வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சித்தர் வழியில் சாங்க தேவர் 25

From மரபு விக்கி

Jump to: navigation, search

சித்தர் வழியில்…… சாங்கதேவர்

Indexsidhas.jpg

உடலிலிருந்து உருவத்தைப் பிரிந்து சம்யமம் செய்யும் கண்கட்டி வித்தை வாழ்க்கைக்குத் தேவையாக இருந்திருக்கிறது. பிறர் பார்வையிலிருந்து தங்களது உடலை மறையச் செய்து, அரூபமாக நின்று இயங்கும் கலையினை அக்கால சித்தர் பலரும் பயன்படுத்தியதைப் போல சாங்கதேவரும் பிறர் கண்ணுக்குப் புலனாகா சித்தி பெற்றிருந்தார். தபதி ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்துக்கொண்டு, பல சீடர்களுக்கு உபதேசம் செய்து வந்தார். அதே சமயம் தமது வல்லமையினால், வானவீதியிலே பறந்து சென்று பண்டரீபுரத்திலுள்ள ஸ்ரீ பண்டரீநாதனை வணங்கிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.



தனது உடல் தோன்றத்தின் மீது சம்யமம் செய்து நிற்பதால் கூட்டத்துக்கு மத்தியில் அவர் நின்று கொண்டிருந்தாலும் பிறர் எவரும் அவரைக்  காண இயலாது.உருவம் மறைத்தல் என்பது மட்டுமல்ல.தங்களது சப்தம் கேளாது செய்வதற்கும், தங்களது ஸ்பரிசம் உணராத நிலைக்கும், தங்களது மேனி நுகர்ச்சி உணராத நிலைக்கும் அவற்றில் சம்யமம் செய்து எல்லா சித்தர்களும் சித்து விளையாடுவது போல சாங்கதேவரும் அடிக்கடி சித்து விளையாடுவார்.எல்லா சித்துக்களிலும் சித்திகள் பெற்றும் சாங்கதேவருக்கு மனநிம்மதி என்பது இல்லாது இருந்தது. ‘இத்தனைக் காலம் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தும் மனநிம்மதி என்னவென்று அறியாது இருக்கிறோமே’ என்று சாங்கதேவர் மனம் குழம்பிக் கொண்டிருக்கும் போது அசரீரி வழி அவருக்கு உணரப்பட்டது.


“பண்டரீபுரத்தில் ஞானதேவ் எனும் ஒரு சிறு பிள்ளை இருக்கிறான். அவன் ஒரு பரிபூரண பிரம்ம ஞானி.

அவனைச்  சந்தித்து ஞானோபதேசம் பெறுவாயாக” என்று. அந்த அசரீரி சாங்கதேவருக்குச்  சற்று வித்தியாசமாகப் ட்டது. சிறுபிள்ளையிடம் சித்தராகிய நாம் உபதேசம் பெறுகிறதா?" என யோசித்தார்.



அதே சமயம் பண்டரீபுரத்திலிருந்து ஞானதேவர் ஆனந்தி எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.இதனைக் கேள்வியுற்ற சாங்கதேவர் அசரீரியின்  குரலுக்கு மதிப்பு அளிக்கும்  வகையில் ஞானதேவரைச் சந்திக்க முடிவு செய்தார். ஞானதேவருக்கு ஓலை எழுத முடிவு செய்த சாங்கதேவர், மடல் துவக்கமாக அந்த ஓலையில் எப்படி அழைப்பது என்று யோசித்தார். ஞானதேவரோ வயதில் இளைவர். அவரை வணங்குவதா/ அல்லது ஆசி கூறுவதா? எந்த நிலைபாட்டுக்கும் வரமுடியாது எழுதாத வெறும் ஓலையை ஒரு சீடனிடம் கொடுத்து அனுப்பினார்.



சீடனிடம் சங்கதேவர் ஓலையை வாங்கும் முன்பே, “எண்ணறக் கற்றாலும், எழுத்தற வாசித்தாலும்,சினமடங்கக் கற்றாலும், சித்திகள் எல்லாம் பெற்றாலும் வாழ்க்கை வெற்றோலையாகி விட்டது வெறும் ஓலையைச்  சாங்கதேவர் அனுப்பிவைத்தாரோ” என்று கேட்டபோது சீடன் வெலவெலத்துப் போனான். மனமானது நம்மிடந்தான் உள்ளது, என்ற போதிலும் நமக்கே தெரியாத ஆழ்கடல் இரகசியங்கள் அதனுள் புதைந்து கிடக்கின்றன.



எல்லோருக்கும் எல்லா அறிவும் சித்திப்பதில்லை. கடவுளர்களும் சித்தர்களும் ஞானிகளும் வாய்திறந்து பேசும்போது அசரீரி வாய் திறப்பு போல அறிவு வார்த்தைகளாக வெளிப்படும்.மனம் தூய்மையான நிலையில் சாத்வீகமாக உள்ள ஞானிகளுக்கே இந்த நிலை கைகூடுகிறது.தூயமனமானது ஒளியைப் பிரதிபலிக்கிறது.இந்த ஒளியின் வெளிச்சத்தினால் ஞானிகள் எல்லா விஷயங்களில் அறிவையும் கண்டுணர்ந்து வெளிப்படுத்த முடிகிறது.இப்போது அந்தச் சிறுபிள்ளை ஞானதேவர் பேசியபோது ஓலை கொண்டு வந்த சீடன் அதையே உணர்ந்து வியந்தான். “பிறவிப்பிணி நீங்க இறைவனை வழி படுவது ஒன்றே மருந்து” என்று ஞானதேவருக்கு பதில் எழுதி அனுப்பினார்.ஓலையைப்  படித்த சாங்கதேவர் தனது யோகபலத்தால் ஒரு புலியை சிருஷ்டித்தார். அந்தப்புலி மீது அமர்ந்து ஒரு கருநாகத்தை சாட்டையாகப் பிடித்துக் கொண்டு ஞானதேவரை சந்திக்கப் புறப்பட்டார்.இதனைத்  தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த ஞானதேவர் தம்முடைய இரு சகோதரருடனும் தங்கை முக்தா பாயுடனும் விளையாட்டுச் சிறுவனைபோல அந்த ஊரில் இருந்து குட்டிச் சுவரில் அமர்ந்து வேடிக்கையுடன் பார்த்தார்.



அங்கே வந்த சங்கதேவர் குட்டிச்சுவரின் மீது அமர்ந்து தன்னை வேடிக்கை பார்க்க ஞானதேவர் விளையாட்டுப் பிள்ளைபோல எந்தவிதப் பெருமையுமின்றி உட்கார்ந்து பார்த்த போது சுரீலென சவுக்கால் அடிபட்டது போல உணர்ந்து கர்வம் குலைந்தார்.தன் மாயப்புலியை விட்டுக் குதித்து வந்து சாஷ்டங்கமாக ஞானதேவரை நமஸ்கரித்தார். “எத்தனை பெரியவர் நீங்கள்…,நீங்கள் என்னை வணங்கலாமா.. வாருங்கள் என்னுடன் வந்து அமருங்கள்’’ என்று கூறியபடி பக்கத்திலிருந்த ஆலரமரத்தடிக்கு அழைத்துச் சென்றார் ஞானதேவர்.பரிபூரண ஞானத்தின் தன்மையையும், அதை அடையும் வழிகளையும்; ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தம் பற்றியும்; பரமாத்மாவை மறைத்துச்  சூழ்ந்திருக்கும் மாயையும் அந்த மாயையை அகற்றும் முறையையும் அதனை அகற்றும்போது ஏற்படும் தெளிவையும் பற்றி ஞானதேவ சித்தர் சாங்கதேவருக்கு எடுத்து உரைத்தார்.


அதன் பின சாங்கதேவர் துவாரகையிலிருந்து பேதரி நகரத்து அரண்மனை வாயிலில் நின்று பண்டரிநாத நாம கீர்தத்தனைகளைப் பாடிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்குள்ள அந்தணர், “அய்யா! உங்கள் நாம கீர்த்தனையை நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வூரில் உள்ள அரசனைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? மன்னரின் காது கேட்க இப்படி பஜனை செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா? அதுமட்டுமல்ல; இந்த நாட்டு மன்னனின் மகளைப் பாம்பு கடித்து அந்தப் பெண் இறந்து மூன்று நாட்கள்தான் ஆகின்றது. அந்த துக்க சாகரத்தில் மூழ்கிய மன்னன் இன்றுதான் அயர்ந்து  உறங்கிக்கொண்டிருக்கிறான். இப்போது உங்கள் பஜனைப் பாடல் கேட்டால் சிரச்சேதம் செய்துவிடுவான், ஜாக்கிரதை” என்று கூறினார்.


‘’மன்னரின் மகளைப் பாம்பு கொத்திவிட்டதா? நான் பிழைக்கச் செய்கிறேன்” என்றார் சாங்கதேவர்.


’’அய்யா! மன்னர் மகளைப்   பாம்பு கொத்தி இறந்து புதைத்து மூன்று நாளாகிவிட்டது. நீர் எப்படிப் பிழைக்க வைக்கிறேன் என்கிறீர்களே? என்று அந்த அந்தணர் சங்கதேவரை வினோதமாகப் பார்த்தார்.


” நான் உயிர்ப்பித்துத் தருகிறேன் என்று மன்னனிடம் போய் கூறுங்கள்” என்று உறுதிபட சங்கதேவர் கூறுவதைக் கேட்ட அவர் அரண்மனைக்குள் நுழைந்து அரசனிடம் அந்தத் தகவலைக் கூறினான். மன்னனுக்கு அந்தத் தகவல் மெய்சிலிர்ப்பாக இருந்தது. “ இது எப்படி சாத்தியம்? அவரை உடனே அழைத்து வாருங்கள்” என்று மன்னன் உத்தரவு இட்டதும் சித்தர் சாங்கதேவரை அழைத்து வந்து மன்னரிடம் நிறுத்தினார்கள். மன்னனிடம் சிறிது துளசி நீரைக் கொடுத்து மந்திரம் ஜெபித்து, “அரசே! இதனை உங்கள் கையால் நான் செல்லும் மந்திரத்தை ஜெபித்து, உங்கள் மகளின் உடல் மீது தெளியுங்கள்.” என்றார் சங்கதேவர்.


பேதரி நாட்டு மன்னனும் அந்த துளசி தீர்த்தத்தை எடுத்துச் சென்று தனது மகள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டச் செய்து மகளுடைய பிணத்தின் மீது சாங்கதேவர் கூறியபடி மந்திரம் ஜெபித்து தெளித்தார். என்ன ஆச்சரியம்! அந்த முஸ்லீம் மன்னனின் புத்திரி உறங்கிக்  கண் விழித்தவள் போல்  எழுந்துவிட்டாள்.அதனைக் கண்டு அரசனும் நாட்டு மக்களும் திகைத்துப்போய் ஆரவாரம் செய்தனர். பேதரி நாடு முழுக்க ஆனந்தம் சூழ்ந்தது. “ சித்தர் பெருமானே! நான் தங்களுக்கு என்ன கைமாறு செய்வேன்? எனது அருமைப் புத்திரியை உயிர்ப்பித்துக்  கொடுத்து எல்லோரையும் மறு ஜனனம் எடுக்க செய்து விட்டீர்கள்” என்றான் அரசன்.


“ மன்னா! நான் வேண்டுவது வேறொன்றுமில்லை.பிற மதத்தவர்களைத்  துன்புறுத்தவோ, மனம் நோகவோ செய்யாது நீங்கள் காத்தருள வேண்டும்” என்றார் சாங்கதேவர்.



”அப்படியே செய்கிறேன்” என்ரு உறுதியளித்த பேதரி மன்னன் அவ்வாறே ஆட்சி புரிந்தான். அதன் பின்பு சித்தர் சாங்கதேவர் பண்டரிநாதனிடம், “பாண்டுரங்கா! நான் சமாதிநிலை அடைய  விரும்புகிறேன்.அதற்கான இடத்தைச் சொல்வாயாக’ என்று கேட்ட போது, “கோதாவரி நதிக்கரையில் உள்ள புண்ய ஸ்தம்பம்தான்” என்று அசரீரி கட்டளை பிறந்தது.சித்தர் சாங்க தேவர் தமது சீடர்களுடன் கோதாவரி நதிக்கரையின் புண்யஸ்தம்பத்திற்குச் சென்று அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சமாதி நிலை அடைந்தார்.


[நன்றி - துணை,உதவி குறிப்பு:”இந்திய சித்தர்கள்’’ சித்தமெல்லாம் - சித்தர் பாடல்கள்,பதினென் சித்தர்கள்]


தட்டச்சித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்.




Indexபிக்ஷை.jpg

--Geetha Sambasivam 07:55, 14 ஏப்ரல் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 14 April 2011, at 07:55. This page has been accessed 2,506 times.