வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:009

From மரபு விக்கி

Jump to: navigation, search

இதுகாறும் நான் எழுதியவற்றையும் எதிர்கொண்டு அபிப்ராயம் தெரிவித்தவர்களில் பெரும்பாலோர் தமிழ் சினிமா எப்படி இவ்வளவு வருஷங்களாக செயல்பட்டு வந்துள்ளதோ அதையும் அதன் அபத்த சம்பிரதாயங்கள் அத்தனையையும் எவ்வித கேள்வியும் ஒன்றுகூட எழுப்பாமல் அவ்வளவு அபத்தங்களையெல்லாம் சினிமாவுக்கு இயல்பானவையாக ஏற்று தம் பொதுப்புத்தியைத் தொலைத்துவிட்டவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த அபத்தங்களைக் கொண்டாடும் நபர்களாகவும், சிறப்பிக்கும்,  பின்னர் அவை பற்றி இறுமாந்து ஆகாயத்தை நோக்கி மூக்கை உயர்த்தும் மன நிலையில் இருப்பவர்களாகவும் தெரிகிறது. இவர்கள் மட்டுமல்ல. இவர்கள் தமிழ் சமுதாயத்தின் மாதிரிகள் தானே. இணையத்திற்கென்று சமுதாய குணத்தை மீறிய குணம் கொண்டவர்களா இங்கு வந்துவிடப் போகிறார்கள்? அது மட்டுமல்ல. அந்த அபத்தங்கள் அத்தனையையும் நியாயப்படுத்தும் ஆவேசமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். “நீங்கள் சொல்றதெல்லாம் சரிதான். ஆனால் படம் எடுக்கும் சிரமங்களும், போட்ட பணத்தை எடுத்துப் பின் லாபம் பண்ணும் சிரமங்களும் உங்களுக்கென்ன தெரியும்?” என்ற கேள்வி அடிக்கடி முன் வைக்கப்படுகிறது. “சினிமான்னா அப்படித்தாங்க இருக்கும்? வாழ்க்கை அவதிகள் தான் எப்போதும் இருக்கே. அதை மறந்து இரண்டு மூணு மணி நேரமாவது ஜாலியா பொழுது போக்கத்தானே சினிமாவுக்குப் போறோம்.” என்று ஒரு நியாயப்படுத்தல். “சினிமாங்கறது மக்களுக்காகங்க. மக்களை ஒதுக்கிட்டு நாம வாழமுடியாதுங்கறத நாம் புரிஞ்சிக்கணும். படத்தை எடுத்து நாமேவா பாத்துக்க முடியும். மக்கள் பாத்து ரசிக்கணுமில்லியா?”” என்று இன்னொரு ஜனநாயக வாதம். என்னமோ இவர்கள் மக்களைத் துயரக் கடலிலிருந்து மீட்கவே  பிறவி எடுத்துள்ளது போலத் தான் பேச்சு. அது ஜனநாயகம் இல்லை. பண நாயகம். அதுவும். பிழைப்புக்காக, பணம் சம்பாதிக்கிறதுக்காகவே வியாபாரம் செய்யும் ஒரு பலசரக்குக்கடைக்காரரின் நியாயம் இல்லை இது.


பச்சையாகச் சொல்வதென்றால், இது தேவடியாப் பிழைப்பின் இன்னொரு ரூபம். அதற்கு நாம் என்னென்ன ரூபமோ, பெயரோ கொடுத்துக்கொண்டாலும், வேஷங்களையும் கோஷங்களையும் களைந்து விட்டால் இது தேவிடியாப் பிழைப்பின் குணத்தைக் கொண்டது தான். அவளுக்காவது ஒரு கட்டத்தில் அவள் நினைத்தால், வந்தவனை “போறியா இல்லியா?” என்று விரட்டி அடிக்கும் சுதந்திரம் உண்டு. இங்கு அது இல்லை. வெற்றி என்ற கொள்ளையடிப்பு நடந்துவிட்டால், அதற்குப் புனித முலாம் பூசப்பட்டு, நியாயங்கள் கற்பிக்கப்பட்டு என்னென்னவோ கோஷங்கள் எழுப்பி, கொண்டாட்டங்கள் நடத்தி, அரசு விருது பெற்று ஊர்வலம் வரலாம். இந்தக் கூத்து சினிமா தமிழ் நாட்டில் தலையெடுத்த காலத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று பூதாகாரமாக நம்மேல் கவிந்து விட்டதால், இது இயல்புக்கும் வாழ்க்கைக்கும், உண்மைக்கும் முற்றிலும் விரோதமானது என்ற எண்ணமே நமக்கு ஏற்படுவதில்லை. வாழ்க்கை அப்படி இல்லையே என்றால், சினிமான்னா அப்படித்தான்யா இருக்கும் என்று சினிமா பார்ப்பவர்களும் சரி, சினிமாத் தயாரிப்பாளர்களும் சரி ஏகோபித்த சிந்தனை கொள்ளும் வகையில் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.


நாம் நைஜீரியாவுக்குப் போய் வாழ நேர்ந்தால் அந்த நாட்டு மக்களின் நம்மிலிருந்து வேறுபட்ட வாழ்க்கையை நாம் அது அவர்களது வாழ்க்கை என்று மனச் சமாதானம் கொள்கிறோம். அதே போல அவர்களும் நம் வாழ்க்கை வேறுபட்டிருப்பதை இதே சமாதானத்தோடு ஒப்புக்கொள்ளும் மன நிலை கொள்வார்கள்தான். இன்னும் வேறு மாதிரியாகச் சொல்லிப் பார்ப்பதென்றால், ஒரு பைத்தியக்காரனின் பேச்சுக்களையும் நடந்துகொள்ளும் முறையையும், இது அவனுக்கு இயல்பு என்று மனம் சமாதானம் கொண்டு நம் வழிச் செல்கிறோம். அவனை நம் வழிக்குக் கொண்டுவர நாம் அவனுக்கு புத்தி சொல்லியோ அவனுடன் வாதம் செய்தோ திருத்த முயல்வதில்லை.


எனக்குத் தோன்றுகிறது, நமது உலக நாயகர்களும், இயக்குனர் பிரம்மாண்டங்களும், இன்னும் மற்ற அவர்தம் வழிச்செல்லும் நம் தமிழ் சினிமா உலக சிற்பிகள் எல்லாம் பாட்டுப் பாடிக் கூத்தாட்டம் போடுவதற்கு ப்ரேஸில் என்ன, ப்ராங்க்பர்ட், சிங்கப்பூர், தெருக்கள் என்ன லாப்லாந்து என்ன, ஸ்விட்ஸர்லாந்து என்ன என்று அலைந்து இடம் தேடி படம் பிடிக்கும் போது இவர்கள் ஆட்டத்தைக் கண்டு அவர்கள் சிரிக்கமாட்டார்களா, இல்லை இவர்களுக்குத் தான் வெட்கமாக இருக்காதா என்று என் சாதாரண பொதுப்புத்தியின் தொந்திரவால் என்னையே கேட்டுக் கொள்வதுண்டு. அந்த நாட்டுக்காரர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் தான். நாங்கள் சினிமா ஷூட்டிங் நடத்துகிறோம் என்று பதில் வந்தால், ஒஹோ இவங்க ஊர்லே இப்படித்தான் வழக்கமோ, இல்லை இவர்கள் சம்பிரதாயங்களோ என்று அமைதி கொள்வார்கள் போலும். பார்ஸி திருமணச் சடங்குகளோ, முஸ்லீம் விழாக்களோ வித்தியாசமாக இருந்தால் நாம் அதைக் கேள்வி கேட்போமா? ஆனால் இவர்கள் வெட்கப்படாமல் கூத்தாடுவது எப்படி?. அதிலும் ஸ்விட்ஸர்லாந்தின் பனி மூடிய மலைச் சரிவுகளிலும் கூட நம் காதல் நாயகிகள் நம் ஊர் தமிழ் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்த எவ்வளவு குறைவாக ஆடை அணிவது சாத்தியமோ அவ்வளவுக்குக் குறைவாகவும், நம் உலக நாயகர்கள், அந்தக் குளிருக்கேற்ப முகம் தவிர உடல் முழுதும் வித விதமான வண்ணங்களில் அலங்கார உடைகளில் டான்ஸ் பண்ணுவார்கள்.


இதெல்லாம் சினிமாவுக்கோ அல்லது அவர்கள் இதுபற்றி உரிமை கொண்டாடி பெருமைப்பட்டுக்கொள்ளும் எதற்குமோ சம்பந்தமில்லை. இதைத்தான் ஒவ்வொரு விஷயத்திலும், தமிழ் சமுதாயத்தின் ஒவ்வொரு துறை பற்றிய விஷயத்திலும் சொல்ல வேண்டியிருக்கிறது. அரசியலாகட்டும், சினிமாவாகட்டும். அல்லது கலை என்றும் தமிழ் என்றும் சொல்லி மக்கள் முன் வைக்கும் எதுவுமேயாகட்டும். அது மக்களை ஏதோ சொல்லி அவர்களுக்குப் பூச்சூட்டி, அவர்கள் பணத்தை அல்லது வாக்குகளைக் கொள்ளையடிக்கமுடியும் என்ற ஒரே சிந்தனை தான் பின்னிருப்பது. அவர்களுக்குப் பூச்சூட்டும் யுத்திகள் தான் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கின்றனவே தவிர அதற்கு என்ன பெயர் கொடுக்கப்படுகிறதோ அந்தப் பெயர் என்று மே மாறாது. இதை இன்று அந்நியன் படமோ சிவாஜி படமோ பார்க்கிறவர்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பது கஷ்டம். நாற்பதுகளிலிருந்து இன்று 2010 வரை, ஒவ்வொரு பத்து வருஷத்துக்குமான ஒரு சாம்பிள் தமிழ்ப் படத்தில் காதலைச் சொல்ல என்ன பாட்டு, என்ன டான்ஸ் எப்படி பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகும். சங்கீதமும் நடனமும் என்றும் ஒன்று தான். ஆனால், எதை அன்று சங்கீதம் என்றும் நடனம் என்றும் கலைகள் என்றும் சொல்லி வந்தோம் என்பதையும் இன்று அந்தப் பெயரில் தமிழ் மக்களுக்கு அதாவது தமிழ் சினிமா ரசிகனுக்கு, தரப்படுவது என்ன என்றும் சற்று யோசித்தால் போதும்.


நாக்க மூக்க ஒரு உதாரணம். அன்று இதை பாட்டு என்றோ அதற்கு ஆடிய ஆட்டத்தை நடனம் என்றோ ஒரு கடைத்தர சினிமாக் காரன் கூட ஒப்புக்கொண்டிருக்கமாட்டான். ஆனால் அது இன்றைய போன வருடம் வரை மக்கள் ரசனையின் உச்சமாகக் கொண்டாடப்பட்டது. அதைத் தயாரித்த தமிழ் நாட்டின் மிகப் பெரிய தனவந்தர், மிகப் பெரிய தொலைக் காட்சி ஸ்தாபனம் அதற்குத் தன் பிரசார ஊடகங்கள் மூலம் பெற்றுத் தந்த மக்கள் வரவேற்பும், எதற்கும் எந்த கடைத்தரத்திற்கும் சங்கீதம் என்றும் நாட்டியம் என்றும் சந்தையில் மக்கள் ரசனையில் செலாவணியாக்கிவிட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. இந்த நிரூபணம் இன்று ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றல்ல. விளம்பரத்தால், மக்களை வாய்பிளக்கவைக்கும் தந்திரங்களால், எந்த சந்தைச் சரக்கையும் வியாபார வெற்றி மட்டுமல்ல, கலை என்றும் அதற்கு மக்களிடையே வியப்பூட்டும் மதிப்பையும் உருவாக்கிவிட முடியும் என்பதை 1949-லிருந்தே எஸ் எஸ் வாசன் சந்திரலேகா என்னும் 50 லக்ஷம் ரூபாய் செலவிலான பிரம்மாண்ட தயாரிப்பு மூலம் தொடங்கி வைத்து ஸ்தாபிக்கவும் செய்தார். அதன் தொடர்ச்சி தான் அதன் பூதாகாரமான வியாபகம் தான் இன்றைய சன் பிக்சர்ஸும் அதன் சினிமாப் பிரவேசமும். 2001-ல் அது 150 கோடி செலவில் ஒரே சமயத்தின் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் உலகம் முழுதும் திரையிடப்பட்டு சாதனை படைத்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திரைப்பட பிரம்மாண்டம் ஆகியுள்ளது. அதில் யானைகளும் சர்க்கஸ் சாகஸங்களும் புதியன. இங்கு ப்ரேசில் நாட்டில் தேடிக்கண்டுபிடிக்கப்பட்ட பாலைவனத்திடையே ஆங்காங்கே தனித்தனி ஏரிகளைக் கொண்ட இடத்தில் நடனக்காட்சி படமாக்கப்பட்டுள்ள அதிசயம். ஐஸ்வர்யா ராயைக் காதலிக்கும் ரோபோ பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் புதுமைக் கற்பனையும் சாகஸமும் ஆகும். . இனி இந்த பூதலத்தில் அடுத்த படத்தின் டான்ஸ் காட்சிகளை படம் பிடிக்க அவர் செவ்வாய்க் கிரஹத்துக்கோ அல்லது சந்திரனுக்கோதான் போகவேண்டியிருக்கும். புதுமையாக யாரும் படமெடுக்காத இடம் அவருக்கு இங்கு கிடைக்காது என்று தோன்றுகிறது.


வெங்கட் சாமிநாதன்

--Ksubashini 13:32, 6 செப்டெம்பர் 2011 (UTC)

Contributors

Ksubashini, Na.Kannan மற்றும் Geetha Sambasivam

This page was last modified on 11 August 2012, at 13:35. This page has been accessed 4,078 times.