வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 9

From மரபு விக்கி

Jump to: navigation, search

from rajam <rajam@earthlink.net>
toமின்தமிழ் mintamil@googlegroups.com


subjectமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் -- பகுதி 9 (முடிவுப் பகுதி)

எதிர்பாராத வகையில் வேறு வேலகள் குவிந்துவிட்டன. வெளியூரிலிருந்து அமெரிக்கத் தோழி ஒருத்தி சில நாட்கள் என்னுடன் தங்கியிருக்க வரப் போகிறாள். அது தொடர்பாகவும் மற்ற வேலைகளுக்கு நேரம் தேவை.

அதனால் மணிமேகலைக் கதையைக் கொஞ்சம் அவசரமாகவே முடிக்கிறேன். அதனால் யாரும் குறைப்பட்டுக்கொள்ளப்போவதில்லை என்று தெரியும்! ;-)

இதோ இறுதிப் பகுதி ....



மணிமேகலை: மணிமேகலை நோற்றது

மணிபல்லவத்திலிருந்து வஞ்சிக்குச் சென்ற மணிமேகலை கண்ணகி கோயிலுக்குப் போகிறாள். கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் என்று கேட்டுத் தெரிந்துகொள்கிறாள்.

அதன்பின் கண்ணகி மணிமேகலை அந்த ஊரில் பல சமயவாதிகள் கூறும் கொள்கைகளையெல்லாம் கேட்டு அவற்றுள் ஒன்றும் அவளுக்கு உண்மை என்று தோன்றாமையால் பிறகு புத்த சமயத்தைப் பின்பற்றுவாள் என்று சொல்கிறாள்.

அது கேட்டு மணிமேகலை மாற்று வடிவம் கொள்ளும் மந்திரத்தை ஓதி ஒரு முனிவன் போல உருவம் கொண்டு வஞ்சிமா நகரத்தில் எல்லா இடத்திற்கும் போகிறாள். சமயவாதிகள் பலருடைய கொள்கைகளையும் தெரிந்துகொள்ள விரும்பி முதலில் வைதிகவழியைச் சேர்ந்த அளவை வாதியிடம் கேட்டு அவனுடைய கொள்கைகளைத் தெரிந்துகொள்கிறாள்.

அதன்பின் சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ... என்று பல கொள்கைகள் உடையவர்களை அணுகி அவரவர் கோட்பாடுகளைக் கேட்டு அறிகிறாள்.

பிறகு, அறவண அடிகளையும் மாதவி சுதமதி இருவரையும் காண விரும்பி நகரின் உட்புறத்தே போய்ப் புத்த தருமங்களைச் சொல்லும் முனிவர்கள் தங்கியிருக்கும் ஒர் இடத்தில் தவம் செய்துகொண்டிருக்கும் மாசாத்துவானைப் பார்க்கிறாள்.

(மாசாத்துவான் என்பவன் கோவலனின் தந்தை; எனவே அவன் மணிமேகலைக்குப் பாட்டன்.)

மாசாத்துவானிடம் பல செய்திகளைக் கேட்டு அறிகிறாள். பிற செய்திகளோடு மாசாத்துவான் சொல்பவை: காஞ்சிபுரமே மணிமேகலைக்கு அறம் உரைப்பதற்கு ஏற்ற இடம் என்பதனால் அறவண அடிகள், மாதவி, சுதமதி இருவருடனும் அங்கே போயிருக்கிறார், காஞ்சிபுரத்தில் வறுமை நிலவுகிறது, மணிமேகலை அங்கே போய் எல்லா உயிர்களையும் பாதுகாக்கவேண்டும்.

அதன்படி, மணிமேகலை வஞ்சியிலிருந்து காஞ்சி சென்று அங்கே ஒரு சோலையில் தங்குகிறாள். அவளைக் கண்டுகொண்ட ஒருவன் அரசனிடம் போய் அவளுடைய வருகையைத் தெரிவிக்கிறான்.

அரசனும் அங்கே வந்து அவளிடம் காஞ்சியின் வறுமை நிலயைச் சொல்லித் தான் வருந்தியதாகவும் ஒரு தெய்வம் மணிமேகலையின் வரவைப் பற்றிச் சொன்னதாகவும் அவள் வருவதற்காக அந்த ஊரில் மணிபல்லவம் போலவே ஒரு சோலையும் பொய்கையும் அமைக்கும்படிச் சொன்னதாகவும் தெரிவிக்கிறான்.

அப்படி அமைக்கப்பட்ட சோலயையும் பொய்கையையும் மணிமேகலை பார்க்கிறாள். தன் பழம்பிறப்பு உணர்த்திய புத்த பீடிகையையும் மணிமேகலா தெய்வத்தை வழிபடுவதற்கு உரிய கோயிலையும் அங்கே அமைக்கிறாள். பிறகு, ஆருயிர் மருந்தாகிய உணவு உண்ண வரும்படி எல்லா உயிர்களையும் அழைக்கிறாள்.

பல உயிர்களும் அங்கே வந்து உணவருந்தத் தொடங்குகின்றன; மழை பெய்து வளம் பெருகுகிறது.

இதை அறிந்து அறவண அடிகள் மாதவியோடும் சுதமதியோடும் அங்கே வருகிறார். மணிமேகலை அவரை வணங்கித் தனக்கு உண்மைப் பொருளை உரைத்திடும்படி வேண்டுகிறாள்.

அறவண அடிகள் மணிமேகலைக்குப் பிரத்தியக்கம், அனுமானம் இவற்றின் தன்மையும் விளக்கமும் சொல்கிறார்.

அதன்பின் முறைப்படி அறவண அடிகளை மணிமேகலை வணங்கி அவர் அடிகளைச் சரணடைகிறாள். அறவண அடிகளும் அவளுக்குப் புத்த தருமத்தைச் சொல்லி, பேதைமை முதலிய 12 நிதானங்களையும் அவற்றின் தோற்றம் ஒடுக்கம் இவைகளையும் முறைப்படி உபதேசித்து "உன் மனத்து இருள் நீங்குக" என்று மங்கல மொழியினால் ஞானதீபத்தை நன்கு காட்ட ...

தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட மணிமேகலை "பவத்திறம் அறுக" என்று வேண்டி நோற்கிறாள்.



மணிமேகலைக் கதை முற்றும். இதைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளித்த மின் தமிழ்க் குழுமத்திற்கு என் நன்றியும் வணக்கமும்!

அன்புடன்,
ராஜம்

--Ksubashini 09:30, 23 ஜனவரி 2011 (UTC)

Contributors

Ksubashini

This page was last modified on 23 January 2011, at 09:30. This page has been accessed 2,053 times.