வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மல்லரை வென்ற மாங்குடியார்!

From மரபு விக்கி

Jump to: navigation, search

உ.வே.சா. நினைவு மஞ்சரி பாகம் 1


அத்தியாயம் 12. மல்லரை வென்ற மாங்குடியார்.


மகாராஷ்டிர அரசர்கள் காலத்தில் தஞ்சாவூர் அரண்மனையில் நவராத்திரி உத்ஸவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். வடமொழி தென்மொழி வித்துவான்களும் சங்கீத வித்துவான்களும் வேறு பல கலை வல்லுநர்களும் அந்நகரத்திற்கு வந்து அரசரையும் மற்றவர்களையும் மகிழ்வித்துச் சம்மானங்கள் பெற்றுச்செல்வார்கள். வெளிநாடுகளிலிருந்தும் பலர் வந்து போவதுண்டு.


ஒரு வருஷம் நவராத்திரி விழாவிற்கு வடநாட்டிலிருந்து மல்லர் ஒருவர் தம் பரிவாரங்களுடன் வந்திருந்தார். அவர் பல சமஸ்தானங்களிலுள்ள மல்லர்களோடு மல் விளையாட்டுப் புரிந்து வெற்றியடைந்து அங்கங்கே பல சம்மானங்களும் விருதுகளும் பெற்றவர். அவர் வந்திருப்பது தெரிந்து தஞ்சாவூருக்கு அருகிலுள்ள கிராமத்தினர் பலர் அவருடைய மல்விளையாட்டைப் பார்க்கும் பொருட்டு வந்து கூடியிருந்தனர். வந்த மல்வீரர் மற்ற இடங்களிலிருந்து வந்திருந்த வேறு மல்லர்களை அறை கூவி அழைத்தார். மற்போர் நடைபெறத் தொடங்கியது, ஏழு நிலைகளையுடைய மாடம் அமைந்த அரண்மனையின் கிழக்கு முகப்பிலுள்ள வெளியில் சுற்றிலும் வாடி (வேலி) கட்டப்பட்டது. அதைச் சுற்றிப் பல ஜனங்கள் நின்று கொண்டிருந்தார்கள். வாடிக்குள் மல்யுத்தம் நடைபெற்றது. ஒவ்வொருநாளும் வடநாட்டு மல்வீரரே தம்மோடு போர் புரிந்த மல்வீரர்களை ஜெயித்து வந்தார். ஸமஸ்தானத்து மல்வீரரும், வேறு மல்லர்களும் ஒவ்வொருவராகத் தோல்வியுற்றனர். அரண்மனையில் இரண்டாவது நிலையிலிருந்து அரசர் ஒவ்வொருநாளும் அதைக் கவனித்துவந்தார்.


ஒருநாள் வழக்கம்போல மற்போர் ஆரம்பமாயிற்று. தினந்தோறும் பெற்று வந்த வெற்றியினால் பெருமிதமடைந்த மல்வீரர் அன்று மிகவும் உத்ஸாகத்தோடு இருந்தார். வந்திருந்த கூட்டத்தையும் அந்த வடநாட்டு மல்வீரரது வெற்றியுத்ஸாகத்தையும் கண்டபோது அரசரது உள்ளத்தே சிறிது வருத்தமுண்டாயிற்று; “இவரை ஜயிப்பதற்கு நமது ஸமஸ்தானத்தில் ஓர் ஆள் இல்லையே” என்ற எண்ணமே அதற்குக் காரணம். அரசருடைய உள்ளக்குறிப்பையறிந்த மந்திரிகள் அருகிலிருந்து பலவகையாக அவருடைய கவலையைப் போக்கத் தொடங்கினார்கள்.


“மற்றோர் அரசாங்கமாக இருந்தால் இப்படிப் பிறநாட்டு வீரனுக்கு இடங்கொடுக்குமா? இங்கே மகாராஜா நிஷ்பக்ஷபாதியாகையால் வித்தைக்கு மதிப்புக் கொடுத்திருக்கிறார்கள். அந்த மல்வீரர் எந்த நாட்டினராக இருந்தால் என்ன? நாம் அளிக்கும் சம்மானத்தை அவர் மிகவும் உயர்வாகப் போற்றிப் பாதுகாப்பார்.” என்றார் ஒருவர்.


“மகாராஜா! இதற்குள் மனம் சலிக்கவேண்டாம். இன்னும் ஸமஸ்தானத்து வீரர்கள் யாவரும் வரவில்லை. யாரோ சிறுபிள்ளைகள் இவ்வளவு நாள் அந்த வீரரோடு போக்குக் காட்டி விளையாடினார்கள். அவருக்கு உள்ள சக்தி எவ்வளவென்று தெரிந்து கொண்ட பிறகு நாம் போவோமென்று சில பெரிய வீரர்கள் இருக்கிறார்கள்.” என்று மற்றொருவர் சொன்னார்.


“இந்த ஸமஸ்தானத்தைப் போல இவ்வளவு சிறப்பாகப்பலவகையான வித்தைகளுக்கும் ஆதரவு அளிப்பது வேறொன்றும் இல்லையென்று ஜனங்கள் பேசிக்கொள்ளுகிறார்கள். மற்ற இடங்களில் இந்த மற்போரைக் காணுவது அரிது. ஆதலால் இங்கே வெளியூர்களிலிருந்து பல ஜனங்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மகாராஜாவினுடைய பெருமையைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” என்று வேறொருவர் பேசினார்.


அரசரோ மல் விளையாடும் இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று அவர், “அந்தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பெரிய மூட்டை தெரிகிறதே; அங்கே சுமைதாங்கி இல்லையே, ஏதாவது வண்டி நிற்பதாகவும் தெரியவில்லையே, அங்கே அவ்வளவு பெரிய மூட்டை இருக்கக் காரணமென்ன?” என்று கேட்டார்.


அருகிலிருந்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள். ஒரு பெரிய மூட்டை கூட்டத்துக்கிடையே தெரிந்தது. கூட்டம் நெருக்கமாக இருந்தமையாலந்த மூட்டைக்கு ஆதாரமான பொருள் இன்னதென்று தெரிந்துகொள்ள முடியவில்லை.


மந்திரிமார் அந்த மூட்டை எங்கே இருக்கிறதென்று தெரிந்து வர ஓர் ஆளை அனுப்பினர். சிறிது நேரத்தில் ஒருவன் வந்து செய்தியைத் தெரிவித்தான்; “ ஒரு பிராமணர் தம் தலையில் நெல் மூட்டையைச் சுமந்தபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார்.” என்று அவன் கூறினான். “பிராமணரா! மூட்டை மிகவும் பெரிதாக இருக்கிறதே; அதை அவர் சுமந்து கொண்டே வேடிக்கை பார்ப்பதேன்?” என்று அரசர் ஆச்சரியத்தோடு கேட்டார். மறுபடியும் சமாசாரம் வந்தது; “அவர் அதைச் சிறிதும் கஷ்டமில்லாமல் சுமந்து கொண்டு நிற்கிறார். கீழே இறக்கவேண்டியது அவசியமில்லையென்று சொல்லுகிறார்.” என்று தெரிய வந்தது.


“அத்தகைய மனிதரை நாம் பார்க்கவேண்டும்.” என்று அரசர் உத்தரவிட்டார். அவரை அழைத்து வருவதற்காக ஒருவன் சென்றான்.


அந்தப் பிராமணர் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஐயம்பேட்டைக்கருகில் இருக்கும் மாங்குடியென்னும் ஊரினர். ஸ்மார்த்த பிராமணர்களுள் மழநாட்டுப் பிருகசரண வகுப்பைச் சார்ந்தவர். கைலாசையரென்பது அவர் பெயர். தஞ்சாவூரில் இருந்த ராஜபந்துக்களாகிய மகாராஷ்டிரர்கள் பக்கத்துக்கிராமங்களிலுள்ள தங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிடுவார்கள். அந்தக் குத்தகைதாரர்கள் வருஷந்தோறும் நெல்லைக் கொணர்ந்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். சிலர் தாமே சுமந்து வந்து போட்டுவிட்டுச் செல்வார்கள். கைலாசையர் அத்தகைய குத்தகைதாரர்களுள் ஒருவர்.


அவர் இரண்டு கலம் நெல்லை ஒரு கோணியில் மூட்டையாகக் கட்டித் தம் தலையிற் சுமந்து கொண்டு வந்தவர்; அந்த வழியே செல்லுகையில் பெருங்கூட்டமொன்று இருப்பதைக் கண்டு அங்கே வந்தார். வளைவுக்குள்ளே மல்விளையாட்டு நடப்பது தெரிந்து வேடிக்கை பார்க்கும்பொருட்டு நின்றார்.


மிக்க பலமும் கட்டுமுடைய ஆஜானுபாகுவான அவருடைய உடம்பு இரும்பைப் போன்றிருந்தது. நெற்றியில் இருந்த திருநீறும் கழுத்திலிருந்த ருத்திராட்சமும் அவருடைய சிவபக்தியைப் புலப்படுத்தின. அவரும் அவருடைய வகுப்பினரும் சிறந்த சிவபக்தர்கள்; மூன்று காலத்தும் ஏகலிங்கார்ச்சனை செய்பவர்கள். கைலாசையருடைய வன்மை பொருந்திய உடலும் சிவசின்னங்களின் தோற்றமும் பார்ப்பவர்களுக்குப் பீமசேனனின் ஞாபகத்தை உண்டாக்கின. சிவபக்தியும் தேகபலமும் பொருந்தியவர்களிற் சிறந்தவனல்லவா அவன்??


கைலாசையர் தம் தலையிலிருந்த சுமையை ஒரு பொருளாக மதிக்கவே இல்லை. ஆதலால் அதை இறக்கிவைக்காமல் நின்றபடியே மற்போர் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் தோளில் ஒரு பை தொங்கியது. அதில் ஐந்தாறு கவுளி வெற்றிலையும் கொட்டைப்பாக்கும் ஒரு பெரிய பாக்கு வெட்டியும் தேங்காயளவுக்குச் சுண்ணாம்புக் கரண்டகமும் வைத்திருந்தார். அந்த மல் விளையாட்டைப் பார்த்துக்கொண்டு நின்றபடியே அவர் தாம்பூலம் தரிக்கத் தொடங்கினார்.


அவர் நின்றபடியே பையிலிருந்து பாக்குவெட்டியை எடுத்துப் பாக்கைச் சீவிச் சீவி வாயில் போட்டுக்கொண்டார். பிறகு வெற்றிலையை எடுத்தார். சுண்ணாம்புக் கரண்டகத்தின் சங்கிலியிலுள்ள வளையத்தைச் சுண்டு விரலில் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து சுண்ணாம்பை எடுத்து வெற்றிலையில் தடவி ஒரே தடவையில் நான்கைந்து வெற்றிலைகளின் நரம்பைக் கிழித்து அப்படியே சுருட்டி வாயிலிட்டு மெல்லத் தொடங்கினார். தலையில் ஒரு சுமை இருப்பதை உணராதவரைப் போல அநாயாசமாக அவர் நின்று கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் மல்யுத்தத்தைப் பார்ப்பதோடு இடையிடையே அவரையும் பார்த்து வியந்தனர்.


அரசரிடத்திலிருந்து வந்த சேவகன் அவரை அணுகினான்; “மகாராஜா உங்களை அழைக்கிறார்; பார்க்கவேண்டுமாம்.” என்றான்.


“மகாராஜாவா? என்னை ஏன் அழைக்கிறார்? ராஜ சமூகத்திற்கு வெறுங்கையோடு போகலாகாதே; நான் ஒன்றும் கொண்டுவரவில்லையே?” என்றார் அந்தப்பிராமணர்.


“நீங்கள் வாருங்கள். அதெல்லாம் வேண்டாம்.” என்று சேவகன் சொன்னான்.


“அப்படியானால் வருகிறேன்; இந்த மூட்டையை ஓரிடத்தில் இறக்கிவிட்டு வருகிறேன்.” என்று கூட்டத்தை விட்டு ஓரிடத்திற்குச் சென்றார். அரண்மனை வேலைக்காரர்கள் அவர் தலையிலிருந்த மூட்டையை இறக்க முயன்றார்கள். ஒருவராலும் முடியவில்லை. அவ்வந்தணர் சிரித்துக்கொண்டே அவர்களை நகரச் சொல்லிவிட்டுச் சிறிதே தலையை அசைத்தார். அந்த மூட்டை வில்லிலிருந்து வீசிய உண்டையைப் போலத் தரையில் பொத்தென்று விழுந்தது.


“சரி, வாருங்கள்; போகலாம்.” என்று கைலாசையர் அரசரிடம் சென்றார்.


அரசர்: நீர் எந்த ஊர்? எதற்காக இங்கே சுமையைச் சுமந்து கொண்டு நிற்கிறீர்?”


கைலாசையர்: நான் இருப்பது மாங்குடி. இந்த நெல்லை இந்த ஊரில் ஒரு கனவானிடம் கொடுப்பதற்காகச் சுமந்து வந்தேன். இங்கே ஏதோ மல் விளையாட்டு நடக்கிறதென்று சொன்னார்கள். கொஞ்சம் பார்த்து விட்டுப் போகலாமென்று நிற்கிறேன்.”


அரசர்: இந்த விளையாட்டில் உமக்கு அவ்வளவு சிரத்தை என்ன?


அந்தணர்: எங்களுக்கும் மல் விளையாட்டுத் தெரியும். யாரோ வடநாட்டான் வந்திருக்கிறானென்று சொன்னார்கள். அவன் எப்படி விளையாடுகிறானென்று பார்க்கலாமென்றுதான் நின்றேன்.


அரசர்: எப்படி இருக்கிறது விளையாட்டு?


அந்தணர்; என்னவோ நடக்கிறது! இந்த மனுஷ்யனை இவ்வளவு பேர்கள் கூடிக்கொண்டு பிரமாதப்படுத்துகிறார்களேயென்று எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது.


அரசர்: அந்த வீரன் பல தேசங்களுக்குச் சென்று பலபேரை ஜெயித்தவனென்பது உமக்குத் தெரியாதோ?


அந்தணர்: இவனா! எங்கள் ஊரிலுள்ள ஒரு பொடிப்பையனுக்கு இவன் ஈடு கொடுக்க மாட்டான். என்னவோ அதிர்ஷ்டம் அடித்திருக்கும்; சில இடங்களில் பலஹீனர்கள் அகப்பட்டிருப்பார்கள்; ஜயித்திருக்கலாம்.


அரசர்: அப்படியானால் இவனை ஜயிப்பது சுலபமென்றா எண்ணுகிறீர்?


அந்தணர்: ஜயிப்பதா? ஒரு நிமிஷத்தில் இவனைக் கியாகியாவென்று கத்தும்படி பண்ணிவிடலாமே.

அரசர்: நீர் மல்யுத்தம் செய்வீரா?


அந்தணர்: பேஷாகச் செய்வேன்.


அரசர்: இவனோடு இப்போது செய்ய முடியுமா?


அந்தணர்: மகாராஜா உத்தரவிட்டால் செய்யத் தயார்.


அரசர்: அதற்கு வேண்டிய உடுப்பு ஒன்றும் இல்லையே; சட்டை, சல்லடம், வஜ்ர முஷ்டி முதலியவை வேண்டாமா?


கைலாசையர் சிரித்தார்; “அவைகளெல்லாம் அநாவசியம். வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு இவனுக்கு முன்னே நின்றால் அடுத்த நிமிஷமே இவன் மண்ணைக் கவ்விக்கொள்வதில் சந்தேகமில்லை.” என்றார்.


அரசர் அவ்வந்தணரோடு பேசிக்கொண்டிருந்தபோதே அவருடைய மனத்துள் ஒரு போராட்டம் நிகழ்ந்தது. வடநாட்டு வீரரை ஜயிப்பவரில்லையே என்று வருந்தியிருந்த அரசருக்குக் கைலாசையருடைய தோற்றமும் பேச்சும் ஒரு புதிய நம்பிக்கையை உண்டாக்கின. தாம் மல்யுத்தம் செய்வதாக அவர் கூறவே அரசருக்கு அந்நம்பிக்கை உறுதி பெற்றது. ஆயினும், ‘இவர் உண்மையில் ஜயிப்பாரா?’ என்ற சந்தேகமும், ‘தோல்வியுற்று ஏதேனும் துன்பத்தை அடைந்தால் சாதுவான ஒரு பிராமணரைக் கஷ்டப் படுத்தின அபவாதமும் வந்தால் என்ன செய்வது!’ என்ற அச்சமும் இடையிடையே அரசருக்கு எழுந்தன.


அரசர்: அவன் நல்ல மாமிச போஜனம் செய்பவன்; பலசாலி; பல நாள் பழக்கமுள்ளவன். அவனை ஜயிப்பதாக நீர் கூறுகின்றீரே; உம்மிடம் என்ன பலம் இருக்கிறது?”


அந்தணர்: நான் சுத்தமான உணவுகளை உட்கொள்ளுபவன். எனக்கும் மல்வித்தையில் அப்பியாசம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலான பலம் ஒன்று என்னிடம் இருக்கிறது.


“என்ன அது?” என்று அரசர் மிகவும் ஆவலோடு கேட்டார்.


“நாங்களெல்லாம் ஈசுவர ஆராதனம் செய்பவர்கள்; ஈசுவரனுக்கு நிவேதனம் செய்த அன்னத்தையே சாப்பிடுகிறவர்கள். எங்களுடைய உடம்புக்கு அந்தப்பிரசாதம் பலத்தை உண்டாக்குகின்றது. பரமேசுவரனது கிருபையாகிய பலம் எங்களுக்கு உண்டு. அதைக் காட்டிலும் வேறு பலம் என்ன வேண்டும்?”


அரசருக்குக் கண்களில் நீர் துளித்தது. மகாராஷ்டிர அரசர்கள் மிக்க பலசாலிகள்; மிகவும் சிறந்த சிவ பக்தர்கள். ஆதலின் பலசாலிகளிடத்திலும் சிவபக்தர்களிடத்திலும் அவர்களுக்கு அபிமானம் இருந்து வந்தது. இருவகை இயல்பும் ஒருங்கே காணப்படுமானால் அவர்களுடைய அன்பு அங்கே பதிவதற்கும் ஐயமுண்டோ?


“வாஸ்தவம். நீங்கள் அந்தப் பலத்தை உடையவர்களானால் ஜயிப்பீர்கள். அடுத்தபடியாக நீங்கள் அவனோடு போர் புரிந்து இந்த ஸமஸ்தானத்தின் புகழை நிலைநாட்டுங்கள்.” என்று அரசர் சொன்னார். அவ்வந்தணர் பால் அவருக்கு அதிக மதிப்பு உண்டாகிவிட்டது.


கைலாசையருக்கும் வடநாட்டு மல்லருக்கும் போராட்டம் நடைபெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் உடனே செய்யப்பட்டன. கைலாசையர் விளையாட்டு வாடி(வளைவு)க்குள் சென்றார். மல்லரோ பலரை வென்றோமென்ற இறுமாப்பினாலும், வருபவர் ஒரு பிராமணரென்ற அசட்டையினாலும் துள்ளிக் குதித்தார். உடுப்போ, ஆயுதமோ ஒன்றும் இல்லாமல் அவர் வருவதைப் பார்த்தபோது மல்லருக்கு அவரிடம் அலக்ஷிய புத்திதான் ஏற்பட்டது. தம் மீசையை முறுக்கிக் கொண்டார்; தோளைத் தட்டினார்; துடையையும் தட்டினார்.


கைலாசையர் அங்கே சென்று தம் வஸ்திரத்தின் முன் பகுதியை அப்படியே எடுத்து முழங்காலுக்கு மேல் நிற்கும்படி பின்பக்கத்தில் இறுகச் செருகிக் கொண்டார். மேல் வஸ்திரம் கையைத் தடுக்காதவாறு மார்பின் இரண்டுபக்கமும் குறுக்கே செல்லும்படி போர்த்து முதுகில் முடிந்து கொண்டார். இந்தக் கோலத்தில் வடநாட்டு வீரர் முன்பாக அமைதியோடு நின்றார்.


மல்லர் ஆரவாரம் செய்து கொண்டு வேகமாக ஓடி வந்து வஜ்ரமுஷ்டியணிந்த தம் வலைக்கையை அவருடைய இடப்பக்கத்தில் குத்தினார். அந்தக் குத்துத் தம்மேல் படுவதற்கு முன் அக்கையை அப்படியே தம் இடக்கையால் கைலாசையர் பற்றிக்கொண்டார். மல்லர் வலப்பக்க விலாவில் இடக்கையைக் கொடுத்து அவரைத் தள்ள முயன்று கையை நீட்டினார். அந்தக் கையைக் கைலாசையர் தம் கட்கத்தில் இறுகச் சிக்க வைத்துக்கொண்டார். இரண்டு கைகளையும் அவர் பற்றிக்கொள்ளவே மல்லர் தம் வலக்கையை இழுத்து மீட்டும் குத்த எண்ணினார். கை வந்தால் தானே மேலே போராடலாம்?
கைகளை அவரால் இழுக்க முடியவில்லை. கைலாசயர் வரவர அதிகமாக இறுக்கலானார். கைகள் நசுக்குண்டன. மல்லருக்கோ கையை எடுக்க முடியாததோடு வரவர வேதனையும் அதிகமாகிவிட்டது; வலி பொறுக்க முடியவில்லை. தம்மால் ஆனவரையும் திமிறிப் பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை.


“இன்றோடு நம்முடைய அகம்பாவம் ஒழிந்து போம்” என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டார்.


அழாக்குறையாக அந்தணருடைய முகத்தைப் பார்த்தார்.


“ஏன், சும்மா நிற்கிறீர்? விளையாடுகிறதுதானே?” என்று கைலாசையர் கேட்டார்.


மல்லர் என்ன சொல்வார்! தாழ்ந்த குரலில், “என்னை விட்டுவிடுங்கள்.” என்றார்.


“ஏன்? விளையாடவில்லையோ?” என்று கைலாசையர் கேட்டார்.


மல்லர்: உங்கள் பெருமை தெரியாமல் அகப்பட்டுக்கொண்டேன். என்னை விட்டுவிடுங்கள்.


அந்தணர்: நீர் தோல்வியுற்றதாக ஒப்புக்கொள்வீரா?


மல்லர்: அதற்கென்ன தடை? அப்படியே ஒப்புக்கொள்வேன்; ஒப்புக்கொண்டு விட்டேன்.; என்னை இப்போது விட்டுவிட்டால் போதும்


அந்தணர்: இப்போது கையை விட்டுவிடுகிறேன். மறுபடியும் விளையாடலாமா?


மல்லர்: முடியவே முடியாது. உங்களோடு விளையாடுவதாக இனிமேல் கனவிலும் நினைக்க மாட்டேன்.


அந்தணர்: மகாராஜாவிடம் உம்முடைய தோல்வியை ஒப்புக்கொள்வீரா?


மல்லர்: அப்படியே ஒப்புக் கொள்ளுகிறேன்.


அவ்வளவு நாட்களாகப் பலரை வென்ற மல்லர் அந்தப் பிராமணரோடு போராடமலே தோற்றுப் போனதைப் பார்த்தபோது ஜனங்கள் பிரமித்து நின்றனர். “என்ன ஆச்சரியம்! இந்தப் பிராமணர் கையை அசைக்கக்கூடவில்லை. அவன் சரணாகதி அடைந்துவிட்டானே!” என்று யாவரும் வியந்தனர்.
அரசருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவு ஏது? இருவரும் அரசரால் அழைக்கப்பட்டனர். அவரிடம் சென்ற மல்லர் தலை கவிழ்ந்து கொண்டே, “உங்கள் ஸமஸ்தானத்திலேதான் நாந்தோலியுற்றேன்.” என்று கூறினார்.


அவருடைய நெஞ்சத்துள் உண்டான துக்கத்தை அரசர் ஒருவாறு உணர்ந்து, “ தோல்வியும் வெற்றியும் மாறி மாறியே வருகின்றன; எல்லாவற்றிற்கும் மேலே ஈசுவர கடாட்சமொன்று இருக்கிறது. அதுதான் இன்று ஜயித்தது. எங்கள் நாட்டின் பெருமை உமது மூலமாக வெளிப்பட்டது.” என்று ஒருவாறு சமாதானம் கூறி அவருக்கு நல்ல சம்மானங்கள் செய்தார்.


தம்முடைய ஸமஸ்தானத்தின் கெளரவத்தைக் காப்பாற்றிய கைலாசையரை வாயாரப் பாராட்டி, “எல்லாம் பரமேசுவரன் செயலென்பதை இன்று உங்களால் நன்றாக அறிந்து கொண்டேன். நீங்கள் இந்த ராஜாங்கத்திற்கு மிகவும் அவசியமானவர்கள். இன்று முதல் ராஜாங்கத்தைச் சேர்ந்தவர்களாகிவிட்டீர்கள்.” என்று மனமுவந்து சொல்லி அரசர் பலவகையான ப்ரிசுகளை வழங்கினர்.


சம்மானங்களைப் பெற்றுக்கொண்ட மல்லரும் கைலாசையரும் அங்கே சில நாள் இருந்தன. அப்பால் அரசரிடம் இருவரும் விடைபெற்றுக்கொண்டபோது மல்லர் அரசரைப் பார்த்து, “ஒரு பிரார்த்தனை “ என்றார்.


“என்ன?” என்று கேட்டார் அரசர்.


“இவ்வளவு பலம் பொருந்திய இந்தப் பிராமண சிரேஷ்டருடைய ஊரையும் உறவினர்களையும் பார்க்கவேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகின்றது. அதை நிறைவேற்றிக்கொள்ளும்படி உத்தரவாகவேண்டும்.” என்று மல்லர் வேண்டிக்கொண்டார்.


“அப்படியே செய்யலாமே” என்று அரசர் உத்தரவிட்டார்.


மல்லரும் அவருடன் வந்த இருபது பேர்களும் கைலாசையருடன் மாங்குடி சென்றனர். போன சமயம் காலைவேளை. கைலாசையர் அவர்கள் வரவை முன்னதாகவே தெரிவித்து அவர்கள் யாவருக்கும் பழையது ஸித்தம் செய்துவைக்கும்படி சொல்லியனுப்பியிருந்தார். அப்படியே வீட்டிலுள்ளவர்கள் முன்னதாகவே நிறைய அன்னம் வடித்து நீரிற் போட்டிருந்தார்கள்.


“உங்களுக்கு இவ்வளவு பலம் எப்படி வந்தது? நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள்?” என்று மல்லர் கேட்டார்.
“நாங்கள் காலையில் சாத்தீர்த்தத்துடன் பழையது சாப்பிடுவோம். இன்று உங்களுக்கும் அது கிடைக்கும்” என்றார் கைலாசையர்.


வந்தவர்களுக்கெல்லாம் இலைகள் போடப்பட்டன. உப்பும், மாங்காய், நாரத்தங்காய், இஞ்சி முதலிய ஊறுகாய்களும் பழங்கறிகளும் பரிமாறப்பட்டன. அப்பால் பழையதைப் பரிமாறினார்கள். பிறகு ஒருவர் ஊறின எள்ளைக் கொணர்ந்து ஒவ்வோர் இலையிலும் ஒரு கைப்பிடி எடுத்து வைத்துச் சென்றார்.
வந்த்வர்கள் சாதத்தைப் பிசைந்து கொண்டார்கள். ஊறுகாயையும் சுவைத்துப் பார்த்தார்கள். அந்த எள்ளை என்ன செய்வது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்து விழித்தார்கள். தலைவராகிய மல்லர் கைலாசையரைப் பார்த்து, “இதை என்ன செய்வது?” என்று கேட்டார்.
“அதுதானே உடம்புக்குப் பலம்? அப்படியே எடுத்துச் சாதத்தில் பிழிந்துகொண்டால் எண்ணெய் வரும். இந்தப் பழையதும் எண்ணெயும் சேர்ந்தால் நரம்புக்கு அதிக வன்மை உண்டாகும்.”


விருந்தினர்கள் எள்ளையெடுத்துப் பிழிந்தார்கள். ஊறின ஜலந்தான் வந்ததேயொழிய எண்ணெய் வரவில்லை; அதர்குரிய பலம் அவர்களிடம் இல்லை. மல்லர் தலைவராலும் பிழியமுடியவில்லை. அதைப் பார்த்துக்கொண்டேயிருந்த கைலாசையர் அங்கே நின்ற ஒரு பையனைப் பார்த்து, “அடே, இந்த எள்ளைப் பிழிந்து வை.” என்று கட்டளயிட்டார். அவன் ஒவ்வோர் இலையிலும் இருந்த எள்ளை எடுத்து அப்படியப்படியே சாதத்தில் பிழிந்து சக்கையைப் போட்டுவிட்டான். அவன் சரசரவென்று வரிசையாக எல்லோருடைய இலையிலும் இருந்த எள்ளை இவ்வாறு பிழிந்து சென்றதைப் பார்த்தபோது அவர்களுக்கு, “ அடேயப்பா! இங்கே எல்லோரும் இரும்பால் உடம்பு படைத்தவர்கள் போலல்லவோ தோற்றுகிறது!” என்று தம்முள் நினைத்துக்கொண்டார்கள்.


அப்பால் யாவரும் உண்டனர்; இரண்டொரு நாள் அங்கே தங்கிய பிறகு கைலாசையரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தனர்.


கைலாசையருடைய குமாரராகிய அண்ணாவையரென்பவர் தம் தந்தையாரைப் போலவே அஞ்சாநெஞ்சமும் தேக பலமும் படைத்தவர். அவர் காலத்தில் ஐயம்பேட்டைக்கு அருகிலுள்ள சாலைகளில் தீவட்டிக் கொள்ளக்காரர்களுடைய தொந்தரவு அதிகமாக இருந்தது. ஜனங்கள் அவர்களுடைய தொல்லையினின்றும் விடுபடுவதற்கு வழி தெரியாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் தஞ்சையிலிருந்த மன்னருக்குக் குடிகள் அந்த விஷயத்தைத் தெரிவித்து முறையிட்டார்கள். அம்மன்னர், “இந்தத் துஷ்டர்களை அடக்குவதற்குத் தக்க பலசாலிகள் நம்மிடம் இல்லை. ஆனாலும் யாரேனும் இவர்களை அடக்கிப் பிடித்தால் தக்க சம்மானம் செய்வோம்.” என்று தெரிவித்தார்.


பொது ஜனங்களுக்குக் கொள்ளைக்காரரால் நேர்ந்துவரும் பெருந்துன்பங்களை உணர்ந்து எவ்வாறேனும் அவர்களைப் பிடித்துவிடவேண்டுமென்று அண்ணாவையர் எண்ணினார். தம்முடைய சிஷ்யர்களும் மிக்க பலசாலிகளுமாகிய ஒரு கூட்டத்தினரோடு சென்று ஒரு நாள் அவர் கொள்ளைக்காரரை எதிர்த்தார். கடும்போர் மூண்டது. கடைசியில் அண்ணாவையர் அவர்கள் அனவரையும் வென்று கைகளைக் கட்டித் தஞ்சை அரசருக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். அவர்கள் அனைவருக்கும் தக்க தண்டனை அளிக்கப் பட்டது.


ஜனங்களுக்கும் ராஜாங்கத்துக்கும் பெரிய பெரிய இடையூறுகளை விளைத்து வந்த அக்கொள்ளைக் கூட்டத்தாரை வென்றதனால் அண்ணாவையருக்கு அரசர் பல சம்மானங்களும் மானியங்களும் வழங்கினார். அன்றியும் ராஜாங்கம்என்னும் பட்டத்தையும் அளித்தார். அதுமுதல் அவ்வந்தணரை ராஜாங்கம் அண்ணாவையரென்று யாவரும் வழங்கலாயினர்.


“தந்தையாருக்கு ஏற்ற குமாரர். இவர் தகப்பனார் மல்லரை வென்று சோழநாட்டின் பெருமையை நிலைநாட்டினார்; இவர் கொள்ளைக்காரரை அடக்கி இத்தேசத்தின் அபாயத்தைப் போக்கினார்.” என்று ஜனங்களெல்லாம் பாராட்டினர்.


ராஜாங்கம் அண்ணாவையருக்குப் பின் அப்பரம்பரையில் உதித்தவர்களும் “ராஜாங்கம்” என்ற பட்டத்தை வகித்து வருகின்றனர்.


(இவ்வரலாறுகள் தஞ்சாவூர் ஜில்லாவில் ஊர்தோறும் வழங்கும். இளமையில் இவற்றைப் பலர் வாயிலாகக் கேட்டதோடு இப்பரம்பரையினரும் சிவபக்திச் செல்வருமாகிய ராஜாங்கம் ஸ்ரீபிரணதார்த்திஹர ஐயர் என்பவர் கூறவும் கேட்டிருக்கிறேன்.)


--Geetha Sambasivam 10:50, 31 ஜூலை 2011 (UTC)



Contributors

Geetha Sambasivam

This page was last modified on 31 July 2011, at 10:50. This page has been accessed 2,119 times.