிட மொழிகள்' என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகளில் ஒருவர் "திராவிட மொழிகள்' என்பதை ஏன் "தென்னிந்திய மொழிகள்' என்று குறிப்பிடக்கூடாது என்று வி.ஐ.எஸ்.க்கு கடிதம் எழுதிக் கேட்டபோது, அவரிடமிருந்து வந்த பதில் என்ன தெரியுமா?


""தங்களுடைய பரிந்துரைக்கு மிக்க நன்றி. முதலில் தாங்கள்
இந்தியாவின் தேசிய கீதத்தில் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு, இந்தப் பரிந்துரையைச் செய்தால் பரிசீலிக்க முயல்கிறேன்! என்பதுதான் அது. "அடையாளம்' பதிப்பகத்தார் இரண்டு தொகுதிகளாக வ.அய். சுப்பிரமணியத்தின் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். வி.ஐ.எஸ். நேரிலறிந்த தமிழ் அறிஞர் பெருமக்களான "ரசிகமணி' டி.கே.சி., தெ.பொ.மீ., மு. இராகவையங்கார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, தனிநாயகம் அடிகள் போன்றவர்கள் குறித்த பதிவுகளை இந்தத் தொகுப்பில் காணலாம். தமிழ் மொழியின் சரித்திரம் எழுதப்படும்போது, அதில் "ஐயா' வ.அய். சுப்பிரமணியத்தின் பெயர் குறிப்பிடப்பட்டே தீரும்.

--


முனைவர் நா.கணேசன்.

நன்றி - தின மணி.

தேதி - 09 - 03 - 2011.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 9 March 2011, at 10:00. This page has been accessed 2,111 times.