சோழர் கால சமயம்--பகுதி 4--சோழ கிரந்தம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எழுத்து: டாக்டர் பத்மாவதி


சோழ கிரந்தம்


கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழகத்தில் உள்ள குகைத் தளங்களிலும் காசுகளிலும் பானை ஓடுகளிலும் களிமண் தகடுகளிலும் பழங்காலத் தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் கிடைத்துள்ளன. இதனை பிராமி என்றும் தமிழி என்றும் அழைப்பர். இந்த வரிவடிவத்திலிருந்து தான் காலம் செல்லச் செல்ல மாற்றங்கள் ஏற்பட்டு இன்றைய வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது தமிழ் எழுத்து. பழந்தமிழ் எழுத்தாகிய தமிழ் வடிவத்தில் வளர்ச்சியடைந்து மாற்றம் ஏற்பட்டபோது அதிலிருந்து தமிழ் எழுத்து வடிவமும், வட்டெழுத்து வரி வடிவமும் தோன்றியது.


வடமொழியை எழுத கிரந்த எழுத்துக்களும் நாகரி எழுத்துக்களும் பயன்படுத்தப் பட்டு வந்தன. இந்த எழுத்து வடிவங்களும் பிராமி என்ற பழந்தமிழ் வரி வடிவத்திலிருந்து தான் தோன்றி வளர்ந்தன. கிரந்த எழுத்து தமிழ் நாட்டில் வளர்ந்தது.நாகரி எழுத்து வட இந்தியாவில் தோன்றி வளர்ந்தது என்கிறார் திரு. டி.வி. மகாலிங்கம். நாகரி என்ற புதிய எழுத்தின் வரவிற்குப் பிறகு இம்மண்ணில் தோன்றி வளர்ந்த கிரந்தம் மெல்ல மெல்ல மறையலாயிற்று.


தமிழ் பிராமி வரி வடிவம் தமிழ் மொழிக்காக உருவானது; வடமொழி எழுதுவதற்காக உருவானதல்ல.பின்னர் வடமொழியும் பிறமொழிகளும் தமிழ் எழுத்தைப் பயன்படுத்தத் துவங்கிய போது அந்தமொழிகளுக்குள்ள சிறப்பான ஒரு வடிவமும் தமிழில் தோன்றியது.*2


அசோகன் பிராமி எழுத்துக்களில் தான் அவனது பிராகிருத மொழி கல்வெட்டுகள் எழுதப் பட்டன. அந்த எழுத்தில் வர்க்க எழுத்துக்கள் உண்டு. அசோகனது கல்வெட்டுகள் தென்னிந்தியாவிலும், மாங்கி, சித்தாபுரம், பிரம்மிகிரி, ஏற்றகுடி, ராஜூல மந்தகிரி போன்ற இடங்களில் பிராகிருத மொழியிலேயே கிடைத்துள்ளன. காஞ்சியை ஆண்ட பல்லவர்களின் ஆரம்ப காலச் செப்பேடுகள் கூட பிராகிருத மொழியிலேயே உள்ளதால் அவர்களது நிர்வாக மொழி பிராகிருதமாகவே இருந்திருக்கிறது. சமஸ்கிருத மொழி கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் தான் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் காணப்பட்டது என்றும் பின்னர் படிப்படியாக பிற இடங்களுக்கும் பரவியது. இதன் பிறகும் நீண்ட நாட்களாக பிராகிருத மொழியின் தாக்கம் முற்கால சமஸ்கிருத மொழி கல்வெட்டுகளில் இடம் பெற்றிருந்தது. இறுதியாக கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் முற்றிலும் மறைந்தது. *3


பிராகிருத மொழி இலக்கணம் மிகவும் எளிதான அமைப்பை உடையது.அதனை உள்ளடக்கிய வடமொழி பிராகிருதம் ஆட்சி மொழியாக இருந்ததையும் நிறுத்தியது.*4


அசோகன் பிராமி எழுத்துக்களில் உள்ள "ம" என்ற எழுத்தின் வரிவடிவம் பல்லவனது மாமண்டூர் கல்வெட்டிலுள்ள "ம' என்ற கிரந்த எழுத்தின் வரி வடிவத்தோடு ஒத்துள்ளது. கி.பி. 7,8-ஆம் நூற்றாண்டுகளில் மிக அதிகமாகக் கிரந்தக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இக்கல்வெட்டுக்களிலும் இந்த வரிவடிவமே காணப்படுகின்றது.*5


தற்போது திராவிட மொழிகளுக்கும் ஆரிய மொழிகளுக்கும் எழுத்துமுறை அரிச்சுவடி, (Alphabet) ஒன்றாகவே உள்ளதற்குக் காரணம் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னர் ஆரிய--திராவிட கலப்பிற்குப் பின்னர் தோன்றியதே இவ்வெழுத்து முறையாகும் என்கிறார், திரு மு.க. ஜகந்நாதராஜா.


ஆரிய--திராவிடக் கலப்பின் விளைவாக வேத மொழியில் திரிபுகள் ஏற்பட்டு மக்கள் பேசும் மொழி வேறாகவும் வேதம் ஓதி வந்த பிராமணரின் பண்டித மொழி வேறாகவும் ஆகி விட்டது. இன்றைக்கு 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பேசிய மொழியினின்றும் பிரித்தறிய செம்மைப் படுத்திய வேதமொழிக்கு சமஸ்கிருதம் எனப் பெயரிட்டனர்.


வேதமொழி மக்கள் மொழியாகத் திரிந்தபோது பிராகிருதம் ஆயிற்று.


வேதமொழி அறிஞர் மொழியாக அமைந்த போது சமஸ்கிருதமாகியது.


இது பொதுவாக எல்லோராலும் ஏற்கப் பட்ட கருத்து. பாலி மொழி பிராகிருதத்தின் ஒரு முன் வடிவம், என்று கூறும் மு.க. ஜகந்நாத ராஜ, கி.மு. 100 முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை இருந்த பிராகிருத மொழிக்குப் பாலி என்று பெயர் என்றும் இது புத்தர் கால மொழி என்றும் கூறுகிறார்.*6


திரு தி. நா. சுப்பிரமணியன் அவர்கள் கிரந்த எழுத்துக்கள் பற்றிக் கூறுகையில், தமிழகத்தில் சமஸ்கிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் எழுத்திற்கு கிரந்தம் என்று பெயர். அம்மொழியில் கிரந்தம் என்றால் ஒரு இலக்கிய நூல் என்றும் பொருள் என்கிறார். மேலும், ஒரு காலத்தில் தென்னிந்தியா முழுவதும் கிரந்த எழுத்து வழக்கத்தில் இருந்தது. பின்னர் மலையாளம், துளு போன்ற மொழிகள் சமஸ்கிருத மொழி இலக்கணங்களையும் சொற்களையும் எடுத்துக் கொண்டு தனி எழுத்துக்களாகி விட்டன. தொடர்ந்து தமிழ்நாட்டில் பயன்படுத்தப் பட்டு வந்தது என்றும் கூறுகிறார்.*7


தென்னிந்தியாவில் கிரந்த எழுத்துக்களின் வளர்ச்சியை நான்கு கட்டமாகப் பிரிக்கிறார் தி.ந. சுப்ரமணியம்.


1. பழைய கால எழுத்துக்கள் (Archaic) கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை.


2. வரிவடிவம் வேறுபடும் கால எழுத்துக்கள் மாற்றத்திற்குட்பட்ட காலம் (Transition) கி.பி. 650--950


3. இடைக்கால எழுத்துக்கள் (Mediaeval) கி.பி. 950--1250


4. தற்கால எழுத்துக்கள் (Modern Period)


முதலாம் மகேந்திரவர்மன் கிரந்த எழுத்துக்களை மண்டகப் பட்டு, மகேந்திரவாடி, சீயமங்கலம், தனவானூர் ஆகிய ஊர்களில் சாதாரண முறையிலும், திருச்சி மலைக்கோட்டையில் அழகுபடுத்தப்பட்ட முறையிலும் எழுதினான்.*9


மாமல்லை தர்மராஜரதம், காஞ்சி கைலாச நாதர் கோயில் போன்றவற்றில் பலவகையாக அழகுபடுத்தப் பட்ட கிரந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன.


பின்னர் கிரந்த எழுத்து வடிவங்களில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. (Transition). இம்மாற்றத்தை பிற்காலப் பல்லவர்கள், பாண்டியர்கள் காலத்திலும், சோழர்களில் முதலாம் இராஜராஜன் காலம் வரையிலுமுள்ள எழுத்துக்களிலும் காணலாம், என்கிறார் தி.ந.சுப்ரமணியன். இவ்வகை எழுத்துக்கள் ஓலைச் சுவடிகளில் எழுதுவதற்கு ஏற்றதாக இருந்தன என்றும் கூறுகிறார்.இந்தக் காலகட்ட எழுத்துக்களில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பற்றி பதிநான்கு குறிப்புகளைத் தருகிறார் அவர். அவற்றுள் குறிப்பிடத் தக்கன, சுலபமாக எழுதுவதற்கு ஏற்றவாறு முன்னர் இடப்பக்கமாக ஆரம்பிக்கப் பட்டதும், பின்னர் வலப்பக்கமாக ஆரம்பிக்கப்பட்டதும், haa, bha.
போன்ற எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றத்தையும், ஆ, இ, ஐ, ஒள--அகிய எழுத்துக்கள் மெய்யெகழுத்துக்களிலிருந்து முழுவதுமாகப் பிரிந்து விட்டதையும் கூறுகிறார்.*10


இடைக்காலத்தைச் சேர்ந்த எழுத்துக்களாக (Mediaeval) சுந்தர சோழனின் அன்பில் செப்பேடுகள், ராஜசிம்ம பாண்டியனின் சின்னமனூர் பெரிய செப்பேடு, ராஜராஜனின் காஞ்சிபுரக் கல்வெட்டு ஆகியவற்றைக் கூறுகிறார். திரு தி.ந.சு. மேற்கூறிய சாசனங்கள் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. முதலாம் இராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடு கி.பி. 1052-ஐச் சார்ந்தது என்று கூறும் அவர், மேற் கூறிய சாசனங்களில் இடைக்கால கிரந்த எழுத்துக்களின் வடிவங்களைக் காணலாம் என்கிறார். மேலும் விக்கிரம சோழனின் செவிலிமேட்டுக் கல்வெட்டிலும் இவ்வகை எழுத்துக்களைக் காணலாம் என்கிறார். இக்கால கட்டத்தின் முக்கியக் கூறுகள் பற்றியும் தெளிவு படுத்தியுள்ளார். *11


1.ga, bha, ha--என்ற எழுத்துக்கள் இடது புறத்தினடியில் ஓரத்தில் முடிகிறது.


2. kha, ca, tha, dha, ba---என்ற எழுத்துக்களில் உள்ள மேல் வளைவுகள் நெருங்கியிருந்து விசாலமாகியது.


3. Ma--என்பதன் மேல்பகுதி முற்றிலும் அடைப்பாக மாறியது.


4.Ya--என்ற எழுத்திலுள்ள இடதுபுற வளைவு மறைந்து பழைய நிலைக்கே திரும்பியது.


5. Ka, ta, na, ra--என்ற எழுத்துக்கள் மேல் நேர்கோடு சில சமயங்களில் இடதுபுறம் கீழ் நோக்கி வளையும்.


6. ta--என்ற எழுத்தின் கீழுள்ள வால் நீளமாகியது.


7.la---என்ற எழுத்து மேல் வளைவு கனமாகவும் கீழ் நோக்கிய வளைவு குட்டையாகவும் மாறியது.


8. i--என்ற எழுத்து இடப்புறத்திலிருந்து வலப்புறமாக மாறியது.*12


ஆரியம் விராய்த் தமிழ் கொடுத்ததாகப் பாண்டியரின் தனவாய் புரச் செப்பேடு கூறுகிறது.*13


இடைக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சின்னமனூர் பெரிய செப்பேட்டின் சுலோகப் பகுதியில் சில முக்கிய பகுதிகள் குறிப்பிடத் தக்கன. அது தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துக்களாகிய "ழ" "ற" என்னும் எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் கிரந்த எழுத்துக்களுடன் சேர்த்து எழுதப் பட்டிருப்பது தான். அப்பகுதிகளைக் கீழே காணலாம்.


வரி 58--இல்:


ராஜசிம்ம குளக்கீழித்யுக்தே ராஷ்ட்ரே

(ராஜசிம்ம குளக்கீழ் என்று சொல்லப் பட்ட நாட்டில்) வரி 59-இல்

சூழலாக் யோஜ்வலம்

(சூழல் என்னும் பெயரால் விளங்கும்) வரி 60--இல்

அழ நாட பாஜம்

(அழல் நாட்டைச் சேர்ந்த)வரி 68--இல்

கூற்றங்கோனா ஹ்வயோ

(கடற்றங்கோன் என்ற பெயருள்ள) வரி 69--இல்

கீழ் வேம்ப நாடாபிஜ நஸ்ய

(கீழ் வேம்ப நாட்டில் பிறந்த)


பல்லவர் செப்பேடுகள் முப்பது--என்ற நூலைப் பதிப்பித்த திரு தி.நா. சுப்பிரமணியன் அவர்கள் க்ஷகரம் என்ற எழுத்தைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.


"க்ஷகரம் ஒரு தனி எழுத்து இல்லை என்பது உண்மைதான். அது கூட்டெழுத்தே.எனினும் தமிழ்நாடு சம்பந்தப் பட்டவரையில் கிரந்த நெடுங்கணக்கிலே அது ஒரு தனி எழுத்தாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. சிறுவர்களுக்குக் கிரந்த எழுத்தைக் கற்பிக்கும் பால பாடத்திலே க்ஷகரம் மெய்யெழுத்துக்களில் கடைசி எழுத்தாகக் கொடுக்கப் பட்டிருக்கும். ஸம்ஸ்கிருத நெடுங்கணக்கு எழுத்துக்களை மொத்தமாகக் குறிக்கும் போது


"அகாராதி க்ஷகாராந்தம்"
(அகரம் முதல் க்ஷகரம் முடிய)

என்று குறிப்பிடுவது வழக்கம். அதிலிருந்து க்ஷகரம் கிரந்த நெடுங்கணக்கின் கடைசி எழுத்து என்பது தெளிவாகும். எழுத்தைக் குறிக்கும்,"அக்ஷரம்" என்னும் சம்ஸ்கிருதச் சொல்லும் அவ்விதம் அமைந்ததே என்றும் கூறலாம்' என்கிறார்.


அடிக்குறிப்பில்,


உயிரும் மெய்யுமாக சமஸ்கிருத நெடுங்கணக்கு மொத்தம் 49 எழுத்துக்களைக் கொண்டது என்பர். ஆனால் தமிழ்நாட்டிலோ அதிகப்படியான எழுத்துக்களைக் கொண்டு 51 எனவும் 52 எனவும் இருவிதமாகக் கொள்ளப் படுகிறது.நாற்பத்தொன்பதுடன், ள, க்ஷ ஆகிய இரண்டையும் சேர்த்து 51 ஆகக் கருதுவர். "ஷ்ப" என்ற எழுத்தையும் சேர்த்து ஐம்பத்திரண்டாகவும் கருதுவர்--என்கிறார்.


சமஸ்கிருதத்தில் 'க' காரத்துடன் தொடங்கும் சொல்லுக்கு முன் வரும் பாதி விஸர்க்கம் ஜிஹ்வா மூலியம் என்றும், 'ப'காரத்திற்கு முன் வரும் பாதி விஸர்க்கம் உபத்மாநீயம் என்றும் சொல்லப் படும்.*14


சோழர் காலக் கல்வெட்டுகளில் தமிழ் கிரந்த எழுத்துக்கள் எவ்வாறு வளர்ச்சியுற்றிருந்தது என்பதை திரு டி.ஏ.கோபிநாதராவ் கூறியுள்ளார். ஆனால் கிரந்த எழுத்துக்கள் பற்றிக் கூறுகிறபோது பல எழுத்துக்களை அசோகன் காலத்தில் எவ்வாறு வடிவம் கொண்டிருந்தது என்பதையும், அதே எழுத்துப் பல்லவர் காலத்திலும் பின்னர் சோழர் காலத்திலும் எவ்வாறு மாற்றமடைந்தது என்பதையும் விளக்கியுள்ளார்.*15


ஆரியம் விராய் தமிழ் தொடுத்ததைப் பாண்டியர் செப்பேடு கூறியது போல சோழர்காலத்திலும் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ள சமஸ்கிருதச் சொற்கள் கலந்தே தமிழ்க் கல்வெட்டுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. செப்பேடுகளில் முதல் பகுதி சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்திலும் செப்பேடு வெளியிடக் காரணமான செய்தியைக் கூறவரும் இரண்டாம் பகுதி தமிழ் எழுத்திலும் அமைந்திருக்கும்.இதிலும் சமஸ்கிருதச் சொற்கள் கலந்தே எழுதப் பட்டிருக்கும்.பல்லவர், பாண்டியர்களை அடுத்துச் சோழர்களும் அப்படியே மேற்கூறியவாறு பின் பற்றினர். ஆனால் பாண்டியர்கள் மட்டும் தமிழ் பகுதியை வட்டெழுத்தில் எழுதினர்.


பிற்காலச் சோழர்களில் முதலாமவனான விஜயாலய சோழனின் கல்வெட்டாகக் கருதப் படும் திருப்பூந்துருத்திக் கல்வெட்டிலும் *16 கிரந்த எழுத்துக்கள் கலந்து எழுதப் பட்டிருக்கின்றது. கோப்பரகேசரி, என்பதி கேசரி--மஹாதேவர், சபையோம், பன்மாஹேஸ்வர ரக்ஷை ஆகிய பகுதிகள் கிரந்த எழுத்துக்களில் காணப்படுகின்றன.


கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் கிரந்த எழுத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைத் தான் தி.ந.சு. அவர்கள் 2-ஆம் காலகட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காலகட்டம் கி.பி. 650 முதல் 950 வரை எனக் கூறுகிறார். இந்தக் கால கட்டத்திற்குள் சோழ மன்னர்களாகிய விஜயாலயன், முதலாம் ஆதித்த சோழன், கண்டராதித்த சோழன், முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன் ஆகியோர் காலம் அடங்குகிறது. இவர்கள் காலக் கல்வெட்டுக்களில் உள்ள கிரந்த எழுத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பல வேறுபாடுகள் இருப்பதைக் காண முடிகிறது.


உதாரணமாக --ம--என்ற எழுத்தை எடுத்துக் கொண்டால், விஜயாலயன், முதலாம் ஆதித்த காலத்தில்*17 "ம" என்ற எழுத்தின் கிரந்த வரிவடிவம் எப்படி யிருந்தது என்பதையும், அதைப்போல முதலாம் ப்ராந்தக சோழன்*18, கண்டராதித்த சோழன்*19, சுந்தர சோழன்*2, உத்தம சோழன்*21 ஆகியோர் காலங்களில் எவ்வாறெல்லாம் 'ம' என்ற கிரந்த வரிவடிவம் வேறுபட்டிருந்தது என்பதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்.


இதைப் போல பிற எழுத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வித்யாசங்களை அறிய முடிகிறது. எனவே இந்தக் காலகட்டத்தில் வேறுபடுகிறது என்று கூறியது மிகவும் பாராட்டிற்குரியது--


சோழர் கல்வெட்டுக்களில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு இருமொழியில் அமைந்தது.*22 தமிழ்ப் பகுதி முழுவதும் கிடைக்கவில்லை. சமஸ்கிருதப் பகுதிலிருந்து தான் செய்தியை அறிந்து கொள்ள முடிகிறது. அப்பகுதியில் காசுகள்--நிஷ்கா எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.திருமால்புரம் கல்வெட்டும்*23 இருமொழியிலமைந்த கல்வெட்டேயாகும். இதில் திருமாலை--கம்சாரி--என்கிறது கிரந்தப் பகுதி. மூன்றாம் குலோத்துங்கனைப் பாண்டியாரி என்கிறது திரிபுவனம்கல்வெட்டு.*24 பேரங்கியூர் கல்வெட்டில் இறுதியிருவரிகள் கிரந்தத்தில் உள்ளன. கோயில் தேவராயன் பேட்டையில் முதலாம் ஆதித்த சோழனின் கல்வெட்டொன்று முதல் பாதி கிரந்தத்திலும் பின் பாதி தமிழிலும் உள்ளது.*25 இதில் குறிப்பிடத் தக்கதாக ஒரு ஊரின் பெயர் காணப்படுகிறது. வடமொழிப் பகுதியில் கால கிராமம் என்று கூறப்பட்டுள்ள ஊர், தமிழ்ப் பகுதியில் கூற்றமங்கலம் என்று கூறப்பட்டுள்ளது. கால=கூற்ற: கிராமம்=மங்கலம். அக மங்கலம்--ஊர் அமைப்பைக் குறிக்கக் கூடிய மற்றொரு வார்த்தை எனப்புரிகிறது.அதாவது ஊர் என்ற தமிழ்ச் சொல், வடமொழியில் கிராமம் என்றும், பிராகிருதத்தில் காம--என்றும் கூறப்படும்.மொத்தத்தில் ஊர், கிராமம், காம, ஆகிய சொற்களுடன் 'மங்கலம்' என்பதும் ஊரைக் குறிக்கிறது.


இக்கல்வெட்டில் முதல் ஒன்பது வரிகள் கிரந்தத்திலும் 10 முதல் 22-வது வரி வரை தமிழும் கிரந்தமும் கலந்தும் 23 முதல் 25 வரை முழுவதும் கிரந்தத்திலும் காணப்படுகிறது. மார்கழி திருவாதிரை யன்று இரவில் ஜைமினிகள் சாம வேதத்து மேற்பாதத்து ஒரு துருவும் கீழ் பாதத்து ஒரு துருவும் தவறில்லாமல் சொல்லும் ஒருவர்க்கு மூன்று காசுகள் அளிப்பதற்காக நிவந்தமளிக்கப் பட்டிருந்ததை அக்கல்வெட்டு கூறுகிறது. இது போன்று பல கல்வெட்டுகளைக் கூறலாம். இருமுறையில் கல்வெட்டுகள் எல்லாம் கிரந்தம் கலந்த மணிப் பிரவாள நடையிலேயே காணப்படுகிறது. சோழர்கள் சமஸ்கிருத மொழியை எழுதக் கல்வெட்டிலும் செப்பேட்டிலும் கிரந்த எழுத்தையே பயன்படுத்தினர். நாகரி எழுத்தைப் பயன்படுத்தவில்லை. ஆனால் சில நாணயங்களில் மட்டுமே பயன்ப்டுத்தியுள்ளனர்.


சோழர்கள் தங்களாட்சியை சைவத்தின் அடிப்படையில் தேவார மூவரின் அடியொற்றி அமைத்திருந்தனர். அப்பர் தேவாரத்தில் கூறியது போல ஆரியத்தையும், தமிழையும் சமமாகப் பாவித்தனர். காரணம் அவர்களுக்கு அரசியல் ரீதியில் இச்செய்கை இன்றியமையாதது ஆயிற்று.


பெளத்த சமண மதங்களை எதிர்த்து, அதற்கு மாற்றாக சைவ வைணவ சமயங்களையும், பாலி--பிராகிருத மொழிகளுக்கு மாற்றாக தமிழையும் சமஸ்கிருதத்தையும் முன் வைத்தனர் தேவார மூவர். சமய குருக்களையும், ஊராட்சி நிர்வாகத்திற்குப் பிரமதேயம் மூலம் அந்தணர்களையும், பெரும்பகுதி நம்பியிருந்தனர் சோழர்கள். ஆதலால் அவர்களது மொழியான சமஸ்கிருதத்தையும் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தனர்.


ராஜகுருக்கள் கோயில் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்ததையும் கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது. அத்தகைய கல்வெட்டுகள் அனைத்தும் கிரந்தக் கல்வெட்டுக்களேயாகும். இந்த ராஜகுருக்கள் ராடதேசம், கெளடதேசம் போன்ற பகுதிகளிலிருந்து வந்தவர்கள். இப்பகுதிகள் மேற்கு வங்காளத்தில் உள்ளன.


முதலாம் இராஜ ராஜ சோழனது ராஜகுரு தஞ்சைப் பெரிய கோயில் கலசத்தைத் தானமளித்தார்.*26 அச்சுதமங்கலத்தில் ஶ்ரீகண்ட சம்பு என்ற குரு அவ்வூர்க்கோயிலைக் கட்டினார்.*27 இவரது மகன் ஈச்வர சிவர் என்ற சோமேஸ்வரர் மூன்றாம் குலோத்துங்கனுக்கு ராஜகுருவாக விளங்கினார். அவர் கட்டிய திரிபுவனம் கோயிலில் சிவனையும் பார்வதியையும் பிரதிஷ்டைச் செய்தார். ராஜகுரு ஈச்வரசிவர். அச்சுதமங்கலம் கோயிலைக் கட்டிய ஶ்ரீகண்ட சம்புவின் புதல்வர் சைவ தர்சனங்களை முழுவதும் அறிந்தவர். 18 வித்தைகளைக் கற்றவர். உபநிஷதங்களுக்கு விளக்கம் அளிக்க வல்லவர். இவர் எழுதிய நூல்தான் சித்தாந்த ரத்னாகரம் என்ற சைவ சமயத்தைப் பற்றிய நூலாகும்.*28


முதலாம் இராஜேந்திர சோழனின் ராஜகுரு சர்வ சிவ பண்டிதர் எண்ணாயிரம் அருகே எசாலத்தில் கோயில் கட்டினார்.*29 இம்மன்னன் காலத்தில் தான் திருவொற்றியூர் கோயில் கற்றறியாகக் கட்டப் பட்டது. இச்செய்தியக் கூறும் கல்வெட்டும் கிரந்தக் கல்வெட்டாகும்.


கல்வி, கேள்விகளில் சட்ட நுணுக்கங்களில் போர் பயிற்சியில் சிறந்திருந்த அந்தணர்களை உயர்ந்த நிர்வாகப்பதவியில் சோழர்கள் அமர்த்தினர். ஆதலாலும், அரசியல் நிர்வாகம், சமய நிர்வாகம், சமூக நிர்வாகம், பொருளாதார நிர்வாகம் படை நிர்வாகம் போன்ற நிர்வாகப் பணிகளில்அவர்களே பங்காற்றும் சூழல் அமைந்திருந்தது. ஆதலாலும் சாசனங்கள் எல்லாம் மேற் கூறிய வகையில் அமைந்திருந்தன எனலாம். இது தவிர்க்க முடியாததாயிற்று. விஷ்ணு கோயில்களிலேயே பாடசாலை நடந்தது. மருத்துவமனையும் செயல்பட்டது. என்றாலும் சோழர்காலங்களில் பல்லவர்கள் போற்றி நடத்தி வந்த கடிகை என்னும் கல்லூரிகளைக் காண முடியவில்லை. இக்கடிகைகள் முழுக்க முழுக்க வேதங்கள், புராணங்கள், ஆயுதப் பயிற்சி, நீதி நூல்கள் பயிற்சி போன்றவற்றை சமஸ்கிருத மொழியில் கற்றுத் தரும் நிறுவனமாகும்.


சோழர்களின் பிரமதேய ஊர்களில் கிராமசபை நடவடிக்கைகள் பற்றிக் கூறும் இரு முக்கியக் கல்வெட்டுகளும் தொண்டை மண்டலத்தில் தான் உள்ளன. முதலாம் பராந்தக சோழனின் திருநின்றஊர் கல்வெட்டு கிரந்த எழுத்திலேயே உள்ளது.உத்தரமேரூர் கல்வெட்டு கிரந்தம் கலந்த தமிழ் கல்வெட்டாகும்.


முதலாம் இராராஜ சோழன், அவன் மகன் முதலாம் இராஜேந்திர சோழன் ஆகியோர் காலத்தில் கிரந்த எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களும் மிகவும் செம்மைப் படுத்தப் பட்டனவாக அமைந்துள்ளன.


சோழர் கல்வெட்டு ஒன்றிலுள்ள கிரந்தப் பகுதியில் ஆதிசங்கரர் எழுதிய பிரம்மசூத்ரம் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. திருச்சி அருகேயுள்ள சோழமாதேவி என்ற ஊரிலுள்ள சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் ஒன்று வீர ராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்தது. அக்கல்வெட்டில் சங்கரர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு சிதானந்த பிடாரர் என்பவர் ஒரு உரை எழுதிய புதிய செய்தி கூறப்படுகிறது.*30 இச்செய்தி இதுவரை அறியப் படாததாகும். இந்த உரையை, சோழமாதேவி என்ற ஊரின் பிரம்மஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும்--என்பதற்காக ஒரு ஆசிரியருக்கு விருத்தியால நிலமளிக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. சங்கரரை இக்கல்வெட்டு 'பகவத்' என்றும் அவர் உரையை--சாரீரக பாஷ்யம்--என்றும் கூறுகிறது. அதாவது 'பகவத் பாதீயம் சாரீரக பாஷ்யம்'-- என்று காணப்படுகிறது. விஷ்ணு கோயில்களில் மகாபாரதம் படித்து விளக்கமளிக்கப் பட்டதைப் பல கல்வெட்டுகள் கூறுகின்றன.


சோழர்களின் எழுத்துக்களில் மிகவும் புகழ் பெற்ற வாசகங்களுள் தஞ்சைப்பெரிய கோயிலில் பொறிக்கப்பட்ட சமஸ்கிருத வாசகமும் அடங்கும்.


"ஏதத் விஸ்வ நிருபஸ்ரேணி மெளலி மாலோபலாலிதம் சாசனம் ராஜ ராஜஸ்ய ராஜகேஸரி வர்மனஹ" உலகில் உள்ள மன்னர்களுடைய முடிகள் (மகுடங்கள்) யாருடைய திருவடிகளை மாலை போல அலங்கரிக்கின்றனவோ அந்த ராஜராஜ கேசரி வர்மனுடைய சாசனம் என்பதே அதன் பொருள்.


அந்த அரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆவான். தஞ்சைப் பகுதியில் பல துண்டுகளாக உடைந்த சமஸ்கிருத பாடல் வடிவக் கல்வெட்டு ஒன்று கிரந்த எழுத்துக்களில் கண்டுபிடிக்கப் பட்டது. இராஜராஜனைப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களாக அவை காணப்படுகின்றன.


இராஜராஜனின் புகழ்பெற்ற ஆனைமங்கலம் செப்பேடு, கடார மன்னன் நாகப்பட்டினத்தில் கட்டிய பெளத்த விகாரைக்கு பள்ளிச் சந்தமாக நிலம் கொடுக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. இச்செப்பேடுகளில் உள்ள தமிழ்ப் பகுதியை ராஜராஜன் காலத்திலும் கிரந்தப் பகுதி அவனது மகன் முதலாம் ராஜேந்திரன் காலத்திலும் வெளியிடப் பட்டு பின்னர் வளையத்தில் கோர்க்கப் பட்டது என்றும் கூறப்படுகிறது.*31


முதலாம் ராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேட்டிலுள்ள கிரந்தப் பகுதியில் புராண கால மன்னர்கள் நாற்பது பேர் குறிப்பிடப் பட்டுள்ளனர்.


இவர்களில் இருபது பேர் கிரித யுகத்திலும் 17 பேர் திரேதாயுகத்திலும், இருவர், த்வாபர யுகத்திலும் வாழ்ந்தவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தப் பெயர்களுள் சில விஷ்ணு புராணத்தில் உள்ளதாகவும் இச்செப்பேட்டைப்பதிப்பித்துள்ள மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கல்வெட்டாய்வாளர் குறிப்பிடுகின்றார்.* 32 எனவே இச்செப்பேட்டு சமஸ்கிருதப் பகுதியை எழுதிய அறிஞன் விஷ்ணுபுராணம் போன்ற அனைத்து நூல்களிலும் வல்லவனாக இருந்தமை விளங்குகிறது.


கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள முதலாம் குலோத்துங்க சோழனது கல்வெட்டொன்று முற்றுப் பெறாது காணப்படுகிறது.*33 இது ஒரு கிரந்தக் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டுப் பகுதியானது, கனோஜ் நாட்டைச் சேர்ந்த காகதவவல அரசனாகிய கோவிந்த சந்திரனின் செப்பேட்டினைச் சேர்ந்ததாகக் காணப் படுகின்றது. (Ep. Ind. Vol IV. p. 100) இச்செப்பேட்டுப்பகுதியைத் தலைநகரிலுள்ள கோயிலில் பொறித்திருப்பது காகதவால அரசன் கோவிந்த சந்திரனுக்கும் முதலாம் குலோத்துங்கனுக்கும் இடையே நெருக்கமான நட்புறவு இருந்ததை வெளிப்படுத்தியுள்ளது. காகதவாலா அரசர்கள் சூரிய வழிபாடுடையவர்கள். முதலாம் குலோத்துங்கனும் சூரிய வழிபாட்டைச் சிறப்பாகக் கொண்டாடியவன்.அவன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சூரியன் கோயில் தான் இன்று சூரியனார் கோயில் என்ற ஊரின் பெயராகவும் வழங்குகிறது.


மொத்தத்தில் சோழர்கள் சமஸ்கிருத மொழியையும் கிரந்த எழுத்துக்களையும் தமிழ் மொழிக்கும் எழுத்துக்களுக்கும் இணையாகப்பயன்படுத்தி வந்தனர் எனில் அது மிகையன்று.


அடிக்குறிப்புகள்


1.T.V. Mahalingam--Early South Indian palaeography p. 85

2. Ibid. p. 79

3. Ibid. p. 80

4. Ibid. p. 81

5. Ibid. p. 130--40

6.திரு. மு.கு. ஜகந்நாதராஜா--- தமிழும் பிராகிருதமும் பக். 12--18

7.T.N. Subramaniyan--South Indian Temple Inscriptions Vol III Part II p. 1522

8. Ibid. p. 1522

9. Ibid. p. 1523

10.Ibid. p. 1526--1527

11. Ibid.p. 1527--1535

12. பாண்டியர் செப்பேடுகள் பத்து--தளவாய்புரச் செப்பேடு வரி --215

13. பல்லவர் செப்பேடுகள் முப்பது பக். 34

14. பாண்டியர் செப்பேடுகள் பத்து. பக். 4

15.T.A.Gopinatha Rao---Travancore Archaeological series Vol I.p. 310--315.

16. S.I.I. Vol XIX No. 74

17. Ibid. No. 74

18. Ibid. No. 149

19. S.I.I.Vol.III No. 146

20. Ibid. No. 213

21. Ibid. No. 128

22. S.I.I. Vol XIX No. 431

23. S.I.I. Vol XIII No. 34

24. ARE 190/1907

25. S.I.I. Vol. XIII No. 83

26. ARE 24/1897

27. ஆ. பத்மாவதி--நன்னிலம் கல்வெட்டுகள் இரண்டாம் தொகுதி அச்சுதமங்கலம் --கல்வெட்டுகளைக் காண்க.

28. ARE: 1908/p. 80

29. Bulletin De PE cole francaise D'Extreme--orient Tome LXXVI Archaeological finds in South India Esalam Bronzes and copper plates By Dr. R. Nagaswamy--1987--paris.

30. Indian Express&Dinamani 18, May, 1991--Dr. R. Nagaswamy

31. Are 1906/p. 521

32. Ibid.p. 66

33. Are 1908 p./77--78

--Geetha Sambasivam 15:06, 31 மே 2012 (UTC)</i>


பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 31 மே 2012, 15:06 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,009 முறைகள் அணுகப்பட்டது.