வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 8 அன்னையின் தேர்விழாக்கள்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 

அன்னையின் தேர் விழாக்கள்


கேப்டன் பெர்க்மான்ஸ் மோத்தா


ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த சிற்றரசர்களுக்கு, ஆளுதவியும், பொருளுதவியும், அடைக்கலமும் தந்து உதவியதற்காக ஆங்கிலேயரால் குற்றவாளி ஆக்கப்பட்டிருந்த எழுகடல்துறை மன்னன் சிஞ்ஞோர் சிஞ்ஞோர் தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் ஜாதித் தலைவர் மோர் அவர்கள், அன்னையின் கடாட்சத்தினால் கொடிய தண்டனையிலிருந்து தப்பினார். அவ்வேளையில் அன்னையின் திருச்சுருபம் நகரை வந்தடைந்த 250-ஆம் ஆண்டும் நெருங்கியது. ஆதியிலிருந்து இந்நாள் வரை திருச்செந்தூர்க் கந்தனின் தேர்வடத்தை முதல் முதலில் தொட்டுக்கொடுக்கும் கெளரவ உரிமைக்குத் தன் "ராஜிநாமா அறிக்கை" மூலம் மறுப்புத் தெரிவித்துவிட்டுத் தன் குல தெய்வம், "பரதர் மாதா"வுக்கென்று ஒரு தேர் செய்யச் சித்தமானார்.


தேவ அன்னை எவ்வாறு விண்ணகத்தில் வானதூதரும் புனிதரும் புடை சூழ வீற்றிருப்பாள் என்பதை நினைவு கூறும் வகையில் ஒரு தேரினை உருவாக்கக் கேரளாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் நூற்றுக் கணக்கான சிற்பிகளைத் தருவித்து நேவிஸ் பொன்சேக்கா என்பவரைத் தலைமையாக நியமித்தார். இத்தேரினைச் செய்து முடிக்க அந்நாளில் ஆன செலவு ஒரு லட்சம் ரூபாய். அதன் இன்றைய மதிப்பு 7,500 சவரன்கள். இது முத்துச் சிலாபங்களில் முத்துக்குளித்துறை மன்னன் ஈட்டிய பொருள். அன்னையின் திருச்சுருபத்தை பலிபீட மாடத்திலிருந்து இறக்கித், தேருக்கு எடுத்துச் செல்வதற்காக, "முத்துப் பல்லக்கு" எனப்படும் ஒரு சிறு பல்லக்கும் செய்தனர். முத்து மாலைகளாலேயே அலங்கரிக்கப் பட்ட இந்த நெட்டையான பல்லக்கில் சுருபம் நிறுத்தி வைக்க ஒரு இடமும் பக்கத்தில் ஒரு இருக்கையும் மட்டும் இருக்கும். சுருபத்தை இறக்கி வைப்பவர்களும், பல்லக்குத் தூக்குபவர்களும், ஜாதித் தலைவருடன் இரவு முழுவதும் உபவாசம், ஆராதனையில் கழிப்பார்கள். அதிகாலை மிகவும் பக்தி வணக்கத்துடன், பாவ பரிகாரச் செபம் படித்தபின் சுருபம் இறக்கப்பட்டுப் பல்லக்கினுள் வைக்கப்படும். ஜாதித் தலைவர் இருக்கையில் அமர்ந்து சுருபத்தைப் பிடித்துக் கொள்ள, மாதாவின் பாடலுடன் 6 பேர் சுமந்தபடி பல்லக்கு தேரைச் சென்றடையும்.

தேருக்கடியில் மிகவும் பக்தி ஆசாரத்துடன் சுருபம் இறக்கி வைக்கப்பட்டு, குருவானவர் மந்திரித்தபின் தேரின் மீது ஏற்றி வைக்கப்படும். பரதகுலச் சிற்றரசன், நல்முத்துக்கள் கலந்த மலர்களை அன்னை மீது தெளிப்பார். அதிகாலையில் பலிபூசை நிறைவேறியபின், தேரின் வடத்தை பரதகுல ஜாதித் தலைவர் தொட்டுக் கொடுத்து, தனது மந்திரி, பிரதானிகளாகிய அடப்பன்மார் மற்றும் ஊர்த்தலைவர்களிடம் அளிப்பார். மக்கள் வடத்தை, "மரியே, மாதாவே" எனும் வானைப் பிளக்கும் கோஷத்துடன் இழுக்க, தேர் நகர்ந்து செல்லும். யானையின் மீது பாண்டியரின் மீன் கொடி தாரை தப்பட்டையுடன் முன் செல்ல, அதனைத் தொடர்ந்து பரதவர்களின் சின்னம் பொறித்த மீதி 20 கொடிகளும், கேடயம், குடை, குடைச்சுருட்டி, அசை கம்பி, முரசு, பரிசை போன்ற விருதுகள்
கெம்பீரமாய் அணி வகுத்துச் செல்லும். இருபக்கமும் குதிரை வீரர்களும் வருவர். 1926--ஆம் ஆண்டு வரையில் மேற்சொன்னபடியே தேர் இழுக்கப்பட்டு வந்திருக்கிறது.


முதல் பவனி


1805--ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி அன்னையின் சுருபம் நகரை வந்தடைந்த 250-ஆம் ஆண்டு நிறைவில் இழுக்கப்பட வேண்டிய தேர், சித்திரங்களில் தூய தங்கத் தாள் பொதியும் வேலையின் சுணக்கத்தினால் 1806--ஆம் ஆண்டு பிப்ரவரி 6--ஆம் தேதி முதல் முறையாக நகர் வலம் வந்தது. (மாதா சுத்திகரித்த திருநாள் அன்று). ஏழு கடற்றுறை மக்களுடன், தென்னாட்டின் சிற்றரசர்களும், மலையாளத்திலிருந்து மறைகுருக்களும், அரசுப் பிரதிநிதிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். கிறிஸ்தவ உலகிலேயே வடம் கட்டி இழுக்கப்பட்ட முதல் தேராக இருந்தபடியால், 'வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்" எனவும் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்ததினால், "தங்கத்தேர்" எனவும் அழைக்கப் பட்டது.  1806--ஆம் ஆண்டிற்குப் பின், பல தலைமுறைகளாக பரதவர்களின்
முத்துக்குளித்துறைக்கு இருண்ட காலமாக இருந்தது. செல்வம் கொழித்த முத்துக்குளித்துறையைக் கவர வெள்ளையரின் வெறித்தனமான போட்டிகளில் பரதவர் சமுதாயம் மிகவும் சிரமத்திற்குள்ளாயிற்று. 1818--இல் டச்சுக்காரரும், 1825--ஆங்கிலேயருமாய் மாறி மாறி நாட்டைக் கவர்ந்தனர். எட்டப்பர்களும் முளைத்தனர்.


மேலும் இந்நாள் வரை ஆத்துமகாகாரியங்களை மட்டும் கவனித்து வந்த, "பதுர வாது" எனும் போர்த்துக்கீசிய குருக்களுக்கு மாற்றாக "துலுஸ்" எனப்படும் பிரெஞ்சு மிஷன் குருக்கள் 1837--ஆம் ஆண்டு இங்கு வந்து அடிகோலினர். கோயில்களையும் கோயில் சொத்துக்களையும் தன் வசப்படுத்துவதே அவர்களின் முதல் குறிக்கோளாய் இருந்ததினால், ஏழு கடற்றுறை முழுவதும் குழப்பங்கள், கலவரங்கள், நீதிமன்ற விசாரணைகள் காரணமாய் ஊர்களும், பங்குகளும், "கோவா மிஷன்", "பிரெஞ்சு மிஷன்", எனும் இரு கட்சிகளாகப் பரதவர் சமுதாயம் பிளவுபட்டுப் போயிற்று. கோயில்களில் குருக்கள் இல்லாத நிலையும் ஏற்பட்டது.


2--ஆவது பவனி


இறுதியாக போர்த்துக்கீசியக் குருக்களை அன்னையின் ஆலயத்தில் நியமனம்  செய்வதில் வெற்றி கண்ட பரதகுலாதிபன் தேர் மாறனின் பேரன் சிஞ்ஞோர்  தொன்கபிரியேல் பிராஞ்சிஸ்கு தெக்குருஸ் வாஸ் பல்தான் தனது 50-ஆவது வயதின் பூர்த்தியின் போது, பரதவர்களின் ஒற்றுமையைக் கோரி, தேரினை நகர் வலம் வரச் செய்தார். இந்த இரண்டாம் பவனி நடந்தது 1872---ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம் தேதி கோவா மிஷனின் அருட்திரு சில்வெஸ்டர் மஸ்கரேனாஸ் குருவாயிருந்தார். மயிலை ஆயர் மேதகு ஆண்டகையும் கலந்து கொன்டார். இத்திருவிழாவில் எதிர்பார்த்தது போலவே பிரிந்து சென்ற பிரெஞ்சு மிஷன்காரரும் கலந்து கொண்டு அன்னையின் ஆசீரைப் பெற்றுச் சென்றனர்.


3--வது பவனி


1879--ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம் தேதி 2--ஆம் பவனியைச் செய்த அதே பரதவர் மன்னன், இந்த 3--வது பவனியையும் நடத்தி வைத்தார். கோவா மிஷனைச் சேர்ந்த அருட்திரு மனுவேல் கொன்சியாஸ் பங்குக் குருவாயிருந்தார். சிறப்பு விருந்தினராகக் கொச்சி. கிராங்கனூர் மறை மாவட்ட நிர்வாகி திரு மொன்சிங்ஙோர், கஸ்மிர் கிறிஸ்தொ வருகை தந்திருந்தார்.


4--ஆவது பவனி


1895--ஆகஸ்ட் 5-ஆம் தேதி பரிசுத்த பனிமய மாதா மயிலாப்பூர் பதுரவாது மாவட்டத்துடன் இணைந்தது. சிற்றரசர் தொன் கபிரியேல் தெக்குருஸ் லாசருஸ் மோத்தா வாஸ் சந்ததியில் ஒரு ஆண் மகன் வெகுகாலத்திற்குப் பின் உருவானதற்கு நன்றியாகத் தேர் நகர் வலம் வந்தது. கோவா மிஷனைச் சேர்ந்த அருட்திரு ஜே.என். எக்ஸ் மிஸ்கிட்டா பங்குக் குருவாயிருந்தார். மயிலை பிஷப் மேதகு ஜோசா என்றி டிசில்வா வருகை தந்திருந்தார். திரு ஜே.எம். பி. ரோச் விக்டோரியா தலைமையிலான தூத்துக்குடி நகர சபை வரவேற்பு மற்றும் பவனி ஏற்பாடுகளைச் செய்வித்தது.


5---ஆவது பவனி


1905--ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம் நாள், அன்னை திருச்சுருபம் நகரை வந்தடைந்த 350--ஆம் ஆண்டு நிறைவாக, தங்கத் தேர் செய்வித்த நூறாவது ஆண்டும் கூட மன்னன் தொன் கபிரியேல் தெக்குருஸ் லாசருஸ் மோத்தாவாஸ் தலைமையில் நகர் வலம் வந்தது. அருட்திரு. ஜே..பி.டிசூசா பங்குக் குருவாக இருந்தார். மயிலை பிஷப் மேதகு டொன் தியோடர் எம்மானுவேல் ரிபேரா வெய்ரா டிகாஸ்ட்ரோ வருகை தந்திருந்தார்.


6 ---ஆவது பவனி


1908-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம் நாள் அருட்திரு. விஜிலியுஸ் மான்சியும் அவர் சீடர்களும், அன்னையின் சுருபத்துடன் கோரத்தாக்குதலினின்று காப்பாற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்த தினத்தை அந்நாளில் திருநாளாகக் கொண்டாடி வந்தனர் பரத குல மக்கள். இந்நிகழ்ச்சியே அன்னைக்குப் பெரிய கோயில் கட்டக் காரணமாயிருந்தது. இது நிகழ்ந்த 200--ஆவது ஆண்டு நிறைவாகக் குலாதிபன் தொன் கபிரியேல் தெக்குருஸ் லாசருஸ் மோத்தாவாஸ் அவர்களால் இத்தேர்விழா நடந்தேறியது. பங்குக் குருவாயிருந்தவர் அருட்திரு. எம்.ஜே. பின்டோ 1905-- இல் தேர்விழாவுக்கு வந்த அதே மயிலை பிஷப் வருகை தந்து சிறப்பித்தார். அதன் பின்னர், 1914--இல் குலாதிபன் தொன் லாசருஸ் மோத்தாவாஸ் அவர்களின் மரணத்திற்குப் பின், பரதவர்களிடம் உட்கட்சிப் பூசல்களினாலும், ஒற்றுமைக் குறைவாலும், அரசாங்கத்தாரால் முத்துச் சிலாபம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாலும், பட்டத்து வாரிசு, பட்டம் ஏற்க மறுத்து இலங்கை சென்று விட்டனர்.

ஒரு தலைவன் இல்லாத நிலையில் 18 ஆண்டுகள் தேர் ஓடவில்லை.


7--ஆவது பவனி


1926 ஆகஸ்ட் 5--ஆம் நாள் 1926 ஆம் ஆண்டு நடக்கவிருந்த முத்துச்சிலாபத்திற்கு ஜாதித் தலைவரின் ஆலோசனைகள் அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டதினால் 1926--இல் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இளவல் தொன் மனுவேல் லூயிஸ் தெக்குருஸ் அனஸ்தாசியுஸ் மோத்தா கொரையறா பரதகுல ஜாதித் தலைவராகப் பட்டம் சூட்டப் பட்டார். முத்துச் சிலாபங்கள் சிறப்பாக நடந்தேறின. எனவே 05--08--1926--இல் தங்கத் தேர் நகர்வலமும் வந்தது. அருட்திரு. கஜத்தான் சி. பெரட்டோ பங்கு குருவாயிருந்தார். தஞ்சைப் பெரிய குரு ராஜரிஸ்மொன் சிஞ்ஞோர் மைக்கேல் மோத்தாவாஸ் வருகை தந்திருந்தார்.  இதற்குப் பின்முத்துக்குளித்தல் கைவிடப்பட்டதாக 2--ஆம் முறை அறிவிக்கப்பட்டது. அன்னையின் பக்தர்கள் பெருமளவில், தூரத்து ஊர்களுக்கும், வெளிநாட்டிற்கும் குடி பெயர்ந்தனர். பக்கத்துச் சிற்றூர்களிலிருந்து இவ்வூருக்குப் பெருமளவில் அன்னையை அறிந்திராதவர்கள் குடியமர்ந்தனர். இவ்வாறாகப் பரதவர் குலம் குன்றிய நிலையில், இப்போது புதிதாக, "மேசைக்காரன்" என்றும், "கம்மாரக்காரன்" என்றும் பரதவர்களை மேலும் பிளவு படுத்திச் சில பிரெஞ்சு மிஷன் ஆதரவு தனவந்தர்களின் கைங்கரியத்தால் சீரும் சிறப்புமாய்த் தலை நிமிர்ந்து நின்ற பரதவர் சமுதாயம் பலம் குன்றிப் பொலிவிழந்து சிதறுண்டு போனது.


8--ஆவது பவனி


1947--ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம் நாள் இந்திய நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கும் தினத்தையொட்டி நகரின் சில பிரபலங்கள் தேரை இழுத்துச் சிறப்பிக்க விரும்பினர். ஆனாலும் மக்கள் மத்தியில் நீடித்த பிரிவினை வாதத்தால், பரதகுல ஜாதித் தலைவர் பொறுப்பேற்கவில்லை. பங்குத் தந்தை அருட்திரு, அலங்காரம் சுவாமிகளும் இவ்வித ஆடம்பரத்தை விரும்பவில்லை. எனினும் அந்நாளில் பிரபலமாயிருந்த உயர்திருவாளர்கள் ஜே.எல்.பி. ரோச் விக்டோரியா, ஆர். ஜி. பெரைரா, ஜே.எஸ். மிரான்டா, அகஸ்டின் பர்னான்டஸ், ஜே.ஏ. பர்னான்டஸ், ஐ.எஸ். மச்சாது, சி. மச்சாது, ஏ.பி. வாஸ் ஆகிய எட்டுப் பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, தேர் ஓட்டுவதில் ஏற்படும் எவ்விதப் பிரச்னைக்கும் தாங்களே பொறுப்பேற்பதாக உறுதியளித்ததன் பேரில் பங்குக் குரு அனுமதியளித்துச் சேர்ந்து செயல்பட்டார். தேர் செப்பனிடும் பொறுப்பு திரு. லெயோன்ஸ் வாஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  வெகுகாலத்திற்குத் தங்கமயமாய் ஜொலிக்கும்படித் தஞ்சாவூர்ப் பட்டை ஒட்டப் பட்டது.  பாரத நாடு சுதந்திரம் பெற்று விடுவதால் ஜாதிகள் இல்லை என்று காரணம் காட்டி, இவ்வளவு காலமும் கோயிலில் திருவிழா பிரகடனப் படுத்தும்போது, "பரதர் மாதா எனும் பனிமயத் தாய்" எனப்படும் வாசகம் நிறுத்தப்பட்டது. பிரிவினைவாதிகள் ஜாதித்தலைவர் வடம் தொடக்கூடாது என மல்லுக்
கட்டி,மோட்டார் வாகனம் வைத்துத் தேரை இழுக்கப் போவதாக ஆயரிடம் வாதாடினர். பெருவாரியான மக்கள் பாரம்பரியத்தை மாற்ற அனுமதியோம் எனக்கூறி அம்முயற்சியைத் தகர்த்தெறிந்தனர்.


முடிவு மேதகு ரோச் ஆன்டகையிடம் விடப்பட்டது. அவரோ, திருவிழாவுக்கு ஒரு நாள் முன்னதாகத் தன் முடிவைத் தந்தி மூலம் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு உரோமை சென்றுவிட்டார். உரோமையிலிருந்து வரும் ஆயரின் உத்தரவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். தங்கள் முயற்சி பின்னடைவதைக் கண்ட குழப்பக்காரர்கள் கருணாகரன் பீரிஸ் எனும் கைக்கூலியை அமர்த்தி ஜாதித் தலைவரைக் குத்திக் காயப்படுத்தினர். ஆனால் அவர் புதுமையாக உயிர் தப்பினார்.  மக்கள் எதிர்பார்த்த தந்தி, " JATHI FIRST PULL AFTER CLERGY" எனும் வாசகத்துடன், முதன்மைக்குரு அருட்திரு, மரியதாஸ் அவர்களுக்கு வந்து சேர்ந்தது. இவ்வாசகம் தெளிவு இல்லாததினால் மக்கள் குழப்பம் அடைந்தாலும், குருவானவர் வடத்தை எடுத்து ஜாதித் தலைவர் கையில் கொடுத்தபின்
ஜாதித்தலைவர், "மரியே, மாதாவே" எனக்கூறித் தேர் இழுப்பதை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவாயிற்று. மறுநாள் காலை, காயம்பட்ட தலைவரை மக்கள் சுமந்து சென்று தேரின் வடம் பிடிக்க வைத்தனர். இதுவே ஜாதித் தலைவர்கள் இழுத்து வைத்த கடைசித்
தேரோட்டம். நகர்வலம் வந்த தேர், ஜாதித்தலைவரின் இல்லத்தின் முன் வழக்கம் போல் நின்றது. ஜாதித்தலைவர் தரையில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, தனது கொக்கரைக்கிரீடத்தை அன்னையின் தேருக்கு அடியில் கண்ணீர் விட்டு சமர்ப்பித்தார்.


அன்னையின் மகிமைக்காகத் தங்கத் தேர் விழாவைச் சிறப்பாக நடத்தி முடித்த விழாக்குழுவினர் புனித பிலோமினா மண்டபத்தில் (தற்போது அந்தோணியார் மண்டபம்) கூடி வரவு செலவு கணக்குகளைக் காட்டி மீதி இருந்த பணத்தைப் பங்குத் தந்தை அருட்திரு அலங்காரம் அடிகளிடம் ஒப்படைத்தனர். அலங்காரம் சுவாமிகளிடம் இருந்த அங்கியின் பைகளில் ஜெபமாலையும் தன்னைத் தானே வருத்திக்கொள்ள ஐந்து மணிகளையும் வைத்திருப்பார். சரக்குக் கிட்டங்கி போல் நீர் வடியும் அசிங்கமான உப்புச் சுவர்களும்
பொத்தல்களுமாய் இருளடைந்து கிடந்த ஆலயத்தைப் புதிதாய் மாற்றியமைத்தார். முன் இருக்கும் வளைவு ((Arch) பெரிதாகவும் அதன் மீது "Sancta Maria Ora Pro Nobis எனும் வசனத்தைப் பொறித்தார். கோயில் விசாலமாக்கப் பட்டது. ஆறு கதவுகளில் வண்ண வண்ணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. ஜன்னல்கள் பொருத்தப்பட்டன. குண்டு விழுந்திருந்த தளம், "மொசெய்க்" ஆக்கப் பட்டது. பல்வேறு அறப்பணிகளையும் ஒரு வாகன வசதியோ தொலைபேசி வசதியோ இல்லாமல் கால்நடையாகச் செய்து முடித்த இப்புனிதரின் பாதம் பதிந்த வளாகத்தில் அன்னாருக்கு ஒரு சிலை வைத்தல் தகும்.


9-ஆவது பவனி


1955--ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம், நாள் அன்னையின் திருச்சுருபம் நம் நகரை அடைந்த 400--ஆம் ஆண்டு நினைவாக இத்தேரோட்டம் நடைபெற்றது. பங்குத் தந்தை அருட்திரு எஸ்,எம். தல்மெய்தா, ஆயர் மேதகு தாமஸ், மதுரை ஆயர் மேதகு லெயோனார்டு அடிகள், கோட்டாறு ஆயர் மேதகு ஆஞ்சிசாமி ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தனர்.


10--வது பவனி


1964--ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம் நாள் ஆயர் தாமஸ் பர்னாந்துஅவர்கள் குருத்துவம் பூர்த்தியானதை கவுரவிக்க இத்தேரோட்டத்தின் 9--ஆம் பவனியை நடத்தினார். எஸ்.எம். தல்மெய்தா அப்போதும் குருவாயிருந்தார்.


11--வது பவனி


1977--ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம் நாள் அன்னை காட்சி தந்த 60--ஆம் ஆண்டு மீண்டும் இத்தேரோட்டம் நிகழ்ந்தது. ஆலய பங்குத் தந்தை அருட்திரு. ஜோப் டிரோஸ், தல ஆயர் திரு அம்புரோஸ், திருச்சி ஆயர் மேதகு பர்னாந்து வருகை தந்து சிறப்பித்தனர்.


12--வது பவனி


1982--ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம் நாள் தேவமாதா, இரக்கத்தின் மாதா, படகுகளின் ராக்கினி (தஸ்நேவிஸ்) பரதர் மாதா என்று பல நாமங்களால் அழைக்கப்பட்டு வந்த நம் அன்னையை, 1582--ஆம் ஆண்டில் கற்களால் புதிதாகக்கட்டி முடிக்கப் பட்ட புனித பவுல் ஆலயத்தில் எழுந்தேற்றம் செய்வித்து, உரோமை மாநகரில் காட்சி தந்த பரிசுத்தப் பனிமய மாதாவின் திருநாளாகிய ஆகஸ்ட் 5--ஆம் நாள் முதல் பலிபூசை நடத்தி, "பனிமய மாதா" என திருநிலைப்படுத்திய 400--ஆம் ஆண்டு நிறைவாக இத்தேரோட்டம் நடைபெற்றது.  இப்படி 400 ஆண்டு நிறைவிலே தான் ஜூலை மாதம் 3--ஆம் நாள் அன்னையின் ஆலயம் பரிசுத்த பாப்பரசர் 2--ஆம் அருள் சின்னப்பரால் "பசிலிக்கா" எனும் பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டது. 1806 முதல் 1947 ஆம் ஆண்டு வரை ஏழுகடல் துறை பரத ஜாதித் தலைவர்களே, "மரியே, மாதாவே" எனத் தேர்வடம் தொட்டுக் கொடுத்துள்ளனர். இதன்பின் நிகழ்ந்த 4 தேரோட்டங்களிலும் தலைவனும் இல்லை, எவ்விதக் கமிட்டியோ, குழுவோ அமைக்கப்படவும் இல்லை. இவை அன்னையின் மகிமைக்காகப் பொதுமக்களால் பக்தியுடன் நடத்தி வைக்கப்பட்டன.


13--வது பவனி


1982--ஆம் ஆண்டிற்குப் பின், தங்கத்தேர் அநேகமாக மறந்துவிடப் பட்ட நிலையில் உலகெங்கிலும் யூபிலி ஆண்டாகிய 2000-ஆம் ஆண்டினைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில், மூல தெய்வமாகிய நமது அன்னையைத் தங்கத்தேரில் அமர்த்தி நகர்வலம் வரச் செய்து சாலச் சிறந்ததாய் இருக்குமே என்ற எண்ணம் மக்களிடையே உருவாயிற்று.  மேதகு ஆயரவர்கள் ஆலோசனையில், பல குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்திற்கும் முதன்மைக்குரு அருட்திரு, லொரன்சோ தலைமையேற்றார். தேரின் அதிமுக்கிய பாகங்களாகிய தேரினைத் தாங்கி நிற்கும் குறுக்கு விட்டங்களும், அதனைத் தாங்கும் சக்கரங்களும் தீர ஆய்ந்து சரி செய்யப்பட்டன. தேரின் தூண்கள் மற்றும் இதர பாகங்களை எல்லாம் சரி செய்து அழகு படுத்த ஒரு தனிக்குழு செயல்பட்டது. ஆலயத்திற்குள் அன்னையின் பின்னாலிருந்த ஓவியம் அழகுறத் திருத்தி அமைக்கப்பட்டது. திருப்பயணிகளுக்காகச் சென்னையிலிருந்து சிறப்பு ரயில்களூம், கொழும்பில் இருந்து சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்ட்டன. மாவட்டம் முழுவதும் அரசாங்க விடுமுறை அளிக்கப்பட்டது.  தலைமை ஆயர் மேதகு, பீட்டர் பர்நாந்து அவர்களின் முயற்சியால்  தேர்த்திருவிழாவை சிறப்பிக்கும் முகமாகத் திருச்சியில் நடைபெற இருந்த  தென்னக ஆயர்களின் பேரவைக் கூட்டம் தூத்துக்குடியில் நடத்தப்பட்டதால் திருத்தந்தையின் இந்திய தூதரான மேதகு லாரன்ஸோ பஸ்திலேரி ஆண்டகையும்,  15--க்கும் மேற்பட்ட ஆயர்களும் வருகை தந்து திருப்பலி நிகழ்த்தி விழாவின் சிறப்புக்குச் சிகரம் வைத்தனர்.


நவநாட்காலங்களில் எந்நேரமும் ஆலயமும் ஆலய வளாகமும் மக்கள் நிறைந்து காணப்பட்டது. ஆகஸ்ட் 4--ஆம் நாள் இரவு 12 மணியளவில் அன்னை பொன் தேரில் கொலுவமர்த்தப் பட்டாள். அந்நேரத்திலிருந்தே, நகரின் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் அன்னையின் ஆலயம் நோக்கி வந்தனர். கொடி மரத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட சிறப்பு மேடையில் திருத்தூதர் 3--ஆம் திருப்பலி நிறைவேற்றி சரியாக 8 மணிக்குத் தேர்ப்பவனியைத் துவக்கி வைத்தார். 5லட்சம் மக்கள் வெள்ளத்தில் அசைந்து
முன்னேறிய அழகுத்தேர் நான்கு வீதிகளின் வழியாக பவனியை முடித்துக் கொண்டு பகல் 12 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது.


14--வது பவனி


2007--ஆம் ஆண்டு பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது. அன்னையின் திருச்சுருபம் 1555--ஆம் ஆண்டு நம் நகரை வந்தடைந்ததை யொட்டி 450 ஆம் ஆண்டு நிறைவாகவும், தமது அன்னையின் ஆலயம் எழுப்பப் பட்ட 425--ஆம் ஆண்டின் நிறைவு ஆண்டாகவும், நமதன்னைக்குச் செதுக்கப்பட்டச் சித்திரத் தேரின் 200--ஆம் ஆண்டு நிறைவு நன்றியாகவும், நமது பனிமய மாதா அன்னையின் ஆலயம் திருத்தந்தையவர்களால் பேராலயமாக உயரத்தப்பட்ட வெள்ளி விழா ஆண்டாகவும் தொடர் ஜூபிலிகளின் பெருவிழாவாகையால் இவ்வாண்டில் தேவத்தாயை நன்றியுடன் தங்கரதத்தில் நகர்வலம் எடுத்து வர முடிவு செய்யப்பட்டது. இத்தேர் பவனி பனிமய அன்னையின் பதிநான்காவது மகோன்னத தேரோத்சவமாகும்.


--Geetha Sambasivam 08:13, 3 செப்டெம்பர் 2012 (UTC)




Contributors

Geetha Sambasivam

This page was last modified on 3 September 2012, at 08:13. This page has been accessed 1,594 times.