பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Ganesha Nurpur miniature circa 1810 Dubost p64 Pillaiyar.jpg
பிள்ளையார் எப்படித் தோன்றினார்ன்னு இப்போப் பார்ப்போமா? ரொம்ப நாளைக்கு முன்னே, அதாவது ரிஷிகள், முனிவர்கள்னு எல்லாருமா நிறைய இருந்தப்போ மரகதமுனிவர்னு ஒரு முனிவர் இருந்தராம். அவர் தவம் செய்வதற்குப் போன இடத்தில் விபுதைன்னு ஒரு அசுரப்
பெண்மணி அவரைக் கல்யாணம் செய்துக்க ஆசைப் பட முனிவர் மறுத்தும்,பிடிவாதமாய்க் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, என்னதான் முனிவரோட புத்திரனா இருந்தாலும், அவங்க அம்மாவோட வளர்ப்பினாலே அவன் ஒரு அசுரனாத் தான் வளர்ந்து வந்தான். அவன்பேர் கஜமுகாசுரன்.


இந்த அசுரன் தேவர்களுக்குப் பலவகையில் தொந்திரவு கொடுத்து வந்தான். (பொதுவாகவே
நமக்குள்ளேயே ஒரு மனசு நல்லது நினைக்கும். ஒரு மனசு பொல்லாத விஷயத்தை யோசிக்கும். அதோடு  அசுரர்கள் எவருக்கும் அடங்காதவர்கள். ஒரு வரம் வேண்டுமென்றால், தவங்கள், பல செய்து வாங்கினாலும் அதை உலக நன்மைக்கெனப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை.எதுவா இருந்தாலும் அவர்களின் நன்மைக்கென மட்டுமே பயன்படுத்துவார்கள் .வரம் வாங்கிய பின்னர் எந்தக் கடவுள்களையும் நினைப்பதும் இல்லை.  அதன் பின்னர் அனைவரும் துச்சம். அவர்களுக்கென வாய்ந்த குருவும் அப்படியே, நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும்படி சரியானபடி வழிகாட்ட
மாட்டார். . இது கூட ஏன் ஏற்பட்டதுன்னு கேட்டா எல்லாருக்குமே வாழ்வோ, தாழ்வோ எல்லாமே ஏற்படும். கஷ்டமோ சுகமோ எது வேணாலும் கிடைக்கும். ஆனால் இவை அனைத்துமே நமக்குப் படிப்பினைக்காகவே,  எல்லாத்தையும் சமாளிச்சு வரணும்னு நமக்கு எல்லாம் மறைமுகமாத் தெரிவிக்கிறதுக்காக நடக்கிறது.


அப்படித்தான் இந்த கஜமுகாசுரனும் இருந்தான். அவனாலே தேவர்களுக்கு ரொம்பவே தொல்லை ஏற்பட்டது. அவன் ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் செய்து பலவிதமான வரங்களை வாங்கி வந்தான். அதிலே ஒண்ணுதான் தன்னைக் கொல்பவன் மனிதனாயும் இருக்கக் கூடாது.மிருகமாயும் இருக்கக் கூடாது. ஒருவர் உருவாக்கிய ஆயுதத்தில் தோன்றக் கூடாது. ஒருவர் உருவாக்கின ஆயுதத்தில் என்னைக் கொல்லக் கூடாது என்று ஏகப்பட்ட வரங்கள். சாமிதான் நமக்கு வரம் கொடுத்து விட்டதே, இனிமேல் நம்மை அடக்குவார் இல்லை என மகிழ்ந்தான் அவன்.  சாமி வரம் கொடுத்தாலும் அதை நாம ஒழுங்கா பயன்படுத்துகிறோமா என அவர் பார்க்க மாட்டாரா என்ன? அதை அந்த அசுரன் மறந்தே போனான்.


அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குத் தேவர்களை அடிக்கிறதும், கொல்றதுமா இருக்கான். தேவர்கள் எல்லாம் என்ன செய்யறதுன்னு ரொம்பவே யோசித்தனர்.   தேவர்கள் நல்லா வாழ்ந்தாத் தான் மழை பொழியும்,தண்ணீர், காற்று, உணவு உற்பத்தி எல்லாம்  ஏற்படும். அவங்களோட வேலைக்கு இடையூறு வந்தால் யாருமே நிம்மதியா வாழ முடியாது. ஆகையால் தேவர்கள் எல்லாரும் மஹாவிஷ்ணுவிடமும்,பிரம்மாவிடமும் போய் முறையிட்டாங்க. பிரம்மாவும், விஷ்ணுவும் எல்லாத்தேவர்கள் கூடவும் திருக்கைலை போய்ப் பரமசிவனைத் தரிசனம் செய்தார்கள்.பரமசிவனிடம் தங்களோட கோரிக்கையைத்   தெரிவித்தார்கள். தேவர்கள் செய்யும் காரியங்கள் எந்த விதமான தடங்கலும் இல்லாமல் நடக்கறதுக்காக வேண்டி ஒரு கடவுளை எங்களுக்கு உருவாக்கித் தரவும்னு கேட்டாங்க. விக்கினங்களைப் போக்க வல்ல விக்கின ராஜன் வேண்டும் என தேவர்கள் விடுத்த கோரிக்கைக்கு சிவன்செவி சாய்த்தார்.


திருக்கைலாயமலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபம் இருந்தது. அதில் பார்வதியும், பரமேஸ்வரனும் போய் அங்கே எழுந்தருளினார்கள். "பள பள"வென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஒளிவடிவங்கள் அந்த ஏழு கோடிமந்திரங்களுக்கு நடுவில் பிரகாசமிட்டுத் தெரிந்தது. அவை இரண்டும் "சமஷ்டிப்பிரணவம்" "வியஷ்டிப் பிரணவம்" என்றபெயர்களில் உள்ள இரண்டு பிரணவங்கள். அந்த இரண்டு பிரணவங்களையும் பரமசிவனும், பார்வதியும் கருணையுடன் நோக்க அவை இரண்டும் இணைந்து அந்தப் பிரணவங்களில் இருந்து பிரணவ சொரூபமான பிள்ளையார் யானைமுகத்துடன் தோன்றினார். பிள்ளையாரின் உருவம் பற்றிய விளக்கம் அடுத்தாப்போல் பார்ப்போமா?


விநாயகருக்கு ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், உள்ளன. ஆறு எழுத்துக்கள் உடையவர். அவரை வழிபட்டால், ஏழு பிறவிகளும் நீங்கி, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று , சம்"பத்து"டன் வாழ்வார்கள். அவருடைய திருமேனியோ என்றால், கீழே பூத உடல், இடைக்கு மேல் கழுத்துவரை, தேவ உடல், தலை யானை என்ற மிருகத் தலை, ஒரு கொம்பு, இந்த ஒற்றைக் கொம்பு ஆண்தன்மையையும், கொம்பில்லாத மற்றொரு பகுதி பெண் தன்மையையும் குறிக்கிறது.


யானைத் தலை என்பது அஃறிணையைக் குறிக்கும். தேவ உடலோ என்றால் உயர்திணை. இவ்வாறு, அவர் அஃறிணையும் தானே, உயர் திணையும் தானே என்கிறார். தேவராய், விலங்காய், பூதமாய், பெண்ணாய், ஆணாய் எல்லாமாய் விளங்குபவர் விநாயகர். "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் சொரூபம் ஆவார் விநாயகர். அவருடைய காதுகளும், வளைந்த துதிக்கையும், அகன்ற தலையும் இந்த "ஓம்" என்ற எழுத்தின் வடிவைக் காட்டுகிறது. இரு திருவடிகளும், ஞான சக்தியையும், கிரியா சக்தியையும் குறிக்கும். இவருடைய பேழை வயிற்றில் அகில அண்டமும் அடங்கும். துதிக்கையைச் சேர்த்த ஐந்து கரங்களும் ஐந்து திருத் தொழில்களைச் செய்யும்.


எழுத்தாணி பிடித்த கரம் படைப்புத் தொழிலையும், மோதகம் ஏந்திய கை காத்தல் தொழிலையும், அங்குசம் கொண்ட கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருக்கும் கரம் மறைத்தல் தொழிலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கையானது அருள்தலையும் குறிக்கிறது. மூன்று கண்கள் முறையே சூரியன், சந்திரன், அக்னியைக் குறிக்கும். இவரின் உருவ அமைப்பில அனைத்துத் தெய்வங்களும் இணைந்திருக்கிறார்கள். நாடி பிரம்ம ரூபம், முகம் விஷ்ணு ரூபம், கண் சிவ ரூபம், இடப்பாகம் சக்தி ரூபம், வலப்பாகம் சூரிய ரூபம் ஆகும்.


யாராக இருந்தாலும் ஒரு நல்ல காரியம் துவங்கும்போது விநாயகரை வழிபட்டு ஆரம்பித்தால் அந்தக் காரியத்துக்கு இடையூறு வராது என்பது ஆன்றோர் வாக்கு. விநாயகர் என்றால் தனக்கு நிகரில்லாதவர் என்றும் பொருள் கொள்ளலாம். "வி"என்றால் தனக்கு நிகர் எவருமில்லாதவர் என்றும், "நாயகர்" என்பது தலைவனையும் குறிக்கும்.

--Geetha Sambasivam 04:50, 24 ஆகஸ்ட் 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 ஆகஸ்ட் 2011, 08:08 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,240 முறைகள் அணுகப்பட்டது.