வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 8

From மரபு விக்கி

Jump to: navigation, search

rajam <rajam@earthlink.net>
to மின்தமிழ் mintamil@googlegroups.com

 

dateWed, Jan 19, 2011 at 3:38 AM
subjectமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் -- பகுதி 8

போன பகுதியில் (பகுதி 7-ல்) பார்த்தவை: உதயகுமரனின் முடிவு, மணிமேகலையை உதயகுமரனின் தாய் சோழ அரசி சிறையில் வைத்துக் கொடுமை செய்தது, மணிமேகலையின் செயல்களினாலும் சொற்களினாலும் அரசி மனம் திருந்தியது, சித்திராபதி, அறவண அடிகள், மாதவி, சுதமதி, எல்லாரும் மணிமேகலையை மீட்பதற்காக அரசியைப் பார்க்க வந்தது, மணிமேகலை அவர்கள் எல்லாரிடமும் இனிய சொற்களைப் பேசியது, அவள் ஆபுத்திரன் நாட்டுக்குப் போய்விட்டு அதன்பின் வஞ்சி நகரில் போய் அறம் செய்ய விரும்புவதைத் தெரிவித்தது, பிறகு அவள் வான்வழியே சாவக நாட்டு நாகபுரத்தை வந்து அடைந்தது, அங்கே ஒரு மாதவரைப் பார்த்து அந்த ஊரின் பெயரையும் அரசன் பெயரையும் தெரிந்துகொண்டது.


இந்தப் பகுதி மணிமேகலையும் புண்ணியராசனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது பற்றியது.

 

Contents

மணிமேகலை: மணிமேகலையும் புண்ணியராசனும்

இந்தப் பகுதியில் குறிப்பாக ... மணிமேகலை புண்ணியராசனைச் சாவக நாட்டு நாகபுரத்தில் பார்த்தது, அவனை மணிபல்லவத்துக்குப் போகத் தூண்டியது, மணிபல்லவத்துக்கு அவள் முதலில் போய்ப் புண்ணியராசனை எதிர்கொண்டது, அவனுக்குப் புத்த பீடிகையைக் காட்டியது, புத்த பீடிகையைப் பார்த்தவுடன் புண்ணியராசனுக்குத் தான் போன பிறவியில் ஆபுத்திரனாக இருந்தது தெரியவந்தது ... போன்ற செய்திகளையும் பிற ஒரு முக்கியமான செய்தியையும் தெரிந்துகொள்வோம்.


நாகபுரத்தில் மணிமேகலையும் புண்ணியராசனும்

பழைய பிறவியில் ஆபுத்திரனாக இருந்து, தென்மதுரையில் சிந்தாதேவியிடமிருந்து அமுதசுரபியைப் பெற்றுக்கொண்டவன் பிறகு மணிபல்லவத்தில் உயிர்விட்டு, இந்தப் பிறவியில் சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருக்கிறான் என்ற செய்தியைக் காவிரிப்பூம்பட்டினத்தில் அறவண அடிகள் சொல்லித் தெரிந்துகொள்கிறாள் மணிமேகலை. புண்ணியராசனைப் பார்க்கப் போகிறாள்.

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வான்வழியே போன மணிமேகலை ஒரு பொழிலில் இறங்குகிறாள். அங்கே இருக்கிற மாதவரிடம் கேட்டு அந்த ஊரின் பெயரையும் அந்த ஊரை ஆளும் மன்னவன் பெயரையும் தெரிந்துகொள்கிறாள்.

அந்த ஊரின் பெயர் நாகபுரம். அதை ஆளும் அரசன் பெயர் புண்ணியராசன்; அவன் பூமிசந்திரன் என்பவனுக்கு மகன்.

இப்படி அந்தப் பொழிலில் மாதவர் அருகில் மணிமேகலை கேட்டு நிற்கும்போது ...

அதே புண்ணியராசன் தன்னுடைய உரிமைச் சுற்றத்தோடு அந்தப் பொழிலில் நுழைகிறான். தருமசாவகனின் அடிகளை வணங்குகிறான். அறம் முதலியவைகளைப் பற்றி அவர் சொல்லக் கேட்கிறான்.

"அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு..."

[சுருக்கமான பொருள்: அறம், மறம், அநித்தம், நித்தத்தின் வகைகள், துக்கங்களின் வகை (பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு, விரும்பியது பெறாமை, வேண்டாததைப் பெறுதல்), இறந்த உயிர்கள் போகும் இடம், சார்பின் (பேதைமை முதலிய 12 நிதானங்களின்) தோற்றம், சார்பை அறுத்துத் தப்பித்தல், புத்தனின் இயல்பு ... இவை எல்லாம் மனதில் படியும்படிக் கேட்டு... . (12 நிதானங்கள்; 'துவாதச நிதானம்': பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன். இவற்றின் விளக்கம் காப்பியத்தின் கடைசிக் காதையில் இருக்கிறது.)]

பிறகு ... மணிமேகலையைப் பார்க்கிறான்.

"எந்த ஒரு பெண்ணும் இவளுக்கு இணை இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவள் மிகுந்த அழகு உடையவள்; இவளுடைய கண்களின் வீச்சு காமனுடன் இசைந்து போகவில்லை; உள்ளங்கையில் பாத்திரத்தை ஏந்திப் பிச்சை கேட்கும் இவள் யார்?" என்று கேட்கிறான்.

அவனுடன் இருக்கும் கஞ்சுகன் ("சட்டை அணிந்த அரசியல் அலுவலன்") மணிமேகலையைப் பற்றிச் சொல்கிறான்.

"நாவலந்தீவில் நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை, இவள் திறம் எல்லாம்
கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டி-க்
... கலத்தொடும் போகி-க்
காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்,
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன்;
ஆங்கு அவள் இவள்; அவ் அகநகர் நீங்கி
ஈங்கு வந்தனள்"

[சுருக்கமான பொருள்: நாவலந்தீவில் இந்த நங்கையை ஒப்பவர் யாரும் இல்லை. இவளைப் பற்றி முன்பே ஒருநாள் சொல்லியிருக்கிறேன். கிள்ளிவளவனோடு நட்புச் செய்துகொள்வதற்காகக் கப்பலில் ஏறிக் காவிரிப் பூம்பட்டினத்துக்கு நான் போனேன். அப்போது இவளுடைய பிறப்பைப் பற்றி மாதவன் அறவணன் எனக்குச் சொன்னான். அந்தப் பெண்ணே இவள். அந்த ஊரை விட்டு இங்கே வந்திருக்கிறாள்.]

இப்படிக் கஞ்சுகன் சொன்னதும் புண்ணியராசனைப் பார்த்து மணிமேகலையே பேசத் தொடங்குகிறாள்.

"நின்கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது;
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய்!
அப்பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆவயிற்று
இப்பிறப்பு அறிந்திலை, என் செய்தனையோ!"

[சுருக்கமான பொருள்: உன்னுடைய கையில் இருந்த பாத்திரமே என் கைக்கு வந்திருக்கிறது. (உனக்கு இப்போது) செல்வம் இருப்பதால் குழப்பம் உண்டாகி அந்தப் (பழைய) பிறப்பைப் பற்றித் தெரியாமல் இருக்கிறாய். அது பரவாயில்லை. ஒரு பசுவின் வயிற்றில் பிறந்த இந்தப் பிறப்பைப் பற்றிக்கூட நீ தெரிந்துகொள்ளவில்லையே.]

இப்படிச் சொல்லிவிட்டு அவனை மணிபல்லவத்துக்கு வரவேண்டும் என்று பணிக்கிறாள்.

"மணிப்பல்லவம் வலம்கொண்டால் அல்லது
பிணிப்பு உறு பிறவியின் பெற்றியை அறியாய்;
ஆங்கு வருவாய், அரச! நீ"

[சுருக்கமான பொருள்: மணிபல்லவத்தை வலம்வந்தால் ஒழிய, பிணிப்புத் தரும் பிறவிகளின் இயல்பு உனக்குத் தெரியாது. (எனவே) அங்கே வா, அரசனே!]

இப்படிச் சொல்லிவிட்டு, வானில் எழுந்து (மணிபல்லவத்தை நோக்கிப்) போகிறாள் மணிமேகலை.


மணிபல்லவத்தில் மணிமேகலை (இரண்டாம் முறையாக)

நாகபுரத்தை விட்டு வானில் எழுந்துபோன மணிமேகலை கதிரவன் மேற்குத் திசையில் சாய்வதற்குமுன் வானத்திலிருந்து கீழே இறங்குகிறாள். பூக்கள் மணம் கமழச் சூழ்ந்து இருக்கும் கரையின் எல்லாப் பக்கமும் போய் மணிபல்லவத்தை வலம் வருகிறாள்.

மாதவனின் ("பிரம தருமனின்") பீடிகையைப் பார்க்கிறாள்.

அந்தப் பீடிகை மீண்டும் அவளுடைய பழைய பிறவிச் செய்திகளை அவளுக்கு உணர்த்துகிறது. இந்தமுறை, அவள் காயங்கரையில் மற்ற மக்களுடன் பிரமதருமனிடம் அறம் கேட்டதைப் பற்றித் தெரிகிறது. அதோடு, மணிபல்லவத்தில் உள்ள புத்தபீடிகையின் இயல்பும் தெரியவருகிறது.

(தேவர்கோன் [இந்திரன்] மணிபல்லவத்தில் புத்த பீடிகையை அமைத்தான். அந்தப் பீடிகையைக் காவல் செய்துவருமாறு தீவதிலகை என்பவளையும் பணித்தான். இதை முன்பு ஒரு பகுதியில் பார்த்தோம்.)

புத்தன் தோன்றுவதற்கு முன்னமே இந்திரன் ஏன் அந்தப் புத்தபீடிகையை மணிபல்லவத்தில் வைக்கிறான், அது ஏன் மணிமேகலைக்குப் பழைய பிறவியைப் பற்றித் தெரிவிக்கிறது என்பதின் விளக்கம் இப்போது மணிமேகலைக்குக் கிடைக்கிறது.

"முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது
மற்று அப் பீடிகை தன் மிசைப் பொறாஅது;
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது
வானவன் வணங்கான்; மற்று அவ் வானவன்
பெருமகற்கு அமைத்துப் பிறந்தார் பிறவியைத்
தரும பீடிகை சாற்றுக என்றே
அருளினன்"

[சுருக்கமான பொருள்: எல்லாவற்றையும் உணர்ந்த முதல்வன் ஆகிய புத்தனைத் தவிர வேறு யாரையும் அந்தப் பீடிகை தன் மேல் சுமக்காது. அப்படிப் புத்தனைத் தாங்கிக்கொள்ளுவதற்குமுன் இந்திரன் அந்தப் பீடிகையை வணங்கமாட்டான். அதனால் (அதுவரை) ... பிறவி எடுத்திருக்கிறவர்களுக்கு அவர்களுடைய பழம்பிறப்பை அந்தத் தருமபீடிகை உணர்த்தட்டும் என்று வானவன் ("இந்திரன்") விதித்தான்.]

(தரும பீடிகைக்கு அருகில் புத்தன் வரும்போது அது அவனைத் தன் மேல் தாங்கிக்கொள்ள இடம்தரும் போல. அது நடக்கும்வரை அந்தப் பீடிகை தன்னிடம் வந்து தன்னைத் தொழுகிறவர்களுக்கு அவர்களுடைய பிறப்பின் உண்மைகளை மட்டும் உணர்த்தும் போல.)

இப்படி மணிமேகலை, இரண்டாம் முறையாக மணிபல்லவத்தில் தரும பீடிகை முன்னால் நின்று தன் பிறவியின் உண்மைகளைப் பற்றி உணர்ந்துகொண்டிருக்கும்போது...


நாகபுரத்தில் அரசன் புண்ணியராசன்

சாவக நாட்டு நாகபுரத்தில், மணிமேகலையை ஒரு சோலையில் பார்த்த பிறகு புண்ணியராசன் ஊருக்குள்ளே போகிறான்.

அமரசுந்தரி என்னும் தாயிடம் தன் பிறப்பைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்கிறான்.

அவனுக்கு ஒரு முனிவன் ("மண்முக முனிவன்") தந்தை, பசு தாய் என்று தெரிகிறது. அவன் முனிவனுடைய அருளால் பசுவின் பொன் முட்டையில் உருவானான். குழந்தையில்லாத அரசன் பூமிசந்திரன் அவனை எடுத்து வளர்த்தான்.

இதைத் தெரிந்துகொண்டதும், புண்ணியராசனுக்கு மிகவும் வருத்தம் உண்டாகிறது. போன பிறவியில் தன் தாய் செய்தது, இந்தப் பிறவியில் தான் ஒரு பசு வயிற்றில் பிறந்தது இதையெல்லாம் பற்றி நினைக்கிறான்.

உடனே அவனுக்கு எதிலும் பற்றில்லாமல் போகிறது. "முற்றும் துறத்தல் நல்லது என்று தருமசாவகன் என் செவியில் இட்ட வித்து இப்போது மணிமேகலை காரணமாக நன்றாய் விளைந்தது" என்று அறிவிக்கிறான்.

இவன் மனம் மாறிவிட்டான் என்று மந்திரி சனமித்திரனுக்குத் தெரிகிறது. சனமித்திரன் புண்ணியராசனைத் தொழுது, நாட்டு நிலைமையை எடுத்துச் சொல்கிறான். பூமிசந்திரன் புண்ணியராசனை மகனாகப் பெறுவதற்குமுன் 12 ஆண்டுகள் அந்த நாட்டில் மக்கள் இறந்துபோகும்படியாக மழையில்லாமல் போனது. பெற்ற குழந்தைக்குக் கூட இரக்கம் காட்டாமல் தாய் தனியே சாப்பிடும் நிலை ஏற்பட்டது. காய்ந்துபோன வெம்மையான கோடைக்காலத்தில் மழைமேகம் வந்ததுபோல் புண்ணியராசன் வந்தான். அதற்குப் பிறகு மழை பொய்க்கவேயில்லை; மண் வளமும் குறையவேயில்லை. யாருக்கும் பசிப் பிணி இல்லை.

இந்தப் பழைய நிலையைப் பற்றிச் சொன்ன அமைச்சன் இப்போது அரசன் (புண்ணியராசன்) துறந்தால் என்ன ஆகும் என்றும் சுட்டிச் சொல்கிறான்.

அரசன் துறந்தால் ... அவனுடைய நாடு அலறும். தாய் இல்லாத குழந்தை போலக் கூச்சலிடும். அந்தத் துயர நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதைப் புறக்கணித்துவிட்டு அவன் (துறவறம் மேற்கொண்டு, தனக்காக) உயர்நிலை உலகம் விரும்பினான் என்றால் ... அது மன்னனாகிய அவன் தன் நாட்டு மக்களின் உயிர் போய்க்கொண்டிருக்கும் நிலையிலும் தான் மட்டும் தனக்கு உயர்நிலை உலகமாகிய பெறுதியை ("இலாபத்தை") விரும்புகிறான் என்பதுபோலாகும்.

"அது தன் உயிருக்கு இரக்கப்படாமல் மக்களுடைய உயிர்களைப் பாதுகாக்கும் மன்னவனின் அறம் இல்லை. தவறாக நினைக்கிறாய்" என்று அறிவுறுத்துகிறான் அமைச்சன்.

புண்ணியராசனுக்கோ மணிபல்லவத்தை வலம்வந்து வணங்க வேண்டும் என்ற தணியாத வேட்கை. எனவே அந்த வேட்கை தனக்கு இருப்பதைத் தெரிவிக்கிறான்.

தொடர்ந்து ஒரு முடிவு செய்கிறான். அமைச்சனிடம் நாட்டை ஒரு மாதம் பார்த்துக்கொள்ளும்படிச் சொல்கிறான்.

"அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும்
ஒருமதி எல்லை காத்தல் நின் கடன்"

[சுருக்கமான பொருள்: அரசையும் அரச உரிமைகளையும் நகரில் உள்ளவர்களையும் ஒரு திங்கள் பாதுகாப்பது உன் கடமை.]

இப்படிக் கட்டளையிட்டுவிட்டு, கலம் செய்கிற கம்மியர்களைக் கூப்பிட்டு, கடற்கரைக்குச் சென்று கப்பலில் ஏறி, இடையில் எங்கும் தங்காமல் மணிபல்லவத்துக்கு வருகிறான்.


மணிபல்லவத்தில் புண்ணியராசனும் மணிமேகலையும்

அரசனுடைய கப்பலைப் பார்த்த மணிமேகலைக்கு உள்ளம் நிறைய மகிழ்ச்சி. அவனோடு அந்தத் தீவகத்தை வலம் வந்து அவனுக்குத் தருமபீடிகையைக் காட்டுகிறாள்.

மன்னவனும் அந்தப் பீடிகையை வலம்வந்து போற்றுகிறான். தன்னைக் கையில் எடுத்தவர் முகத்தைத் தெளிவாகக் காட்டும் கண்ணாடி போல, அந்தப் பீடிகை அவனுடைய பழம்பிறப்பை அவனுக்குக் காட்டுகிறது.

தென்தமிழ் மதுரையில் தனக்கு அமுதசுரபி கொடுத்த பாவையை வாழ்த்துகிறான்.

"என் பிறப்பு அறிந்தேன்; என் இடர் தீர்ந்தேன்;
தென் தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்!
மாரி நடுநாள் வயிறுகாய் பசியால்
ஆரிருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு
இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு
அருந்தூண் காணாது அழுங்குவேன் கையில்
நாடு வறம் கூரினும் இவ்வோடு வறம் கூராது
ஏடா, அழியல்! எழுந்து இது கொள்க! என
அமுதசுரபி அங்கையில் தந்து என்
பவம் அறுத்த வானோர் பாவாய்!
உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும்
அணிதிகழ் அவிர் ஒளி மடந்தை நின்னடி!
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும்
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்தடி
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது
மறந்து வாழேன் மடந்தை!"

இப்படி வாழ்த்திய பின் மணிமேகலையுடன் எழுந்து தென்மேற்காகப் போய், அலைகள் உலாவும் கோமுகி என்ற பொய்கையின் கரையில் தூய மலர்கள் நிறைந்த ஒரு புன்னையின் நிழலில் இருக்கிறான்.

அங்கேயுள்ள காவல் தெய்வம் (தீவதிலகை) ஆபுத்திரனும் மணிமேகலையும் அங்கே வந்திருப்பதை அறிந்துகொண்டு வருகிறாள்.

ஆபுத்திரனிடம் அவனுடைய போன பிறவிக் கதையைச் சொல்கிறாள்.

ஆபுத்திரனும் அவனோடு வேறு பலரும் (சாவகம் போகும் வழியில்) அங்கே (மணிபல்லவத்துக்கு) வந்தனர். அவன் அங்கேயே தங்கிவிட்டதை அறியாமல் அவனை விட்டுவிட்டு மற்றவர்கள் மேற்கொண்டு பயணித்துவிட்டனர். பிறகு அவர்கள் அவனைத் தேடிவந்தபோது அவன் உயிரோடு இல்லை. அவன் இறந்துவிட்டதைப் பார்த்த 9 செட்டிகளும் அங்கேயே தாங்களும் இருந்து அவனைப் போலவே தங்கள் உயிரையும் விட்டனர். அந்தச் செட்டிகளை அண்டிப் பிழைத்துவந்த மற்றவர்களும் ஏக்கத்தினால் தங்கள் உயிரை விட்டனர். அப்படி உயிர்விட்ட அவர்கள் எல்லாருடைய எலும்புகளும் இப்போது அங்கே கிடக்கின்றன. பக்கத்தில் உள்ள புன்னைமரத்தின் அடியில் உயர்ந்த மணல் மூடியிருப்பது ஆபுத்திரனின் எலும்பு உடம்பு.

"அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு
பெருந்துயர் தீர்த்த அப் பெரியோய் வந்தனை;
அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர்
பின்னாள் வந்து நின் பெற்றிமை நோக்கி
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர்
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்!
ஆங்கு அவர் இட உணடு அவருடன் வந்தோர்
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவைகாண்!
ஊர் திரை தொகுத்த உயர்மணல் புதைப்ப
வாய்மலர்ப் புன்னை அணி நிழல் கீழால்
அன்புடை ஆருயிர் அரசற்கு அருளிய
என்புடை யாக்கை இருந்தது காணாய்!"


"நின் உயிர் கொன்றாய்; நின் உயிர்க்கு இரங்கி-ப்
பின்னாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்;
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை"

[சுருக்கமான பொருள்: உன் உயிரைக் கொன்றுவிட்டாய். பிற்காலத்தில் உன் உயிருக்காக இரக்கப்பட்டு (உன்னைத் தேடி) வந்த பிறருடைய உயிர்களையும் கொன்றுவிட்டாய். கொலைகாரன் அல்லவா கொற்றவன் ஆனாய்!]

(என்ன ஆழமான பொருள்! தன் உயிரைத் தானே போக்கிக்கொள்வதும் கொலைக்கு ஒப்பாகும் என்ற கருத்தல்லவா வெளிவருகிறது!)

இப்படிப் புண்ணியராசனுக்கு ஆபுத்திரனின் முடிவைப் பற்றிச் சொன்ன தீவதிலகை மணிமேகலையிடம் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றைத் தெரிவிக்கிறாள். அதாவது ... காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டுவிட்டது. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கிறாள்.

காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல்கொண்டது மணிமேகலா தெய்வத்தின் சாபத்தினால். சோழ மன்னன் இந்திரவிழா எடுக்கத் தவறிவிட்டான். அது மணிமேகலாதெய்வத்துக்குப் பொறுக்கவில்லை. பட்டினத்தைக் கடல்கொள்ளும்படிச் சாபமிட்டுவிட்டாள். சோழ மன்னன் ஏன் இந்திரவிழா எடுக்கத் தவறினான்?

அந்தக் காரணத்தையும் தீவதிலகை சொல்கிறாள்.

நாக நாட்டு மன்னன் மகள் பீலிவளை என்பவள் சோழ அரசனுடன் கொண்ட உறவினால் ஒரு குழந்தை பெற்றாள். தான் பெற்ற கைக்குழந்தையோடு இங்கே (மணிபல்லவத்துக்கு) வந்தாள். இந்தத் தீவை வலம் செய்து, தேவர்கோன் வைத்த பீடிகையை அவள் வலம் வந்து தொழுதபோது அங்கே கம்பளச்செட்டியின் கலம் வந்து தங்கியது. பீலிவளை அவனிடம் போய் அவனைப் பற்றித் தெரிந்துகொண்டபின், அவனிடம் "கொற்றவன் மகன் இவன்; கொள்க" என்று சொல்லித் தன் குழந்தையைக் கொடுத்தாள். அவனும் பெரு மகிழ்ச்சியோடு குழந்தையை எடுத்துக்கொண்டு கப்பல் ஏறிப் போனான். ஆனால் ... அன்றைக்கு இரவிலேயே கரைப்பக்கத்திலேயே கலம் உடைந்துபோனது. உடைந்த கலத்திலிருந்து மீண்டவர்கள் குழந்தையைக் கடலிலிருந்து எடுக்கமுடியவில்லை. பீலிவளை வேண்டியபடி மன்னனிடம் குழந்தையைச் சேர்ப்பிக்க முடியவில்லை. குழந்தையைக் கடலில் இழந்ததுபற்றி மன்னன் வடிவேற்கிள்ளிக்குச் சொன்னார்கள்.

மகனுக்கு நடந்ததை வடிவேற்கிள்ளியினால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. தன்னுடைய மணியை இழந்த நாகம் போலத் தவித்து, கானலிலும், கரையிலும், கடலிலும் மகனைத் தேடி அலைந்தான். அந்த அலைச்சலில் அவனுடைய நகரம் இந்திரனுக்கு விழா எடுக்கத் தவறியது. மணிமேகலா தெய்வத்துக்கு அது பொறுக்கவில்லை. அழகிய நகரத்தைக் கடல் கொண்டுபோகட்டும் என்று சாபம் இட்டாள். அந்தச் சாபம் பலித்தது.

மாநகரத்தைக் கடல் கொள்ள, அரசன் தனி ஒருவனாக எங்கோ போய்விட்டான். ஆனால் மாதவர் அறவண அடிகளும் மாதவியும் சுதமதியும் துன்பமில்லாமல் வஞ்சி நகரத்துக்குப் போய்விட்டார்கள்.

தீவதிலகை இவ்வாறு காவிரிப்பூம்பட்டினம் அழிந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தபின் ... அறவண அடிகளிடம் மேலும் சில செய்திகளை மணிமேகலை கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கேயிருந்து போய்விடுகிறாள்.


புண்ணியராசனும் ஆபுத்திரன் உடம்பும்
 

தீவதிலகை போன பிறகு புண்ணியராசன் மணிமேகலையுடன் சேர்ந்து அங்கே குவிந்திருக்கிற தூய மணலை ஆழமாகத் தோண்டுகிறான்.

மணலிலிருந்து கிடைப்பது என்ன?

"ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி-த்
தான் பிணி அவிழாத் தகைமையதாகி
வெண்சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த
பண்புகொள் யாக்கை"

[சுருக்கமான பொருள்: தசையின் பிணிப்பு நீங்கி, உடலின் எலும்புகள் ஒடுங்கி, கட்டு அவிழாத இயல்பை உடையதாய், வெண்மையான சுண்ணாம்பு பூசியதுபோல் அமர்ந்த நிலையில் காணும் நல்ல தன்மையை உடைய உடம்பு.]

அந்த யாக்கையின் வடிவத்தைப் பார்க்கிறான் புண்ணியராசன். அது போன பிறவியில் இறந்துபட்ட தன் பழைய உடம்பு! பார்த்தவுடன் மயங்குகிறான்.

மணிமேகலை அவனுடைய மயக்கம் தெளியவேண்டி அவனுக்கு அறம் சொல்கிறாள்.

"என் உற்றனையோ ...
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது
மன்னா நின்றன் மறுபிறப்பு உணர்த்தி
அந்தரத் தீவினும் அகன் பெரும் தீவினும்
நின் பெயர் நிறுத்த ..."

[சுருக்கமான பொருள்: என்ன நிலையை அடைந்தாய்! நான் உன் நாட்டுக்கு வந்து உன்னை இங்கே அழைத்து வந்ததன் காரணம் இது: உன் மறுபிறப்பை உனக்குத் தெரிவித்து, அந்தரத் தீவிலும் ("2000 சிறு தீவுகளிலும்") அகன்ற பெரிய தீவிலும் ("4 பெரிய தீவுகளிலும்") உன் பெயரை நிலை நாட்டவே.]

"... நீள் நிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு?
அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள் மன்னுயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்"

[சுருக்கமான பொருள்: பரந்த நிலத்தை ஆளுகின்ற அரசர்கள் தாங்கள் அருளறத்தை மேற்கொண்டால் ... தீர்ப்பதற்கு என்று வேறு குற்றங்கள் இருக்குமோ? அறம் என்பது என்ன என்று கேட்டால், மறவாமல் இதைக் கேள். உலக உயிர்களுக்கு உணவு, உடை, உறையுள் இவை தவிரக் கண்கண்டது வேறு எதுவும் இல்லை.]

மணிமேகலை இதைச் சொல்ல, புண்ணியராசனுக்குத் தெளிவு பிறக்கிறது.

தன் நாடாயினும் சரி, பிறர் நாடாயினும் சரி, எங்கும் நல்லறம் செய்வேன் என்று உறுதி சொல்கிறான்.

ஆனால் ... அத்துடன் விடவில்லை; அவளோடு தானும் போகவேண்டுமென்று விரும்புகிறான்!

"என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான்"

[சுருக்கமான பொருள்: என் பிறப்பின் தன்மையை நீ எனக்கு உணர்த்தினாய்; அதனால் என்னைப் படைத்தவள் நீயே. உன்னிடத்திலிருந்து பிரியும் வல்லமை எனக்கு இல்லை.]

மணிமேகலை அதற்கு இசையவில்லை.

"புன்கண் கொள்ளல் நீ; போந்ததற்கு இரங்கி நின்
மன்பெரு நன்னாடு வாய் எடுத்து அழைக்கும்;
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்"

[சுருக்கமான பொருள்: மனவருத்தம் அடையாதே! நீ இங்கே வந்ததால் உன் நாடு வருத்தம் அடைந்து வாய்விட்டு உன்னைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கும்; கப்பலில் ஏறிப் போ. நான் வஞ்சிக்குப் போகிறேன்.]

இப்படிச் சொல்லிவிட்டு வானில் எழுந்து போகிறாள்.



மணிபல்லவத்திலிருந்து நேரே வஞ்சிக்குச் செல்லும் மணிமேகலை அங்கே கண்ணகி கோயிலுக்குப் போனது, கண்ணகியுடன் பேசியது (!) போன்ற பல சுவையான செய்திகளையும் அவள் இறுதியில் "பவத்திறம் அறுக" என நோற்றதையும் அடுத்த பகுதியில் பார்த்துவிட்டால் ... இந்த மணிமேகலைக் கதைத் தொடர் ஒருவழியாக நிறைவுபெறும்!! :-)

போன பகுதியில் எழுந்த ஒரு கேள்வி "12 வகை நிதானங்கள் எவை?" அதற்குச் சுருக்கமான விடை இந்தப் பகுதியில் இருக்கிறது.


இந்தப் பகுதியில் சில இலக்கிய வரிகளுக்கு எப்பவும்போல் "சுருக்கமான பொருள்" கொடுக்கவில்லை. தேவையானால் பிறகு சொல்கிறேன்.

அடுத்த பகுதி -- கடைசிப் பகுதி -- சமயக் கருத்துக்கள் செறிந்த பகுதியாக அமையலாம். என்னால் முடிந்தவரை எளிமையாக்கிச் சொல்ல முயல்வேன்! :-)

அன்புடன்,
ராஜம்

--Ksubashini 09:27, 23 ஜனவரி 2011 (UTC)

 

Contributors

Ksubashini

This page was last modified on 23 January 2011, at 09:28. This page has been accessed 2,302 times.