வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சைவத்தின் தோற்றம் - 1

From மரபு விக்கி

Jump to: navigation, search

சைவத்தின் தோற்றம்

டாக்டர்.பத்மாவதி (தமிழ்நாடு தொல்லியல் துறை)


இந்திய சமூக வரலாற்றில் சைவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. இதே முக்கியப் பங்கினை சைவம் தமிழக வரலாற்றிலும் ஆற்றியுள்ளது. ஒரு சமூகத்தில் சமூகத் தேவைகளின் அடிப்படையில் எந்த ஒரு தத்துவமும் தோன்றுகிறது. சமூக வரலாற்றில் சமூகத் தேவைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தத்துவமும் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டு வளர்ந்து வருகிறது. இம்மாற்றங்களின் ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் ஒரு தத்துவம் வழக்கொழிந்து போவதும் பின்னர் கால ஓட்டத்தின் வேறொரு புதிய சமூகத் தேவைகளின் அடிப்படையில் புதுப்பிக்கப்படுவதும் இம்மாற்றங்களில் அடங்கும். இந்தியாவில் சைவத் தத்துவமானது இத்தகைய வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டே வளர்ந்திருக்கிறது. இன்று சைவ சமயம் என்று அழைக்கப்படுகின்ற தத்துவம் கி.பி, இரண்டாம் நூற்றாண்டில் பாசுபதம் என்ற பெயரில் முதன் முதலில் நிறுவனப்படுத்தப்பட்ட சமயமாக உருவானது. பாசுபதம் என்ற பெயரில் சைவ சமயத்தை நிர்மாணித்தவர் லகுளீசர் என்பவர் ஆவார். அவரது மாணவர்கள் காளாமுகம், காபாலிகம் என்ற பெயர்களில் உட்பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு சமயத் தத்துவங்களை பரப்பி வளர்த்தனர். அதன் தொடர்ச்சியே அப்பர், ஞானசம்பந்தர்ம் பின்னர் சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் ஏற்படுத்திய சமய மறுமலர்ச்சியாகும்.



    லகுளீசர் சைவ சமயமாகிய பாசுபத மதத்தைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் உள்ள சான்றுகளைக் காண்பது முக்கியமானது. இன்று சிவன் என்றும் ருத்ரன் என்றும் கூறப்படுகின்ற கடவுளின் தொன்மைச் சான்றுகளாக கொஹஞ்சதாரோ ஹரப்பாவில் கிடைத்த சான்றுகளும், வேத இலக்கியங்களில் கிடைத்த சான்றுகளும் முக்கியமானவை. அச்சான்றுகளை உள்ளடக்கிக் கிரகித்துக் கொண்டு வளர்ந்த மதமே பாசுபதம் என்பதால் அச்சான்றுகளைச் சுருக்கமாக காண்பது அவசியமானதாகிறது.

தொல்காப்பியத்தில் ருத்ர - சிவன் காணப்படவில்லை.

தொல்காப்பியர் கூறுகின்ற நானிலத்திற்குரிய கடவுள்களில் சிவன் பெயர் காணப்படவில்லை.

மாயோன் மேய காடுறை உலகம் சேயோன் மேய மைவரை உலகம் வேந்தன் மேய தீம்புனல் உலகம் வருணன் மேய பெருமணல் உலகம்

    எனக் கூறும் நால்வரில் ஏன் சிவன் இல்லை. வேந்தன் எனக் கூறியிருப்பது இந்திரனையே குறிக்கும்.
    சிவ - ருத்ரன் ஆரியரல்லாத இனக்குழு மக்களின் கடவுள் ஆதலால், வேத கருத்துக்களின், செயல்பாட்டின் தாக்கம் சங்க இலக்கியங்களில் காணப்பட்ட போதும், ருத்ரன் காணப்படவில்லை. காரணம் சில ருத்ரன் உபநிஷத காலங்களிலேயே ஆரியர்களால் தங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறான். அதனால்தான் அதற்குப் பின்னர் எழுந்த கலித்தொகை, பரிபாடல்களிலும் ஓரிரு புறப்பாடல்களிலும் காணப்படுகிறான்.
    அதுபோல சங்க இலக்கியங்கள் குறிக்கும் கந்து வழிபாட்டையும் லிங்க வழிபாட்டோடு தொடர்புபடுத்துகின்றனர்.  கந்து ஊரின் நடுவே அமைந்திருந்த மன்றில் காணப்பட்டது. இந்த கந்தைத்தான் அப்பர் கன்றாப்பூர் பதிகத்தில் நடுதறி என்றார். நடுதறியாகிய கந்து அப்பர் காலத்தில் சிவனாக மாற்றப்பட்டதேயன்றி, சங்க காலத்தில் கந்தாக வழிபடப்பட்டபோது சிவ வழிபாட்டைக் குறிக்கவில்லை.

சங்க இலக்கியங்களில்...

     சங்க காலம் என்பது புத்தர் தோன்றிய காலமாகிய கி.மு.7ம் நூற்றாண்டுக்கு முன்னர் தொடங்கி பின்னர் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து கி.பி. 3ம் நூற்றாண்டு வரை நீடித்த நெடிய கால கட்டமாகும். இக்கால இலக்கியங்களுள் சிவபெருமானைப் பற்றிக் குறிக்கும் பாடல்கள் புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.
    சங்க இலக்கியங்களில் சிவனைப் பற்றிக் கூறும் செய்திகளாக திரு. அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் கூறும் செய்திகளில் ஓரிண்டைத் தவிர பிற குறிப்புகள் எல்லாம் சிவனைக் குறிப்பவை அல்ல. அவரே மிகவும் வலிந்துதான் அக்கருத்துக்கு வந்துள்ளார். சங்க காலத்தில் சமணமும் பெளத்தமும் ஆசீவகமும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அக்காலத்தில் நிலப்பரப்பின் அடிப்படையில் அமைந்த தெய்வங்களே மக்கள் வழிபாட்டில் நிலவின. சிவன், ருத்ரன், சைவம் என்பதெல்லாம் சங்க இலக்கியங்களில் இல்லாத செய்தியாகும். அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நூலுலும் பேராசிரியர் கு.சுந்தர்மூர்த்தி அவர்கள், ‘சிவபெருமான் என்னும் தெய்வம் இன்றைக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களில் காணப்பட்டிலது” என்று கூறியிருக்கிரா. ஆனால் அவரும் ஆலமரச் செல்வன், மழுவாள் நெடியோன், நீலமணி மிடந்றொருவன் என்றெல்லாம் குறிக்கப்பட்டிருக்கும் கடவுள் சிவபெருமானே என்ற கருத்துக்கு வந்திருக்கிறார். அவர் மேலே கூறுகின்ற பெயர்கள் எல்லாம் பிற்காலத்தில் அதாவது புராண காலங்களில் சிவனுக்கு ஒன்றிய பெயர்களாகும். சிவனுக்குரிய பிற்காலப் பெயர்கள், சங்க காலத்தில் வேறு ஒரு கடவுளுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
    சங்க இலக்கியத் தொகுதிகளுள் பரிபாடலும், கலித்தொகையும் பிற்காலத்தவை என்பதை யாவரும் அறிவர். இவை தவிர புறப்பாடல்கள் சிலவற்றில் சிவன் பற்றிக் கூறும் பாடல்களும், பிற்காலத்தைவயே. குறிப்பாக புறநானூற்றுப் பாடல்கள் 55, 56, 166 ஆகியவற்றைக் கூறலாம்.
    அரக்கர்கள் மூவர் இரும்பு. பொன், வெள்ளி ஆகிய உலோகங்களால் கோட்டை கட்டிக்கொண்டு தேவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தினராம். சிவன் ஒரு வில்லைகொண்டு மூன்று எயில்களையும் அழித்தானாம். இக்கதைய புறநானூரு பாடல் 55 கூறுகிறது. இக்கதை இப்பாடல் தவிர வேறெங்கும் கூறப்படவில்லை. இக்கதை முதன் முதலாக மகாபாரதத்தில் பகுதி 33 - 35ல் கர்ணபர்வதத்தில் கூறப்பட்டுள்ளது. பிராம்மண நூல்களின் காலம் வரை கூட இக்கதை காணப்படவில்லை. எனவே இக்கதையைக் கூறும் புறம் 55 மகாபாரதத்திற்கு பிந்தைய காலத்தைச் சேந்த பாடலேயாகும். அதுபோல சிவனும் உமையும் அமர்ந்துள்ள கயிலையை தன் தோளால் அசைக்க முயன்ற இராவணனின் தோள் நெரிய சிவபெருமான் இறுக்கியதாகக் கூறப்படும் கதை குறிஞ்சிக் கலியில்(2) கூறப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
    புறப்பாடல் 378- இராமன், அவன் மனைவி சீதை, அவளை கவர்ந்து சென்ற அரக்கன், குரங்கு கூட்டம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இராமாயணக் கதை நன்று வளர்ந்து பரவலாக பேசப்பட்ட பின்னர் எழுதப்பட்ட பாடலே இது எனக் கொள்ளலாம். வால்மீகி இராமாயணம் எழுதப் பெற்ற காலத்திற்குப் பிற் காலத்தைச் சேர்ந்ததாகவே இப்பாடல் இருத்தல் வேண்டும்.


--Ksubashini (பேச்சு) 08:33, 2 ஆகஸ்ட் 2013 (CDT) சைவ சித்தாந்தம்

Contributors

Ksubashini

This page was last modified on 2 August 2013, at 13:50. This page has been accessed 1,751 times.