வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

நவராத்திரிப் புட்டு செய்முறை

From மரபு விக்கி

Jump to: navigation, search

Contents


மண் சுமக்காமலேயே சாப்பிடச் செய்யும் புட்டு இது!

புட்டு செய்முறை:

நவராத்திரி வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் அல்லது சரஸ்வதி ஆவாஹனம் செய்யும் தினத்தன்று புட்டு நிவேதனம் செய்வார்கள். அதற்குத் தேவை நல்ல மாவு வரும் அரிசி ஐ ஆர் இருபது அரிசி கால் கிலோ. இந்த அளவிற்கு ஏற்றாற்போல் கூடுதலாய்ச் செய்பவர்கள் கூட்டிக் கொள்ளலாம்.


அரிசி கால் கிலோ


பாகு வெல்லம் கால் கிலோ


தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்


முந்திரிப்பருப்பு, ஏலக்காய், பொட்டுக் கடலை, அல்லது வேக வைத்த துவரம் பருப்பு. இரண்டு டேபிள் ஸ்பூன்.


உப்பு ஒரு சிட்டிகை


முதல் முறை:

இது ரொம்பவே ஆசாரம் பார்க்கிறவங்களுக்கானது என்பதோடு அதிகம் வேலையும் இல்லை. அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டுப் பின்னர் ஜலத்தை வடித்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும். இரும்பு வாணலியில் அரிசியைப் போட்டு நன்கு சிவப்பாகப் பொரியும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவு கலக்கும்போது நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் சேர்க்கவேண்டும். மாவு எல்லாவற்றிலும் நீரைச் சேர்த்ததும், மாவைக் கையால் உருட்டினால் உருட்டும் பதமும், உதிர்த்தால் மாவாகவும் ஆகவேண்டும். ஆகவே இதை நிதானமாய்ச் செய்யவும். நீர் கலந்த மாவை இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.


பின்னர் உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்துவிட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டால் நன்கு உருட்ட வரவேண்டும். அந்த உருண்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டால் "டங்"கென்று சத்தம் வரவேண்டும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்து வைத்திருக்கும் மாவில் சேர்க்க வேண்டும். தேவையான பாகைச் சேர்த்ததும்,கீழேயே வைத்து நன்கு கலக்க வேண்டும். மாவும், பாகும் நன்கு கலந்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை, (இதற்குப் பொட்டுக்கடலையே ஏற்றது.), தேங்காய் வறுத்துச் சேர்த்து, ஏலப் பொடியும் சேர்க்கலாம்.


மற்றொரு முறை:


அரிசியை ஊற வைக்கவும். நீரை வடிக்கவும். மிக்ஸியில் போட்டு நன்கு மாவாக்கிச் சலித்து வைத்துக் கொள்ளவும். மாவை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவேண்டும். வறுத்த மாவில் முன்னர் கூறி இருக்கும்படியாக வெந்நீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு கலக்கவேண்டும். இது ஈர மாவு என்பதால் நீரைக் கொஞ்சமாகவே கலக்கவேண்டும். சிறிது நேரம் வைத்துவிட்டு ஒரு வெள்ளைத் துணியில் மாவைப் பரப்பி, இட்லிப் பானையிலோ, அல்லது குக்கரிலோ ஐந்து நிமிஷம் வைக்க வேண்டும். மாவை ஒரு குச்சியால் கிளறினால் ஒட்டாமல் வரும் என்பதோடு முன்னர் சொன்ன பதத்துக்கும் வரும். கையில் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிர்க்கவும் வரவேண்டும். பின்னர் பாகு வைப்பது, கலப்பது எல்லாம் மேலே சொன்னபடி தான். இதற்கு ஊற வைத்த துவரம்பருப்பை மாவில் வெந்நீர் கலக்கும்போதே சேர்த்துவிட்டுப் பின்னர் இட்லிப் பானையில் வேகவைக்கும்போதும் வைத்துவிட்டால் பருப்பு நன்கு வெந்துவிடும். இதன் சுவை தனியாக இருக்கும். முதலில் சொன்ன புட்டு ஒருவாரம் ஆனாலும் கெடாது. இது சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.


--Geetha Sambasivam 15:09, 4 டிசம்பர் 2010 (UTC)




Contributors

Geetha Sambasivam

This page was last modified on 4 December 2010, at 15:09. This page has been accessed 2,799 times.