பாசுர மடல் 009 : சாதிகள் இல்லையடி பாப்பா.

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சாதிகள் இல்லையடி பாப்பா.



 திவ்யப்பிரபந்தங்கள் ஆழ்வார்களின் ஆழ்மனக் காதலை வெளியிடும் ஊடகங்கள் என்று கண்டோம். அவை பண்டைய அக வழி மரபு என்றும் கண்டோம். சங்க கால இலக்கியங்களை நமக்கு அறிமுகப்படுத்துபவர்கள் பாணர்கள் ஆவர். வைணவ இலக்கியங்களிலும் பாணர் ஒருவர் வருகிறார். அவர் பெயர் திருப்பாணாழ்வார் என்பதாகும். சங்ககாலத்தில் மதிப்பிற்குரியவாராக வரும் பாணர்கள் ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் இழிசனம் ஆகிவிடுகின்றனர். சாதி என்பது ஒரு சமூக அடையாளம். தன்னை யார் என்று உண்மையாய் உணராத வரைக்கும் தனி மனிதனுக்கு சாதியக் குறியீடு தேவைப்படுகிறது. ஆழ்வார்கள் தம் ஆழ்நிலை அனுபூதி நிலைகளில் மானிடத்தின் உன்னத பரிமாணத்தை கண்டவர்கள். அவர்களுக்கு எந்த சாதீய அடையாளமும் தேவையில்லைதான். எனினும் சாதீய வழிமுறைகளில் ஊறிப்போன பாழ்பட்ட சமுதாயம் அத்தகைய உன்னத மனிதர்களையும் சாதீயக் கண்ணாடி போட்டுத்தான் பார்த்தது, பார்க்கிறது. திருப்பாணாழ்வார் வாழ்விலும் இது நடந்தது.



ஸ்ரீரங்கம் அருகிலுள்ள உறையூரைச் சார்ந்தவர் திருப்பாணர். சமூக உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட குலத்தில் பிறந்த அவர் திருவரங்கனை மட்டும் துணையாக் கொண்டு வாழ்ந்து வந்தார். கோயிலுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டு மெய்மறந்த நிலையில் வழி பட்டுக் கொண்டிருக்கும் போது லோக சாரங்கர் என்ற அந்தணர் இவரைக் காண நேரிடுகிறது. தம் வழியில் தடையாக நிற்கும் "தீண்டத்தகாதவரை" விலக்க அவர் மீது கல் எறிகிறார். நெற்றியில் கல் பட்டு இரத்தம் வழிகிறது.



இதன்பின் நடந்த சம்பவங்களை இருவேறு முறைகளில் சொல்லுகிறார்கள். சரித்திரத்தை நம் முன்னோர்கள் என்றும் நேரிடையாகச் சொன்னதில்லை. அப்பழக்கம் முகம்மதிய, ஆங்கில ஆட்சிகளுக்குப் பிறகுதான் வருகிறது. சரித்திரம், ஐதீகம் (Myth), புராணம் இவை அதிக வித்தியாசம் இல்லாமல்தான் தமிழக மண்ணில் உலாவுகின்றன. இதை ஆழ்மன வெளியீட்டின் குறியீடாகத்தான் கொள்ள வேண்டியுள்ளது. அரசாள்பவன் சரித்திரம் செய்வதற்கும், அடிமட்டத்து பாமரன் சரித்திரம் சொல்லுவதற்கும் இடையிலுள்ள பாரிய வித்தியாசமிது! (உம். கி.ராஜநாராயணன் - கோபல்லகிராமம்; Gabriel Garcia Marquez - One hundred years of solitude).


1. அந்தணர்கள் கோயிலுக்கு திரும்புகின்றனர். அரங்கனை நீராட்டும் போது அரங்கனின் நெற்றியில் இரத்தம் வழிகிறது. ஏதோ தவறு நடந்துவிட்டது என உணரும் தறுவாயில் அசரீரி மூலமாக அரங்கன் திருப்பாணாழ்வாரை அந்தணர் சுமந்து வர கோயில் உள் சந்நிதிக்கு வரச் சொல்லுகிறார்.


2. லோக சாரங்கர் வீடு சென்றதும் இரவில் கனவில் வந்த அரங்கன் திருப்பாணாழ்வாரை சுமந்து கொண்டு மறுநாள் கோயிலுக்கு வரச்சொல்லுகிறார். இது ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்சியாகும். ஏனெனில், ஆழ்வார்கள் ஸ்ரீரங்கத்தை பாசறையாக் கொண்டு ஒரு பெரிய சமூகப்புரட்சிக்கு வேறிட்டனர். ஒன்று, "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிரை" என்ற முழக்கம். இரண்டாவது, தமிழ் என்பது "நீச பாஷை" அல்ல, அது வேதம் சொல்லத்தக்க செம்மொழி என நிறுவுவது (வேறொரு வகையில் பார்த்தால் தாய் மொழியில்தான் அனைத்தும் வெளிப்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கை முழக்கம்). திருப்பாணாழ்வாருக்கு நிகழ்ந்த இழி செயல் தொண்டரடிப்பொடியாழ்வார் என்ற "அந்தணரை" எப்படிப் பாதித்து இருக்கிறது என்பதைப் பாருங்கள்:


பழுதிலா வொழுகலாற்றுப்
பலசதுப் பேதிமார்கள்
இழி குலத்தவர்களேனும்
எம்மடியார்களாகில்
தோழுமின், கொடுமின், கொள்மின்!
என்று நின்னொடு மொக்க
வழிபட வருளினாய் போன்ம்
மதிள் திருவரங்கத்தானே!


அமரவோ ரங்கமாறும்
வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவராய
சாதியந்தணர்களேலும்
நுமர்களை பழிப்பாராகில்
நொடிப்ப தோரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமாநகருளானே!


எப்படி விழுகிறது பாருங்கள் வார்த்தைகள். இது சாத்வீக மொழி அல்ல. தலித்துகளின் போராட்ட மொழி! சொல்பவர் யார்? தலித் அல்ல, அந்தணர். ஏன்? எம் அடியார்கள் என்ற மனித நேயம்! அங்கு சாதியும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது


இக்கவிதை வரிகளை அப்படியே செயல்படுத்திய மற்றோர் உத்தம வீரர் ஸ்ரீஇராமானுஜர் (கி.பி.1017). பஞ்சமர்கள் என்று எந்த சாதியிலும் அடங்காத அப்பாவி மக்களை "திருக்குலத்தோர்" என்றாக்கி, அவர்களை "முதல் தீர்த்தக்காரர்" களாக்கியது இராமானுஜ மாமுனி! இவர் மனித நேயம் இந்தியர்களையும் கடந்து துருக்கிய பெண்ணை தத்து எடுக்க வைத்து அவளையும் அடியார் கோஷ்டியில் சேர்த்தது (துருக்க நாஞ்சியார்). இவருக்கு மிகவும் அபிமான ஆழ்வார்கள் திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும். இவருக்கு "ஆண்டாள் ஜீயர்" என்ற பெயரும் உண்டு. இவர் காலத்தில்தான், நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் ஆண்டவன் மொழியாகி, முதல்வனுக்கு முன் செல்லும் மொழி ஆயிற்று. (இராமாநுஜரை அறிந்து கொள்ள வாசிக்க வேண்டிய புத்தகங்கள்: இந்திரா பார்த்தசாரதி -இராமாநுஜர் நாடகம்; சாண்டில்யன் - மதப்புரட்சி செய்த மகான் ஸ்ரீராமானுஜர்). இந்த மாமனிதனை சமூகம் காண்பது "பார்ப்பனர்" என்றுதான்!


கிபி 14ம் நூற்றாண்டைச் சார்ந்த தத்துவ அறிஞரும், தருக்க நெறியாளரும், கவிஞருமான வேதாந்த தேசிகர் திருப்பாணாழ்வார் செய்வித்த பத்து பாசுரங்களுக்கு உரை எழுதியுள்ளார். (எல்லோரையும் விட்டு இவருக்கு உரை எழுதியது கருத்தில் கொள்ள வேண்டியது). பக்தி இயக்கத்தின் மேன்மையையும், திருமாலுக்கு அடிமை செய்யும் அடியார்களிடையே சாதீயம் கிடையாது என்பதை தொண்டரடிப்பொடி இப்படிச் சொல்லுகிறார்;


அடிமையிற் குடிமையில்லா
அயல் சதிப் பேதிமாரில்
குடிமையில் கடைமை பட்ட
குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
மொய் கழற் கன்பு சேய்யும்
அடியரை யுகத்தி போலும்
அரங்கமா நகருளானே!



ஆழ்வார்களின் வழி சமதர்மம், சமநீதி, மானுட மேன்மை, மனித நேயம். இதற்கு அடிப்படைத் தேவை மானிடர்பால் அன்பு. அன்பு..அதுதான் இவ்வியக்கத்தின் அடிநாதம்!!


நா.கண்ணன்.

Date: Sun, 21 Sep 1997 19:47:53 +0000

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2010, 07:49 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,002 முறைகள் அணுகப்பட்டது.