வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சிவஞான போதம்- நூலிய அறிவியல் உரை

From மரபு விக்கி

Jump to: navigation, search

Dr K.Loganathan

முனைவர் கி.லோகநாதன், 1995

நூன்முகம்- Preface
சிவஞான போதத்தெளிவு என்பது போதத்தெளிவாக குறுகி நிற்கின்றது. இந்த ஞானபோதம், அகத்து மலமாசுக்களைப் போக்கி சித்தத்தை சிவமாக்கும் ஞானபோதம், என்றும் யாவர் உள்ளத்தும் நடந்து கொண்டே இருக்கும் ஒன்றும் ஆகும். அறியாமைத் துன்னிருளிலே நாம் கிடப்பதால், உள்ளத்தின் அடித்தலத்திலே அறிவோடு அறிவாக இருக்கின்ற அந்த மெய்ஞானத்தை அறியாது வாழ்க்கையையும் செம்மையாக அமைத்துகொள்ளாது தடுமாறிய வண்ணம் இருக்கிறோம். இந்த ஞானபோதத்தை தெளிந்து அறிவாக்குவதும் அனைவராலும் செய்யக்கூடியவொன்றுமல்ல. பல்வேறு தவங்கள் செய்து இறையருட் பெற்றான் ஒருவனாலேயே இதனை பிழையறக் கண்டு மொழியாக்கி பிறருக்கும் உணர்த்த முடியும். உலகெங்கும் காலந்தோறும் இந்த ஞானத்தை ஆய்ந்து தத்தம் நுழைவுகட்கு ஏற்ப தெளிந்து மொழிபடுத்தியவர்கள் பலர். சீனாவின் லாவோ ட்சுவிலிருந்து கிரேக்கத்தின் பிளேட்டோ அரிஸ்டாட்டைல் போன்றவர்களும் , இந்திய உபகண்டத்து உபனிடத இருடிகளும் புத்த சமணப் பெரியார்களும் வேதாந்த மரபினரும் மற்றும் பல இசுலாமியப் பெரியார்களும் இத்தகைய ஞானத்தையே தாம் கண்டுவிட்டதாகத் துணிந்து தாம் அறிந்த அளவில் பிறருக்கு உபதேசம் செய்து அடங்கினர்.
இதில் தொல்காப்பியம் தொடங்கியும் அதற்கு முன்பும் நூலிய அறிவியல் எனும் முறையியல் பிழையாது இந்த ஞானபோதத்தை ஆய்ந்து தெளிந்தவர்களாக தமிழ் மக்கள் விளங்கி, அதன்வழி சென்று அரிதாகிய பற்பல ஞானங்களை வைரங்களென குடைந்தெடுத்து அழியாத ஞானச் செல்வங்களாக் பல ஞானநூற்களை யாத்துச் சென்றுள்ளனர். தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம் போன்றவையும் இவற்றையொட்டி எழுந்த இன்னும் பலவும் இம்மரபில் முகிழ்த்தவை---- நூலிய அறிவியல் முறையியல் பிழையாதவை. இந்த நெடிய மரபில் அளப்பரும் நுணுக்கத்து அற்புத நுழைவினதாக மெய்கண்டாரின் "சிவஞானபோதம்" அமைகின்றது. மெய்யறிவாய்வின் அனைத்து ஆழங்களையும் கண்டு ஒருங்கிணைத்து முறைபடுத்தி செவ்விதின் விளக்கி அனைவர்
உள்ளத்திலும் விளங்கும் இந்த ஞானபோதத்தை சமயாதீத நிலையில் நின்று விளக்குவதாக இந்நூல் பன்னிரண்டு சூத்திரங்களிலும், ஒவ்வொரு சூத்திரப்பொருளையும் இன்னும் விளக்குவான் பொருட்டு ஏது நடையிலும் எடுத்துக்காட்டுகளொடும் யாத்திருக்கின்றார் மெய்கண்டார். ஆகமப் பிரமாணங்கள் வேதப்பிரமாணங்கள் ஞானமுதல்வர்கள் என்றவாறு யாதுமில்லை. அனைவர் உள்ளத்திலும் சுடர்ந்து கொண்டே இருக்கும் ஞானத்தை இருக்கின்றது என்று நிறுத்தத்தேவை இல்லை, தெளிவாக அறியாதிருப்பதை சிந்தித்து தெளிவதே செய்யக் கடவது. அதற்கு உதவுமாறே இந்த நூல் செல்கின்றது.
"போதத்தெளிவு" எனும் இந்நூல் சிவஞானபோதத்தை விளக்குவதாகவே யாக்கப்பட்டிருக்கின்றது. அதில் வெளிப்படையாக கூறப்படுவதிலிருந்து மறையாக புதைவாக கிடப்பதையும் வெளிக்கொணர்ந்து இந்த சிவஞானத்தை இன்னும் தெளிவு படுத்துவதாக இந்நூல்.
சிவஞானபோதம் "பொதுவதிகாரம்" "சிறப்பதிகாரம் அல்லது உண்மை அதிகாரம் " என்ற இரண்டு பெரும் பிரிவுகளாகவும், முன்னது "பிரமாணவியல்' "இலக்கணவியல்" என்ற இரண்டு கூறுகளையும் , பின்னது "சாதனவியல்" "பயனியல்" என்ற இரண்டு கூறுகளையும் உடைத்ததாக ஓர் கட்டொழுங்கோடு யாக்கப்பட்டிருக்கின்றது. பொதுவதிகாரத்தின் உண்மைவழியே தான் செம்மார்ந்த வாழ்க்கை யாதென்று விளக்கும் சிறப்பதிகாரம் செல்கின்றது.
"பொதுவதிகாரம்" என்பது அனைவருக்கும் பொதுவாகிய, அனைவர் உள்ளத்திலும் புதைந்து கிடப்பதாகிய மெய்யறிவுகளை புதைவு போக்கி மறைவு போக்கி அகழ்ந்து வெளியேக் கொண்டு வந்து தெள்ளறிவாக நிறுத்தி அனைவரும் கண்டு மகிழச் செய்வதாகும். மெய்ஞானத் தெளிவு எப்படியோ, அப்படியே வாழ்க்கை என்பதால் , இந்த சிவஞானத்தை தெளிவித்த பின், இப்படித்தான் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும், அதன் காரணங்கள் இவை இவை என அறிவியல் நியதிகட்கு ஒத்துவரும் முறையில் மெய்வாழ்க்கையைத் தெரிக்கும் பண்புடையதாக சிறப்பதிகாரம் விளங்குகின்றது.
இவற்றில் 'பொதுவியல்பு' என்பதை 'ஆரணவியல்' என்றும் சிறப்பியல்பை 'பூரணவியல்' என்றும் கூறலாம். நூலிய அறிவியல் நியதிகளோடு இவை விளக்கப்படுவதால், நன்னெறியின் அறிவினைத் தருவது யாது என்னும் 'ஏரணவியல்" தெளிவும் நூலெங்குங் கிடப்பதைக் காணலாம். ஏரணத் திறனே ஏது நடையிலும் எடுத்துக்காட்டு வகையிலும் சிந்தனைத் திறன்மிக்க ஓர் நெறி வழி யாராலும் எதிர்த்து மறுக்க முடியா வகையில் தெளிவுபடுத்திச் செல்வதாகும். பொய்யறிவுகளைத் தரும் பிழைநெறிகளை அடையாளங் கண்டு போக்கி, மெய்யறிவுகளையேத் தரும் மெய்கண்ட நெறியையே விளக்கிச் செல்லும் திருநூல் இதுவென்றும் கருதத்தகும்.
பூரணவியல் என்பது, அபூர்த்தியாக நிறைவற்ற குறைவாக, பற்பல வேண்டிவேண்டித் திரியும் மக்கட்கு அந்த வேட்கை நிலைபோக்கி பூரணன் நிலையுற்று அமைதி அடைய வழிக்காட்டும் இயலாகும். இது சாதனவியல் என்றும் அதனால் அடையக்கூடிய நன்மைகளை விளக்கும் பயனியல் என்றும் இந்நூலில் இயங்குகின்றது. இப்படிப்பட்ட பூரணவியலை நிறுத்தற்கு உதவியாக இருப்பதே ஆரணவியாலாகும். எவ்வாறு ஆராணவியலோ அதற்குத் தகவே செம்மார்ந்த வாழ்க்கை யாதென்று நிறுத்தும் பூரணவியலாகும்.
இந்த இரண்டு இயல்களையும் எவ்வாறு மெய்கண்டார் விளக்குகின்றார் என்பதை எவ்வளவு எளிதாக விளக்கமுடியுமோ அவ்வளவு எளிதாக இங்கு விளக்கப்படும். இதன் பொருட்டு இலக்கணக் குறிப்புக்களும் பிற சமயக் கருத்துக்களும் திருமுறைகளிருந்தும் ஏனைய மெய்யறிவுப் பனுவல்களிலிருந்தும் விரிவான மேற்கோள்களும் தவிர்க்கபட்டிருக்கின்றன.


அன்பன் கி.லோகநாதன்.
For an English translation with commentray also by myself please visit:

http://ulagan.tripod.com/bocontent-e.html

தமிழில் முழு உரைக்குச் செல்க:

https://sites.google.com/site/meykandasastras/civanjana-botham-tamil

Contributors

Ulagankmy

This page was last modified on 26 January 2011, at 07:05. This page has been accessed 2,843 times.