வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

நவராத்திரி நாயகியர் 5

From மரபு விக்கி

Jump to: navigation, search


நவராத்திரியில் நவதுர்கைகள் - கால ராத்ரி / சித்தாத்ரி! 1.


இன்றைய அலங்காரம் துர்கை.


Kaalarathri.jpg
நவராத்திரிகளில் துர்க்கையை நவதுர்க்கா வடிவாக வழிபடுதல் மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு துர்க்கையாக நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபடவேண்டும். பக்தர்கள் துயர் தீர்க்கும் துர்க்கையை வழிபட்டால் நவகிரஹ தோஷங்களும் விலகும் என்றும் சொல்லுவார்கள். நவராத்திரி சனிக்கிழமை அன்று வழிபடவேண்டியவள் “காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.


சித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி. 
Images.jpgsidhathri.jpg


நவராத்திரியில் முதல்நாள் பொட்டுக் கோலம் போட்டு அம்பிகையை பாலை எனக் கூறி வழிபடவேண்டும். சிலர் குமாரி எனவும் வழிபடுவர். இரண்டு வயதுப் பெண் குழந்தையை பாலையாக வழிபடுதல் நல்லது. அந்தக் குழந்தைக்குப் பிடித்த ஆகாரங்களைச் செய்து கொடுக்கலாம். பிடித்த உடையை வாங்கிக் கொடுக்கலாம் என்றாலும் மஞ்சள் நிறம் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. மஞ்சள் சாமந்திப் பூ விசேஷம் வழிபாட்டுக்கு. செவ்வரளியும் பயன்படுத்தலாம். நைவேத்தியம் எலுமிச்சை சாதம். மாலை நைவேத்தியம் வெல்லம், தேங்காய், ஏலக்காய் போட்ட பச்சைப் பயறுச் சுண்டல்.


பயறுச் சுண்டல்: இதை இருவிதமாய்ச் செய்யலாம். முதலில் பச்சைப் பயறை வாங்கி முதல் நாளே ஊற வைக்கவேண்டும். பின்னர் மறுநாள் பயறை வேக வைத்து உப்புச் சுண்டல் என்றால் தேவையான அளவு உப்புச் சேர்க்கவும். நீரை வடிகட்டி வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கடுகு, மி,வத்தல், கருகப்பிலை தாளித்து வெந்த பயறைப் போட்டு சற்று வதக்கிப் பின் இறக்கும்போது தேங்காய் துருவல் சேர்க்கவும். 

இனிப்புச் சுண்டல்: உப்பு ஒரு சிட்டிகை மட்டும் போட்டு பயறை வேக வைத்து வடிகட்டிக்கொள்ளவும். கால் கிலோ பயறுக்கு நூறு கிராம் பொடித்த வெல்லம் சரியாக இருக்கும், ஒரு மூடி தேங்காய் துருவல். வாணலில் நெய் ஊற்றிக் கடுகு தாளித்துப் பயறையும், வெல்லத் தூளையும் சேர்த்துக்கிளறவும். சேர்ந்து வெந்ததும் தேங்காய் துருவல் போட்டுக் கிளறி எடுத்துப்பரிமாறவும்.
Images.jpgபயரு சுண்டல்.jpg

. எல்லாருக்கும் தெரிஞ்ச துர்காஷ்டகத்தை இங்கே ஒவ்வொரு நாள் ஒன்றாகக் கொடுக்கிறேன். கடைசி நாள் எல்லாத்தையும் சேர்த்துக்கொடுக்க முயல்கிறேன்.


துர்கா அஷ்டகம்:

1. வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!

துர்காஷ்டகம் தொடரும்.


லலிதா நவரத்தினமாலையின் முதல் பாடல் கீழே இடம் பெறுகிறது. முதலில் வைரம் போல் ஜொலிக்கும் ஸ்ரீலலிதை!


மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவர் பெருகும் பிழை என பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

--Geetha Sambasivam 11:53, 24 நவம்பர் 2010 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 24 November 2010, at 11:53. This page has been accessed 3,742 times.