வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சீனா! சில நாள் குறிப்புகள்... (பகுதி - 8)

From மரபு விக்கி

Jump to: navigation, search

நா.கண்ணன் 


8. வளரும் நாடுகள் ஒன்று


உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் எனப்படும் அமெரிக்கப் பொருளாதாரத்தை இன்னும் பத்தாண்டுகளில் ஓரங்கட்டப்போவது சீனா என்பது பொருளாதாரவியல் ஆரூடமாக இருந்தாலும் சீனா இன்னும் வளரும் நாடுதான். ஏனிப்படி சொல்கிறேன்? ஏனென்றால் வளரும் நாடுகளுக்கு என்றே சில நடத்தைகள் இருக்கும். அது இன்னும் அங்கு மண்டிக்கிடக்கிறது!

முக்கியமானது குமுகாயக் கட்டுப்பாடு (civic responsibility). அந்த அழகிய சங்க்பாய் மலைத்தொடர் அடிவாரம் போக ஏறக்குறைய 4 மணி நேரம். அடிவாரத்திலிருந்து மேலே தாவித்தாவி போய் வர 4-5 மணிகள். பின் ஊர் திரும்ப வேண்டும். திரும்பும் போது இருட்டிவிட்டது.

சீனாவில் எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும். சீனப்பெருஞ்சுவர். பெய்ஜிங்கிலுள்ள ‘நெருங்கமுடியா நகர்’ (Forbidden City), கோடைக்கோட்டை (Summer Palace), சொர்க்கத்தின் கோயில் (Temple of Heaven), தியனமான் சதுக்கம் (Tiananmen Square) என்று. அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற ஒரு பெரும் நாடு சீனா. மேற்கே திபெத் (Xizang)திலிருந்து கிழக்கே ஷங்காய்வரை. தெற்கே ஹைனானிலிருந்து வடக்கே உள் மங்கோலியாவரை என்று பூமத்திய ரேகைக்கருகில் ஆரம்பித்து ரஷ்ய எல்லைவரை செல்லும் வித்தியாசமான தட்பவெட்ப நிலைகள் கொண்ட நாடு. நான் இருந்த இடத்தில் மாம்பழம் கிடைக்க வழியில்லை. ஆனால் கிடைக்கிறது. ரஸ்தாளிப்பழம் கிடைக்க வாய்ப்பில்லை ஆனால் கிடைக்கிறது. மலேசியாவில் இருக்கும் துரியன் பழம் கிடைக்கிறது. ஏனெனில் இவையெல்லாம் சீன எல்லைக்குள் விளைவன. கீழேயுள்ள படத்தைப் பாருங்கள்.இப்பழவகையை அறிவீர்களா?



மலைக்காடுகளில் வளரும் கூம்புமரக் கனிகள்

Blue mount-2.jpg

கூம்புக்கனிகளை உண்ணமுடியாது. ஆனால், அதனுள் இருக்கும் விதை சுவையாக இருக்கும். இது உலகின் வடபகுதிகளில் மட்டுமே கிடைக்கும். சீனா நிச்சயம் கண்டறியப்பட வேண்டிய நாடு. ஏனெனில் நம் தமிழ்ப்பிதாமகர் போதிதருமர் ஷாவோலின் கோயிலை அமைத்து அங்கிருந்துதான் ஸென் மகாயானக் கருத்துக்களைப் பரப்பினார். புத்தகங்களைத்தூக்கி எறியுங்கள்!! சாஸ்திரங்கள் தேவையில்லை!! இறைமை நேரடியாக உணர்ந்து அறியத்தக்கது என்ற போது சீனாவே குலுங்குகியது. இன்று ஸென் நெறி எனப்படுவது மிகவும் போற்றுதலுக்குரிய ஒரு உலக நெறி. அதை அவர் ஸ்தாபித்த இடம் ஹாங்காங் அருகே! தென்மேற்கு தாய்லாந்து, நாகாலாந்து சாயல் கொண்டது. மிகவும் வித்தியாசமான இனங்களின் கூட்டுச் சேர்க்கை சீனா! அங்கு இருந்து அவர்கள் முகத்தைப் பார்த்தாலே இதன் அருமை புரியும்.

என்னுடன் அன்று பயணப்பட்ட பலரை எளிதாக இந்தியர்கள் என்று சொல்லிவிடுவேன். என்னைச் சீனர் என்கின்றனர் சிலர். உண்மையில் நாமாகப் பிரித்துக்கொண்டு அல்லலுறுகிறோம். ஒரே ஜாதிதான் உள்ளது. அது மனிதஜாதி. இப்படிச் சொல்வதும் தப்பு. மனித ஜாதி போலவே குரங்குகள் உள்ளன. எனவே ஒரே ஜாதிதான் உள்ளது. அது உயிர்க்கூட்டம் என்று சொல்லித் தப்பிக்கலாம் :-) சீனா போகும் போது எப்போதும் வேடிக்கையாக இருக்கும். சீனப்படம் ஓடிக்கொண்டிருக்கும் கீழே துணைக்குறிப்பு மாண்டரின் சீனத்தில் போய்க்கொண்டிருக்கும். அவ்வாறெனில் ஒரு சீனரை இன்னொரு சீனர் புரிந்து கொள்ள முடியாது என்று பொருள். அதுதான் உண்மை. காஷ்மீர் ஆள் தமிழகம் வந்தால் என்ன புரியும்? அதே கதைதான் அங்கும். இதனாலேயே சீனாவின் மிகப்பெரிய சவாலாக அன்று முதல் இன்றுவரை இருப்பது எப்படி சீனக்குடிகளை ஒட்டுமொத்தமாக ஒரு தேசியக் கட்டமைப்பில் வைப்பது என்பதே. இதனால்தான் சரித்திரத்தில் சீனா பெரும்பாலும் தனிமைப்பட்டு இருந்தது. அதன் பிரச்சனை ஆயிரம். எனவே உலக வம்பிற்கு அது வருவதில்லை. ஆனால், இப்படி இருந்த சீனாவைக் சீண்டிவிட்டது ஜப்பான்.

நான் பயணப்பட்ட மஞ்சூரியா நிலப்பரப்பில்தான் இரண்டாம் உலக யுத்தத்தின் கொடுகைகள் நடந்திருக்கின்றன. மஞ்சூரிய மன்னனை கைக்குள் போட்டுக்கொண்டு சீனாவைக் கபளீகரம் பண்ண எண்ணிய ஜப்பான் அங்கு செய்த கொடுமைகள் சரித்திரத்தில் முறையாகப் பதியப்படவில்லை. இப்பகுதிகளுள் கொரியாவும் சேரும். கொரியா ஜப்பானியக் காலனியாக சில வருடங்கள் இருந்தது. அப்போது தெருவில் இளமையாக, அழகாக ஒரு பெண் போய்விடக்கூடாது. ஜப்பான் இராணுவம் பிடித்துவிடும். அதன் பின் அவள் வாழ்வு தொலைந்தது. ஒரு நாளைக்கு குறைந்தது 40/50 முறை புணர வேண்டி இருக்கும். அரிப்பெடுத்த வீரனுக்கு எல்லாம் அடிபணிய வேண்டும். இந்த வன்கொடுமைக்கு இன்றுவரை ஜப்பான் மன்னிப்புக் கேட்கவில்லை என்று அந்நாளைய அழகிகள் இந்நாளைய கிழவிகள் சோல் நகரத்தில் ஜப்பானியத்தூதரகத்தின் முன் மறியல் செய்கின்றனர். இன்னும் நாலைந்து பேர்தான் உள்ளனர். அதுகள் மண்டையைப்போடட்டும் என்று ஜப்பான் காத்திருக்கிறது. பின் உலகம் இதை மறந்துவிடும் என்பது ஜப்பானியக் கணிப்பு. ஜப்பானிய சரித்திரப் புத்தகத்தில் இக்கொடுமைகள் எல்லாம் சொல்லப்படுவதே இல்லை. இப்போது இணையம் இருக்கிறது. இந்திய அமைதிப்படையினர் செய்த வன்புணர்ச்சிகள் அம்பலமாகி அலறிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் ஜப்பான் செய்த கொடுமைகள்? ஏதோ அந்தக்காலத்து துன்பியல் நிகழ்வு!

சரி..நான் சொல்ல வந்தது வேறு எதுவோ. எண்ணங்கள் மண்ணைச் சார்ந்தவை. அந்த மண்ணில் நிகழ்ந்துள்ள சோகம் என்னைப் பாதித்தது. இப்போதுள்ள இளம் நங்கைகள், யுவன்கள் மகிழ்வாக உள்ளனர். ஆயினும் வடகொரியா, தென்கொரியா என்று பிரிந்து கிடக்கும் கொடுமை இவர்களைப் பாதிக்கிறது. டாக்டர்.ச்சுவே என்னிடம் சொன்னார், ‘உலகில் மூன்று கொரியாக்கள் உள்ளன. ஒன்று தென்கொரியா (நானிருப்பது), இன்னொன்று வடகொரியா, மற்றொன்று சீனக்கொரியா!’ என்று. வடகொரியாவும், தென்கொரியாவும் சேர்வதில் பல நாடுகளுக்கு விருப்பமில்லை. ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா இவை முடிவு செய்துதான் கொரியாவின் தலை எழுத்தை தீர்மானிக்க வேண்டும். வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது. எனவே உலக நாடுகளுடன் வியாபாரம் செய்ய முடியாது. இந்நிலையில் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் வரமுடியாது. பனிக்காலத்தில் பின் எப்படி வாழ்வது? வடகொரியாவிலுள்ள மலைகளெல்லாம் மொட்டையாகி வருகின்றன. இதற்குக்காரணம் அமெரிக்க அரசியல். உலக்ச் சூழல் மாற்றங்களுக்கு எப்படி அரசியல் துணை போகிறது பாருங்கள். வடகொரியாவில் ஒரு மலையில் கூட மரமில்லை என்றால் அதன் பாதிப்பு எத்தகையதாக இருக்கும்?

சரி..சரி..மீண்டும் என் பயணத்திற்கு வருவோம். மலைக்குப் போனோமா? திரும்பி வந்தோமா? இருட்டிவிட்டதா? ஆம். பிரம்மாண்ட சாலைகள் போடப்பட்டுள்ளன. எங்கோ இருக்கும் சங்க்பாய் மலை உச்சிக்கு சாலை போட்டிருக்கிறார்கள். வெறும் தார்ச்சாலை அல்ல. பல இடங்களில் ஏர்போடில் காண்கின்ற கான்கிரீட் சாலை. திரும்பி வரும் போது, பாவம் பேரா.லீ கத்திக்கொண்டே வந்தார். ஏனெனில் எதிரே வரும் கார், ஃபுல் பீம் லைட். எதிராளியைக் குருடாக்கும் வெளிச்சம். சீனச்சாலைகளில் மெதுவாகப்போகும் மூன்று சக்கர டெம்போக்கள் போகின்றன, ஸ்கூட்டர்கள் போகின்றன. மலை மாடுகள் நடு ரோட்டில் படுத்துக் கொள்கின்றன. ஒரு சிறுநகரில் ரிக்‌ஷா கூட பார்த்தேன். இந்தக் குழப்படியில் எப்படி இரவில் கார் ஓட்டுவது?  எப்படியோ யாரையும் இடிக்காமல், கொல்லாமல ஊர் வந்து சேர்ந்தோம்!









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:34, 17 நவம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 17 November 2011, at 10:31. This page has been accessed 2,387 times.