வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வடவேங்கடம் தென்குமரி

From மரபு விக்கி

Jump to: navigation, search

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்று தொல்காப்பியர் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதிதானா?

தென்குமரி என்பது இன்றைய குமரிமுனையா அல்லது கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டமா?


இரா.சக்கரபாணி,
மதுரை.



கருத்து 1


"சரித்திரகாலம் ஆரம்பிப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னதாகவுள்ள லெமூரியா நாடு தமிழ்நாடாயிருந்தது என்றும், அதில் வசித்தவர்கள் தமிழர்களாய் இருந்தார்கள் என்றும் ஹரப்பா நாகரிகத்தை ஆய்வு செய்த ஹெரஸ் பாதிரியார் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியம் படைப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே லெமூரியா கண்டம் அல்லது பண்டைய தமிழகம் பரந்த நிலமாக இருந்தது என்பது தெரிய வருகிறது.

கலித்தொகை பாடல் 104:1-4, சிலப்பதிகாரம் 20:17-22

"பஃறுளி ஆறும் பல குன்றும் சூழ்ந்த குமரிக்கோடும் சினங்கெழு கடலுள் ஆழ்ந்தன,

என்று குறிப்பிடுகிறது.

உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இதனுடன்,

"பஃறுளி ஆற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையே 700 கவதப் (அளவு) பரப்புடைய நிலம் இருந்ததென்றும்,


குறிப்பிட்டுள்ளார்.


இது கருதியே தமிழக வரலாற்றை ஆய்வு செய்து ஆங்கிலத்தில் தமிழக வரலாறு எழுதிய வி.கனகசபை (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - தமிழில்:- கா.அப்பாதுரை)

"நாம் குறிப்பிடும் காலத்திய மக்கள் தம் காலத்துக்கு முன் தமிழகத்தின் நிலப்பரப்பு அன்றிருந்த எல்லை கடந்து தெற்கில் நெடுந்தொலைவு பரந்திருந்தது. கடலின் ஒரு திடீரெழுச்சியால் குமரிக்கோடு என்ற மலையும், பஃறுளியாறு ஓடிய பரப்பும் மறைந்துவிட்டன,

என்று குறிப்பிட்டுள்ளார்.

பனம்பாரனாரால் சுட்டப்படும் வடவேங்கடம் இன்றைய திருப்பதிதானா என்பதற்கு,

"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்,

என்பது சங்கப்பாடல் தரும் குறிப்பு.

இங்கு "நெடியோன்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதும், "குன்றம்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் முருகக்கடவுள் கோயில்கொண்ட இடமாகவே அமைந்துள்ளது என அறியலாம்.

"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்",

என்பது முதுமொழி.

இன்று அழகர்மலை என்று அழைக்கப்படும் மலை சோலைமலை என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது.

இதுபோல் பண்டைக் காலத்தில் தமிழகத்தின் வட எல்லையாக இருந்த வேங்கடத்தில் முருகனுக்குக் கோயில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இதை உ.வே.சா., "பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டின் வடவெல்லை கிருஷ்ணா நதியென்று சிற்பசாஸ்திரம் கூறுகிறதென்று கேட்டிருக்கிறேன். தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாடு வேங்கடத்தை வடக்கெல்லையாகவும், குமரியைத் தெற்கெல்லையாகவும் கொண்டிருந்தது

என்கிறார். (சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும், பக்.14)

மேலும், அவர் "அழகர் மலையைச் சோலைமலை என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லியிருப்பதுடன், அது முருகக் கடவுளுடைய திருப்பதி என்றும், நக்கீரர் பாடியிருக்கிறார். அப்படியே திருவேங்கடமும் முருகக்கடவுள் ஸ்தலமென்று சில பழைய நூல்களால் தெரிகிறது

என்று கூறுவதால், வடவேங்கடம் என்று பனம்பாரனார் குறிப்பிடுவது தற்போதுள்ள திருப்பதிதான் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

இரண்டாவது வினா தென்குமரி பற்றியது.

"வடவேங்கடந் தென் குமரியாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து

என்ற தொல்காப்பிய பாயிரத்தில் குறிப்பிடப்படும் "குமரி" என்ற சொல், தமிழகத்தின் தற்கால எல்லையாக உள்ள குமரிமுனை அல்ல.

சங்க காலத்தில் கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டத்தையே குறிக்கிறது என்பது பல ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.

"தொல்காப்பியப் பாயிரத்தில் குறிக்கப்படும் "குமரி" என்பது, பண்டைக் காலத்தில் பாண்டி நாட்டின் தென் பகுதியில் ஓடிய ஆற்றின் பெயராகும்.

சங்க காலத்தில் ஏற்பட்ட பேராழியால் (சுனாமி) - கடல் கோளால் அதில் இருந்த சில நாடுகளும் குமரி ஆறும் பஃறுளியாறும் அழிந்துபோயின என்பது ஆய்வாளர்களின் கருத்து.

"செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி

"செந்தமிழியற்கை சிவணிய நிலம்

எனத் தொல்காப்பியரும், பனம்பாரனாரும் கூறிய "செந்தமிழ் நிலம்" என்பது முதலிடைச் சங்கங்கள் இருந்த நிலப்பகுதியாதலே தகுதி

என்பது மு.இராகவையங்காரின் கருத்தாகும்.

மேலும், "பஃறுளி ஆற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையிலிருந்த 700 காத அளவுள்ள 49 நாடுகள் அழிவுற்றனவென்று சிலப்பதிகார ஆசிரியர் தெரிவிக்கிறார். வடக்கெல்லை வடவேங்கடமென்றும், மற்ற மூன்று எல்லைகள் கடலென்றும் சிகண்டி ஆசிரியரும், சிறுகாக்கைப் பாடினியாரும் தத்தம் சூத்திரங்கள் முகமாக அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் காலத்துக்கு முன்பு குமரியாற்றை கடல்கொண்டது போலும்

என்று உ.வே.சாமிநாதையர் கூறியுள்ளதால், கடல்கோளால் அழிந்துபோன சங்ககால குமரிக்கண்டமே தமிழகத்தின் தென் எல்லையாகும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

குச்சனூர் கிழார்


கருத்து 2

பழந்தமிழர்கள், பெரும் தேசிய இனமாக "நாவலந்தேசம்" எனப்படும் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

"தென்குமரி வடபெருங்கல்
குணகுட கட லாவெல்லை. (புறம் - 17)

என்று குறுங்கோழியூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடியிருக்கிறார். மேலும்,

"வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி. (சிலம்பு - 11:19 - 22)

என்று இளங்கோவடிகள் பாடியுள்ளார்.

மேலும், "வங்கத் தலைநகருக்கு இன்னும் "காளிக்கோட்டம்" என்னும் தூய தமிழ்ச்சொல் வழங்குவதே பண்டைக் காலத்தே தமிழர், பனிமலைவரை அல்லது கங்கை வரை பரவியிருந்தனர் என்பதற்குப் போதிய சான்றாகும்

என்று தேவநேயப்பாவாணர் கூறியுள்ளார்.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக, "மொகஞ்சதாரோ, ஹரப்பா சிந்துசமவெளி நாகரிகத்தில் தமிழர் வாழ்ந்ததற்கான பல அடையாளங்கள் உள்ளன", என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பண்டைத் தமிழினமாகிய குமரி நாட்டிலும் மேல்கோடியிலிலேயே ஒரு பன்மலையடுக்கத்துப் பெருமலை தொடரிருந்தது.

அது குமரியென்னும் காளியின் பெயரால் குமரிமலை எனப்பட்டது.

அதன்,

- தென்கோடியில் பஃறுளி என்னும் கங்கையைப் போன்ற பேராறும்,
- வடகோடியில் குமரி என்னும் காவிரியைப் போன்ற பேராறும் இருந்ததால்,
- குடதிசை (மேற்கு) என்றும்,
- குணதிசை (கிழக்கு)

என்றும் பெயர்பெற்றன.

இவ்விரு ஆறுகளுக்கிடையே,

"ஏழ்தெங் நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணக்கரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்று 49 நாடுகளும், காடும், நதியும், பதியும் தடனீர் குமரி வடபெருங்கோட்டின்காறும், கடல்கொண்டழித்தாற் குமரியாகிய பெளவமென்றா ரென்றுணர்க

என்று கூறியுள்ளார் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார்.

மேலும், லெமூரியா எனும் குமரிக்கண்டமே மாந்தன் என்பவன் தோன்றிய முதலிடமென்றும், இதிலிருந்த தமிழ் நிலம் 13 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன என்றும் கூறப்படுகிறது.

"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும். (புறம் - 6)

என்ற பாடலுக்கேற்ப, இமயத்தின் முதல் மன்னன் சேரனே என்றும், ஆகவேதான், அவன் "இமயவரம்பன்" எனப் புகழப்பட்டான் எனவும் சான்றுகள் கூறுகின்றன.

"குணகடல் குமரி குடகம் வேங்கடம்" என்னும் நன்னூல் சிறப்புப் பாயிரத்தில், தமிழ் எல்லையை "திசைகள்" குறிக்காமல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், "வட வேங்கடம் தென்குமரி" என்று தொல்காப்பியப் பாயிரத்தில், திசைகளுடன் சேர்த்துக் குறிக்கும்பொழுது ஓர் ஐயம் தோன்ற வாய்ப்பிருக்கிறது.

தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்ததால், பொதுவாக மலைப்பகுதியை "வேங்கடம்" எனக் குறித்து

- இமயமலையை "வடவேங்கடம்" என்றும்,
- திருப்பதியை "தென் வேங்கடம்" என்றும்

குறிக்க வாய்ப்புண்டு.

அதைப்போலவே,

- இன்றைய குமரியை "வடகுமரி" என்றும்,
- கடல்கோளால் அழிந்த பகுதியை "தென்குமரி" என்றும்

அழைத்திருக்க வாய்ப்புள்ளது.

ஏனெனில்,

- இன்றைய மதுரையை "வடமதுரை" என்றும்,
- முதல் சங்கம் தோன்றிய பகுதியைத் "தென்மதுரை" என்றும்

இலக்கியங்கள் மற்றும் அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆரியர் வருகைக்குப் பிறகே தமிழர் எல்லைகள் சுருங்கி திருப்பதி மலையை (வேங்கட மலை) வட பகுதியாகச் சொல்லப்பட்டாலும், வடவேங்கடம் என்று இமயமலையையும், தென்குமரி என்று கடல்கொண்ட குமரியையுமே சொல்லியிருக்கக் கூடும் என்பது தெளிவு.

மேலும், தொல்காப்பியமே தமிழின் மூத்த நூல் - முதல் நூல் என்கிறோம்.

அதற்குப்பிறகு தோன்றிய சங்க நூல்களே பழந்தமிழர்களின் எல்லையை விரித்துக் கூறுகிறபோது, தொல்காப்பியம் தமிழ்கூறு நல்லுலகைச் சுருக்கிக்கூற வாய்ப்பே இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

மீனா சுந்தர்


கருத்து 3

முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றிப்பாடும் காரிக்கிழார் என்ற புலவர் தமிழ் ஆட்சிப் பரப்பை,


"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்

குடாஅது தொன்று முதிர் பெளவத்தின் குடக்கும்.
(புறம் - 6)

என்று பாரதம் முழுமைக்கும் எல்லை வகுத்து உயர்த்தியபோதிலும், ஒல்காப்புகழ் தொல்காப்பியரே

1. பாட்டு
2. உரை
3. நூல்
4. வாய்மொழி
5. பிசி
6. அங்கதம்
7. முதுசொல்

ஆகிய ஏழுவகை யாப்பின் வகைகளை அறிந்தோராக தமிழ்நாட்டவர் விளங்கியதை கீழக்கண்டவாறு கூறியுள்ளார்.

"வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பேர் எல்லை அகத்தவர்.

ஆக, வடக்கு வேங்கடம், தெற்கு குமரி, கிழக்கு - மேற்குக் கடல்களாக அமையப்பெற்றுள்ள பழந்தமிழ் நாட்டைப் படம்பிடித்துக் காட்டியுள்ளதை நன்கு அறியலாம்.

இதை, யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை பற்றிப் பாடும் குறுங்கோழியூர் கிழாரின் புறப்பாடல் ஒன்று தெளிவாகப் பின்வருமாறு எடுத்துக்கூறியுள்ளது.


"தென்குமரி வடபெருங்கல்

குணக் குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய. (புறம் - 17)

இப்பாடலில் குறிப்பிடப்படும் வட எல்லையானது வேங்கட மலையையும், தென் எல்லையானது குமரிப் பகுதியையும் குறிக்கும். அகம் பாடல் 31இன் வாயிலாக, தமிழகத்தின் வடபகுதி பல்வேறு மலைகளைக் கொண்டதாகவும், அவற்றுள் ஏழுமலைகளை உள்ளடக்கிய தற்போது "திருப்பதி" என வழங்கப்படும் வேங்கடமும் ஒன்று என்பதகாவும் விளங்கிக்கொள்ளலாம்.

கீழ்க்காணும் பாடல்கள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.

"வடவயின்
வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை (அகம் - 27)

"பனிபடு வேங்கடத்தும்பர்
மொழிபெயர் தேஎத்தராயினும். (அகம் - 211)

"வேங்கடத் தும்பர்........வடுகர் தேஎத்து. (அகம் - 213)

இப்பாடல்களுள் பயின்றுவரும் வேங்கடம் வடுகரால் பேசப்படும் தெலுங்கு மொழியின் தேசமான "திருப்பதி"யைச் சுட்டும்.

ஆக, வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதியே ஆகும்.

அதுபோல், தென்குமரி எனப்படுவது உலகின் முதல் மனித இனம் உருவான லெமூரியா என்றழைக்கப்படும் கடல்கோளுக்கு ஆளான குமரிக்கண்டத்தின் எஞ்சிய மண்பரப்பே, இன்று காணப்படும் குமரிமுனையாக உள்ளது என்பதை,

"தெற்குக்கடல் கொண்ட தென்குமரி மண்பரப்பே
முற்பட்ட தோற்ற முயிர்ப்பெருக்க முற்பத்தி
ஆங்கு மனிதவினம் ஆதி அமலென்பர்
ஓங்கிய தஃதே உலகு.

என்னும் பழம்பாடல் வழி அறியலாம்.

மேலும், கடல்கோளால் அழியப்பெற்ற தம் நிலவெல்லைக்கு ஈடாக பாண்டியன் ஒருவன் சேர, சோழ நாடுகள் மீது படைகொண்டு தனது மீன் சின்னத்தைப் பொறித்ததை,

"மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாசீர்த் தென்னவன். (புறம் - 104)

என்ற பாடல் மூலமாகவும் அறியலாம்.

அழிந்துபட்ட குமரிக்கண்டத்தை சங்ககால மற்றும் காப்பியக்கால இலக்கியங்கள், வரலாற்றுச் செய்தியாக தன்னுள் பதிவித்துக்கொண்டு, தற்காலக் குமரிமுனையையே தமிழகத் தென்பகுதியாகப் பாவித்து வந்துள்ளன.

இளங்கோவடிகள் (சிலம்பு - 8:1 - 2) திருமால் குடிகொண்டிருக்கும் திருப்பதி, குமரிக்கடல் ஆகியவற்றை தமிழ்நாட்டின் வட - தென் எல்லைகளாக அழகுற வரையறை செய்துள்ளமை ஈண்டு நோக்கத்தக்கது.

ம.கணேசன்

--Ksubashini 09:08, 23 ஜனவரி 2011 (UTC)

Contributors

Ksubashini

This page was last modified on 23 January 2011, at 09:08. This page has been accessed 7,794 times.