வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோவில்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 


* அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோவில்


                                                                                     
T 500 21.jpg


மூலவர் : மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்
  அம்மன்/தாயார் : மீனாட்சி, அங்கயற்கண்ணி
தல விருட்சம் : கடம்ப மரம்
தீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி
ஆகமம்/பூஜை : காரண
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம்
ஊர் : மதுரை
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:


சம்பந்தர், திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்,

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர்வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.

திருஞானசம்பந்தர்,

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுதலங்களில் இது முதலாவது தலம்.


தல சிறப்பு:

சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு நேர்ந்த கொலைப்பாவத்தை போக்க பல தலங்களுக்கு சென்று வந்தான். அப்படி வரும்போது சிவனின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய இத்தலத்தில் ஓர் அழுகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட பாவம் நீங்கியது. எனவே இந்திர விமானத்துடன் கூடிய இந்த பெருங்கோயிலை கட்டினான் என்பர். எனவே இது இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது.இந்த சக்தி பீடத்திற்கு ராஜமாதங்கி சியாமள பீடம் என்று பெயர். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. 18 சித்தர்களில் சுந்தரானந்தர் அடங்கிய தலங்களுள் ஒன்று. தழிழ்நாட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயருடைய 366 கோயில்களில் முதன்மையானது. இத்தலத்தினை பூலோக கைலாசம் என்றும், தலத்தின் பெயரை படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்றும் கூறுவர். பொற்றாமரைக்குளம் : நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே இந்தக் குளம் . கோயிலுக்குரிய தீர்த்தங்களில் முதன்மையானது. சிவகங்கை என்றும் பெயர். இந்திரன் தான் பூஜிப்பதற்கு பொன் தாமரையைப் பெற்ற இடம். இந்தக்குளத்தில் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகணகாலம், வியதிபாதம் ஆகிய புண்ணிய காலங்களில் நீராடி இறைவனைப் பூஜித்தால் வேண்டும் சித்திகளைப்பெறலாம் என்பது ஐதீகம். இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலை நாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம்.

மீனாட்சி அங்கையர்கன்னி இங்குள்ள அம்மனின் பெயர் மீனாட்சி. தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார்.

மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார்.

அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன.

நடராஜர் கால் மாறி ஆடிய காரணம்:

மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது.

திருமணத்தில் தேவர்களும், முனிவர்களும் கலந்து கொண்டனர். அதில் பதஞ்சலி மகரிஷியும் வியாக்ரபாதரும் அடங்குவர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை உணவு அருந்துவதற்காக சிவனும், மீனாட்சியும் அழைத்தனர். அப்போது பதஞ்சலியும், வியாக்ரபாதரும் சிவனிடம், ""இறைவா! நாங்கள் இருவரும் தங்கள் பொன்னம்பல நடனத்தை பார்த்த பின்தான் உணவு அருந்துவது வழக்கம்என்றனர்.

இதைக்கேட்ட இறைவன், இவர்களின் நியமத்தை காக்கும்பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே திருநடனம் புரிந்து அருள்பாலிக்க வெள்ளியம்பலத்தை ஏற்படுத்துகிறார். இந்த வெள்ளியம்பலத்தில் நடனமாடிய இறைவனின் திருநடனத்தை கண்ட பின் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் உணவு அருந்துகின்றனர்.

இந்த வெள்ளியம்பல நடராஜர் திருநடனம் புரியும் மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியனின் மகன் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆயகலைகள் 64ல் 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். மீதி ஒரு கலை தான் நடனம். இந்த நடனமானது நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருப்பதால் நாம் எப்படி கற்பது என நினைத்தான்.

இதே காலத்தில் வாழ்ந்த கரிகாற்சோழன் என்ற மன்னன் 64 கலைகளையும் கற்றவன் என்ற விஷயத்தை ஒரு புலவன் பாண்டியனிடம் தெரிவித்தான். உடனே பாண்டியனும் நடனம் கற்று முழுமையாக தேர்ச்சியும் பெறுகிறான். இப்படி நடனம் கற்கும் போது உடம்பெல்லாம் வலிப்பதால் நடனக்கலை எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்கிறான். 64 கலைகளையும் கற்ற திருப்தியில் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீவாதம் வாங்க வருகிறான். அப்போது நடனம் கற்பதே கஷ்டமாக இருக்கும் போது காலம் காலமாக வலக்கால் ஊன்றி இடக்கால் துõக்கி நடனமாடிக் கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைத்து மிகவும் வேதனைப்படுகிறான்.

இதை யாரிடம், எப்படி கேட்பது. முன் காலங்களில் வாழ்ந்த தேவர்கள் முனிவர்கள் எல்லோரும் இதைப்பற்றி பேசாமல் இருக்கும்போது நாம் எப்படி சிவனிடம் கேட்பது என நினைத்து மிகவும் வருத்தப்பட்டான்.

இந்நிலையில் ஒரு சிவராத்திரி திருவிழா வருகிறது. மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு, நடராஜரின் எதிரில் நின்று, ""ஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கும் இறைவா! எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா? என வருந்திகேட்கிறான். ""அப்படி நீ கால் மாறி ஆடா விட்டால் என் முன்னால் கத்தி வைத்து அதில் விழுந்து உயிர் துறப்பேன் என இறைவனிடம் கண் மூடி மன்றாடுகிறான். சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்க்கிறான் ராஜசேகர பாண்டியன். அப்படியே மெய்சிலிர்த்து நின்று விடுகிறான்.

காரணம், பக்தனுக்காக இடது கால் ஊன்றி வலது கால் துõக்கி ஆடுகிறார் நடராஜப்பெருமான். உடனே மன்னன்

""பெரியாய் சரணஞ் சிறியாய் சரணங்
கரியாகிய வங்கணனே சரண
மரியாயெனியா யடிமாறி நடம்
புரிவாய் சரணம் புனிதா சரணம்!
நதியாடிய செஞ் சடையாய் நகை வெண்
மதியாய் மதியா தவர் தம்மதியிற்
பதியாய் பதினென் கணமும் புரவுத்
துதி சரணஞ் சடரே சரணம்!

இப்படி பலவாறாக பாடிதுதித்து மகிழ்ந்து ஆனந்தத்தில் அழுது விழுந்து தொழுது ""எனக்காக கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் மதுரையிலேயே இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கவேண்டும் என்ற வரமும் வாங்கி விடுகிறான். அன்றிலிருந்து தான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடும் தரிசனம் கொடுக்கிறார்.

இந்நிகழ்ச்சி பரஞ்சோதி முனிவர் எழுதிய சிவனின் 64 திருவிளையாடலில் கூடற்காண்டத்தில் 24வது படலமாக "கால் மாறி ஆடிய படலம்' 6வது திருவிளையாடலாக வருகிறது.

பொற்றாமரைக் குளம்

இந்திரன் தான் பூஜிப்பதற்குப் பொன் தாமரை மலரைப் பெற்ற இடம். திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை தோன்றிய தலம். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி இக்குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.

வெளி ஆவரணமும் உள் ஆவரணமும்

மதுரையில் கோயிலுக்கு வெளியில் நான்கு திசைகளிலும் நான்கு புகழ் பெற்ற ஆலயங்கள் உள்ளன. இவை நகருக்கு உள்ளே இருப்பதால் உள் ஆவரணம் எனப்படும். மதுரைத்தலத்திற்கு வெளியில் உள்ள நான்கு திருத்தலங்கள் வெளி ஆவரணம் எனப்படும். மதுரைக்குத் தெற்கில் திருப்பரங்குன்றமும் மேற்கில் திருவேடகமும் வடக்கில் திருவாப்பனுõரும் கிழக்கில் திருப்புவனமும் உள்ளன. இவை வெளி ஆவரணமாகும்.

இதுபோல மதுரைத் தலத்திற்குள்ளாக உள்ள திருக்கோயில்கள் உள் ஆவரணம் ஆகும். வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோயில், மேற்கு திசையில் சிவபெருமானே தன்னைத்தான் அர்ச்சித்த மூர்த்தியாக வழிபட்ட இம்மையில் நன்மை தருவார் கோயில், கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ஐராவத நல்லுர் முக்தீசுவரர் கோயில், தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய்க் கோயில் ஆகியவை நகருக்கு உள்ளே அமைந்த உள்ஆவரணக்கோயில்களாகும்.

பிரார்த்தனை

இங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது.

வேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர்.

தாயுள்ளத்தோடு அன்னையும் அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வருவதால்தான் உலகம் முழுவதும் தனக்கு பக்தர்கள் உள்ளவளாக அன்னை மீனாட்சி விளங்குகிறாள்.

இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைம்கும், முக்தியும் கிடைக்கும். இங்குள்ள சுவாமி பிராகரத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம், அத்தனை அமைதி வாய்ந்த ஒம் என்ற நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு ஒலிக்கும் அளவுக்கு மிகவும் நிசப்தமான பிரகாரம் அது.

இங்கு எப்போதும் பக்தர்கள் தியானத்தில் அமர்ந்திருப்பதை நாம் கோயிலை வலம் வரும்போது காணலாம். தவம், தியானம் செய்ய ஏற்ற தலம் இது.

தலபெருமை:

உலகப்புகழ் பெற்ற சிவாலயம்.

பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி.சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே.

சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம்.

தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம்.
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவபெருமானுக்கு நடைபெறுகின்றன.

ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து தமிழை ஆராய்ந்த இடம்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டதலம்.

நக்கீரர் வாழ்ந்த இடம் .

முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளை தமிழ் அரங்கேற்றியதும்,
திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை கொடுத்ததும், இத்தலத்தில் தான்.

பாணபத்திரருக்கு பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம்.


இராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம்.

திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம்.

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமான் வாழும் இடம்.
எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்.

பல புராண இலக்கியங்களையுடையது:
கலையழகும், சிலைவனப்பும், இசையமைப்பும் ஆயிரக்கணக்கான அழகிய சுதைகளையும் கொண்ட வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்டது.

தாமரை மலர்போல் மதுரைப்பதியின் அழகும், நடுவிலுள்ள மொட்டுப் போன்ற மீனாட்சியின் ஆலயமும், மலரிதழ் போன்ற வரிசையான தெருக்களும் சேர்ந்து மதுரையைச் சிவராஜதானி என்று போற்றச் செய்துள்ளன.

தலத்தின் பெயர் காரணங்கள் :

மதுரை:

சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து. நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் பெற்றது.

ஆலவாய்:

சிவபெருமானுக்கு அணியாயிருந்த பாம்பு வட்டமாய் வாலை வாயாற் கவ்வி மதுரையின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் வந்தது.

கடம்பவனம்:

கடம்பமரம் அடர்ந்த காடாக இருந்ததால் கடம்பவனம் எனப் பெயர் பெற்றது

நான்மாடக்கூடல்:

மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டுப் பெருமான் தம் சடையினின்றும் விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடிக்காத்ததால் நான்மாடக்கூடல் எனப் பெயர் ஏற்பட்டது.

இத்தலம் குறித்த பதிகங்கள் :
மாணிக்கவாசகர் - திருவாசகம்
அருணகிரிநாதர்- திருப்புகழ்
பாணபத்திரர்- திருமுகப்பாசுரம்

பரஞ்சோதி முனிவர் -

திருவிளையாடற்புராணம்

மதுரைக்காஞ்சி- மாங்குடி

மருதனார்மீனாட்சி

பிள்ளைத்தமிழ் - குமரகுருபர

சுவாமிகள்

இவை தவிரகணக்கிலடங்கா புராண இதிகாச இலக்கியங்களில் இத்திருத்தலம் இடம்பெற்றுள்ளது.


சிறப்பு தகவல்:


மூன்று கோடி சிற்பம்

அம்மனின் சக்தி பீடங்களில் முதன் மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இந்த பீடத்திற்கு "ராஜமாதங்கி சியா மள பீடம்' என்று பெயர். மீனாட்சி அம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது. சுந்தரானந்தர் என்ற சித்தர் அடங்கிய தலம். இத்தலத்தினை "பூலோக கைலாசம்' என்றும், இத்தலத்தின் பெயரைக் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்கிறது புராணம். அத்துடன் உலகத்திலேயே சிலை களும், சிற்பங்களும் மூன்றுகோடி உள்ள ஒரே திருக்கோயில் இதுதான். இந்திரன் உருவாக்கியது. சிவபெருமான் மதுரை நகரில் தனது 64 திருவிளையாடல்களையும் நிகழ்த் தினார். அதில் முதல் திருவிளையாடல் தான் "இந்திரன் சாபம் தீர்த்த படலம்'. இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்ம ஹத்தி (கொலைப்பாவம்) தோஷம் நீங்க பல தலங்களுக்கு சென்று வந் தான். அப்படி வரும் போது மதுரையில், ஒரு சுயம்புலிங்கத்தை கண்டு அதை பூஜித்து தன் தோஷம் நீங்கப் பெற்றான். அங்கு இந்திர விமானத் துடன் கூடிய கோயிலை கட்டினான்.

பெண்மைக்கு முக்கியத்துவம்

அன்னை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார்.
சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறை யில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். கடம்பம், வில்வம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன. பொற்றா மரை, வைகை ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. இத்தலத்தை பொறுத்தவரை பெண் மைக்கு முக்கியத்துவம் தரும் வகை யில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார்.

முக்குறுணி விநாயகர்

ஒரு முறை திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. வலி நீங்க மீனாட்சிக்கு தெப்பக்குளம் கட்டுவதாக நேர்ந்து கொண்டாராம். அப்படி தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்டமான பிள்ளை யார் கிடைத்தார். அவரை சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி "முக்குறுணி விநாயகர்' என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு விநாயகர் சதுர்த் தியன்று 18படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைக் கிறார்கள்.

தங்கத்தேர்

அன்னை மீனாட்சிக்கு 1981ல் தங்கத் தால் தேர் செய்யப்பட்டது. இந்த தங்க தேர் இழுப்பதற்கு அலுவலகத் தில் பணம் கட்ட வேண்டும். ஆனால் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் இலவசமாக தங்கத்தேர் இழுக்கலாம். இத்தேரின் அப்போதைய மதிப்பு ரூ.14,07,093.80. 14.5அடி உயரத் தில் செய்யப்பட்ட இந்த ரதத்தில் 6.964 கிலோ தங்கமும், 87.667 கிலோ வெள்ளியும், 222.400கிலோ தாமிரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

அங்கயற்கண்ணி பெயர் விளக்கம்

அன்னை மீனாட்சிக்கு பல திருநாமங் கள் இருந்தாலும், அங்கயற்கண்ணி என்ற திருநாமம் தான் மீனாட்சிக்கு பெருமை சேர்க்கிறது. மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. மீன் தன் முட்டைகளை தன் பார்வையாலேயே தன்மயமாக்கு வதைப் போல், அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை தனது அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறாள்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் ரஜத (வெள்ளி) சபையாகும். இத்தலத்தில் மட்டும் தான் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாறி இடது கால் துõக்கி சந்தியா தாண்டவம் ஆடியுள்ளார். மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 7 அடி உயர முக்குறுணி விநாயகர் இங்கு அருள் பாலித்து வருகிறார். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி பொற்றாம‌ரைக் குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.

விஞ்ஞானம் அடிப்படையில்: ஆயிரங்கால் மண்டபம் : வடகோபுரத்திற்குப் பக்கத்தில் 5 இசைத் துõண்களும், ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத்தரும் சிலைகளும் உள்ளன. இந்த ஆயிரங்கால் மண்டபம் இங்குள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது. இங்கு 985 தூண்கள் உள்ளன. நடுவில் பெரிய நடராஜர் திருவுருவம் உள்ளது.

திருவிழா

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திரு விழா காணும் இக்கோயிலில் சித்திரை யில் நடக்கும் விழா தான் மிகவும் சிறப்பானதாகும். இது தவிர ஆவணி மூல திருவிழா, தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம் போன்றவையும் முக்கிய விழாக்கள் ஆகும்.

சித்திரை திருவிழா: சித்திரை மாதம் வளர்பிறையில் நடக்கும் 12 நாள் விழாவில் முதல் நாள் கொடியேற்றம், பின் ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வாகனங்களில் வீதி உலா வருவர். 8ம் நாள் மீனாட்சி பட்டாபி ஷேகம், செங்கோல் வழங்கும் வைப வம், 9ம் நாள் மீனாட்சி திக்விஜயம், 10ம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம், 11ம் நாள் தேர்த்திருவிழா, 12ம் நாள் தீர்த்த விழா, வைகையில் அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் சித்திரை திருவிழா முடி வடையும்.

வைகாசியில் 10 நாள் வசந்த விழா, திருஞான சம்பந்தர் விழா. ஆனியில் ஊஞ்சல் திருவிழா. ஆடியில் முளைக்கொட்டு விழா. அடுத்து 12 நாள் நடக்கும் ஆவணி மூலப்பெருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி தந்தது, மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி வழங்கியது, உலவாக் கோட்டை அருளிய லீலை, அங்கம் வெட்டியது, வளையல் விற்றல், குதிரை கயிறு மாறிய லீலை, பிட்டுக்கு மண் சுமந்தது, விறகு சுமந்த லீலை ஆகியவை இடம் பெறும் புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் 6 நாள் கோலாட்ட உற்ச வம், அன்னாபிஷேகம், கார்த்திகை யில் தீபஉற்சவ விழா, 1008 சங்கா பிஷேகம் நடக்கிறது. மார்கழியில் மீனாட்சிக்கு 4 நாள் எண்ணெய் காப்பு உற்சவம், தை மாதம் சங்கராந்தியன்று கல் யானைக்கு கரும்பு தந்தருளிய லீலை, வலைவீசியருளிய திருவிளையாடல், தைப்பூசத்தன்று வண்டியூர் மாரியம் மன் தெப்பக்குளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் உலா வரும் தெப்பத்திருவிழா நடக்கும். மாசி மகா சிவராத்திரியன்று "சகஸ்ர சங்காபிஷேகமும்' 4 கால பூஜையும் உண்டு. பங்குனி மாதத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் செல்லூர் திருவாப் புடையார் கோயிலுக்கு எழுந்தருள்வர்.


திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:36, 18 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 18 April 2011, at 03:43. This page has been accessed 2,963 times.