மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:034மரபு விக்கி இருந்துவெங்கட் சாமிநாதன்
இப்போது ஒரு ஒடியா மொழிப் படம் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றிய மூத்த குடிகளைக் கொண்ட தமிழ் நாட்டுக்கு ஒடிஸ்ஸா ஈடு சொல்ல முடியாது. நாமதான் எங்கிய்ய்யோயோ….. போய்ட்டோமே. எங்கிய்ய்யோயிருந்து எங்கிய்யோ போய்ட்டோம். என்றோ கடல் விழுங்கிவிட்ட லெமூரியாக் கண்டமும் கூட கல்தோன்றா இத்யாதி தமிழர்கள் வாழ்ந்த நாடு தானாமே. தமிழில் இருந்து தானே உலகத்தின் மற்ற மொழிகள்லாம் பொறந்ததாமே.. தேவநேயப் பாவாணரே சொல்லிட்டுப் போயிருக் கார். சரி இவ்வளவு பெருமைகள் தாங்கமுடியாத நம் தமிழ் சினிமாவுக்குக் கிட்டத்தட்ட ஆயுசு எண்பதுக்கு மேலே ஆயிடுத்து. நம் ஊர் தொழில் நுட்பத்துக்கு பம்பாய் சினிமா என்ன, ஹாலிவுட் சினிமாவே தலை வணங்குதாமே. கமலஹாஸனுக்கு மேக்கப் போடறதுக்கு மாத்திரம் தான் ஹாலிவுட்டிலேர்ந்து ஆள் வரவேண்டியிருக்கு. (ஏன்னா கமலஹாஸனுக்கு ’வேஷம்’ போடத் தெரியாது. தமிழனுக்கே ’வேஷம்’ போடத் தெரியாது. ஆகையினாலே தான் ஹாலிவுட்லேர்ந்து ஆள் வரவேண்டி யிருக்கு. நம்மூர் சூப்பர் ஸ்டார், கலைஞர் நாமகரணம் சூட்டிய சுப்ரீம் ஸ்டார் முத்தமிழ் வித்தகருக்கு ஆங்கிலத்திலே தான் விருதுக்குப் பேர் தோணுது பாருங்க ), லக்ஷிய நடிகர், நடிப்பிசைப் புலவர், காதல் மன்னன், நடிகர் திலகம் இயக்குனர் சிகரம், இசைஞானி, இப்படி நம்ம கிட்ட நூத்துக்கணக்கிலே…. சொல்லி மாளலே நம்ம பெருமைய. 25 கோடி ருபா சம்பளம் வாங்கற, ஒரே சமயத்திலே பத்து வேஷம் போடற,. குண்டுப் பொம்பளை வேஷத்திலே யிருந்து குள்ளன் வேஷம் வரைக்கும் போடற 58 வயசிலேயும் தனக்கு ஜோடியா 18 வயசு ஹீரோயினைத் தேடி ஹாலந்துக்கும் தாய்லாந்துக்கும் போயி வலைவீசுற ஹீரோக்கள் நம்மகிட்டே தானே இருக்காங்க. அப்படி இருக்கச் சொல்ல, போயும் போயும் ஒரு ஒடியா படத்தைப் பற்றித் தமிழனுக்குச் சொல்ல வரலாமா?
பொருளாதாரத்தில், கல்வியில் மிகவும் பின் தங்கிய மாநிலம். இலக்கியத்திலும் அப்படிச் சொல்லும்படியாக ஏதும் இல்லை. ஜெயதேவரை ஒரிஸ்ஸாவில் பிறந்தவர் என்பார்கள். ஆமாம் சுபாஷ் சந்திரபோஸ் கூட கட்டக்கில் பிறந்தவர் தான். ஆகையினால் என்ன?. சிற்பம் ஓவியம், நடனம் (ஒடிஸ்ஸி) என்று பேசுவதாக இருந்தால் அவையெல்லாம் பழைய சமாசாரங்கள் அல்லவா? இன்றைய காலகட்டத்தில் படைப்பு என்று சொல்ல என்ன இருக்கிறது?.. நாம் பேசுவது சினிமா பற்றி. அல்லவா? அதற்கான தொழில் நுடபம், கட்டமைப்பு வசதிகள் பற்றி. அல்லவா? தமிழ் நாட்டில் ஒரு வருடத்தில் எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை, ஒரிஸ்ஸாவில் ஆதியிலிருந்து இன்று வரை எடுத்த படங்களின் தொகையை விட அதிகம். ஒரிஸ்ஸாவில் ஸ்டுடியோ என்று ஒன்று கூட கிடையாது. படம் எடுக்க கல்கத்தா தான் போயாக வேண்டும். ஒரிஸ்ஸாவின் திரையரங்குகளில் ஒடியாப் படம் திரையிடப்படுவதில்லை. ஏன்? அடுத்த நாள் திரையரங்கின் கதவை மூடிக்கொண்டு எங்காவது போகவேண்டித்தான் நேரும். ஒரிஸ்ஸா திரையரங்குகளில் சல்மான் கான், ஷாருக்கான், அபிஷேக் பச்சன் படங்கள் ஓடும். இல்லையானால் வங்காளி மொழிப் படங்கள் ஓடும்.
இப்படியாப்பட்ட வறண்ட மண்ணிலிருந்து வரும் படம் ஒன்றையா 70 வருடகாலம் நீண்ட மகத்தான சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களைப் பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தில் பேசுவது? என்று ரஜனி காந்த் நலம் பெற மொட்டையடித்துக் கொள்பவர்களும் கட்/அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்பவர்களும் கொண்ட பக்த ஜனங்கள் கேட்கலாம். ஆமாம். அதுவே தான் காரணம். நம்மிடம் குவிந்து கிடப்பது 70 – 80 வருடகாலமாக ஒவ்வொரு வருடமும் மேலும் மேலும் சேர்த்து மலையெனக் குவிந்துள்ள குப்பை கூளம் இல்லை ஒரிஸ்ஸாவில். அவர்களது மண் என்னமும் செய்யச் சுதந்திரம் தரும் வெற்றிடமாகும்.. நமக்கு அந்த சுதந்திரம் மறுப்பது மலையாகச் சேர்ந்துள்ள குப்பை கூளம். அதை அகற்றாதவரை, அதைப் போற்றிப் புகழ்ந்து அதிலேயே மாய்ந்து கிடக்கும் வரை, நாம் ஏதும் புதிதாகச் சிந்திக்கவோ செயலாற்றவோ முடியாத நிலை. இந்தச் சுமை ஒரிஸ்ஸாவில் சினிமாத் துறையில் செயல்படுபவர்களுக்கு இல்லை. இது மிகச் சாதாரண பொது அறிவு சார்ந்த சமாசாரம். முதலில் நிலத்தைச் சீர்படுத்தாமல் அங்கு ஏதும் பயிரிடமுடியாது. நாம் தலைமுறை தலைமுறையாகக் குப்பை கொட்டிக் குவித்து வந்துள்ள இடத்தில் அந்தக் குப்பையை முதலில் அகற்றிச் சுத்தப் படுத்தாமல் அங்கு வீடு கட்டமுடியாது.
முன்னாலேயே சொல்லியிருக்கிறேன். நாற்பதுகளில் திருவள்ளுவரைப் பற்றியேயான படமானாலும் அதில் சிவபெருமானோ, திருப்பாற்கடலில் சயனித்திருக்கும் விஷ்ணுவோ, இந்திர சபையோ நாரதரோ இல்லாது திருவள்ளுவர் கதை சொல்வது சாத்தியமில்லாது இருந்த காலம் உண்டு. ”எவண்டி ஒன்னைப் பெத்தான், பெத்தான்,…….அவன் செத்தான், செத்தான், “ என்று காக்காவலிப்பு வந்தாடும் ஆட்டமோ இல்லை, இன்னமும் அந்த ரக ஏதோ ஒன்றோ இல்லாது நமக்கு எதுவும் சாத்தியமாவதில்லை. காலத்துக்குக் காலம் சம்பந்தமில்லாத குப்பைதான் எது என்பது மாறுகிறதே தவிர குப்பைகள் குவிந்து கொண்டு தான் வருகின்றன. எச்சில் இலையும் காய்ந்த சருகுகளும் நறுக்கிய காய்கறிகளின் தோலும் ஒரு காலத்தில் குப்பையாக இருந்தன. இப்போது ப்ளாஸ்டிக் பைகளும் சானிடரி நாப்கின்களும், “சென்று வருக, வென்று வருக” ”தளபதியே, தந்தையே” சுவரொட்டிகளின் கிழிசல்களும் குப்பைகளாவது முன்னேற்றமாகாது.
ஓடியாவில் படம் எடுக்க வருபவனுக்கு இந்த பிரசினைகள் ஏதும் முன்னிற்பதில்லை. அவன் ஏதோ சொல்ல வருகிறான். அதை மாத்திரம் நேர்மையாக எந்த மசாலாக் கலப்பும் இல்லாமல் சொல்லி விட முடிகிறது. அவன் சொல்ல வருவதும் அவன் மண்ணைச் சார்ந்தது. அவன் இன்று வாழும் வாழ்க்கையை அல்லது நேற்று வாழ்ந்த வாழ்க்கையைச் சார்ந்தது.
இந்தத் தொடரை எழுதச் சொல்லி அருண் கேட்டபோது, அதாவது கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முந்தி ஒரு நாள் தொலைபேசியில் அழைப்பு வந்த போது அதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் முந்தி தான் லோக்சபா சானலில் ஒரு சனிக்கிழமை இரவுக் காட்சியில் இந்தப் படத்தைப் பார்த்தேன். அதற்கு முந்திய சனிக்கிழமையோ என்னவோ ஒரு மலையாளப் படமும் பார்த்தேன். அதற்குப் பெயர் ”ஓரோரிடத்து பகல்வான் “.என்று நினைப்பு. இந்த இரண்டு படங்களைப் பற்றியும் எழுதலாம், நம் தமிழ்ச் சூழலில் இந்த மாதிரி சாதாரண முயற்சிகள் கூட நினைத்தும் பார்க்க இயலாத பகீரதப் பிரயத்தனங்களாக ஏன் ஆகிவிட்டன என்று நினத்து எழுத ஆரம்பித்தேன். தமிழ்ச் சூழலின் வறட்சியைச் சொல்ல ஆரம்பித்தது இவ்வளவு நீண்டு விட்டது. குப்பை நிறையத் தான் சேர்ந்து விட்டது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் என்ன வேண்டும்?
இரண்டு படங்களையும் பற்றி என் நினைவில் பதிந்துள்ள அளவு தான் சொல்ல முடியும். காட்சிக்குக் காட்சி விரிவாக எழுத வேண்டிய அவசியமும் இல்லை, இப்போதைய என் தேவைக்கு. மலையாளப் படத்தின் பெயராவது நினைவில் இருக்கிறது. ஒடியா படத்தின் பெயர் கூடத் தெரியாது. ஏனெனில் பத்து நிமிடம் தாமதமாகத் தான் பார்க்க ஆரம்பித்தேன். ஒருவாறாகக் கதை நினைவில் இருக்கிறது. சில காட்சிகள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.
கதை பைராகி பிக்குகளைப் பற்றியது. இவர்கள் சன்னியாசிகள். ஆண்கள் மாத்திரமே. பெண்களுக்கு இதில் இடமில்லை. பிரம்மசாரிகள். ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். தெய்வத்திற்குத் தங்கள் ஜீவனை அர்ப்பணம் செய்துகொண்டவர்கள். குருவின் ஆணைப்படி எங்கு தேவையோ அங்கு யாகம் செய்வார்கள். மக்கள் சுபிட்க்ஷமாக வாழவேண்டும். மழை பெய்யவேண்டும், பயிர்கள் செழித்து நன்கு விளையவேண்டும் என்னும் ஊர் மக்களுக்கான பிரார்த்தனையோடு யாகம் செய்வார்கள். பாடுவார்கள். ஊர் ஊராகச் செல்பவர்கள் கிராமத்து ஒரு வீட்டின் முன் நின்று “அலேக் மஹிமா” என்று குரல் கொடுப்பார்கள். சற்று நேரம் நிற்பார்கள். வீட்டிலிருந்து ஏதும் உணவு வருமானால் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையெனில் அடுத்த வீடு. இப்படித் தான் அவர்கள் வாழ்க்கை தினமும் கழிகிறது. வழியில் யாருக்கும் உபதேசம் செய்வது. குருவினால் தடை செய்யப்பட்டுள்ளது. யாரும் தம் விருப்பத்தின் பேரிலேயே பைராகியாகச் சேர்கிறார்கள். விருப்பத்தின் பேரிலேயே தொடர்ந்தும் பைராகியாக இருப்பார்கள். யாரையும் உபதேசித்தோ, வாதம் செய்தோ சன்னியாசி யாக்குவதோ சேர்ந்த பிறகு விருப்பமில்லாமல் போனால் தொடர்ந்து இருக்க வற்புத்துவதோ கூடாது, குருவின் ஆணை அது. . குருவின் ஆணைப்படி இன்னுமொரு கட்டளை. யாரும் பயணம் செய்யும் போது தன் சொந்த ஊர்ப்பக்கம் போகக்கூடாது. விட்டு வந்த பாசம் திரும்ப ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்ற காரணத்தால். ஆனால் திரும்ப விருப்பமிருந்தால் அவர் போய்க்கொள்ளலாம். யாரும் கட்டாயப் படுத்தப் படக் கூடாது. இவையெல்லாம் பைராகி பிக்குகளின் பயணத்தின் போது அவ்வப்போது ஒருவர் மற்றவருடன் வெளிப்படும் பேச்சில் தெரியவருகிறது.
இதில் ஒரு பைராகி எதுவும் பேசுவதில்லை. ஆனால் இக்குழுவோடு சகஜமாக ஒட்டாமல் ஏதோ மனம் அழுந்தி வேதனைப் படுவது அவன் அவ்வப்போது தனித்திருந்து ஏதோ நினைப்பில் ஆழ்ந்து அமைதியாக இருந்து விடுவதிலிருந்து நமக்குத் தெரியவருகிறது. அக்கூட்டத்தில் மூத்தவனாகத் தோன்றும் ஒரு பைராகி தன் சகாக்களிடம் “அவன் தனக்குள் ஏதோ மனம் பேதலித்துத் தவிப்பவனாகத் தோன்றுகிறது. அவனை யாரும் ஏதும் சொல்லவும் வேண்டாம். வற்புறுத்தவும் வேண்டாம். தானாக மனம் தெளிந்தால் நம்மோடு வந்து சேர்ந்து கொள்வான். அவன் பிரசினையை அவனே தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். வாருங்கள் நாம் போகலாம்” என்று தன் சகாக்களை அழைத்துக்கொண்டு பயணத்தை மேற்கொள்வான். தனித்து விடப்பட்டவன் பிறகு ஏதோ தனக்குள் நிச்சயித்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்வான். மனம் முற்றும் தெளிந்தல்ல. ஆனால் முடிவாக செய்வதறியாது இப்பொதைக்கு என்று செய்து கொண்ட முடிவு. அவர்கள் பயணம் தொடரும். போகும் இடமெல்லாம் பாடிக்கொண்டும் தேவ நாமத்தை ஸ்மரித்துக்கொண்டும் செல்வார்கள்.
யாருடைய சொந்த ஊருக்கும் செல்லக் கூடாது என்று குருவின் ஆக்கினை இருந்த போதும் ஒரு சமயம் அவரகள் எந்த வீட்டின் முன் நின்று “அலேக் மஹிமா” என்று சொல்கிறார்களோ அது மனத் தத்தளிப்பில் தவிப்பவனின் வீடு. அந்த வீட்டிலிருந்து அவன் தாய் பிச்சையிட வருகிறாள். கூட அவளுக்கு உதவியாக அவளைத் தாங்கி வருவது ஒரு இளம் பெண். உணவுப் பாத்திரத்தோடு வந்தவள் வாசலில் நிற்கும் பைராகிகளைப் பார்த்ததும் அவர்களைக் கூர்ந்து பார்க்கத் தோன்றுகிறது. அவள் தன் மகனை அடையாளம் கண்டு கொள்கிறாள். அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. “ஏண்டா மகனே என்னை விட்டுப் போய்விட்டாய்?. என்னால் இந்த வயதில் நீ இல்லாமல் இருக்கமுடியலையடா. என்னை இந்தத் தள்ளாத வயதில். காப்பாற்ற நீ ஒருத்தன் தானேடா இருக்கிறாய்.? என்னை இப்படி நிர்க்கதியாக விட்டுச் செல்ல எப்படிடா மனம் வந்தது?. இப்படிச் செய்யலாமா? இப்படி கிழத் தாயைத் தவிக்கவிட்டு சன்னியாசம் வாங்கிக்கொள் என்றாடா தாகூர் (கடவுள்) உனக்கு உபதேசித்தார். நான் எப்படி இருக்கிறேன் பார். நீ வந்து விடுடா. நீ இல்லாமல் என்னைக் காப்பாற்றுவார் யாருடா? வந்து விடுடா? " என்று கதறுகிறாள்.
மகன் சிலையாக நிற்கிறான். எதுவும் அவனால் பேசமுடிவதில்லை. அவளை விட்டுப் போகவும் முடிவதில்லை. தாயோடு சேரவும் மனம் துணியவில்லை. அப்போது அந்த பைராகிகளில் மூத்தவன் முன் வந்து “தாயே, சன்னியாசம் ஏற்றுக்கொண்டவனை மறுபடியும் கிரஹஸ்தாசிரமத்துக்கு இப்படி அழைப்பது சரியில்லை தாயே. உங்கள் கஷ்டம் தெரிகிறது. யார் தான் உலகில் கஷ்டப்படாதவர்கள். அவன் உங்களிடம் திரும்ப வந்தால் அவன் மனம் இங்கு தரித்திருககாது. அவன் என்ன செய்வதென்று தெரியாது தத்தளித்துக்கொண்டிருக்கிறான், தாயே. அவன் மனம் தெளிந்து ஒரு முடிவு எடுக்கட்டும். திரும்புவதாக முடிவு எடுத்துவிட்டால் அவன் தானே கட்டாயம் உங்களிடம் திரும்பி வருவான். இப்போது அவனை எதுவும் சொல்லி வற்புறுத்தாதீர்கள்” என்று மிகக் கனிவுடனும் பரிவுடனும், அந்தத் தாயின் துயரம் அறிந்து சமாதானமாகச் சொல்கிறான். அவர்கள் பயணம் தொடர்கிறது.
அந்த முதிய வயதுத் தாயும் அவளுக்கு உதவும் பெண்ணும் திரும்பத் தனித்து விடப்படுகிறார்கள். அந்தப் பெண் அந்தத் தெருவிலேயே பக்கத்து வீடு ஒன்றில் இருக்கும் பெண். மகனும் கைவிட்டதால் வயது முதிர்ந்த அந்த விதவைக்கு உதவ வந்தவள் அந்தப் பெண். அனேக நேரம் அவள் அந்த வீட்டில் தான் இருப்பாள். அவளுக்கு அந்த வீட்டில் ஏற்பட்டுள்ள பற்றுதல் திக்கற்ற முதியவளுக்கு உதவுவது மட்டுமல்ல. இப்போது பைராகியாகிவிட்ட அந்த வீட்டு இளைஞன் அங்கிருந்த போது அவனிடம் ஏற்பட்ட ஈர்ப்பும் தான் அவளை அந்த வீட்டில் நாளின் பெரும்பகுதியைக் கழிக்கச் செய்தது. ஆனால் பைராகியாவதற்கு முன் இந்தப் பெண் வளைய வளைய வந்த போதிலும், அவன் மனம் அவளிடம் சென்றதில்லை. எதிரே ஏங்கி நிற்பவளை அவன் காணாது போலத்தான் இருந்து வந்திருக்கிறான். அவன் மனம் வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் அற்று விட்ட காரணத்தால் தான் அவன் அவளிடம் பாராமுகமாக இருந்ததும் தாயை, வீட்டைத் துறந்து பைராகியான காரணமும்.
பயணத்தின் ஒரு கட்டத்தில் குரு இருக்குமிடம் போய்ச் சேர்கிறார்கள். அங்கு ஒரு பெரும் யாகம் நடக்கிறது. லோக க்ஷேமத்திற்காகவும், கிராமத்து விவசாயிகளின் நன்மைக்காகவும். எப்போதும் போல். ஆனால் இந்த இளம் பைராகியின் விரக்தி தொடர்கிறது.
விதவைத் தாய் மறுபடியும் மகனைப் பிரிந்த சோகத்தை அதிக நாள் தாங்காமல் இறந்து விடுகிறாள். மறுபடியும் அந்த பைராகி வீடு நோக்கி வருகிறான். தாய் இறந்துவிட்டது வீடு வந்ததும் தெரிகிறது. இன்னமும் அவன் மனம் முன்னை விட அதிகம் அலைக்கழிக்கிறது. முன்னரோ தாயைப் பிரிந்த சோகம் அவள் உயிரோடு இருந்த பொழுதை விட அவளை முற்றுமாக இழந்து விட்ட இப்போதைய நிலையில் அதிகம் வாட்டுகிறது. வெறிச்சிட்ட வீட்டிலேயே தாயின் நினைப்பில் உழல்கிறான். அந்தப் பெண் அவனிடம் வாய்விட்டுச் சொல்கிறாள். இனியாவது திரும்பப் போகும் நினைப்பை விட்டு விடவேண்டும் என்று. அவன் காதில் எதுவும் விழுவதில்லை. அவன் அங்கு இருக்கும்போதும் அவன் அங்கு இல்லாதது போல அவன் மனம் எங்கோ சலித்துக் கொண்டிருக்கிறது. அவனுக்காக ஏங்கித் தவம் கிடக்கும் அந்தப் பெண் அருகில் இருக்கும் பிரக்ஞை கூட அவனுக்கு இல்லை. அவனுக்கு இல்லை என்பது அவளுக்கும் தெரிவது தான் பெரும் சோகம்.
இதெல்லாம் தான் எனக்கு நினைவில் இருக்கிறது. அந்தப் பெண் தெருவில் மயக்கம் போட்டுக் கிடக்கும் காட்சி ஒன்று என் நினைவில் பதிந்திருக்கிறது. அவன் தன் வழியில் அது பற்றிய சிந்தனை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதாகவும் ஒரு காட்சி மனதில் நிழலாடுகிறது.
இவ்வளவு தான் என் நினைவில் பதிந்திருப்பது,. நான் இதை மிகவும் குறிப்பிடக்கூடிய படமாக மதிக்கிறேன். நான் இதில் சொல்லியிருக்கும் கதை தான் மிக நேராக எளிமையாக காட்சிப்படுத்தப் பட்டுள்ள ஒன்று. இதில் யாரும் அழகாக்கப்பட்டவர்கள் கவர்ச்சித் தோற்றம் தரப்பட்டவர்கள். ஸ்டுடியோ செட்டுகள். மேக்கப் கலைஞர்கள், சிறிதளவும் இல்லாத ஒன்று. எல்லாரும் அன்றாடம் ஒரு ஏழ்மைப் பட்ட கிராமத்தில் நடமாடும் சாதாரண மனிதர்கள் தாம்.
இதை ஒரு ஒடியா தான், ஹிந்தி,ஹாலிவுட், ஸ்டுடியோ, ஸ்டார்கள் என்ற பாதிப்பில்லாத மண்ணைச் சார்ந்த ஒருவர் தான் இப்படி ஒரு கதையை நேராக வேறு எவ்வித வேண்டாத கரைசலும் இல்லாது தனக்கும் தன் சிந்தனைக்கும், தன் மனதில் ஓடும் காட்சிக்கும் நேர்மையாக, உண்மையாக படமாக்க வேண்டும் என்று முனைந்திருக்க முடியும். தமிழின் கல் தோன்றாக் காலத்து சிகரங்களுக்கும் திலகங்களுக்கும் நாயகர்களுக்கும் கிட்டாத ஒரு உண்மையும் நேர்மையும் இத்தகைய களங்கமடையா மண்ணைச் சார்ந்தவர்களால் தான் சாத்தியம். அது ஒரிஸ்ஸாவில் இருப்பதைப் பார்க்கிறேன். அஸ்ஸாமில், மணிப்பூரில் இருப்பதைப் பார்க்கிறேன். அஸ்ஸாமின் ஜொஹான்ன பருவா என்று ஒரு கலைஞர் நினைவுக்கு வருகிறார். ஒரிஸ்ஸாவின் மஹாப்பாத்திரா என்றும் ஒருவர் நினைவுக்கு வருகிறார்,. இவர்கள் நம்மூர் நாயகர்களுக்கும் சிகரங்களுக்கும், திலகங்களுக்கும் எட்டாத உயரத்தில் இருப்பவர்கள். இங்கு இத்தகைய நேர்மையும் உண்மையுமான கலைஞர்கள் பிற[ப்பதில்லை. 70-80 வருட காலமாக தொடர்ந்து தொத்து நோயும் பெருவியாதியும் பீடித்துள்ள மண்ணில் ஆரோக்கியம் எங்கிருந்து வரும்? --Ksubashini 10:48, 18 மார்ச் 2012 (UTC) |