மரபும் - மரபுடைத்த மரபும் - 5
குழும உரையாடல் தொடர்கிறது:
2011/4/27 மரபு <marabuannaachi@dbkr.com>
நல்லா பேசறீங்க! அதிலே சரக்கு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
ஆற்றில் புரண்டோடும் கூழாங்கல்லில் தெரியாத கலை வடிவமா? நின்றிருக்கும் மலையின் ஒவ்வொரு பாறையிலும் தெரியாத கலை வடிவமா?<<<<<
பெரிய பாயிண்டை எடுத்துப் போட்டுட்டதா நினைக்கிறீங்க!
மரபு என்பது எங்கே வருகிறது என்பதை பார்க்க வேண்டா? நீ கூழாங்கல்லை கூழாங்கல்லாகவே விட்டு விட்டால் யாரும் மரபெங்கே என கேட்கப் போவதில்லை.
கூழாங்கல் கூழாங்கல்லாய் இருக்கும் போது இயற்கையின் மரபிற்குட்பட்டே இருக்கிறது.
நீ கையை வைத்துக் கொண்டு சும்மா இராமல் கல்லை உடைத்து சிற்பம் பண்ண நினைக்கும்போதுதான், சிற்பக்கலை எனும் இலக்கணம் தேவைப்படுகிறது. பாறையை பாறையாகவே விட்டு விட்டால் யார் என்ன சொல்லப் போகிறார்கள்?
நீ கல்லையும் உடைத்து விட்டு, அதற்கு இலக்கணமும் தேவையில்லை என்றால் வீடு கட்ட ஜல்லிதான் மிச்சமாகும். உன்னை யார் இருக்கும் பாறையையெல்லாம் குவாரி போல் உடைக்கச் சொன்னது? அப்படி உடைக்கும்போது அதை கலை என்று வேறு சொல்லிக் கொண்டால் ....கொடுமைடா சாமீ!
அதே போல் எதையாவது எழுதித் தொலைத்து விட்டு அதை படைப்பு என்று சொல்லி விட்டு போகும்போது யாரும் குறுக்கிடப் போவதில்லை.
ஆனால் அதுதான் கவிதை என்று பெயரிடும்போதுதான், இலக்கணம் தேவைப்படுகிறது. ஏற்கனவே மக்கள் ஏதேதோ பிரச்சனையில் மண்டைக் காய்ந்து போய், மனதை ஆனந்தமாக வைத்துக் கொள்ள கவிதைப் படிக்க வந்தால், கவிதை என்ற பெயரில் எதையோ எழுதி இன்னும் அவர்களின் மண்டையை காய்ந்து போக வைத்து விடுகிறீர்கள்.
இலக்கணத்தை வைத்துக் கொண்டாலும் ஒன்றைக் கவிதை என்று மனமே தீர்மானிக்கிறது. உண்மையில் மனதின் தீர்மானத்திற்கு இலக்கணம் என்ற துணை தேவையில்லை.<<<
இதுதான் ...தனக்கேற்றார் போல் ஒரு வரியை தானே சொல்லிக் கொண்டு, வாயில் வந்த விளக்கத்தை சொல்வது என்பது!
ஆணுக்குரிய உடல் அடையாளங்களே ஆணின் உடற்கூறு இலக்கணம். ஆண் புடவைக் கட்டிக் கொண்டாலும் அடிப்படை உடற்கூறு மாறாத வரை ஆண்தான்.
அத்தகைய உடற்கூறு இலக்கணத்தை வைத்துக் கொண்டாலும், ஆண் என்று தீர்மானிப்பது மனம்தான். எனவே உடற்கூறு இலக்கணம் முக்கியமில்லை என்பீரா?
வீரமாக இருக்கும் பெண்களை 'ஆண்பிள்ளை போல் இருக்கிறாள்' என்போம்! அதனால் உடற்கூறு இலக்கணத்தை கண்டுக் கொள்வதில்லை என்று பொருளாகி விடுமா?
ஒருவர் ஆண்பிள்ளைப் போல் இருக்கிறார் என மனம் சொல்லி விட்டதால் அவரை ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பறையை உபயோகிக்கலாம் என்று ஆகி விடுமா?
அதே போல் தான்! அடிப்படை இலக்கணமே ஒன்றை கவிதை என்றும், கட்டுரை என்றும் தீர்மானிக்கிறது. உரைநடையை உரக்கப் பாடலாம். இருப்பினும் உரைநடை உரைநடைதான்.
தொடரும்)
*****
செல்வ குமரன்
தேதி - 04/05/2011