வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

திணை இசை சமிக்ஞை.

From மரபு விக்கி

Jump to: navigation, search

 மறைந்த வ.அய்.சுப்பிரமணியன் பற்றி தமிழவன்



மறைந்த வ.அய். சுப்பிரமணியன் பற்றி என்னைப்போல தமிழ்ப் பேராசிரியனாக வேலை பார்த்த பலரிடமும் குறைந்த பட்சம் ஒரு
VIS.jpg
கதையாவது இருக்கும். என்னிடம் பல கதைகள் உள்ளன. ஏனென்றால் நான் அவரை எப்போது முதன் முதலில் சந்தித்தேன் என்பது இன்றும் ஞாபகத்தில் உள்ளது. சரியாக நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மதிய நேரத்தில்.


எம்ஜியாரை சபைகளில் எல்லோரும்-துணைவேந்தரில் இருந்து பியூன் வரை புரட்சித்தலைவர் என்றே அழைத்தார்கள். ஆனால் ‘எம்’ என்பதற்கும் ‘ஜி’ என்பதற்கும் தமிழைக் கண்டுபிடித்து "ம.கோ. ராமச்சந்திரன் அவர்களே" என்று வ.அய். ஒரு பெரிய சபையில் அழைத்தபோது எம்ஜியாரும் சபையும் ஸ்தம்பித்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


அதுபோல் வ.அய். அவர்களுக்கு இரண்டாவது முறையாக துணைவேந்தர் பதவி நீடிப்புக்கொடுத்தபோது என்று நினைக்கிறேன். வ.அய். சென்னையில் துணைவேந்தருக்குரிய வேலைகளைச் செய்யச் சென்றபோது எம்ஜியாரைச் சந்திக்கக் காத்திருக்க வேண்டி வந்ததாம். காத்திருக்காமல் தாம் வந்தவேலையைப் பற்றித் தாளில் எழுத்துமூலம் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார் என்பார்கள்.


தமிழகத்தில் ஒவ்வொரு பேராசிரியரும் துணைவேந்தராவதற்கும் ஒவ்வொரு எழுத்தாளரும் சாகித்திய அக்காதமி பரிசு பெறுவதற்கும் ஆசைப்படுவார்கள். ஒருமுறை பெயர்பெற்ற மராத்திய மொழி எழுத்தாளர்-ஆங்கிலப்பேராசிரியர் பாலசந்திர நெமாடேவிடம் என் முன்னிலையில் இன்னொரு பேராசிரியர் "நீங்கள் எப்போது துணைவேந்தர் ஆவீர்கள்?" என்று கேட்டார். நெமாடேக்குக் கோபம் வந்துவிட்டது. "என்னய்யா துணைவேந்தர் ஆவதற்கு அலைகிறீர்கள்?" என்று கேட்டுவிட்டு, "துணைவேந்தர் பதவி சரியான ஒரு பேராசிரியர் பதவியைவிட அவ்வளவு பெரிய பதவியா என்ன?" என்று கேட்டார். கடைசிவரை அவர் துணைவேந்தராகவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள். மராத்திய இலக்கியத்தில் என்றும் பாலசந்திர நெமாடே பெயர் இருக்கும்.


பேராசிரியர்கள் பலர் துணைவேந்தர் ஆனவுடன் தம் நடையுடைபாவனைகளை மாற்றுவது வேடிக்கையாக இருக்கும். பல துணைவேந்தர்களைப் பார்த்திருக்கிறேன். சுமார் 25 பேராவது எனக்குத் தெரிந்தவர்கள் இந்தியாவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் ஆனார்கள். அதில் இரண்டுபேர் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவர்கள். எச். நரசிம்மையா என்ற காந்தியவாதி பெங்களூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானபோது புட்டபர்த்தி சாய்பாபா செய்யும் ஆச்சரியமான தெய்வீக காரியங்களை ஆராயும் விஞ்ஞானக்குழுவை நியமித்தார். அதில் பெரியாரின் சீடரான தமிழர்-வழக்கறிஞர் தருமலிங்கமும் இருந்தார். எச். நரசிம்மையா மிகுந்த செல்வாக்கானவரான கல்வியாளர் என்றாலும் மிகவிரைவில் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


இன்னொருவர் வ.அய். அவருடைய பல்கலைக்கழகத்திலும் பணி செய்பவர்கள் மத்தியில் பிரச்னை வந்தது. அப்போது தம்முடைய ராஜினாமாக் கடிதத்தை எழுதி ஓரிடத்தில் வைத்து யார் வேண்டுமானாலும் அதை ஆளுனருக்கு எடுத்து அனுப்பலாம் என்று வைத்திருந்ததாகச் சொல்வார்கள்.


எனக்கு நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் நான் தமிழ் எம்.ஏ. முடித்துவிட்டு ஒரு கல்லூரியில் வேலைதேடிச் சென்றிருந்தேன். அந்தக் கல்லூரியின் துறைத்தலைவர் என்னிடம் "உனக்கு வேலை தருகிறேன், ஆனால் உன் ஆசிரியராக இருந்த வ.அய்.-இடமிருந்து ஒரு பரிந்துரை பெற்றுவர வேண்டும்" என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது; எனக்குத் தகுதியி்ல்லை என்றால் அல்லவா நான் பரிந்துரைக்கடிதம் கொண்டு வரவேண்டும் என்று நினைத்து வருத்தப்பட்டேன். எனினும் வேலை பெற்றே ஆக வேண்டிய நிலையில் இருந்ததால் அவரிடம், "வ.அய். எனக்கு மூன்று மாதங்களே துறைத்தலைவராக இருந்தார். இப்போது அவருக்கு அடுத்தபடியாக, ச.வே.சுப்பிரமணியம் துறைத்தலைவராக உள்ளார், அவரிடம் பரிந்துரை பெறவா?" என்று கேட்டேன். அதற்கு அவ, "இல்லையில்லை, வ.அய்.-தான் உனக்குப் பரிந்துரை தரவேண்டும்" என்றார். எனக்கு வ.அய். என்றால் எப்போதும் ஒரு நடுக்கம். நட்புகாட்டக் கூடியவர் அல்லர். எப்படி அவரை அணுகுவது என்று பயந்தபடி அப்போது வ.அய். மொழியியல் துறைத்தலைவராக இருந்த கேரளப் பல்கலைக்கழகம் செயல்பட்டுக் கொண்டிருந்த காரியவட்டம் சென்றேன். பயந்தபடி அவர் அறைக்குப் போய் விஷயத்தைச் சொன்னேன். சரி, நில் என்று கூறிக்கொண்டு உள்ளே சென்றார். சற்றுநேரத்தில் என் கையில் ஒரு பரிந்துரைக்கடிதம் இருந்தது. நன்றிகூறி விட்டுத் திரும்பிப்பார்க்காமல் நடந்தேன்.


வழியில் கடிதத்தைப் படித்ததும் எனக்கு வேலை கிடைக்குமோ என்னமோ என்று சந்தேகம். நேராகப் பயணம் செய்து, எனக்கு வேலை தருவதாகவும் வ.அய். பரிந்துரை ஒன்றே அதற்கான உறுதிப்பத்திரம் என்றும் தெரிவித்திருந்த கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரை அணுகிக் கடிதத்தைக் கொடுத்தேன். வேலை இல்லை என்று சொல்லிவிடுவாரோ என்ற கவலையோடு நின்றேன். அவர் வாயிலிருந்து என்ன வரப்போகிறதென்று கேட்கக் காத்தபடி நின்றேன். அவர் வாயிலிருந்து அந்தச் சொற்கள் வந்தன.


"உனக்கு வேலை தருகிறேன்."


எனக்கு என்னையே நம்பமுடியவில்லை. வ.அய். கொடுத்த பரிந்துரையில் "இந்த ஆளை எனக்குத் தெரியும். ஏனென்றால் அப்படி இவர் என்னிடம் கூறுகிறார். ஆனால் இவர் கூறுகிறபடி நான் தமிழ்த்துறையில் மூன்று மாதங்கள்தான் தலைவராக இருந்தேன்."


இதுதான் அந்தப் பரிந்துரை. ஆங்கிலத்தில். இந்தப் பரிந்துரையால்தான் நான் என் முதல் வேலையைப் பெற்றேன். இந்தக் கடிதத்துக்குப்பின்னால் ஒரு ரகசியம் இருந்தது என்பது எனக்குப் பிறகுதான் தெரிந்தது.


அதாவது எனக்கு வேலை தந்த துறைத்தலைவரின் முனைவர் பட்ட ஆய்வேடு அப்போது வ.அய்.-இடம் இருந்தது. இந்தத் துறைத்தலைவர் ஒரு பாதிரியார். கதை இவ்வளவுதான்.


வ.அய். பற்றி அந்தப் பல்கலைக்கழகத்தில் வேலைசெய்த பலர் பல கதைகளைச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இந்த மாதிரி நிகழ்ச்சிகள் மூலம் ஒரு eccentric மனிதராக வ.அய். கருதப்பட வாய்ப்புள்ளது.


தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபோது முதல் துணைவேந்தராக அவர் நியமிக்கப்பட்டதற்கு இந்த மனிதர் வெளிநாட்டில் படித்துவந்த தமிழ் எம்.ஏ என்பது மட்டும் காரணமல்ல. அனைத்துலகத் தமிழ் ஆய்வாளர்களோடு தொடர்புடையவராகவும் இவர் இருந்தார். அதுபோல் இவர் ஒரு நிறுவன ஸ்தாபகர் என்பது முக்கிய காரணம். அனைத்துலக தமிழ் ஆராய்ச்சிக்கான அமைப்பு உருவாக்கப்பட்டபோது இவர் அதில் முக்கியமான ஓர் உறுப்பினர். IATR (International Association of Tamil Research) என்பது அந்த அமைப்பு. அன்றும் சரி இன்றும் சரி, ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் வல்ல தமிழ்ப் பேராசிரியர்கள் ஒரு சிலரே இருந்தனர். அவர்களில் ஒருவர் வ.அய்.


தமிழாராய்ச்சி என்பது குண்டுச்சட்டியில் குதிரையோட்டுவதாக அன்றும் இன்றும் உள்ளது. அன்று அண்ணா போன்ற அரசியல்வாதிகள் முக்கியமான மனிதர்களை அறிந்துகொள்ளும் வல்லமை உள்ளவர்கள். வ.அய். திராவிடக்கட்சித்தனமான நபர் அல்ல. இலக்குவனார் போலவோ, அல்லது பாவாணர் போலவோ ஒருபக்கம் சாய்ந்த தமிழ்ச்சிந்தனை மட்டும் உள்ளவர் அல்ல. இத்தகையவர்களைப் பொறுப்பான பதவிகளில் யாரும் கொணர மாட்டார்கள். இந்தியாவின் பிற மொழியினரும் ஏற்கத்தக்கவரைத்தான் தமிழக அரசியல் தலைவர்களும் விரும்புவார்கள்.


வ.அய். அறிவியல்ரீதியாக திராவிடச்சிந்தனையை நிலைநாட்ட முயன்றார். பாரதீய ஜனதாக்கட்சியைச் சார்ந்த ஓர் மத்திய அமைச்சர், வ.அய். திராவிடப்பல்கலைக்கழகம் வரவேண்டும் என்று கேட்டபோது, அதன் பெயரை மாற்றினால் உதவுவதாகக் கூறினார். அதற்கு வ.அய். கூறிய பதில் பிரபலமானது: "தேசிய கீதத்திலிருந்து நீங்கள் திராவிட என்ற சொல்லை நீக்கினால் நாங்கள் பல்கலைக்கழகத்தின் பெயரை நீக்கலாம்" என்றிருக்கிறார்.


அதன் பின்னர் ஆந்திர அரசாங்கத்தின் உதவியுடன் திராவிடப்பல்கலைக்கழகம் உருவாகச் செயல்பட்டிருக்கிறார். ஆனால் காசி பாண்டியன் என்ற என்.டி. ராமராவ் அரசாங்கத்தின் தலைமைச்செயலரான தமிழர் உதவியிராவிட்டால் வ.அய். திராவிடப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியிருக்க முடியாது. நான் இரண்டு ஆண்டுகள் திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையைத் தோற்றுவித்து அங்கு பணியாற்றியபோது அங்குள்ள செக்யுரிட்டிகள் ஓரிருவரைத் தவிர யாருக்கும் வ.அய். பற்றித் தெரிந்திருக்கவில்லை.


திருவனந்தபுரத்தில் திராவிட மொழியியல் நிறுவனம் ஒன்றை நிறுவ அதிகம் உழைத்தவர் இந்த மனிதர். பலருக்குத் தெரியாத விஷயம் கன்னடப்பல்கலைக்கழகம் ஹம்பியில் உருவாகவும் வ.அய். கன்னடப் பேராசிரியர் சி்தானந்த மூர்த்தி போன்றவர்களுக்கு உதவிய செய்தி.


அதிகமான தமிழ்ப்பற்று உள்ளவர் என்று கூறுவதைவிட திராவிடப்பற்று உள்ளவர் வ.அய். என்று கூறலாம். அதிலும் திராவிட அரசியல் பற்றிய அக்கறை இல்லாதவர் வ.அய். வ.அய். அவர்களின் முனைவர் பட்ட மாணவரான இரா. இளவரசின் தனித்தமிழ் ஆர்வத்தை உள்ளூர கேலியோடுதான் வ.அய். பார்த்தார் என்றே எனக்குத் தோன்றியது.


வ.அய். சிறந்த ஆய்வுகளை உருவாக்காவிட்டாலும் ஆய்வாளர்களை உருவாக்கினார். சங்க இலக்கிய ஆய்வில் சிறப்பாகச் செயல்பட்ட குளோரியா சுந்தரமதியும் நாட்டுப்புறவியலில் வ.அய். பயிற்றுவித்த ப.ரா. சுப்பிரமணியனும் முக்கியமானவர்கள். இரு தனியான துறை வல்லுநர்களைத் தன்னால் உருவாக்க முடியும் என்று வ.அய். அவர்களின் ஆற்றலை விளக்குபவர்களாவர் இவர்கள். மற்றபடி பலரை மொழியியலின் பல்வேறு பிரிவுகளில் உருவாக்கினார் வ.அய். மாணவர்கள் எழுதிய நூல்களைத் தம் பெயரில் போடும்மோசடி எல்லாம் வ.அய். அறியாத கலை.


வ.அய். தொடங்கிய பல நிறுவனங்களில் ஒன்று திராவிடப்பல்கலைக்கழகம். இது இன்று குழப்பத்தில் செயல்படுகிறது. வ.அய். விரும்பியதற்கு மாறாக கம்ப்யூட்டர் பட்டப்படிப்பும் பி.டெக்.-கும் இங்கு புகழ்பெற்ற துறைகள். தமிழ், கன்னடம், போன்ற மொழிகள் பெயரளவில் உள்ளன. தம் கனவு இங்கு பாழாவதை வ.அய். தம் கண்களாலேயே கண்டார். ஒவ்வொரு ஆண்டும் அப்பல்கலைக்கழகம் உருவான நாளில் ஆட்டோவில் வந்து தூரத்தில் நின்று பல்கலைக்கழகத்தைப் பார்த்தபடியே "திருப்பதியை தமிழன் இழந்ததுபோல், இந்தப் பல்கலைக்கழகத்தையும் இழந்துவிட்டானே" என்று யாராவது ஒரு தமிழனான செக்யுரிட்டியைப் பார்த்துக் கூறி வருந்திவிட்டு உடனேயே அங்கிருந்து புறப்பட்டுவிடுவாராம்.


நான் அங்கிருந்த சுமார் இரண்டரை ஆண்டும் இப்படி வ.அய். அவர்கள் வந்துபோகும் செய்தி என் காதில் விழுந்தது. திராவிடக்கட்சிகள் தமிழகத்தில் திராவிட ஆய்வுக்காக எதையும் செய்யவில்லை. ஆய்வுரீதியாக அதற்கு வழிகாட்டக்கூடிய பிற மொழிகள் தெரிந்த தமிழ்ப்பேராசிரியர்கள், தமிழக அரசியல்வாதிகளையும் சுற்றி வருபவர்கள் யாரும் இல்லை. எனவே வ.அய். எப்போதும் திராவிட ஆய்வு நிறுவனங்களைத் தமிழகத்துக்கு வெளியிலேயே உருவாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், எந்தப் பிற நிறுவனமும் தமிழகத்துக்குள் செயல்படமுடியாது என்ற போதத்தை அவருக்குத் தந்திருக்கலாம். அதனாலேயே கேரளத்தையும் ஆந்திரத்தையும் நம்பினார் வ.அய். ஆனால் ஆந்திரத்தில் தொடங்கப்பட்ட திராவிடப்பல்கலைக்கழகத்தில் பெயரில் மட்டும் ‘திராவிட’ காணப்படுகிறது.


திராவிடப்பல்கலைக்கழகம் 2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வ.அய். அவர்களுக்கு டி.லிட். பட்டம் கொடுத்தது. தெலுங்கரான பி.எச். கிருஷ்ணமூர்த்திக்கு டி. லிட் பட்டம் கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தில் வ.அய்.-க்கும் கமில் சுவலபில்லுக்கும் கொடுத்து வைப்போமே என்று கொடுத்தார்கள். நானும் வ.அய்.-இன் சீடர்களான பலரும் அவர்
Kariavattom.png
அந்தப்பட்டத்தை நிராகரிக்கவேண்டும் என்று கருதினோம். அத்தகைய சூழ்நிலை. அவருடைய அத்தியந்த சீடர் ஒருவர் அவரிடம் எங்கள் கருத்தைத் தெரிவித்ததாகக் கூடச் சொன்னார். ஆனால் வ.அய். அப்பட்டத்தை மேடைமீதேறி வாங்கினார். அந்தப் பல்கலைக்கழகத்துக்குள்ளே கால்வைக்க மாட்டேன் என்று சொன்னவர், தம் வார்த்தையைக் காப்பாற்றுவார் என்று கருதியவர்கள் ஏமாந்தனர்.


படங்கள் - மலையாளக்கவிஞர் புதுச்சேரி ராமசந்திரனை வாழ்த்தும் வ.அய்., கேரளத்தில் அவர் அலுவலகம்.



நன்றி - முனைவர் திரு ந.கணேசன்.

தேதி - 09 - 03 -  2011

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 9 March 2011, at 07:19. This page has been accessed 2,399 times.