வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சீனா! சில நாள் குறிப்புகள்... (பகுதி - 5)

From மரபு விக்கி

Jump to: navigation, search

நா.கண்ணன் 


5. புவியெல்லாம் பசுமை


நான் இதுவரை பார்த்த சீனா என்பது நகர் சார்ந்த சீனா! பெய்ஜிங்க், ஷங்காய், சிந்தாவு, ஹாங்காங், தாய்பெய். 20ம் நூற்றாண்டிற்குப் பிறகு உலக நகரெங்களெல்லாம் ஒரே முகம் கொண்டவையாக உள்ளன. கிராமங்களில்தான் எஞ்சிய புவியழகு உள்ளது. யாஞ்சி நகரை விட்டு 20 கிலோமீட்டர் நகர்ந்தாலே புவியின் அழகு நெஞ்சை அள்ளுகிறது. ஒரு புறம் பார்த்தால் ஐரோப்பிய நில அமைவு. இன்னொரு புறம் இமயச்சாரல். இன்னொருபுறம் ஆஸ்திரேலியக் காடுகள். ஒரு நாட்டின் உணர்வு என்பது இம்மாதிரி இடங்களில்தான் தெரிகிறது. எங்கு பார்த்தாலும் மக்காச்சோளம்! சீனா நம்மைப் போல் அரிசி உண்ணும் நாடு. மக்காச்சோளம்


Blue mount-Europe 6.jpg

                                                                                          ஐரோப்பிய நில அமைவை ஒத்த சீனபூமி

    


என்பது மெகிகோ (மெக்ஸிகோ) உணவு முறை. பின் ஏன் பயிரிடுகிறார்கள்? சோள எண்ணை (கார்ன் ஆயில்), பயோஃபூயல் (தாவர எண்ணெய், கார்களுக்கு பயன்படுத்தலாம்). சக்கையை பன்றிக்குப்போட்டு பன்றியை உண்டு விடுகிறார்கள்!


ஒரு நீண்ட பயணம் நாளை, காலை 6 மணிக்குக் கிளம்ப வேண்டுமென்று ஆசிரியர் தின பார்ட்டியில் சொன்னபோது கொஞ்சம் அலுப்புதான். ஏனெனில் விருந்து முடிந்த பின் என்னிடம் மாணவர்கள் இதற்குப் பின் எங்கு போகலாம் எனக்கேட்டு, 1. காப்பிக்கடை, 2. பப் 3. கராவுகே? என்றார்கள். நான் நடனம் என்றேன். எல்லோருக்கும் ஆச்சர்யம். ஆம் எனக்கு நடனம் பிடிக்கும். பெரு நாட்டிற்குப் போயிருந்த போது இந்திய நடனத்தில் (பாலிவுட்) சொக்கிப்போன நர்த்தகி தன்னுடன் இணைந்து ஆடமுடியுமா? எனக்கேட்க ஏதோ உற்சாகத்தில் ஆகா! என்று போய்விட்டேன். தென்னமெரிக்காவில் ஆப்பிரிக்க ஊடு நடன முறைகளும் ஊடுபாவியிருக்கின்றன. அவள் ஆட! நான் ஆட! பெண்டு கழண்டு விட்டது. ஆனால் நடனம் ஆட ஆரம்பித்த பின் நிற்பது கடினம். அதன் பின் எங்களில் சிலர் டிஸ்கோ போய் காலை 4 மணிவரை ஆடிக்கொண்டு இருந்தோம். ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகளில் பிரபல இசையின் ஆடியோ டிராக்கை எடுத்துவிட்டு வெறும் இசைக்கருவி பாட்டையை மட்டும் போட்டு நம்மைப் பாட வைக்கும் இசையகங்கள் உண்டு. அதனை ஜப்பானிய மொழியில் காராவுக்கே என்றும், கொரிய மொழியில் நொரேபாங்க் என்றும் சீனாவில் கேடிவி (KTV) என்றும் சொல்கிறார்கள். அங்கு போய் தொண்டை கிழியக் கத்தலாம். பாடல்களுக்கு ஆடலாம். இசை வந்த பின் காலைக் கட்டிக்கொண்டு இருக்க முடியாது. ஆட ஆரம்பித்தேன். இந்தத்திறமையை வெளிநாடு வந்துதான் கண்டுபிடித்தேன். ஆட்டம் போட வைக்கும் இசையைக் கண்டுபிடித்த தமிழ்நாட்டில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு (ஆம்பிளைக்குத்தான் சொல்லறேன்) போன்றவற்றை வைத்து நம் எல்லோர் காலையும் கட்டிப்போட்டுவிட்டது விதி! வெளி நாடு வந்த பின் இந்தக் கூச்சம் போயிற்று. நான் ஆடுவதைப் பார்த்து பேரா.லீ ஆட, அதைப்பார்த்து கூட இருந்த டீன் (dean) ஆடப்போக மாணவர்கள் தோள் கொடுத்தனர். அவ்வளவுதான், அங்கிருந்த ஒரே வெளிநாட்டுப் பிரமுகன் நான்தான். எனவே எல்லாப் பெண்களும் என்னுடன் ஆடத்தொடங்கினர். அதற்குப்பின் வேலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பாங்க்ரா, டிவிஸ்ட், ராக், பால் என்று பலவகை ஆட்டங்கள். அதுதான் முன்னமே சொன்னேனே, ‘சாமி பிடித்தால் சீக்கிரம் மலை ஏறாது’ என்று!


இத்தனை ஆட்டத்திற்கும் பிறகு வந்து தூங்கி காலையில் 6 மணிக்குக் கிளம்ப வேண்டும். நல்ல வேளையாக சீக்கிரமே விடிந்து விடுவதால் காலைச் சூரியன் 5 மணிக்கே எழுப்பி விட்டு விட்டான். இரவு தூங்கும் போது முழு நிலா வெளிச்சம் ரூமுக்குள் வந்து தாலாட்டியது. பருவங்களில் நான் வசந்தம்!


                                                                                                   அழகிய சாலைகள்


Blue mount-road 7.jpg







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:56, 11 நவம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 15 November 2011, at 12:49. This page has been accessed 2,129 times.