வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 1 தொடர்ச்சி

From மரபு விக்கி

Jump to: navigation, search

 1655-ஆம் ஆண்டில் டச்சுப்படையின் தளபதியாக இருந்த வன்கோவன்ஸ் என்பவர் போர்த்துக்கீசியப் படையினரை தோற்கடித்துத் தூத்துக்குடியைக் கைப்பற்றினார். இதனால் போர்த்துக்கீசியப் படை வீரர்கள் தூத்துக்குடி மற்றும் கடலோர ஊர்களிலிருந்து வெளியேறினர். முத்துக்குளித்துறை முழுவதும் டச்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது.


அடுத்து வந்த டச்சுத் தளபதி வன்ரீஸ் என்பவர் தூத்துக்குடியின் பிரதான பகுதியைச் சுற்றிக் கோட்டைச் சுவர் எழுப்பினார். இப்போது புனித இராயப்பர் ஆலயமும், இயேசு சபையினரின் தலைமை இல்லமும், அதனைச் சேர்ந்த பனிமய மாதா ஆலயமும் டச்சுக்கோட்டைக்குள்ளேயே இருந்தன. எனவே டச்சுப்படையினர் புனித இராயப்பர் ஆலயத்தைத் தங்களின் தங்கும் விடுதியாக மாற்றினர். உள்ளே போர்க்கருவிகளையும் குவித்து வைத்தனர். பனிமய மாதா ஆலயத்தைத் தங்களின் கால்வீனிய மத வழிபாட்டுத் தலமாக மாற்றினர். இந்நிலையில் பரதகுலத் தலைவர்கள் புனித பனிமய மாதாவின் அற்புத சுருபத்தை சிவந்தாகுளம், கொற்கை போன்ற இடங்களுக்கு எடுத்துச் சென்று அதனைப் பாதுகாத்து வந்தனர்.


டச்சுக்காரர்களின் மதவெறி


மதவெறி கொண்ட டச்சுக்காரர்கள் தூத்துக்குடி வாழ் பரதமக்களைத் தங்களின் கால்வீனிய மத வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறு பலவந்தப் படுத்தினர். இந்த முயற்சியில் டச்சு மத போதகரான பல்டேயுஸ் என்பவர் மிகத் தீவிரமாக இறங்கினார். ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் படு தோல்வி அடைந்தன. பரத குல மக்கள் கால்வீனிய மத வழிபாடுகளை மிகுந்த மனத்துணிவோடு புறக்கணித்துவிட்டனர். தோல்வி கண்ட பல்டேயுஸ் பெரும் ஏமாற்றத்துடன் இலங்கைக்குத் திரும்பி விட்டார். இதனால் கோபமடைந்த டச்சுப்படை வீரர்கள், பழிக்குப் பழி வாங்கும் நோக்குடன், முத்துக்குளித்துறை ஊர்களில் பணியாற்றி வந்த இயேசு சபைக் குருக்களை கடலோர ஆலயங்களிலிருந்து வெளியேற்றி உள்நாட்டுப் பகுதிகளுக்கு விரட்டியடித்தனர். மேலும் நாகப்பட்டினம், வேம்பாறு, வைப்பாறு, மணப்பாடு போன்ற ஊர்களிலிருந்த அழகிய மாதா ஆலயங்களை இடித்துத் தரைமட்டமாக்கினர். இறுதியில் தூத்துக்குடியில் டச்சுக்கோட்டைக்குள்ளிருந்த இயேசு சபைத் தலைமை இல்லத்தையும், அதனோடு இணைந்த பனிமய மாதா ஆலயத்தையும் 1695-ஆம் ஆண்டில் ஒருநாள் இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு, அந்த இடத்தைத் தங்களின் இனத்தவரை அடக்கம் செய்யும் கல்லறைத் தோட்டமாக மாற்றினர். இதுவே இன்று வரை "கிரகோப்" என்று அழைக்கப்படுகிறது. "கிரகோப்" என்றாலே டச்சு மொழியில் கல்லறைத் தோட்டம் என்றுதான் பொருள்.


டச்சுக்காரர்களிடமிருந்த மதவெறியினால் அவர்களின் வணிகம் மிகவும் நலிவடையத் தொடங்கியது. கடலோர மக்களின் வெறுப்புக்கும், பகைக்கும் அவர்கள் ஆளாகினர். தங்களின் செயல்பாடுகளை வளப்படுத்த தூத்துக்குடி கத்தோலிக்க மக்களின் ஆதரவு மிகவும் தேவை என்பதை டச்சு அதிகாரிகள் உணர்ந்தனர். கடல் போக்குவரத்துக்கு பரதகுலத் தலைவர்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனக்கண்டனர். ஆகவே டச்சுக்காரர்கள் தங்களின் மத வெறியைக் குறைத்துக்கொள்ள முன் வந்தனர். 1695-ஆம் ஆண்டில் தூத்துக்குடிக்கு வந்த மதத் தலைவர் புதிய இடிந்த ஆலயங்களையெல்லாம் மீண்டும் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார்.


மாடியில் குடியிருப்பு


அச்சமயத்தில் தூத்துக்குடியின் மதகுருவாக இருந்தவர் இயேசு சபையைச் சேர்ந்த விஜிலியுஸ் சவேரியுஸ் மான்சி என்பவர். டச்சுக்காரர்களால் வெளியேற்றப்பட்ட தூத்துக்குடிக்கு வெளியேயுள்ள தூப்பாஸ் பட்டி என்ற இடத்தில் புனித இஞ்ஞாசியாரின் பெயரால் குடிசைக்கோவிலும், பங்கு இல்லமும் அமைத்து அங்கு கால்நடையாக வரும் தூத்துக்குடி மக்களுக்கு வழிபாடுகள் செய்து வந்தார். தூத்துக்குடியின் பங்கு நிர்வாகமும் அங்கு நடந்தது. ஆனால் டச்சுக்காரர்கள் தங்கள் மதவெறியைத் தணித்துக் கொண்ட பின்னர் விஜிலியுஸ் மான்சி மீண்டும் தூத்துக்குடிக்கு வந்து கிரகோப் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே வந்து எளிய முறையில் ஒரு பங்கு இல்லத்தை அமைத்து அங்கே குடியிருந்தார். சீர்குலைந்து கிடந்த இராயப்பர் ஆலயத்தையும் கட்டியெழுப்பி அதுவே மீண்டும் தூத்துக்குடியின் பங்கு ஆலயமாக மாறியது. கொற்கையில் நாடோடியாக இருந்த பனிமயத்தாயின் அற்புத சுருபத்தை மீண்டும் தூத்துக்குடிக்கு வரவழைத்து அதனைத் தனது இல்லத்தின் மேல்மாடியில், பெட்டகப்பீடம் ஒன்று செய்து உள்ளே வைத்துப் பாதுகாத்து வந்தார். புனித இராயப்பர் பங்கு ஆலயம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் டச்சுக்காரர்களின அச்சுறுத்தல் எந்நேரமும் வரலாம் என்று அஞ்சியதால் அன்னையின் சுருபத்தை அவ்வாலயத்தில் அவர் விரும்பவில்லை. இவ்வாறு ஆண்டுக்கணக்காய்ப் பனிம்யத்தாய் பங்கு இல்ல மேல்மாடியில் குடியிருந்தாள்.


சுவாமி விஜிலியுஸ் மான்சி தினந்தோறும் இரவில் நித்திரைக்குச் செல்லும் முன்னர் பனிமயத் தாயின் சுருபத்திற்கு முன்னால் தரையில் மண்டியிட்டு தனது இல்லப் பணியாளர்கள் அந்தோணி, அருளப்பன் ஆகியோருடன் செபமாலை செபிப்பது வழக்கம்.


இடி விழுந்தது


பனிமய அன்னைக்கு அழகியதோர் கற்கோவில் புதிதாக எழுவதற்குக் காரணமாக இருந்த அந்த அதிசய நாள் நெருங்கி வந்தது. அது 1707-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அன்று இரவில் இடியும், மின்னலும் கூடிய பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. சுவாமி விஜிலியுஸ் மான்சி வழக்கம் போல் அன்னையின் சுருபமிருந்த பெட்டகப் பீடத்தில் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, தரையில் மண்டியிட்டு செபிக்க ஆரம்பித்தார். வெளியே இன்னமும் பலத்த மழை! தொலைவில் இடியோசையும் கேட்டது.


பனிமயத்தாயின் சுருபத்திற்கு முன்னால் சுவாமி விஜிலியுஸ் மான்சி ஏற்றி வைத்திருந்த மெழுகு வர்த்தி திடீரென அணைந்தது. அது நள்ளிரவு கடந்து திங்கள் கிழமை ஆரம்பிக்கும் நேரம். மெழுகு வர்த்தி அணைந்ததும் சுவாமி விஜிலியுஸ் மான்சி தரையிலிருந்து எழுந்தார். விளக்கு ஒன்றைக் கொண்டு வருமாறு தனது பணியாள் அந்தோணியிடம் கேட்பதற்காகத் தான் மண்டியிட்ட இடத்திலிருந்து சிறிது நகர்ந்தார். அதே சமயத்தில் இல்லத்தின் கூரையைக் கிழித்துக்கொண்டு பயங்கரமான ஓர் இடி பனிமய அன்னையின் சுருபத்தின் மீது விழுந்தது. சுவாமி விஜிலியுஸ் மான்சி இடியின் அதிர்ச்சியில் உணர்வற்றுப் போனார். அவர் மீண்டும் தனது சுய நினைவுக்கு வந்ததும், அங்கு நடந்திருந்த மாபெரும் அற்புதத்தைக் கண்டார். அன்னையின் சுருபத்தின் மீது இடி விழுந்தும் அது யாதொரு சேதமுமின்றி அப்படியே இருந்தது. இடியின் கந்தகப் புகையால் மட்டும் அது கருநீல நிறமாக மாறியிருந்தது. மேலும் அன்னையின் சுருபத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்த சுவாமி விஜிலியுஸ் மான்சி இடியிலிருந்து தப்பி உயிர் பிழைத்திருப்பதே அன்னை செய்த மற்றொரு அற்புதம்! அன்னையின் பீடத்திலிருந்த மெழுகுவர்த்தி மட்டும் அணையாதிருந்தால், அவர் தான் மண்டியிட்டிருந்த அதே இடத்தில் இடிக்குப் பலியாகி இருப்பார். மெழுகுவர்த்தி அணைந்ததே அன்னை செய்த அற்புதமே என்பதை சுவாமி விஜிலியுஸ் மான்சி உணர்ந்து கொண்டார். அங்கு விழுந்த இடியானது அவர் சுவரில் தொங்க விட்டிருந்த சில புனிதர்களின் படங்களையும், கதவு நிலைகளையும் உடைத்து சேதப்ப்படுத்தியிருந்தது. அவருடைய பணியாளர்கள் இருவரும் இடியின் அதிர்ச்சியினால் உணர்விழந்து தரையில் விழுந்து கிடந்தனர்.


தனது உயிர் காத்த பனிமய அன்னைக்குத் தனது நன்றியின் சின்னமாகவும், அன்னை செய்த அற்புதத்தைக் காலமெல்லாம் உலக மக்களுக்குப் பறை சாற்றிப் பனிமய அன்னைக்குப் பென்னம்பெரிய புதியதோர் கற்கோவிலை எழுப்ப சுவாமி விஜிலியுஸ் மான்சி அன்றே தீர்மானித்துக் கொண்டார்.



மின் தமிழ் நண்பர் ராமசாமி கூறுவது:

பனிமய மாதா கோவிலில் ஒரு சிறப்பம்சம். மதம் மாறிய இந்துக்கள், மாறிய பின்னும் இந்துக்கள் கோவிலுக்கும் சென்று வருவதை நிறுத்தவில்லை. காரணங்களை யோசித்து அந்தக் குறைபாடுகளையும் நீக்க முற்பட்டது கிறிஸ்துவ நிர்வாகம் ! கோவிலின் உட்பறத்தில் முழங்காலிட்டு துதித்து எழுந்தபின், அருகில் உள்ள சுவர் முழுவதும் கைக்கெட்டும் உயரத்தில் சிறு மாடக்குழியை அமைத்து அதில் புனித நீரை நிறப்பி வைத்தனர். முழங்காலிட்டு எழும் பக்தர்கள், அதிலிருக்கும் புனித நீரை பயபக்தியுடன் தொட்டு பொட்டு / திருநீறு ஆகக் கருதி நெற்றியில் இட்டுக் கொள்வர். இதை இன்றும் காணலாம். இது போன்று பிற மாதா கோவில்களில் உள்ளதா என்று தெரியவில்லை..


--Geetha Sambasivam 09:31, 24 ஜூலை 2012 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 24 July 2012, at 09:32. This page has been accessed 1,738 times.