வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வணங்கும் துறை பலபலவாக்கி 6

From மரபு விக்கி

Jump to: navigation, search

முதலில் இந்த தொடர் பதிவு தோன்றியதற்கு ஆதி காரணம் திருமுறைகளில் பிரும்ம-விஷ்ணு ரூபங்கள் சிவனை வணங்குவதாக அடிக்கடி வரும் பாடல்களும், அந்த முறையில் விஷ்ணு எடுத்த திருவவதாரங்களின் கோரக் கட்டத்தில் சிவபெருமான் அடக்கியதாகச் சொல்லப்படும் நிகழ்ச்சிகளும்தானே..


திருமுறைகள் குறிப்பாக தேவாரப்பாடல்கள் வந்த காலத்தைப்  பற்றி விரிவாகக் குறிப்பிட்டோம். சைவத்தில் சிவம்தான் பரப்பிரும்ம சொரூபம். இங்கு காஞ்சிப் பெரியவர் இந்த பரப்பிரும்மத்தைப் பற்றி சைவத்தின் பார்வையில், வைணவத்தின் பார்வையில் குறிப்பிட்டதைப் பார்த்தால் திருமுறைப் பாடல்களில் சிவனை விஷ்ணுவும் பிரும்மனும் வணங்குவதாக வருவதோ, ஆழ்வார்களின் திவ்வியப்பிரபந்தங்களில் விஷ்ணுவை சிவன், பிரும்மன், இந்திரன் முதலான தேவர்கள் வணங்குவதாக வருவதோ நியாயமான காரணத்தினால் என்பதும் நமக்குப் புரியும்.


ஆனால் திருமுறையில் பங்கு பெற்ற நால்வர்களோ, அல்லது பன்னிரு ஆழ்வார்களோ எந்த ஒரு பாசுரத்திலும் எந்த தெய்வத்தையும் இழிவுபடுத்திப் பாடவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. தாம் வணங்கும் சிவனாகட்டும், விஷ்ணுவாகட்டும் அந்தத் தெய்வத்துக்கு ஒரு உயர்த்திக் கொடுத்துப் பாடியதில் நாம் எந்தக் குறையும் காணமுடியாது. சமணர்களையும் பௌத்தர்களையும் அவர்கள் நெறி தெய்வநெறிக்கு முரணானது என்ற ஒரே நோக்கில் அவர்களைக் கடுமையாகச் சாடிய பெருமக்கள் இந்து தெய்வங்களைப் பற்றிப் பாடும்போது புகழாரமாகத்தான் பாடியுள்ளார்கள்.


அதே சமயத்தில் திருமால் அவதாரங்கள் என சொல்லப்படும் வராஹ, நரசிம்ஹஅவதாரங்களை சிவலீலைகள் மூலம் அடக்கியதாக சொல்லப்படும் புராணக் கதைகள் நடுவில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. திருமுறைப் பாடல்களில் இப்படிப்பட்ட சம்ஹார விளக்கங்கள் இல்லை. திருமால் சக்கரம் பெற்றதாகவும், தம் விழிகளை அர்ப்பணித்து பூசை செய்தனவாகவும்தான் வருகின்றதே தவிர, வேறுவிதமான வீரத்தனமான வரலாறுகள் இவைகளில் காணப்படவில்லை. அதே போல திவ்வியப் பிரபந்தப் பாடல்களிலும் எந்த விவரமும் இல்லை. நம்மாழ்வார் சிவசொரூபத்தைக் காணும்போது விஷ்ணுவின்
மறுபாதியாகத்தான் காண்கிறார். அவருக்கு கண்ணன் மட்டுமே பரப்பிரும்மசொரூபம். ‘கறுத்த மனம் ஒன்றும் வேண்டாம், கண்ணனல்லால் தெய்வமில்லை, இருப்பதெல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறுமினோ’என்பார்.


நாயக்கர் காலத்தில் ஏன் இப்படிப்பட்ட நிலை வந்தது எனப் பார்க்குமுன் அதற்கு முந்தைய நூற்றாண்டு மதங்களுக்கிடையே நடந்த நிகழ்வுகளை நாம் கொஞ்சம் இங்கே கொண்டு வரவேண்டும்தான்.


சமணமும் பௌத்தமும் ஏறத்தாழ முழுமையாக தமிழகத்தில் அகற்றப்பட்டவுடன் சனாதன தர்மத்திலேயே பிரிவினைகள் வெளிவரத் தொடங்கின. மனிதனுக்கு மனிதன் எப்போதுமே தோழமையுடன் செல்வது என்பது இயற்கையின் நியதி இல்லையோ என்னவோ..
ஒருவர் ஒன்று சொன்னால் அதில் குற்றம் காண்பது என்பதும் மனிதப் பிறப்பின் இயல்பாகவும் இருக்கலாம். இதற்கு காரணம் ஈகோ எனச் சொல்லப்படும் அகங்காரம் மட்டுமே. எல்லா வாதங்களும் இந்த அகங்காரம் என்ற அடிப்படையிலேயே ஆரம்பிக்கின்றன. அகங்காரம் என்ற ஒன்று அகற்றப்பட்டால் வாதங்கள் வரவே வராது. ஆனால் பாரதம் ஆதி காலத்திலிருந்தே வாதங்கள் பிரதிவாதங்களாக வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது.


சனாதன தர்மத்திலேயே மதங்களைத் தோற்றுவித்தவர்கள் தம் மதங்கள் வளர்ப்பதற்காகத் தாம் கொண்ட கொள்கையே உயர்ந்தது என வாதிட்டார்கள். சிலர் வென்றார்கள். வென்றவர்களால் தெய்வத்துக்கென ஒரு புதுக் கொள்கையையே உருவாக்கினார்கள். அந்தக் கொள்கையைப் பரப்பவும் தங்கள் தெய்வத்தையே பரப்பிரும்மமாக நிலைநாட்டவும் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும்
செயல்பட்டார்கள். மதத் தலைவர்களின் சீடர்கள் அதற்காக மேலும் மேலும் பாடுபட மதங்கள் பெருகின. பெருகின மதங்களுக்குள்ளும் பிரிவினைகள் வந்தன.வாதங்கள் பெருகின.. பிரதிவாதங்கள் அவைகளை மறுத்தன, மறுக்கவேண்டும் என்ற நியதி வரும்போது புராணங்களில் ஏதாவது ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக் கொண்டு அதை விரிவாக்கம் செய்கிறேன் பார், என்ற வகையில் புதிய புதிய கதைகள் வெளிவரத் தொடங்கின.


உபநிடதங்களில் தெய்வங்களைப் பற்றி சொல்லும்போது வெவ்வேறு வகையான தகவல்கள் நமக்குக் கிடைக்கும் ஆனால் அவை அந்தந்த இடங்களில் அதைப் பொருத்தி விட்டுச் செல்வதுதான் உத்தமமான வழி. ஆனால் பண்டிதர்கள் இவைகளை அப்படியே
விட்டுவிடாமல் தங்கள் கூற்றுகளுக்குப் பொருந்தும் வகையில் பொருத்திப் பார்த்து, தாங்கள் கண்ட வழிதான் சிறந்தது என்று சொல்லத் தொடங்கினார்கள். கேனோபநிடதத்தில், அமுதம் கடைந்து உண்டவுடன் ப்ரும்ம விஷ்ணு தேவாதியர்களுக்குள்ளே போட்டி வருவதாகவும் ஒவ்வொருவரும் தம்மால்தான் அமுதம் கிடைத்ததாக சொல்லிக்கொண்டிருக்கும்போது, தேவி ஒரு துரும்பைக்
காட்டி, அதை அசைக்கச் சொல்வாள். ஆனால் துரும்பை அவர்களால் அசைக்கமுடியாமல் போக, ஒரு துரும்பைக் கூட அசைக்கமுடியாத உங்களால் எப்படி அமுதத்தைப் பெற்றுத் தந்திருக்கமுடியும் எனக் கேட்பதாக வரும். அதே போல பஸ்மாசுரன் கதை. சிவனுடைய தலையிலேயே பஸ்மாசுரன்  தன் கையை  வைக்க வரும்போது திருமால் மோகினி வேஷம் போட்டு அவனைத் தன் தலையிலேயே கைவைக்கச் செய்வதாக வரும்.


ஆனால் இவை எல்லாமே மதப் பிரிவினைத் தலைவர்களால் அவர்களுக்கு உபயோகப்படும் அளவில் பெரிதுபடுத்தப்பட்டது என்பதும் வாஸ்தவமே.ஆனால் தமிழ்நாட்டில் எப்போது சோழர்கள் ஆட்சி முடிவடைந்து போனதோ, அப்போதே மதங்களுக்கும் சிரமதிசை வந்தது போலத்தான். ஏனெனில் பரமதமான இஸ்லாம் என்ற பெயரில் இங்கு அந்தக் காலகட்டத்தில் மாபெரும் வன்முறை டில்லி
சுல்தான்களால் நிகழ்த்தப்பட்டது. பல கோயில்கள் அழிக்கப்பட்டன. அர்ச்சா மூர்த்திகள் அகற்றப்பட்டன. உற்சவமூர்த்திகளின் விக்கிரஹங்கள் உருக்கப்பட்டு தங்கங்களாகவும் தாமிரங்களாகவும் யானைகள் மேல் ஏற்றிச் செல்லப்பட்டன. பல புகழ்பெற்ற கோயில்கள் வித்தியாஸமின்றி இடிக்கப்பட்டன. 1308 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மாலிக்காபூர் தாக்குதல்கள் சனாதன
தர்மத்தையே நிலைகுலைய வைத்தது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் இந்த வன்முறையின் தாக்கம் நீடித்தது. பிறகு வந்த விஜயநகர நாயக்க மன்னர்கள் மூலம்தான் மீண்டும் சனாதன தர்மத்துக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஏராளமான கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன. மீண்டும் சிற்ப வரலாறு தோன்றியது. (பல சோழ கால சிற்பங்கள் முகலாயர்களால் அழிக்கப்பட்டிருந்தது). மீண்டும்
புராண வரலாறுகள் மக்களுக்கிடையே ஒரு புது உத்வேகத்தோடு எடுத்துச் செல்லப்பட்டன. புதிய புராணக் கதைகள் பண்டிதர்களால் படைக்கப்பட்டன. எடுத்துக் காட்டாக திருவேங்கட மகாத்யம், பத்மாவதி பரிணயம், பகுளாதேவிக் கதைகள், குபேரனுக்குக் கடன் பட்ட வரலாறு போன்றவை புதிதாகப் படைக்கப்பட்டதாக வரலாற்றுக் கல்வெட்டுகளே சொல்லுகின்றன. 1491 ஆம் ஆண்டு திருமலைக் கோயில் கல்வெட்டு ஒன்று செல்லப்ப நரசிங்க நாயக்க பேரரசரால் திருவேங்க்ட மாக்த்யம் மக்களிடையே பிரவச்சனம் செய்வதற்காக
பண்டிதர்களுக்கு நிலம், பணம் ஒதுக்கிய வரலாற்றைச் சொல்லும்.


மதுரை சொக்கநாதர் ஆலயத்தில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோபுரத்தில் ஒரு சிலை நரசிம்மரை சரபேஸ்வரர் அடக்குவதாக இப்போதும் காணப்படும். தில்லை திருச்சிற்றம்பலத்தில் சரபேஸ்வரருக்கு ஒரு தனிச் சன்னிதியே உண்டு.எந்த அவதாரமும் அதுவும் ஒரு துஷ்ட சம்ஹாரத்துக்காக ஆண்டவனிடமிருந்து வெளிப்படும்போது அதன் பலம் அதிபயங்கரமாகத்தான் இருக்கும். கடும் பலம்
கொண்ட இரணியன் போன்றவர்களை அழிப்பது சாமானியமானவர்களாலோ, தேவர்களாலோ, முனிவர்களாலோ முடியாது என்பதற்காக இறைவன் தாமே முன்வந்து அவர்களை சம்ஹாரம் செய்கிறார். அப்படிச் செய்யும்போது எடுக்கப்படும் அவதாரம் நம்
கற்பனைக்கெட்டாத அளவில் கடும் கோரமாகவும், மிகப் பெரிய பிரளயத்தை உண்டாக்கும் அளவிலும் இருக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அந்த அதிக பலம் வாய்ந்த அசுரர்களை அழிக்கமுடியும். அசுரவதம் முடிந்தவுடன் கூட அவதாரங்களின் இந்த அதிபயங்கர சக்தியானது அடங்குவதற்குக் காலம் பிடிக்கும். அப்படி அடங்குவதற்காகத்தான் ஆண்டவனே இன்னொரு ரூபத்தில் வந்து
அடங்கச் செய்வதாகவும் புராணங்கள் சொல்கின்றன. உதாரணத்துக்கு, அசுரர்களின் ரத்தம் குடித்து அவர்களை அழித்த காளியின் கோரதாண்டவம் நிற்க சிவனே ஒரு சிறு குழந்தையாக அவள் காலடியில் விழுவதாகவும், இன்னொரு இடத்தில் காளியின் கோபம் அடங்க அவளுடன் தாமும் நடனமாடி அவள் கோபத்தை வெல்வதாகவும் வரும்.


இப்படிப்பட்ட இடங்களில் இப்படி நடந்தால்தான் பிரபஞ்சத்தை ரட்சிக்கமுடியும் என்பது இறைவனுக்குத் தெரியும். நாம் இவை போன்ற
நிகழ்ச்சிகளில் இந்த அடக்குதல், அடங்குதல் போன்றவற்றை மேலோட்டமாக பார்த்து அதை அங்கேயே விடுவதே நலம்.தமிழ்நாட்டில் மயிலம் அருகே திருவக்கரைக் கோயிலில் மகாகாளி சன்னிதியில் பார்க்கவேண்டும். அவள் ஒரு ராட்சசியை அழிக்கும்போது, அந்த ராட்சஸியின் வயிற்றில் குழந்தை வளருவதைக் கண்டு, அந்தக் குழந்தையை தனியே எடுத்துத் தன் காதில் வளையமாகப் பொருத்திப் பாதுகாத்து பிறகுதான் அந்த ராட்சஸியை வதம் செய்வாள். இன்றைக்கும் பார்க்கலாம், அவள் காதில் உள்ள குழந்தையை.
இங்கே எத்தனைதான் ராட்சஸவதம் என்று இருந்தாலும் கோரம் நம் கண்களுக்குத் தெரியாது. அவள் அந்தப் பச்சிளங்குழந்தையை அணைத்துச் சாய்த்து தன் செவியில் வாங்கிக் கொண்ட காருண்யம் மட்டுமே தென்படும். அன்னையின் அந்த அன்புச் சொரூபம் மட்டுமே நம் மனதில் நிற்கும்.


எல்லாமே லீலைகள்தான். வீர விளையாட்டுகள்தான். ஆனால் இவை அத்தனையும் மனிதகுலம் மேம்பட்டு வளரவே தெய்வங்கள் செய்கிறார்கள் என்ற ஒன்றை மட்டும் நம் மனதில் வைத்திருந்தால் பேதங்கள் வெளியேயும் தெரியாது. நம் உள்ளேயும் வராது.


அன்புடன்
திவாகர்

--Geetha Sambasivam 21:08, 24 அக்டோபர் 2011 (UTC)</i>

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 24 October 2011, at 21:08. This page has been accessed 1,421 times.