வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சித்திரம் பேசுதடி! எல்லோரா குகைகள் 4

From மரபு விக்கி

Jump to: navigation, search
Ellora2hinducaves.jpg
7-ம் நூற்றாண்டுக் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படும் இந்த இந்து சமயத்தைக் குறிக்கும் குகைகள் பெரும்பாலும் இந்துமதக் கடவுளரையே கொண்டுள்ளது. முதலில் நாம் காணும் கோயில் விஷ்ணுவின் கோயிலாக இருந்திருக்கின்றது. இந்துமதத்தின் பல்வேறு கடவுளரின் உருவங்களையும் காணலாம் இங்கே. நுழையும்போது துவாரபாலகர்களும், நதிகளின் தேவ உருவங்களையும் கொண்ட சிற்பங்களைக் காண முடிகின்றது. இடப்பக்கத்தில் துர்கை, மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, காண்கின்றோம். வலப்பக்கத்திலும் துர்கையோடு கூடிய நடனக் கோலத்தில் ஈசனின் சிற்பமும், ராவணன் கைலை மலையை அசைக்கும் கோலத்திலும் பார்க்க முடிகின்றது. இந்த ராவணனின் சிற்பத்தை வைத்தே இந்தக் குகையும் அவ்வாறே அழைக்கப் படுகின்றது.


இது தவிர, ராமாயணக் கதையைக் கூறும் சிற்பங்களும் சிறிய அளவில் செதுக்கப் பட்டிருப்பதையும் காண முடிகின்றது. அடுத்த குகை தசாவதாரக் குகை என அழைக்கப் படுகின்றது. ஆனால் இது ஒரு காலத்தில் புத்த மதக் குகையாக இருந்திருக்கலாம் எனவும், பின்னாட்களில் மாற்றப் பட்டிருக்கலாம் எனவும் சொல்லப் படுகின்றது. திறந்தவெளி ஒன்றும், ஒரே கல்லினால் மண்டபம் ஒன்று காணப்படுகின்றது. பக்கத்திலேயே இரண்டு தளம் கொண்ட கோயில் ஒன்றும் இருக்கின்றது. மண்டபத்தின் நுழைவாயிலில் கங்கை, யமுனை போன்ற நதியின் தேவதைகளின் உருவம் செதுக்கப் பட்டிருக்கின்றது. கூரையைப் பாருங்கள், அடடா, என்ன அழகு? என்ன அழகு?? இப்போதெல்லாம் அரசின் உதவி கிடைத்தாலும் கூட இம்மாதிரியான சிற்ப வேலைப்பாடுகளை இவ்வளவு தரத்தோடு செய்ய முடியுமா சந்தேகமே!


சிங்கங்கள், கணநாதர்கள், மேலே காண்கின்றார்கள். படிகள் மேலே உள்ள தளத்திற்குச் செல்ல ஏறுகின்றோம். ஒரு பெரிய விசாலமான கூடம் வருகின்றது. மண்டபம் எனவும் சொல்லலாமோ??? இங்கே தான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் செதுக்கி வைத்திருக்கின்றனர். இன்னும் நன்றாய்ச் சுற்றிப் பார்த்தோமானால், விஷ்ணு மட்டுமில்லாமல், சிவன், சிவ, பார்வதி சொக்கட்டான் ஆடும் கோலத்தின் சிற்ப வடிவம், ஆஹா, உமை அன்னையின் முகத்தில் தான் எவ்வளவு சந்தோஷம்?? கணவனோடு ஆடுவதாலா? அல்லது ஆடல்வல்லானை ஜெயித்துவிட்டோமென்றா?? புரியவில்லை!ஆஹா, இதோ, காரணம் புரிந்துவிட்டது. அம்மை ஈசனைத் திருமணம் செய்து கொண்டு இப்போதே வந்திருக்கின்றாள். அது தான் காரணம், நாணம் குமிழியிட, அது முகத்தில் சிரிப்பாய் மலர்ந்திருக்கின்றது. அதோ, அது என்ன??/


லிங்கத்தில் இருந்து சிவனா? அல்லது சிவன் லிங்கமாய் ஆவிர்ப்பவிக்கின்றாரா?? எதிரே யார்?/ ஓ, மார்க்கண்டேயரா?? ஆமாம், மார்க்கண்டேயரைக் காக்க இறைவன் லிங்க வடிவத்தில் இருந்து சிவனாக வந்து எமனைத் தண்டிக்கின்றார். அதுக்கும் முன்னால், இது என்ன?// கங்கையைத் தலையில் தாங்கும் கோலத்தில் சிவன்!!! பார்க்கக் கண் கோடி போதாது! இத்தனையும் செய்து முடித்த நம்ம முன்னோர்களின் புத்திசாலித் தனத்தைப் பாராட்டுவதா? அல்லது இப்போது கவனிப்பார் அதிகம் இல்லாமல் ஏதோ ஓரளவு கவனிப்போடு, மெல்ல, மெல்ல அழிந்து கொண்டிருப்பதை நினைத்து வருந்துவதா?? புரியவில்லை!

Indexkailasatemple.jpg

இப்போ நாம் காணப் போவது கைலாச நாதர் கோவில் இருக்கும் குகைப் பகுதி. இது உலகிலேயே ஒரே கல்லால் கட்டப் பட்ட மிகப் பெரிய குகைக்கோயில் என்று சொல்லப் படுகின்றது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் இங்கு மிகுந்து காணப் படுகின்றது. எதுவுமே பெரிய அளவிலேயே நம் முன்னோர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த எல்லோரா குகைக் கோயில்கள் ஒரு சான்று. பெரிய புத்தர் சிலைகள், பெரிய சிவலிங்கம் என எல்லாமே மிகப் பெரிய அளவிலானது. இவை எல்லாம் செய்து முடிக்க எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன. சற்றும் சலிக்காமல் மழையிலும், வெயிலிலும், குளிரிலும் அலுப்புக் கொள்ளாமல், உடல் வருத்தம் பாராமல் வெறும் உளியையும், சுத்தியலையும் வைத்துக் கொண்டு செதுக்கிய இந்தச் சிற்பங்களின் அளவையும், அழகையும், குகைக் கோயில்களின் அமைப்பையும் பார்த்தால் கட்டுமானத் துறையில் எத்துணை சிறந்தவர்களாயும், வல்லவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பதும் நன்கு புலனாகின்றது அல்லவா??

1349857160 a582be9bf4 ellora3.jpg

குகைக்கோயில்களுக்குச் செல்லும்போது கடந்து செல்லும் பாதை இது. முற்றிலும் மலைப்பாறைகளினாலேயே ஆன பாதை இது. இந்தப் பாதையைக் கடந்ததும் வருவதே கைலாசநாதர் கோயில் ஆகும். முற்றிலும் ஒரே கல்லினால் ஆன இந்தக் கோயில் பெரிய அளவில் அலங்கரிக்கப் பட்டு மூன்று தளங்கள் கொண்டதாய விளங்குகின்றது. மேலிருந்து கீழே செதுக்கப் பட்டதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் வெளிச் சுவற்றில் இருந்து உள்ளே செல்லும் வழியில் ஒரு பெரிய முற்றம் காணப் படுகின்றது. முக்கியமான சிவன் கோயிலைச் சுற்றிலும் அது செல்லுகின்றது. எதிரே ஒரு பெரிய நந்தீஸ்வரர் காணப் படுகின்றார். மிக மிக அழகாய் அலங்கரிக்கப் பட்டுள்ளது சிற்பங்களால். கிட்டத் தட்ட 20 மீட்டர் உயரம் உள்ள தூண்கள் இருபுறமும் காணப் படுகின்றன. மூன்று யானைகள் அவற்றை அலங்கரிக்கின்றது.
Ellora1kailasa.jpg

முற்றத்தின் இடது பக்கம் நதி தேவதைகளும், அதன் வலது பக்கத்தில் இலங்கேஸ்வரன் கோயிலும் உள்ளது. கோயில் மேற்கே பார்த்து எழும்பி உள்ளது. கீழ்த்தளத்தில் உள்ளது. கையில் தாமரைப் பூக்களை வைத்துள்ள யானைச் சிற்பங்கள் காணப் படுகின்றன. மேல் தளம் 16 அல்லது 14 தூண்கள் உள்ள மண்டபத்துடனும், மூன்று முக மண்டபங்களுடனும் காணப் படுகின்றது. நந்தி இருக்கும் கூடாரத்தை இவை ஒரு பாலத்தால் இணைக்கின்றது. கைலை என அழைக்கப் படும் கைலாசத்தின் கலாசார வடிவங்கள் மிக அருமையாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. துர்கை அம்மன் வலது பக்கமும், இடது பக்கம் நுழையும் இடத்தில் விநாயகர் சிற்பம் சற்றே சிதைந்த நிலையிலும் காணப் படுகின்றது. இரண்டு படிக்கட்டுகள் மேல்தளத்துக்குச் செல்லக் காணப் படுகின்றது. முக்கியமான கோயிலின் மண்டபத்தில் ராமாயணச் சிற்பக் காட்சிகளும், மகாபாரதக் காட்சிகளும் காண முடிகின்றது. கீழ்த்தளத்தில் ஈசன் கஜமுகாசுரராக யானையாக வந்த அசுரனைக் கொன்று அந்தத் தோலுடன் நடனமாடும் கோலத்தில் காண்கின்றோம். மேலே மண்டபத்தில் ஆஹா, இது என்ன?? ஜடாயுவா இது? ராவணனுடன் சண்டை போடுவதைப் பார்த்தால் நிஜம் போல் தோன்றுகின்றதே? இதோ இங்கே மகாலட்சுமி, இங்கே துர்க்கை. இன்னும் பார்க்க ஆசைதான், ஆனால் இதை முடித்துவிட்டு மேலே போய் அங்கிருந்து கீழே தெரியும் காட்சிகளைப் பார்த்துவிட்டு வண்டிக்கு வரச் சொல்லி வழிகாட்டி சொல்லிவிட்டாரே?? மற்ற குகைகள்?? மற்றவை கிட்டத் தட்ட அழியும் நிலையில் உள்ளது. உள்ளே செல்ல அனுமதி இல்லை! அடக் கடவுளே? அப்போ ஜைனக் குகைகள்??சாப்பாடு முடிஞ்சு திரும்ப வருவோம். சரி, இப்போ சாப்பிட்டு விட்டே வருவோம். நமக்கும் கொஞ்சம் அலுப்பாய் இருக்கிறது. இதை ஆரம்பிச்சது என்னமோ எல்லோராவில். ஆனால் எல்லோரா வரதுக்கு முன்னாலே தேவகிரிக் கோட்டைக்கு மேலே ஏறிச் சென்றது வேறே ஆயாசம் அதிகமாய் உள்ளது. தேவகிரிக் கோட்டையும், மிச்சம் இருக்கும் ஜைனக் குகையும் நாளை பார்ப்போமா????

--Geetha Sambasivam 10:34, 6 ஜூலை 2011 (UTC)



Contributors

Geetha Sambasivam

This page was last modified on 7 July 2011, at 10:17. This page has been accessed 2,855 times.