வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மெளனகுரு சுவாமிகள்

From மரபு விக்கி

Jump to: navigation, search
தமிழ்நாட்டில் பல்வேறு கால கட்டங்களில் யோகிகளும், சித்தர்களும், ஞானிகளும் தோன்றித் தம் தவவலிமையால் ஆன்மீக நெறிகளைப பரப்பியும், பாமரர் நல்வழி நடந்து வாழவும் பாடுபட்டனர். 


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் ஆன்மிகம் தழைக்க மௌனகுரு சுவாமிகள் என்னும் தவப்பெரியார் சித்தராகவும், ஞானியாகவும், யோகியாகவும் வாழ்ந்து மறைந்தது பலருக்கும் தெரியாத செய்தி. கவியோகி சுத்தானந்த பாரதி மௌனகுருவின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து எழுதியதோடு நின்றுவிடாமல் அவர் பெருமைகளைப் போற்றி ஓங்கார தொட்டிலிலே என்னும் தலைப்பில் ஒரு பாவும் இயற்றியுள்ளார். 


மௌனகுரு சுவாமிகள் ஊர், பேர், உறவு, சுற்றம் யாதுயென அறியப்படாதவர். அவர் கன்னடத்தில் ஒப்பரு இல்ல, நீ ஒந்தே ... இதயதல்லி .. ஓம் சிவம் (நீயன்றி யாரும் இல்லை, நீயே உறுதுணை .. இதயத்தில் இருக்கும் சிவனே ஓம் சிவம்) என்று அடிக்கடி  கன்னடத்தில் முணுமுணுப்பார், தனக்குத்தானே பேசிக்கொள்வர். வேறு வெளிப்பேச்சு இல்லை. யாரையும்  தன்னிடம் அணுகவிடாமல் தானே தானாகத் தன்னந்தனியாக இருந்த இடத்தில்  மோனத்தில்  ஆழ்ந்துவிடுவார்.


சித்தென்பது ஓர் இயக்கம். அவ்வியக்கம் எங்கிருந்து தோன்றியதோ அத்தோன்றும் இடத்திலேயே சென்று ஒடுங்குவதாகும். அப்படி தோன்றிய இடத்திலேயே சித்தம் ஒடுங்கினால் அதுவே பிரம்மம். பிரம்மம் என்றால் மௌனம் அல்லது அசையாநிலை. ஓர் இயக்கம் தோன்றிய இடத்திலேயே மீண்டும் ஒடுங்கினால், இதாவது அசைவற்ற நிலையிலிருந்து அசைந்து இயக்க நிலைக்கு வந்த இயக்கம் மீண்டும் ஒடுங்கினால் அசையாது மௌனமாக பிரம்மநிலை எய்தும். இதையே மோனநிலை என்றும், சும்மா இரு என்றும் ஞானிகள் கூறுவர். இவ்வாறு பிரம்மத்தினின்று தோன்றி பிரம்மத்தில் ஒடுங்குவதே ஞானமாகும். இதை பரப்பிரம்மம் என்பர். 

Inline image 1

மௌனகுரு சுவாமிகள் தொடக்கத்தில் சென்னை சூளையில் அமைந்துள்ள குட்டியாண்டவன் கோவில் வளாகத்தில் வதிந்து கொண்டு சட்டி வைத்து சமைத்து உண்டுவந்தார். ஒரு சட்டி. கல்லடுப்பு, மர அகப்பை இவைதாம் அவர் உடைமைகள். இவற்றை எப்போதும் ஒரு முதிய நாய் பாதுகாக்கும். 


மௌனகுரு சுவாமிகள் காலையில் தம் கடன்களை முடித்தபின் சிவனைத் தொழுதுவிட்டு கால் நடையாகவே யானைக்கவுனிஅருகே சௌகார் பேட்டையில் உள்ள பள்ளியப்பன் தெருவில் அமைந்த அருணாசலேசுவரர் கோவில் வழியாகச் சென்னைத் துறைமுகம் வரைச் செல்வார். அங்குள்ள அரிசி வணிகர் சுவாமிகளின் வருகையை எதிர்நோக்கி தம் வணிகத்தை தொடங்காமல் காத்திருப்பர். சுவாமிகள் அங்கு சென்றவுடன் தனக்கு தோன்றிய கடைக்கு எதிரே நிற்பார். அக்கடை வணிகனும் சுவாமியை வணங்கி அவர் வைத்திருக்கும் சட்டியில் சிறிதளவு அரிசியும் பாசிப்பருப்பும் இடுவான். அப்போது மௌனகுரு எல்லா வணிகரையும் பார்த்து முறுவலித்து அருளாசி வழங்குவார். அதன்பின்னரே எல்லா வணிகரும் வணிகத்தைத் தொடங்குவார்கள். அன்று அவர்கள் அனைவருக்கும் லாபம் தான். இவர் தொட்டதெல்லாம் பொன்னாகும்.


மீண்டும் திரும்பும் வழியில் அருணாச்சலேசுவரர் கோவிலினுள் சென்று ஈசனிடம் தனக்கு முக்தி அருளும்படி நெஞ்சார மன்றாடி வணங்குவார். அவர் நெஞ்சார வேண்டுகையில் அவர் உதடுகள் கன்னடச் சொற்களை பலுக்குவது போல் இருத்தலால் சுவாமி ஒரு கன்னடர் என்று அறிய முடிகிறது. கோவிலை விட்டு வெளியேறுகையில் சணல் திரியில் நெருப்பேற்றிக்கொண்டு தெருவில் கிட்டும் சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு குட்டியாண்டவர் கோவிலுக்குச் சென்று கல்லடுப்பில் தணல்மூட்டி தான் பெற்று வந்த அரிசி, பாசிப்பயறு மற்றும் சில காய்கறிகளை சட்டியில் இட்டு சமைத்து சில கவளங்களை தான் உண்டுவிட்டு  எஞ்சியவற்றை தம் உடமைகளைக் காக்கும் நாய்க்குக் கொடுத்து பின் ஓர் ஓரமாக அமர்ந்து மோனதவம் மேற்கொள்வார். 


சித்தர் என்பதற்கான செயல்கள் :

வழமையாக குட்டியாண்டவர் கோவிலில் இருந்து துறைமுகம் வரை செல்லும் சுவாமிகள் ஒரு நாள் வழியில் உள்ள அருணாச்சலேசுவரர் கோவிலில் உள்ள ஈசன்பால் ஈர்ப்புகொண்டு அக்கோவிலின் எதிரே உள்ள வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்து ஈசனை  நோக்கி மோனதவத்தில் ஆழ்ந்துவிட்டார். மௌனகுரு சுவாமிகள் அமர்ந்த திண்ணை வீட்டுச் சொந்தக்காரர் அந்த வீட்டை வாங்கிப் பதிவு செய்த நாளில் சுவாமிகள் திண்ணையில் உட்கார்ந்ததால் அவரை அப்புறப்படுத்த ஒவ்வாது அவர்க்கு அன்பரானார். நாள்தோறும் சுவாமிகள் காலையில் எதிரே உள்ள அருணாச்சலேசுவரர் கோவிலினுள் சென்று நெஞ்சார மணிக்கணக்கில் முக்திப்பேறு வேண்டி மன்றாடுவார். சுவாமிகளின் வசதிக்காக அந்நாளில் ஆங்கில ஆட்சியாளர் அவர் அமர்ந்திருந்த திண்ணைகருகிலேயே ஒரு குழாய் அமைத்து விட்டனர். அவர் நாளடைவில் சிவசந்தியை தம் உள்ளத்திலே கண்டு திண்ணையிலேயே அமர்ந்து ஊழ்கம் (நிஷ்டை) கூடினார். அவர் தலை குனிந்து தன் உள்ளத்தில்  உறையும் ஈசனையே பார்த்திருக்கும். பித்தரோ, ஊமரோ என்று மக்கள் கருதுவர். கேள்வியற்று, பற்றற்று, துடிப்பற்று, உணவற்று, உறக்கமற்று இருந்த இடமே இருப்பாகிப்போன இந்த விந்தைமிகு தவக்கோலத்தை கண்ட அன்பர் கூட்டங் கூட்டமாக வந்து வணங்கினர். மௌனி உடல், மன நினைவில்லாமல் இருந்தார்.


ஒருநாள் சுவாமிகள் ஊழ்கத்தில் (நிஷ்டையில்) கூடியிருந்தபொழுது அவர் வீற்றிருந்த வீட்டிற்கு வண்ணம் பூச வந்தவர் சுவாமிகளின் பெருமைகளை அறியாமல் சுவாமிகளின் உடைமைகளைத் தெருவில் வீசியெறிந்துவிட்டு பணியைத் தொடங்க முற்பட்டார். என்னே விந்தை! வண்ணம் வைத்திருந்த சட்டியின் அடிப்பாகம் உடைந்து வண்ணம் எல்லாம் தரையில் வழிந்தோடியது. வண்ணம் பூசுபவரின் கை உயர்த்திய நிலையில் அசைவற்று நின்றுவிட்டது. வண்ணம் பூசுபவரின் அலறலைக் கேட்ட அன்பர்கள் சுவாமிகளை வேண்டி வண்ணம் பூசுபவரின் அறியாமையை பொருத்தருளும்படி வேண்டினர். சுவாமிகள் முறுவலித்தபடி (smile) அருட்பார்வையை வண்ணம் பூசுபவரின்பால் செலுத்தியவுடன் கொட்டியவண்ணம் சட்டியினுள் சேர்ந்த்து. அசைவற்ற கை இயல்புநிலை பெற்றது. இந்த சித்து விளையாட்டை கண்ட அனைவரும் சுவாமிகளின் அன்பர்கள் ஆயினர்.


மாதின் கனவில் ஈசன்

மௌனகுரு சுவாமிகள் சில காலத்திற்குப்பின் பொழுதெல்லாம் ஈசனையே வேண்டி முக்திபெற மோனதவத்தில் இருந்ததால் துறைமுகம் சென்று அரிசிபெற்று சமைத்து உண்பதை விட்டுவிட்டார். இது கண்ட ஈசன் சென்னை வியாசர்பாடியில் வதிந்துவந்த சிவபக்தையான தூயபத்தினியின் கனவில் தோன்றி என் அன்பன் நான் குடிகொண்டிருக்கும் கோவிலின் எதிரே உள்ள திண்ணையில் மௌனியாக ஊழ்கத்தில் கூடியுள்ளான். அவனுக்கு நாள்தோறும் சோறு அளித்துவாஎன்று பணித்தார். அம்மாதும் ஈசனின் கட்டளையை ஏற்று தூய அன்புடன் நல்லமுது சமைத்து மௌனிக்கு ஈந்து அவர் திருவடிகளை மலர்தூவி வணங்கிவந்தார். அதனால் அம்மாதின் குடும்பம் செழித்தது. குலம் தழைத்தது. அவளது அரிசிப் பானையில் நாடோறும் ஒரு வெள்ளிப்பணம் இருக்கக் கண்டாள். அப்பணத்தை குருவின் அமுதுக்கே அவள் பயன்படுத்தினாள்.


குடிகாரன் திருந்தினான்

அத்தெருவில் வதிந்துவந்த பெருங்குடியன் ஒருவன் குடிவெறியில் வெறியாட்டம் போட்டு சுவாமியைக் கண்டபடித் திட்டித் திரிந்தான். அதன்விளைவாக அவனுக்கு உதடு வெளுத்தது, உடல் அரித்தது. வெண்குட்ட நோய் ஏற்பட்டு வாழ்க்கை துயரமாகியது. அவன் மனைவி அக்குடியனை சுவாமிகளிடம் அழைத்துவந்து வணங்கிநின்று தன் கணவனை மன்னிக்கும்படி வேண்டினாள். சுவாமிகள் அம்மாதின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அவனை மன்னிக்கும் வகையாக தூ தூ போஎன்றார். அத்தோடு அவன் குடியை விட்டொழித்துத் திருந்தினான், அறிவு பெற்றான். சுவாமியின் அன்பால் அவன் வெண்குட்ட நோயும் குணமடைந்தது. இது கண்ட அன்பர்கள்  சித்தரின் பெருமையை அறிந்து பணிந்தனர்.


நவகண்ட யோகி

ஞானிகள், சித்தர்கள்,யோகிகள்ஆகிய அனைவருமே ஈசன் தம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதற்காக மௌனநிலை, உண்ணாநிலை, யோகநிலை போன்ற நிலைகளை மேற்கொண்டு முக்தி பெற்றனர்.


சுவாமிகளும் ஈசன் அருள்பெற்று முக்தியடைய அரிய யோகமான நவகண்ட யோகம் மேற்கொள்ளவது வழக்கம். நவகண்ட யோகம் என்பது தன் உடலில் தலை முதல் கால் வரை உள்ள பாகங்களை ஒன்பது கூராகப் பிரியச் செய்து ஈசனை நோக்கி தவமியற்றுவதாகும்.


சுவாமிகள் நள்ளிரவு நேரத்தே தன்னுடைய தலை அண்ணாமலையார் சந்நிதிக்கு எதிராகவும் உடலின் மற்ற பாகங்கள் எட்டாகப் பிரிந்து திசைக்கு ஒன்றாக பிரியவைத்து நவகண்ட யோகம் செய்யும்பொழுது இரவு நேரத்தே சுற்றுக்காவல் வரும் காவலர்கள் முதலில் கண்டு அச்சமுற்றாலும் பின்பு தெளிவுபெற்று வணங்கிப்பணிந்து செல்வர். காவலர்கள் சுவாமிகளின் நவகண்ட யோகநிலையை அன்பர்களுக்கு அறிவித்தனர். அவர்களும் தூய பக்தியுடன் மௌனியைப் பணிந்தனர்.


மௌனகுரு யாரையும் தன் அருகே அண்டவிடுவதில்லை. தம்மை அறிந்து அறிவுதாகமுடைய ஒரு மாணவனையே அவர் எதிர்பார்த்திருந்தார். அவர் எதிர்பார்த்த மாணவன் சென்னை வடமலை மேஸ்திரி தெருவில் வதிந்துவந்த பொன்னுசாமி முதலியார் என்பாரது தலைமகன் பாலுவே ஆவார். பாலு பள்ளிக்குச் செல்லும்போது வழியில் சுவாமிகளை வணங்கிச் செல்லும் தூய நல்லன்பன். பாலு ஒருநாள் தனக்கு ஞானமளிக்கும் குரு இவர்தான் என உணர்ந்து பள்ளிக்குச் செல்வதை விடுத்து சுவாமிகள் அமர்ந்திருக்கும் திண்ணை அருகே வந்து நின்று கொள்வான். சுவாமிகள் அவனை விரட்டும் பொருட்டு தூதூபோபோஎன விரட்டுவார். பாலுவும், அவர் விரட்டினாலும், தன் வீட்டார் கண்டித்தாலும் கேளாமல் விடாப்பிடியாக சுவாமிகளிடமே அடைக்கலமானான். சுவாமிகள் சில காலத்திற்கு பின்பு தான் தேடிக் கொண்டிருந்த அறிவுதாகமுடைய மாணவன் இவனே என்றுணர்ந்து மனம் களித்தார். பாலுவுக்கு திருமந்திரம், ஞானவாசிட்டம், கைவல்யம், திருக்குறள் எல்லாம் அறியவைத்தார். பாலுவும் சுவாமிகளின் கருத்தினை அறிந்து அன்பர்கள் அனைவருக்கும் விளக்கி உள்விழிப்படைய வைத்தார். சுவாமிகள் தன்னையும் அன்பர்களையும் ஆட்படுத்தும் விந்தையை உணர்த்தினர்.
தவப்பெரியார் மௌனகுரு முக்காலமும் உணர்ந்த ஞானியாதலால் தான் ஈசனின் ஞானஒளியில் இரண்டறக் கலக்கும் நாளைத் தன் ஞானக்கண்ணால் உணர்ந்த நாள்முதல் உணவைநிறுத்தி தன் மாணாக்கன் பாலுவுக்கு தான் முக்தி அடையும் நாளைச் சைகையால் உணர்த்தினார். பேராளமான அன்பர்கள் வந்து சுவாமியைக் கண்டுபோயினர். சுவாமிகள் மௌன ஆசியால் பலரையும் பக்குவப்படுத்தி 07 - 02 - 1902 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்குத் தன் உடலை உதறிவிட்டு ஈசனின் ஞான ஒளியில் ஒன்றிப்பானார். அக்கணமே சுரைக்காய்சித்தர், கண்ணுக்குட்டி சுவாமிகள் தோன்றி வாழ்த்தி வணங்கினர். அவர் உடலை பாலுவும் பிற அன்பர்களும் மலரால் அணிசெய்து தேவாரம், திருவாசக முழக்கத்துடன் பல்லக்கில் சுமந்துசென்று திருவொற்றியூரில் பட்டினத்தார் சமாதிக்கு அருகே அப்பர்சாமித் தெருவில் கடற்கரைமேட்டில் சமாதிவைத்தனர். அந்த சமாதி இன்று ஒரு சிறுகோவிலாக எழுப்ப்ப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த திண்ணை வீட்டின் திண்ணைப்பகுதியில் அவர் நினைவாக ஒரு சிறுகோவில் கட்டப்பட்டு இன்றுவரை நாள்தோறும் பூசனை நடந்துவருகின்றது.     


ஓங்காரத் தொட்டிலிலே

ஓங்காரத் தொட்டிலிலே - வளரும்
யோகச்சி காமணியே
நீங்காத நிட்டையிலே - நிலவும்
நீலமணிச் சுடரே

முக்குணத்தைக் கடந்த - தூய 
மோனக் குருமணியே
எக்கட்டும் இல்லாதே - இலங்கும்
இன்பத் தவமணியே

ஆங்காரத்தைப் பிளந்தே - உலகின்
ஆசையை வேரறுத்தே
தூங்காது தூங்குகின்ற - சாந்த
சுதந்தரச் சொக்கே!

அருட்பெருஞ்சோதி - அரு
ணாச்சலர் சந்நிதியில்
விருப்புடனிருந்தே - முத்தி 
வீட்டினைக் கண்டவனே

திண்ணைச் சமாதியிலே - என்றும்
திண்ணென ஊன்றிக் கொண்டே
உண்ணுங் கருத்துமின்றி- அறிவை
ஊட்டியெம்மை வளர்த்தாய்

மோனகுரு போற்றி - ஜீவன்
முக்திக்குரு போற்றி
ஞானகுரு போற்றி - அன்பு
நாயகனே போற்றி.                                     
                                                 கவியோகி - சுத்தானந்த பாரதியார்



மேற்சொன்னவை யாவும் அருள்மிகு மௌனகுரு சுவாமிகள் ஆலய வரலாறு, 2013எனும் 20 பக்க குறுநூலுள் இடம்பெற்றுள்ளது.


சேசாத்திரி

--Geetha Sambasivam (பேச்சு) 07:44, 20 செப்டெம்பர் 2013 (CDT)


 

Contributors

Geetha Sambasivam, Drtv மற்றும் Ksubashini

This page was last modified on 25 December 2013, at 10:11. This page has been accessed 5,168 times.