வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க லிங்கோத்பவர் 19

From மரபு விக்கி

Jump to: navigation, search
Lingodhpavar.jpg
லிங்கோத்பவர் நாம் நன்கறிந்தவர். லிங்கம் என்பது உருவம். அந்த லிங்கம் வெளிப்பட்டதையே லிங்கோத்பவம் என்று கூறுகின்றனர். உருவே அற்ற பரம்பொருள் ஒரு உருவைத் தாங்கி நம்மையெல்லாம் உய்விக்க வந்ததையே லிங்கோத்பவம் என அழைக்கின்றனர். பிரளய காலத்தின் முடிவில் உலக உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கையில் ஈசன் தம்மிலிருந்து பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞாந சக்தி, க்ரியா சக்தி ஆகியோரைத் தோற்றுவிக்கிறார். ஐந்து சக்திகளில் இருந்தும் தோன்றும் தத்துவங்களை சதாசிவ தத்துவம் என்றழைக்கப் படும். இந்த சதாசிவ தத்துவத்தில் முதலில் சூன்யமாக ஒன்றுமில்லா நிலையில் உருவற்று இருந்த பரம்பொருளானது பின்னர் மின்னலைப் பழிக்கும் ஒளியாக மாறி, அந்த ஒளி அனைத்தும் சேர்ந்ததொரு ஒளித்தூணாக ஆகி, அந்தத் தூணிலிருந்து வெடித்துக்கிளம்பும் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்ட ஈசனாக வந்து பின்னர் நான்கு முகங்களோடும், எட்டுக்கரங்களோடும் காட்சி அளித்துப் பின்னர் ஐந்து முகம் கொண்ட சதாசிவராக காட்சி அளிப்பார். இப்படித் தான் ஒன்றுமற்ற சூன்யத்தில் இருந்து நமக்குக் காட்சி தரும் ஈசனின் வடிவம் உற்பத்தி ஆனது என்பதை லிங்கோத்பவம் என்று அழைக்கின்றனர். ஒளித்தூணாகக் காட்சி தருவதே ஜ்யோதிர்லிங்கம் என்பார்கள். லிங்கமே ஜோதிவடிவாகும். இந்த லிங்கோத்பவம் நிகழ்வு சிவராத்திரியின் போது நிகழ்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. ஆகவே சிவராத்திரியின் மூன்றாவது காலம் லிங்கோத்பவ காலம் என வழிபாடுகள் நடக்கும்.


ஒளித்தூணாக நின்ற ஈசனின் அடி, முடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் சென்று அவற்றை அவர்களால் காணமுடியவில்லை என்ற கதையை நாம் நன்கறிவோம். அந்த நிகழ்வு நடந்த இடம் திருவண்ணாமலை ஆகும். ஈசனின் இந்த ஜோதிவடிவே ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் திருக் கார்த்திகை தீபமாக வழிபடப் படுகிறது. அதை நினைவூட்டவே அன்று மலைமேல் தீபமும் ஏற்றப் படுகிறது. திருவண்ணாமலைக் கோயிலின் இரண்டாம் பிரஹாரத்தில் இதை நினைவூட்டும் வண்ணம் ஒரு சந்நிதி கோயிலாக விளங்குகிறது. ஐயனும், அம்பிகையும் ரிஷபவாகனத்தில் அமர்ந்திருக்க பின்னால் தீபச்சுடர் ஒளிவீச, உச்சியைக் காண முயலும் அன்னமான பிரம்மாவும், அடியைத் தேடும் வராஹமான விஷ்ணுவும் காணமுடியும்.



திருஞானசம்பந்தரின் திருவண்ணாமலைத் தேவாரத்தின் கீழ்க்கண்ட பதிகம் பிரம்மாவும், விஷ்ணுவும் அடி முடி தேடிச் சென்றதையும் அம்மை இடப்பாகம் கொண்டதையும் சொல்கிறது.


பாடல் எண் : 9
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.


பொழிப்புரை :


விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.



பிரம்மா படைப்புக் கடவுள் ஆவார். அதோடு அறிவுக்கு அதிபதியும் ஆவார். கலைமகளைத் தன் நாவில் கொண்டவர் ஆயிற்றே. அத்தகைய அறிவு படைத்த பிரம்மா ஈசனின் முடியைத் தேடிச் சென்றார். அறிவு இருந்தால் பணிவும் இருக்கவேண்டும், விநயம் இருக்கவேண்டும், ஆனால் தனக்கு அறிவு இருப்பதால் அகந்தை கொண்டு பிரம்மா முடியைத் தேடிச் சென்றார் எனப் புராணங்கள் கூறுகின்றன. மஹாவிஷ்ணுவோ செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீயைத் தன் மார்பில் தாங்கியவர். அனைத்துச் செல்வங்களும் அவரிடம்,. எனினும் அவரும் செல்வத்தால் எதையும் சாதிக்க இயலாது என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும், ஈசனின் திருவடிகளையே நாடினார். காண முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளவும் செய்தார். ஆனால் அறிவினால் செருக்குற்ற பிரம்மாவோ, தான் முடியைக் கண்டதாய்ப் பொய்யைச் சொன்னார். அறிவினாலோ, செல்வத்தாலோ பரம்பொருளை அடைய முடியாது என்பதன் தாத்பரியமே இந்தப் புராணக் கதை. தான் என்ற அகந்தை நிறைந்த பிரம்மாவால் முடியைக் காண முடியாமல் போனது மட்டுமல்லாமல் செருக்கில் பொய்யும் உரைத்தார். வெறும் அறிவு இருந்தால் மட்டும் அனைத்தையும் வெல்ல முடியாது, அதிலும் ஈசனை அடைய முடியாது. கூடவே பணிவும், விநயமும் இருக்கவேண்டும் என்பதே இந்தக் கதையின் தாத்பரியம்.


ஆனாலும் பெரியோர்கள் இந்தக் கதையைச் சொன்னதின் காரணமே நாம் நமக்கு மேம்பட்ட அறிவு இருக்கிறதென்றோ, நிறைந்தசெல்வம் இருக்கிறதென்றோ அகந்தை கொள்ளாமல் செல்வத்தின் மூலமோ, அறிவின் மூலமோ ஈசனின் உயர்ந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும் என எண்ணாமல், ஒரு வரைமுறைக்கு உட்படாத ஈசனின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த அறிவும், செல்வமும் போதும் என நினைப்பவர்களால் முடியாது என்பதே இந்த அடிமுடி தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் அலைந்ததின் உள்ளார்ந்த தத்துவம் ஆகும். அறிவு மட்டும் இருந்தாலோ, செல்வம் மட்டும் இருந்தாலோ இறைவனை அடையவே முடியாது. இவை இரண்டும் சேர்ந்து இருந்தாலோ மனிதனுக்குத் தான் என்னும் அகங்காரம் ஏற்பட்டு விடும். இந்தத் தான் ஒழிந்தால் தான் அந்தத் தானாக மாறமுடியும், ஒன்றிப் போக இயலும்.


கல்வியினால் ஏற்படும் செருக்கு அல்லது அகந்தை பணத்தினால் ஏற்படுவதை விடவும் ஒரு பங்கு அதிகம் தான். அதனால் தானோ என்னமோ பிரம்மா தன் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. விஷ்ணு மட்டும் ஒப்புக்கொண்டார். மேலும் அண்டத்தை எல்லாம் நிறைத்துக்கொண்டு பேரொளியாக நின்ற ஈசனின் தத்துவமானது அடி, முடி என ஒரு வரையறைக்கு உட்பட்டு இல்லாமல் எல்லை கடந்த ஒன்று என்பதே ஆகும். எல்லைகளே இல்லாப் பரம்பொருளைத் தியானிக்க அவனை ஒளிவடிவில் வணங்குவதும் ஒரு முறை ஆகும். நீள் வட்ட வடிவில் காணப்படும் இந்த லிங்க பாணம் பிளந்து நடுவில் இருந்து தலையில் பிறையைச் சூடிய சந்திரசேகரர் வெளிப்படுவதாய்ச் சில லிங்கோத்பவ மூர்த்தங்களில் காணமுடியும். என்றாலும் இந்தச் சிற்பங்களிலும் அடியோ, முடியோ காண இயலாது. சோழர்கள் காலத்தில் முதலாம் பராந்தகன் காலத்தில் எழுப்பிய சிவன் கோயில்களின் கருவறைக்குப் பின்னால் லிங்கோத்பவர் இடம் பெற்றிருந்ததாய்க் கேள்விப் படுகிறோம்.


லிங்கோத்பவரின் மூர்த்தங்களில் சிலவற்றைக் காஞ்சீபுரம் கைலாயநாதர் கோயிலில் அழகாய்ச் செதுக்கி இருப்பதைக் காணமுடியும். ஆனால் அழிய ஆரம்பித்திருக்கிறது மன வருத்தத்தைத் தரும் செய்தி. இதைத் தவிர குன்றக்குடி, சுசீந்திரம், தஞ்சைப் பெரிய கோயில் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் லிங்கோத்பவர் எழுந்தருளி இருப்பதாய்த் தெரிய வருகிறது. அடுத்து நாம் தரிசிக்கப் போவது அம்பிகைக்கு உபதேசம் செய்த ஈசனின் திருக்கோலம். ஆகமங்களை அம்பிகைக்கு ஈசன் உபதேசித்ததாய்க் கேள்விப் படுகிறோம். பர்வத ராஜகுமாரியாக அம்பிகை அவதரித்த அந்த நாட்களில் ஒருநாள் அம்பிகை ஈசனிடம் மந்திர தீக்ஷை அளிக்கச் சொல்லி விண்ணப்பிக்கிறாள். அப்போது பிரணவத்தின் பொருளும் உபதேசம் செய்யப் படுகிறது. அந்த உபதேசம் நடக்கும் நேரம் அம்பிகை ஈசனின் இடப்பாகத்தில் , அவரின் இடத்தொடையில் அமர்ந்த வண்ணம் காட்சி அளிப்பாள். காணக்கிடைக்காத அபூர்வமான இந்த மூர்த்தியின் வடிவமே சுகாசன மூர்த்தி ஆகும்.


--Geetha Sambasivam 07:59, 15 ஆகஸ்ட் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 15 August 2011, at 08:00. This page has been accessed 2,454 times.