பறந்ததோ பழந்தான் - விவேக சிந்தாமணி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

புலவர் சு.சுப்புராமன்



தமிழ் இலக்கிய வானில் பிற்காலத்தில் தோன்றிய நூல் விவேக சிந்தாமணி. நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட அந்நூலின் ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.


பல பாடல்கள் நமது நீதி நூல்களில் காணும் வாழ்வியல் உண்மைகளை எளிய நடையில் தெளிவாக விளக்குகின்றன. இயற்கை நிகழ்ச்சிகளைக் கற்பனை நயத்துடன் படம்பிடித்துக் காட்டும் அற்புதமான பல பாடல்களும் இடம் பெறுகின்றன.


குயில் கூவிக் கொண்டிருக்கும்;
கோலம்மிக்க மயில் ஆடிக்கொண்டிருக்கும்;
காற்றுக் குளிர்ந்தடிக்கும்;
கண்ணாடிபோல் நீரூற்றுகள் மிக்கவுண்டு;
பூக்கள் மலர்ந்து நிற்கும்;
பூக்கள் தோறும் சென்று தேனீக்கள் இன்னிசை பாடிக் களிக்கும்

என்று சஞ்சீவி பருவதத்தின் சாரலில் பாரதிதாசன் பாடியதுபோன்ற எழில்மிகு சோலை.


இக்காட்சிகளைக் கண்டு துய்க்கும் பேறுபெற்றாள் ஒரு நங்கை. பஞ்சினும் மெல்லிய தன் செஞ்சீறடி நோக இயற்கை அழகில் மயங்கி நின்றாள். அவளோ,


செந்தாமரை போன்ற செந்நிற மேனியாள்;
மீனைப் பழித்த விழியாள்;
அமுதம் பழித்த மொழியாள்;
அன்னம் பழித்த நடையாள்;
கன்னங்கருத்த குழலாள்;
சின்னஞ் சிறுத்த இடையாள்;
கள்ளங் கபடமற்ற உள்ளத்தாள்;
கண்டோரைக் கொள்ளை கொள்ளும் எழிலரசி.

தன் கண்ணின் கருவிழியைப் பழிக்கும் இனிய கரிய நாவல் கனியொன்றைக் கண்டு நாவில் நீரூறச் சென்றாள்.

கொடியிடை துவளக் குனிந்து மலர்க்கையால் கனியை எடுத்தாள். அதுவோ கனியன்று; கருவண்டு.

செந்தாமரை மலரில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு மேலிட மேல் நோக்கிக் கண்டது.

"அந்தோ! கண்முன் காணப்படுவது கவின் நிலவன்றோ?

கணப்பொழுது கழிந்தாலும் நாம் சிறைப்படுவது உறுதி.

மதியின் வரவு கண்டால் குவியுமன்றோ?"

என எண்ணிப் பறந்தது அந்த வண்டு.

தலைவி விழித்த கண் இமைக்காது வியப்பும், திகைப்பும் மேலிட,

"போனது வண்டோ? பழந்தான் பறந்ததோ?"

என ஐயுற்றாள்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என ஏங்கினாள்.அந்த நங்கையின் கை தாமரை மலர் போன்றதென்றும், முகம் நிலவைப் போன்றதென்றும் வெளிப்படையாகக் கூறாது, நயம்படக் கூறி நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறார் புலவர்.


பாடல் இதுதான்,

"தேனுகர் வண்டு மதுதனை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதன் சம்புவின் கனியென் றதனை
தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென் றெண்ணி
மலர்க்கரம் குவியுமென் றஞ்சிப்
போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்
புதுமையோ இதுவெனப் புகன்றாள்.


உமறுப்புலவரும் தம் சீறாப்புராணத்தில் இதுபோன்றதொரு காட்சியை நம்முன் படைக்கிறார். நாவல் கனியை உண்ண விரும்பிய நங்கை ஒருத்தி, நாவல் மரத்தின்கீழ்க் கிடந்த கனிகளுள் ஒன்றைக் கையில் எடுத்தாள். தேனுண்டு  மயங்கியிருந்த வண்டாகையால் அது பறந்து போயிற்று.


துணுக்குற்ற அவள், கையை உதறி உடல் நடுங்கினாள். விழுந்து கிடந்த நாவல் கனிகளையும் தொடவில்லையாம்!

"மறிந்து தூங்கிய நாவலின் கனியையோர் மங்கை
யெறிந்து பார்மது கரத்தினைக் கரத்தினால் எடுக்கப்
பறந்து போதலின் துணிக்கின் கையுதறி மெய்பதறிச்
செறிந்து சூழ்தரச் சொரிந்தமை கனியையும் தீண்டாள்.

என்பது அப்பாடல்.


எத்தனை அற்புதமான கவிநயமும், கற்பனை நயமும் நிறைந்த பாடல்கள்!


நன்றி:- தினமணி


--Ksubashini 18:48, 17 மே 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 17 மே 2010, 18:48 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,717 முறைகள் அணுகப்பட்டது.