வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சீனா! சில நாள் குறிப்புகள்...(பகுதி - 3)

From மரபு விக்கி

Jump to: navigation, search

நா.கண்ணன் 


3. கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு:


சூழல் வேதியியல் சிறப்புப் பேச்சு

Talk-1.jpg

எதை நாம் படிக்கும் போதே ஆசையுடன், ஆர்வத்துடன் படிக்கிறோமோ அதுவே நம்மைக் காக்கும், வளர்க்கும், பின்னால் சிறப்பிக்கும். இப்படித்தான் நான் சூழலியல் படிப்பை ஆரம்பித்தேன். அது வெறும் பாடமாக எனக்கு அமெரிக்கன் கல்லூரியில் தோன்றவில்லை. என் ஆன்மாவை இழுத்தது. கிளாஸை கட் பண்ணிவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து சூழலியல் புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். அப்படியொரு ஈர்ப்பு. அந்தப்பயணம் இன்றும் தொடர்கிறது. என்னை எங்கெங்கெல்லாமோ கொண்டு சென்றிருக்கிறது. பூமிபுத்ரனான நான் என் பூமிக்காக பேசும் பேச்சு என்னை உலகின் ஐந்து கண்டங்களுக்கும் இட்டு சென்றுவிட்டது.


பேச்சு கொஞ்சம் ஆழமான துறை சார்ந்தது. பல மாணவர்களுக்கு முதன்முறை. எனவே மாணவர்களின் கவனத்தை பாடத்தின் பால் வைத்திருக்க நான் மூன்று பரிசுகளை அறிவித்தேன். என்னிடமிருந்து என் அறிவின் சுடரைப் பிரகாசிக்க வைக்கும் முதல் மூன்று கேள்விகளுக்கான் பரிசுகள். முதற்பரிசு: கொரியாவிற்கு கல்விப்பயணம். 10 நாட்கள். முழுச்செலவுடன். இரண்டாம் பரிசு ஒரு கொரிய கால்பந்து டி சர்ட் (ரெட்ஸ்) மூன்றாம் பரிசு அமெரிக்க வேதியியல் கழகத்தின் கான்பரன்ஸ் பேக். இதன் பலன் கிளம்பும் நாளுக்கு முதல் நாள்வரை மாண்வர்கள் நான் சொன்னதை நினைவில் வைத்து கேள்வி கேட்க வைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!


மாறும் உலகம். மனிதன் என்ற உயிரியின் உலக அளவினால தாக்கம். அவனது இராசயணப் பொருட்கள். அதன் அழிவற்ற தன்மை. அதுவே மனிதனில் கையெழுத்தை பூமியின் மூலைக்கு மூலை பதிந்து வைத்திருப்பதை அறியும் அறிவியல். அதை எப்படி நாம் பூகோள மாற்றத்தின் அடையாளமாகக் காண்பது. ரேடியோ ஐஸடோப்புகள் போல் மனிதன் உருவாக்கிய வேதிமங்களை எப்படி புவியியல் மாற்றங்களைக் காணப் பயன்படுத்துவது. இதுவே என் பேச்சின் சாராம்சம்.


பேச்சு மிகப்பயனுள்ளதாக அமைந்ததை பேரா.லீ பலமுறை எனக்குச் சொன்னார். புதிய ஆய்வுத்திட்டங்கள் போட அது பாதை வகுப்பதாகச் சொன்னார். நான் வந்த ஒரு நாளில் மாணவர்களின் மனப்போக்கையே மாற்றி அவர்களைத் தயக்கமின்றி ஆங்கிலத்தில் பேச வைத்தமைக்கு நன்றி சொன்னார்.


ஆசிரியர் தின மாலை விருந்து. நான், பேரா.லீ, அகடமிக் கௌன்சில் டைரக்டர், மாணவர்கள்

1st-dinner.jpg

அன்று மாலை சிறப்பு விருந்து. அன்று சீனாவில், ஆசிரியர் தினம். பின் வரப்போகின்ற முழுநிலா விழா (சந்திரவிழா) என இரண்டு முக்கிய தினங்களுக்கான விருந்து. நான் சிறப்புப் பேராசிரியராக அங்கு வந்ததால் எனக்கு சிறப்புப் பாராட்டு. ஒரு கல்வியாளனுக்கு, ஒரு ஆசிரியனுக்கு பெரிய பாராட்டு என்பது அவனது மாணவச் செல்வங்கள் எவ்வளவுதூரம் அவனிடமிருந்து கற்ற கல்வியை மதிக்கிறார்கள் என்பதே. நான் ஒரு ஆசிரியனாக இருந்தது, பிறவி எடுத்ததன் முழுப்பயன் என்று என்னையே ஆச்சரியப்பட வைத்த மாலை விருந்து. ஒவ்வொரு மாணவரும் (ஏறக்குறைய 20 பேர்) தனித்தனியே என் பேச்சைப் பற்றி, அதில் எதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது, எப் ’படி’ நிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவான ஆங்கிலத்தில், மிகப்பிரயாசைப்பட்டு விளக்கிச் சொன்னார்கள். பேரா.லீக்கு ஒரே ஆச்சரியம். தன் மாணவர்கள் இவ்வளவு ஆங்கிலம் பேசுவார்களா? அறிவியலை இவ்வளவு ரசிப்பார்களா? என்று. மீண்டும், மீண்டும் என்னைப் பாராட்டினார். மாணவர்களுக்குள் ஏதோவொரு மாற்றத்தை நான் விளைவித்து விட்டதாக.. சீனாவில் இப்போது காசு இருக்கிறது. உழைக்கும் மனிதத்திறம் இருக்கிறது. ஆனால் இலக்குதான் தெரியவில்லை என்றார். என்னைப்போன்ற மூத்த கல்வியாளர்கள் அடிக்கடி வந்து அவர்களுக்கு வழிகாட்டி, தொலைநோக்குப் பார்வையை அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.


கல்வி என்பது ஆழ்வார் பேசுவது போல்,’ ஞான ஒளி’. இன்றுவரை அறிவியல் விளக்கமுடியாத ஒரு அதிசயம் தீபம் எப்படி தன்னில் குறையாமல் மற்றொரு விளக்கிற்கு ஒளியைப்பரப்புகிறது என்று. அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாக, இன்புருகிச் செய்யும் கல்வி ஞானதீபம். அது தனக்கும் ஒளி காட்டும். மற்றவருக்கும் ஒளி காட்டும். கற்றோர் எங்கு எச்சூழலில் பிறந்திருந்தாலும். அவர் கற்ற கல்வி மாசற்று உயர் விழுமியங்களை தாங்கி நின்றால், ‘கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்புதான்!’


நா.கண்ணன்





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:29, 11 நவம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 11 November 2011, at 11:44. This page has been accessed 2,230 times.