புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் கருத்து:
புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!
மேலே உள்ள தேவாரப் பாடல், குழந்தை ஞானசம்பந்தன் ஞானப் பால் அருந்தியதும், யார் உனக்குப் பால் தந்தது என்று தந்தை சிவபாத ஹிருதயர் கேட்க, அதோ அந்த ‘ பிரமபுரமேவிய பெம்மானும் அவன் பாகம் பிரியாளும்’ என குழந்தை பதில் சொல்லும் முதலாம் பதிகத்தில் பத்தாம் பதிகம்.
அதாவது தனது முதல் பத்துப் பாடல்களிலேயே பௌத்தர்களையும் சமணர்களையும் பற்றி நெறியற்றவர்கள் என்று ஒரு பாட்டினை மூன்று வயதே நிரம்பிய ஞானக்குழந்தை பாடுகிறது என்றால் அப்போதைய காலத்தின் உண்மை நிலையை நாம் உணரவேண்டும்.
இப்போதுள்ள ஜைனர்களையும் அவர்களது கொள்கைகளையும் 1500 வருடங்களுக்கு முன்பிருந்த ஜைன அல்லது சமணமதக் கொள்கைகளோடு ஒப்பிட்டால் இரண்டும் வேறு வேறு என்பதையும், அப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் எந்த நிலையில் ஆட்சியையும், ஆளும் வர்க்கத்தினரையும், அப்பாவி மக்களையும் இந்தத் தெய்வத் தமிழ் நாட்டிலே வைத்திருந்தனர் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். இப்போது உள்ள ஜைன மதத்தைச் சார்ந்தவர்கள் மகாவீரரை தெய்வமாகவும், தீர்த்தங்கரர்களை ஆச்சாரிய புருஷர்களாகவும், இந்து மதத் தெய்வங்களான லக்ஷ்மி, இந்திரன் போன்றவர்களைப் போற்றியும், இன்னமும் புலால் உண்ணாமையினராகவும், மிகவும் சாத்வீகமான குணநலன்களைக் கொண்டவராகவும் உள்ளனர். இன்னும் சிலர் ஜைன சந்நியாஸம் போன்றவைகளைக் கடைப்பிடிக்கும் வகையில் மிகக் கடுமையான முறையில் (ஒவ்வொரு முடியாகக் கைகளால் பறித்தல் போன்றவை) தங்கள் வாழ்க்கை நெறியைக் கடைபிடிக்கிறார்கள்.
ஆனால் அப்போது, அதாவது 1500 வருடங்களுக்கு முன்பு இத்தகைய சாத்வீக நிலையில் ஜைனர்கள் இல்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மிக மிக சாத்வீகமுறையில் இடம் பெயர்ந்த வடநாட்டு ஜைனர்கள் கர்நாடக மலைகளிலே தவம் பயின்றும், தங்களுக்குத் தேவையான போது பிக்ஷை எடுத்து உண்ணும் மார்க்கத்தை தங்களுக்குள்ளாக வழக்கப்படுத்திக் கொண்ட அதே சமணர்கள் மெல்ல மெல்ல நிறுவன மதமாக்கி, அடுத்த இருநூறு ஆண்டுகளில் தென்னகமெங்கும் பரவத் தொடங்கினர். இப்போதைய கிருத்துவமத மெஷினரிகளை செயல் வகை போலவே, இவர்களுக்கும் முன்பாக, முதன் முதலாக சமணர்கள் தங்கள் மதப் போதனைகளை ஆச்சாரியர், ஆசிரியர்கள், பெண் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான அளவில் தேர்ந்தெடுத்து மதப்போதனைகளை தென்னகத்தில் பரப்பினார்கள்.முதன் முதலாக பெண் கல்வியைப் பரப்பியவர்களும் இவர்கள்தான். கல்வியால் பயனடைந்த பெண்களை மதப் போதனைகளுக்குத் தேர்ந்தெடுத்து, பல்லாயிரம் ஓலைப் பிரதிகளைக் கையில் கொடுத்து ஒவ்வொரு ஊருக்கும் அனுப்பி தமிழகத்தில் கல்வியறிவைப் புகுத்தி சாதனை படைத்தவர்களும் இவர்களே. ஏறத்தாழ 700 வருடங்களுக்கு சமண மதத்தின் மடங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு மூலையிலும் குக்கிராமங்களிலும் அமைக்கப்பெற்று, சீரான தலைமையில் செயல்பட வைத்தார்கள். இவர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாக ஆசிரியர், , பேராசிரியர், ஆச்சாரியர், பரமாச்சாரியர் என்று அமைப்பு வகையில் செயல்பட்டனர். பரமாச்சாரியர் என்பது ஐவர் இருந்ததாக 6ஆம் நூற்றாண்டு குறிப்புகள் உள்ளன. மதுரையும், காஞ்சியும் இந்த பரமாச்சாரியர்களில் தலைமைப் பீடங்களாக செயல்பட்டன. ஐவருக்கு அதிபதியாக காஞ்சி பரமாச்சாரியார்களாக ஐந்தாம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும், ஆறாம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும் செயல்பட்டதாக சில குறிப்புகள் உள்ளன. எழாம் நூற்றாண்டில் இந்தத் தலைமைப் பதவி மதுரைக்கு மாறியது.
ஒரு நிறுவன அமைப்பு வெற்றிகரமாக மிகப் பெரிய அளவில் பல நூற்றாண்டுகள் செயல்படுகிறது என்றால் அதற்கு ஆளுமைத் திறன் வேண்டும். அதிகாரம் வேண்டும், ஆட்சியில் உள்ளவர்கள் ஒத்துழைக்கவேண்டும். படை பலம் வேண்டும். ஒற்றுமையும் வேண்டும். இவை அத்தனையும் ஒருங்கே கொண்ட சமண மதம் நாடுகளை அரசாளும் அரசர்களை தன் கைக்குள் போட்டுக் கொண்டு மதாச்சாரியர் சொல்படி கேட்டு அரசாளும் விதமாகத்தான் அவர்களை வைத்திருந்தது. ஆனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த சாத்வீக நிலை போகப் போக அதிகார போதையிலும், கட்டுக்கடங்காத தொண்டர்கள் பலத்தாலும், இவர்களைக் கட்டுக்குள் வைத்திருந்து நிர்வாகம் புரியும் மடத்து அதிபர்களாலும், இந்த மதம் எப்படி ஒரு சாத்வீக நிலையில் இருந்ததோ அதற்கு நேர் எதிராக, ஒரு வல்லமையான முரட்டு மதமாக, எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளாமல் அவர்களை அழித்துத் தொலைத்துக்கட்டும் நிறுவன மதமாக, அரசர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியையும், தந்திர மந்திரங்களைக் கற்றுத்தேர்ந்து அப்பாவி மக்களை ஏமாற்றும் மதமாகவும் மாறிப்போனதுதான் காலத்தின் கோலம்.
அப்படிப்பட்ட அந்தக் கால சமணர்களின் சில வன்மையான செயல்களை சிறிது கண்ணோட்டம் விடுவோம். எல்லாவற்றுக்கும் சரித்திரக் குறிப்புகளும் இலக்கிய ஆதாரங்களும் உள்ளன).
இன்னும் வரும்
எழுத்தும் ஆக்கமும் வி.திவாகர்
--Geetha Sambasivam 20:18, 24 அக்டோபர் 2011 (UTC)