வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 13

From மரபு விக்கி

Jump to: navigation, search

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

Birth13.jpg

இங்கே கண்ணன் தேவகி வயிற்றில் பிறந்து யசோதையிடம் வளர்ந்ததை ஆண்டாள் சுட்டுகிறாள்.


ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்= தேவகியின் எட்டாவது குழந்தைதான் கம்சனுக்கு யமன் என்பது முன்பே தீர்மானித்த ஒன்று. என்றாலும் கம்சனோ தேவகிக்கு முதலில் வரிசையாய்ப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்று விடுகிறான். அதன் பின்னரே பலராமனின் பிறப்பும் மற்றப்பட்டு ரோகிணியிடம் போகிறது. கண்ணனோ பத்துமாதங்களும் தேவகி சுமந்து பெற்ற பிள்ளை. இந்தப் பிள்ளை தான் பிறந்து தங்களை ரக்ஷிக்கப் போகிறான். தங்கள் குலவிளக்கு இந்தப் பிள்ளைதான் என்பது தேவகிக்கும் தெரியும்.


ஆகவே அவள் பிள்ளையைக் காக்கத் துடித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பிறந்ததோ சிறைச்சாலை. அதுவும் துணைக்கு எவரும் இல்லாத நடு இரவு நேரம். கொட்டும் மழை. யமுனையோ பிரவாஹம் எடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தேவகி குழந்தையைப் பெற்றெடுக்க அந்தக் குழந்தையை உடனேயே ஒளித்து வளர்க்கத் திட்டமிட்ட பெற்றோர் பெற்ற தாயிடமிருந்து சற்றும் கருணையைக் காட்டிக்கொள்ளாமல் துறக்கத் தீர்மானித்து, அந்தக் குழந்தையைக் கூடையில் வைத்துத் தலையில் சுமந்து சென்ற வசுதேவர் கோகுலத்தில் நந்தனிடம் ஒப்படைக்கிறார்.


இங்கே தான் அந்த மற்றொருத்தி வருகிறாள். மற்றொருத்தி வேறு யாரும் இல்லை. இவ்வுலகிலேயே மிகவும் புண்ணியம் செய்து அந்தப் பரமாத்மாவையே குழந்தையாகப் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டி, கடிந்து, அலங்கரித்து, ஓடி, விளையாடி அதன் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு சிணுங்கலையும், ஒவ்வொரு விளையாட்டையும் அநுபவித்து அநுபவித்து வளர்த்த யசோதை ஆவாள்.
உண்மையாகவே அவளை நினைத்தால் பிரமனும், இந்திரனும் மட்டுமல்ல எந்தத் தாயாருக்குமே மனதில் பொறாமை உண்டாகும். அத்தகைய பாக்கியம் செய்த புண்ணியவதியான யசோதையிடம் போய்ச் சேர்கிறான் கண்ணன்.

Vasudevar.jpg

தேவகியின் வயிற்றில் பிறந்து யசோதையிடம் வளர்ந்து,

தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே= கம்சனுக்கோ எவ்வாறோ தெரிந்து விடுகிறது. குழந்தை பிழைத்து எங்கேயோ வளர்கிறது என்று. யோகமாயையே பெண் குழந்தையாய் தேவகியிடம் கிடந்து கம்சனுக்கு உண்மையை உணர்த்திவிட்டு மறைகிறாள். அதோடு யசோதைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்ற விபரமும் தெரியவருகிறது. கம்சனுக்கு உடலும் , உள்ளமும் ஒரு இடத்தில் தரிக்கவில்லை. எப்படியானும் ஏதானும் தீங்கைச் செய்து அந்தக் குழந்தையை அழிக்கவேண்டும். அப்போதுதான் தான் உயிருடன் இருக்கலாம் என்று நினைத்தான். இப்படி நினைந்து நினைந்து அவன் உடல் மட்டுமில்லாமல் உள்ளமும் பற்றி எரிந்ததாம்.


அதோடு யோகமாயா பிறந்திருப்பது சாதாரணக் குழந்தை அல்ல, சாக்ஷாத் அந்தப் பரம்பொருளே என்றும் கூறுகிறாளா? இந்த எண்ணம் அவன் மனதில் நெருப்பைப் போல் பற்றி எரிகிறது. நெடுமாலே வந்து நம்மை அழிக்க வந்துவிட்டானே என்று அவன் உருவமே நெருப்பாய்த் தெரிகிறது கம்சனுக்கு.


உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி= உன்னைப் பெறவேண்டி உன்னோடு நாங்கள் இணையவேண்டி, நீ எங்களுக்கு மோக்ஷத்தை அளிக்க வேண்டி உன்னை நாடி வந்திருக்கிறோம் எங்கள் கண்ணா, பிராட்டியான திரு தங்கும்படியான செல்வமாக எங்களுக்கு நீ இருக்கிறாய், உனக்கும் அவளுக்கும் நாங்கள் சேவகம் செய்து எங்கள் அன்பையும், பக்தியையும் காட்டி


வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!= இதுவரை நாங்கள் எடுத்த பிறவிகளின் கர்மவினைகள் தீர்ந்து அதன் மூலம் ஏற்பட்ட வருத்தமும் தீர்ந்து நிலையான செல்வமாகிய மோக்ஷத்தைப் பெற்று மகிழ்ந்து இருப்போம்.

கண்ணனே மிகப் பெரிய செல்வம் என்று ஆண்டாள் கூறி அவனைப் புகழ்ந்து பாடுவது அதனினும் பெருஞ்செல்வம் என்று கூறுகிறாள்.


மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!

Chakram.jpg

இந்தப் பாடலில் கண்ணனிடம் நோன்புக்குத் தேவையான பொருட்களை ஆண்டாள் கேட்டுப் பெறுவதாய் ஐதீகம். உண்மையில் அவள் நோன்புக்கான பொருட்களை யாசிப்பது என்பது முக்திக்கான வழிகளைக் காட்டித் தரும்படி கேட்பதே ஆகும். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா?


மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்= ஆயிற்று, கண்ணனை எழுப்பியாயிற்று. நீ வந்து உன் சிங்காதனத்தில் அமர்ந்து கொண்டு எங்கள் வேண்டுகோளைக் கேட்டு அருள் என்றும் வேண்டிக்கொண்டாயிற்று. கண்ணனும் வந்துவிட்டான். அவன், "பெண்களே, என்னவேண்டும் உங்களுக்கு?" என்றும் கேட்டுவிட்டான் போலும். அவனைத் தங்களுக்கு மிக நெருக்கமானவன் என்று காட்டிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அந்தப் பெண்களிடையே தோன்றிற்று. இது எல்லாருக்குமே இருக்கும் இல்லையா?? பல நண்பர்கள் கூடி இருக்கும் இடத்தில் ஓர் உயர்பதவியோ, அல்லது மேன்மையானவரோ நண்பர் எதிர்ப்பட்டால் அவர் நமக்கு மிகவும் தெரிந்தவர் எனக் காட்டிக்கொள்ள, அதுவும் அனைவருக்கும் முன்னால் அவருக்கும், நமக்கும் உள்ள நெருக்கத்தை எடுத்துக்காட்ட விரும்பமாட்டோமா?? அப்படியே இங்கே எல்லாப் பெண்களுக்கும் கண்ணன் தங்களுக்கெல்லாம் நெருங்கியவன் என்று காட்டிக்கொள்ளத் தோன்றிற்று. ஆகவே மாலே, மணிவண்ணா, என்றெல்லாம் கொஞ்சிக் கூப்பிடுகின்றனர். அதுவும் தங்களோடு ஆடி, ஓடிப் பாடிக் களித்தவன் என்ற பாவனை தோன்றும்படி கூப்பிட்டுக் கேட்கவே, கண்ணனும் என்ன வேண்டும் என்று மீண்டும் கேட்கிறான். நாங்கள் வேண்டுவதைக் கேள் கண்ணா!


இவை எல்லாம் எங்களுக்கு முன்னிருந்த எங்கள் முன்னோர்கள் செய்தவையே, அவர்களைப் பார்த்தே நாங்களும் அவ்வண்ணமே கேட்கிறோம்.

Shangu.jpg

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே= அப்பா, கண்ணா, உன் பாஞ்சசன்னியம் என்ற சங்கை எடுத்து நீ முழக்கினாயானால் இந்த அகில உலகமுமே நடுங்குமே? அப்படிப்பட்ட பாஞ்சசன்னியம் எங்களுக்கும் வேண்டும். நாங்கள் உலகை எல்லாம் நடுங்க வைக்கப்போவதில்லை. நீ அடைந்த வெற்றியை, எங்களை ஆட்கொண்ட சந்தோஷத்தை அதை முழக்கித் தெரிவிப்போம். எங்கள் கண்ணா, அதனால் எங்களுக்குப் பாஞ்சசன்னியம் வேண்டும்.


போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே= அதோடு மட்டுமா? மேலும் உன் புகழைப் பாடும்போது கூடவே முழக்கம் போடும் பறை, பேரிகைகள், வாத்தியங்கள், எக்காளங்கள், கொம்பு போன்றவையும் தேவை. இதன் மூலம் உன் நாம ஜபத்தை நாங்கள் செய்வோம். அது மட்டுமா? உனக்குப் பல்லாண்டிசைக்கும் சத்சங்கத்தைச் சேர்ந்த பெரியோர்களையும் எங்களுக்கு குருவாக ஆக்கிக்கொடுப்பாய். அவர்கள் மூலம் சத்குரு கிடைத்து உன்னருகே நாங்கள் நெருங்கிவர இயலும்.


கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!= இது மட்டுமா?? இந்த மார்கழி அதிகாலையில் எழுந்து நாங்கள் நதிக்கோ, திருக்குளத்துக்கோ போய் நீராடிவிட்டு உன் நாமாவளியைப் பாடிக்கொண்டு வருகிறோமே? எங்களுக்கு வெளிச்சம் காட்ட ஒரு அழகான விளக்கைக் கொடுப்பாய். இங்கே விளக்காய் ஆண்டாள் கேட்பது அறியாமை என்னும் இருட்டை விலக்கி ஞானதீபமாகிய விளக்கைத் தரும்படிக் கேட்கிறாள். மேலும் எங்களுடன் கூட வரும், வந்து கொண்டிருக்கும் மற்றத் தோழியரும் அறியும் வகையில் நாங்கள் வருவதையும் நோன்பு நூற்பதையும் அனைவரும் அறியும் வகையில் ஒரு கொடியைக் கொடுப்பாய், எங்களை எல்லாம் மூடிக் காத்து அருளும் விதானத்தையும் கொடுப்பாய் என்றும் கேட்கிறாள். இந்தக் கொடியைக் கேட்பது, மஹாவிஷ்ணுவின் கருடக் கொடியில் இருக்கும் கருடனின் பாதார விந்தங்களைப் பற்றுவதன் மூலம் பகவானையும் பற்றலாம் என்பதற்காக.


அவனைப் பற்ற அவனடியார்கள் அவனுக்கு நெருங்கியவர் மூலம் முயல்வதே நல்லதல்லவா? விதானமும் கேட்பது தங்களைக் காக்கப் பரம்பொருள் விதானம் போல் வந்து ஆட்கொள்ள வேண்டும் என்பதற்கு. ஒரு விதானம் (canopy)என்னும் கூரையானது எவ்விதம் நம்மை எல்லாவற்றிலிருந்தும் மூடிக் காக்கிறதோ அவ்வாறே கண்ணனின் அருள் என்னும் விதானம் தங்கள் பாவங்களை அகற்றித் தங்களை அறியாமையிலிருந்து அகற்றி மேலும் பாவம் செய்யாமல் காத்து அருளவேண்டும். மேலும் தங்களால் தங்கள் முயற்சியாலேயே எல்லாமும் நடக்கிறது என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் அனைத்தும் அவன் கிருபையாலேயே, அவன் பாதுகாத்தலிலேயே நடந்தது, நடக்கும் என்பதையும் சுட்டுவதற்காக. இத்தனையும் சொல்லிவிட்டுக் கடைசியில் ஆலினிலையாய் என்று சொல்கிறாள்.


மஹா பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கிய நிலையில் ஈரேழு பதினாலு லோகங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு ஒரு சின்னஞ்சிறிய ஆலிலையில் கால் கட்டைவிரலைச் சப்பிக்கொண்டு சின்னஞ்சிறு குழந்தையாக ஏதும் தெரியாதவனாய் நீ காட்சி கொடுத்தாலும், நீ அன்றோ அனைத்தையும் உள்ளடக்கியவன்? அனைத்தையும் உண்டு பண்ணுபவன்? அனைத்தையும் காத்து, ரக்ஷிப்பவன்?? நீ இல்லை எனில் உன் அருள் இல்லை எனில் எங்களால் ஏதுஇயலும்?? ஆகையால் உன் அருளே எங்களுக்கு வேண்டும் கண்ணா, எல்லாச் செல்வத்திலும் பெரிய செல்வம் அதுவே என்கிறாள்.


இப்படிக் கண்ணனிடமே மனதை வைத்து அவனிடம் அருள் ஒன்றையே யாசிக்கிறாள் ஆண்டாள்.


--Geetha Sambasivam 10:01, 6 ஜூலை 2011 (UTC)



Contributors

Geetha Sambasivam

This page was last modified on 7 July 2011, at 10:58. This page has been accessed 1,764 times.