நினைவுகளின் சுவட்டில் - 005From மரபு விக்கி(Redirected from நினைவுகளின் சுவட்டில் - 5)
நினைவுகளின் தடத்தில் (5)
நடராஜன் என்று பெயர் இருந்தாலும் அவரை எல்லோரும் 'அம்பி' என்று தான் அழைப்பார்கள். பள்ளிக்கூடத்திலும் மற்ற வாத்தியார்களும் பையன்களும் அவரை 'அம்பி வாத்தியார்' என்று தான் குறிப்பிடுவார்கள். ஆனால் அவரை மாமாவைத் தவிர வேறு யாரும் 'அம்பி' என்று அழைத்து நான் கேட்டதாக நினைவு இல்லை. நாங்கள் இருந்த தெருவில் சில வீடுகள் தள்ளி அவர் வீடு இருந்தது. நல்ல தாட்டியான சரீரம். நல்ல உயரம். மாமாவுக்கு உதவியாக இருப்பார் எப்போதும். ஏதும் உதவி தேவையானால், மாமா அவரைத் தான் கூப்பிடுவார். அவருக்கு மாமா 'ஸார்' தான்.
எல்லோரும் விழித்துக் கொண்டு இருந்தார்கள். நான் அகப்படுகிறேனோ என்னவோ, எங்கே போனேனோ என்று அவர்களுக்கு கவலை இருந்திருக்கும். அம்மாவும் பாட்டியும் ஆளுக்கு ஆள் மஞ்சள் துணியில் காசு முடிந்து ஸ்வாமிக்கு வேண்டிக் கொண்டிருப்பார்கள். 'நல்ல படியா பிள்ளை திரும்பி வரணுமே, பகவான் தான் காப்பாத்தணும். இப்படி ஒரு புள்ளே கஷ்டப்படுத்துமோ'.
வீடு வந்ததும், 'பார்க்கிலே படுத்துண்டு இருந்திருக்கான். நடு ராத்திரிலே வேறே எங்கே போவான். நல்லபடியா வந்து சேந்துட்டான். ஒண்ணும் சொல்லாதேங்கோ. நிம்மதியா தூங்குங்கோ இனிமே. நாளைக்குப் பாத்துக்கலாம், சார் நான் வரேன்" என்று சொல்லிக்கொண்டு அம்பி வாத்தியார் தன் வீ ட்டுக்குத் திரும்பினார். "ஏண்டா இப்படி படுத்தறே? கதி கலங்க வச்சிட்டயே" என்று பாட்டிதான் வேதனையோடு சொன்னாள். "வா, வந்து கொஞ்சமாவது சாப்பிட்டு படுத்துக்கோ, உனக்காக யாருமே சாப்படாம கொட்டு கொட்டுனு முழிச்சிண்டுருக்கா" வேறு யாரும் எதுவும் சொல்லவில்லை. இரவு வெகு நேரம் ஆகிவிட்டது.
அப்போது தீராத என் துக்கங்கள் எனக்கு. எனக்கென்று பெரிய ஆசைகள் ஏது இல்லையென்றாலும், ரொம்பவும் அடக்கமான பையன் என்று எல்லோரும் சொன்னாலும், சில சமயங்களில் எனக்கும் கூட சில ஏக்கங்கள் வந்து மாமாவை ரொம்பவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன் என்பது பின்னாட்களில் எனக்கு உறைத்தது.
மாமாவின் வாழ்க்கை ரொம்பவும் வேதனைகள் நிறைந்தது. சில சாதாரண, இயல்பான எதிர்பார்ப்புகள் கூட அவருக்கு நிறைவேறியதில்லை. வறுமை. பொறுப்புக்களை நிறையத் தன் சக்திக்கு மீறி தன் மீது சுமத்திக் கொண்டார். அவரால் ஓரளவுக்கு மேலே அப்பொறுப்புக்களைச் சமாளிக்க முடிந்ததில்லை. அவர் இயல்பில் மிக சாதுவான மனிதர். வெளியே யாரோடும் அவர் சத்தமிட்டுப் பேசியோ, முரண்டு பிடித்தோ, சண்டையிட்டோ பார்த்ததில்லை நான். ஆனால், வீட்டில் அவருக்கு வேதனை மிகும்போது அசாத்திய கோபம் வரும். முன் கோபி. பின்னால் வருந்துவார். அவர் கோபம் வந்துவிட்டால் அந்தக் கணங்களில் அவர் தான் என்ன செய்கிறோம் என்பதே அவருக்கே தெரியாது போய்விடும்.
எங்கள் தெரு 'ட' வடிவில் இருக்கும். அந்த 'ட'வின் இரு கோடுகளின் சந்திப்பில் எங்கள் வீடு இருந்தது. தெருவின் ஒரு கோடி பெரியகுளம், வத்தலக்குண்டு போகும் மெயின் ரோடில் போய்ச் சேரும். இன்னொரு கோடியில் ஒரு பிள்ளையார் கோயில். சின்ன ஒரே ஒரு அறையே கர்ப்பக்கிரஹமாகக் கொண்ட கோயில். அதில் பிள்ளையாருக்குத் தான் இடம் இருந்தது. அது எப்படி எங்கள் பராமரிப்பில் வந்தது என்று எனக்குத் தெரியாது. சாவி எங்களிடம் இருக்கும். தினம் கோவில் கம்பிக் கதவைத் திறந்து, ஒரு குடம் தண்ணீர் பிள்ளையார் மீது கொட்டி அவரைக் குளுப்பாட்டி, விளக்கேற்றி வரவேண்டும். இது தினம் மாலை நடக்கும்.
ஒரு நாள் மாலை மாமா, '"போடா, கோவிலைத் திறந்து ஸ்வாமிக்கு விளக்கேத்திட்டு வாடா," என்று சொன்னார்: பித்தளைக் குடம் ஒன்று சின்னதாக நான் தூக்கக்கூடியது. அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டேன். ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய். இடைகழிச் சுவற்றில் எனக்கு எட்டும் உயரத்தில் தான் கோவில் சாவியும் தீப்பெட்டியும் இருக்கும். ஒரு கையில் தண்ணீர் நிரப்பிய குடம். மற்றொரு கையில் எண்ணெய்க்கிண்ணம். எண்ணெய்க் கிண்ணக்கையோடு உயர இருந்த சாவியையும் தீப்பெட்டியைம் எடுத்தேன். என் சாமர்த்தியம் எனக்கு உதவவில்லை. கிண்ணம் சாய்ந்து எண்ணெய் கீழே சிந்தியது. அதை மாமா பார்த்துவிட்டார். 'ஒரு காரியம் உனக்கு ஒழுங்கா செய்யத் தெரியுமாடா கழுதே" என்று சத்தமிட்டுக் கொண்டே வந்தவர், கிட்ட வந்தது தான் தெரியும். அடி விழுந்தது. சரமாரியாக அடித்துக் கொண்டே இருந்தார். குடத்தைக் கீழே வைத்தவன் அடி தாங்காமல் கீழே விழுந்தேன். அப்படியும் அவர் கோபம் அடங்கவில்லை. காலால் உதைத்தார். அடி விழுவதும் நிற்கவில்லை. இதற்குள் என் அலறலையும் மாமாவின் கூச்சலையும் கேட்டு புறக்கடையில் இருந்த பாட்டி ஓடி வந்தாள். மாமாவைப் பார்த்து சத்தம் போட்டாள், "ஏண்டா இப்படி அவனைப்போட்டுக் கொல்றே. இப்படியாடா ராக்ஷசன் மாதிரி. ஒன்னுக்கொன்னு எதாவது ஆயிட்டதுன்னுடா என்னடா பண்றது" என்று பாட்டியும் சத்தம் போட ஆரம்பித்தாள். "உனக்கொண்ணும் தெரியாது. நீ பேசாம இரு. நீ செல்லம் கொடுத்துக் கொடுத்துதான் அவன் ஒண்ணுக்கும் இல்லாமே போயிண்டு இருக்கான்." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது எனக்கு அடி விழுவது நின்றது. 'சரி போறது போ" எண்ணெய் என்ன கொஞ்சம் போலத்தானே சிந்தியிருக்கு. போடா, வேறே எண்ணெய் விட்டுத் தரேன். போய் விளக்கேத்திட்டு வா, போ" என்று பாட்டி அந்த இடத்தை விட்டு என்னை விரட்டினாள்.
எனக்கு அன்று விழுந்த அடி மாதிரி அங்கு மாமாவோடு இருந்த பன்னிரெண்டு வருஷங்களில் என்றும் விழுந்ததில்லை. மாமா முன் கோபக் காரர் தான். ஆனால் வெகு சீக்கிரம் அவர் கோபம் அடங்கிவிடும். கொஞசம் சத்தம் போடுவார். இரண்டு அடி கொடுப்பார். பின் சரியாகிவிடும். ஆனால் அன்று, கொஞ்சம் எண்ணெய் சிந்தியதற்கு நான் பட்ட அடியும் உதையும் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. "என்னடா அப்படி ஆயிடுத்துன்னு இப்படிப் போட்டுக் கொல்றே. செங்கல் தரையிலெ கொஞ்சம் எண்ணெய் சிந்தினாக் கூட அது வழிஞ்சி பரவிடும். ஏதோ வீசை எண்ணெய் போயிட்டாப்பலே. படாத இடத்திலே பட்டா என்ன ஆகும்" என்று பாட்டி திரும்பத் திரும்ப மாமாவைத் திட்டிக்கொண்டே இருந்தாள். மாமாவோ, "நீ பேசாமே இரேன்.உனக்கொண்ணும் தெரியாது போ" என்று தான் அவர் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
மறு நாள் காலை மாமா பேப்பர் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். சின்ன மாமா எஸ் எஸ் எல் ஸி பரிக்ஷை எழுதிய ரிசல்ட் வந்திருந்தது. அம்பி வாத்தியார் வந்து கொண்டிருந்தார். வீட்டுப் படி ஏறிக்கொண்டே, 'என்ன சார், பேப்பர் பாத்தேளா, சாமா நம்பரைக் காணோமே, நான் தான் சரியாப் பாக்கலையா, உங்க பேப்பர்லே இருக்கா" என்று கேட்டுக் கொண்டே படி ஏறினார். அவர் சாமா என்று சொன்னது என் சின்ன மாமாவை. சின்ன மாமாவின் பெயரும் சுவாமிநாதன்.
வெங்கட் சாமிநாதன்/30.7.07 --Ksubashini 01:09, 17 ஆகஸ்ட் 2010 (UTC) |