வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சித்தர் வழியில் குரு நமச்சிவாயர் 22C

From மரபு விக்கி

Jump to: navigation, search
Imagesசித்தருக்கு.jpg
பிறகு மூவாயிரவரும், "ஐயனே! நேற்று நண்பகலில் எம்பெருமான் உம்மிடம் வந்தார் அல்லவா, நீர் அவரிடம் யாது கூறினீர்?" என்றார்கள். குரு நமச்சிவாயர் யோகக் காட்சியினால் பார்த்தார். சபாபதியின் காட்சி கிடைத்தது. "சபாநாயகர் இவ்விடத்தில் வந்து என்னுடன் உரையாடி அங்கும் சென்று செய்தி கூறினரோ!" என்று பரமன் அருளைப் பாராட்டி,


"சங்கயமாய் அம்பலவர் தாமே எழுந்தருளி
யிங்கெமக்குப் பிச்சை யிடுவென்ன-வங்கமுது
திட்டமுடன் நமக்குநீ தினமுமே சர்வ
கட்டளையுண்டாக்குகென்றார் காண்.:


என்ற வெண்பாவைப் பாடிக்கொண்டே பல்லாக்கில் ஏறி, அல்லாகிய இருவினை தனையறுத்தடியினைத் தருவாரோ? மல்லல் நீடிய புவியின் மேலின்னமும் வரும் பிறப்பறுப்பாரோ? நல்ல மாமுலை மாதுமை நாயகர் நாயகர் நான் நிதம் நவின்றேத்தும் தில்லை நாயகர் அம்பலத்தாடுவார் திருவுளம் தெரியாதோ! என்று ஓதிக்கொண்டே கோயிலுக்குட் சென்று கொடி மரத்தருகே பல்லாக்கில் இருந்து இறங்கிப் பஞ்சாக்கரமதில் மட்டும் பாதக்குறடு இட்டுச் சென்றார். பிறகு பொன்னம்பலத்தை அணுகி, திருநடம்புரி தேசிகனை வணங்கித் தில்லை மூவாயிரவரைப் பார்த்து, இப்போது நாம் உண்டாக்க வேண்டிய கட்டளை யாது!" என்று வினாவினார். அப்போது சபாநாயகர், "சர்வ ஜனத்துக்கும் சர்வ கட்டளை!" என்று அசரீரியாய் நின்று உணர்த்தினார். "சபா நாயகர் பிச்சை கொடுத்தால் கட்டளை எப்போதும் தொடர்ந்து நடைபெறும்." என்று சொல்லிக்கொண்டே பொற்றாம்பாளத்தைக் கையில் ஏந்தி


"காதலுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய
பாதமலர்ப் பூசை பண்ணவே-ஓது
குருவாயெனையாண்டு கொண்டவனே!

பிச்சை தருவாய் சிதம்பர நாதா!"

என்ற வெண்பாவைப் பாடினார்.


அப்போது குரு நமச்சிவாயர் வேண்டுகோளுக்கிணங்கி அங்கு வந்திருந்த அடியார்களும் அன்பர்களும் காணுமாறு தங்கக் காசு ஒன்று தட்டிலே வீழ்ந்தது.

நடராஜா.jpg

"நடராசப் பெருமான் நாம் அனைவரும் காணுமாறு பிச்சையிட்டார். ஆகவே நாமும் நன்கொடையளிக்கவேண்டும்." என்று வந்திருந்த பெரும்பான்மையினர் பொன்னும், பொருளும் போட்டார்கள். குரு நமச்சிவாயர் தங்கத் தட்டினைத் தனக்கு முன்னிருந்த அர்ச்சகர்களிடம் கொடுத்து அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார். அப்போது சிறிது தாங்கிற்று. உடனே குரு நமச்சிவாயர், "இதற்குக் காரணம் என்ன?" என்று மூவாயிரவரைக் கேட்டார். அதற்கு அவர்கள், "நாங்கள் ஏதும் அறியோம்." என்றனர். குரு நமச்சிவாயர் யோகக் கண் கொண்டு நோக்கினார். மூவாயிரவரை நோக்கி சுவாமிக்கு அணிகலன் இருந்ததுண்டா?" என்று வினாவினார்.


அவர்கள் இல்லை என்றனர். பின் சிறிது நேரம் சிந்தனை செய்து, "பதஞ்சலியாக்கிரபாதர் காலத்தில் பாதச் சிலம்பும், கிண்கிணியும் இருந்தன!" என்று சொல்வார். யாம் கண்டதில்லை என்றார்கள். அவர் தம் கூற்றினைக் கேட்ட குரு நமச்சிவாயர், சிற்பிகளை அழைப்பித்துப் "பாதச் சிலம்பும் கிண்கிணியும் விரகண்டா மணியும் செய்ய வேண்டும், அவற்றைச் செய்ய எவ்வளவு பொன் தேவைப்படும்" என்றார். சிற்பிகள் அவற்றைச் செய்ய ஐம்பதினாயிரம் பொன் தேவை என்றனர். வந்து சேர்ந்திருக்கின்ற பொன்னையும் பொருளையும் கொடுத்துத் திருவாபரணம் செய்து முடிக்குமாறு சிற்பிகளிடம் கூறி அனுப்பி விட்டு திருக்கோயிலின் ஒரு புறத்தே அமர்ந்திருந்தார்.


அப்போது தில்லை மூவாயிரவர்கள் ஒன்று சேர்ந்து, "நாம் அனைவரும் இவரைத் துணையாகக் கொண்டு நல்வாழ்வு வாழலாம் என்று நினைத்திருந்தோம், செல்வத்தை எல்லாம் சிலம்பும், கிண்கிணியும், வீரகாண்டாமணியும் செய்யக் கொடுத்துவிட்டாரே!" என்று குரு நமச்சிவாயர் மேல் முறை கூறிப் பேசினார். அன்றியும், "சிலம்பும் கிண்கிணியும் வீரகண்டாமணியும் அணிந்துவிட்டால், அம்பலவாணர் இவருக்கு நடனம் செய்து காட்டுவரோ?" என்று ஏளனமாய்ப் பேசினர். இவர் தம் உரையாடல் குரு நமச்சிவாயர் செவியில் பட்டது.


இவர்தம் நிலை இவ்வாறிருக்க நாற்பதாம் நாள் சிலம்பும், கிண்கிணியும், செய்யப் பெற்று வந்து சேர்ந்தன. அப்போது குரு நமச்சிவாயர் தில்லை மூவாயிரவரையும், பிறரையும் அழைத்து, இப்போது தில்லை அம்பலக் கூத்தன் திருநடனம் செய்து காட்டினால் அனைவரும் காண்பீரோ?" என்றார். அங்கிருந்தார் அனைவரும், "அம்பலவாணர் திருக்கூத்தினைக் காண எத்தனை பிறவிகளில் நாங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும். மூவேழ் தலைமுறையினரும் கரை ஏறிவிடுவார்களே!" என்றார்கள். குரு நமச்சிவாய மூர்த்தி நடராஜப்பெருமான் திருவடிகளில் சிலம்பும், கிண்கிணியும் அணிந்து தரிசனம் செய்யுமாறு சொல்லியபின் இறைவன் திருநடனத்தைக் காண விரும்பினவராய்,


"அம்பலவா ஓர் கால் அடினால் தாழ்வாமோ
உம்பாரெல்லாம் கண்டதென கொப்பாமோ-சம்புவே
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும்

தித்தியென ஒத்துப் பதஞ்சலிக்கு மோ"

என்ற பாட்டினைப் பாடினார்.


உடனே கலகலவென்றொரு ஓசை கேட்டது. குரு நமச்சிவாயர் நின்று தோத்திரம் செய்வாராயினர். தில்லைக் கூத்தன் நடனம் செய்யத் தொடங்கினார். எல்லோரும் கீழே விழுந்து வணங்கி அசைவற்றிருந்தார்கள். அப்போது மூவாயிரவருள் மூன்று பேர், "நீண்ட நேரமாகத் திருநடனம் நிகழ்கிறபடியால் நடனத்தை நிறுத்த வேண்டும்," என்று கூறக் குரு நமச்சிவாயர், "ஆடச் சொல்கிறவர் நாமோ?" என்றார். மீண்டும் அந்த மூவரும், "தாளம் போடுகின்றவர்கள் நிற்கவேண்டும்." என்றனர். அப்போது குரு நமச்சிவாயர் அம்பலவாணரை நோக்கி, "பெருமானே! தூக்கிய கால் நோகாதோ! துட்டன் முயலகன் மேல் ஊன்றிய கால் சலியாதோ? என்று கருத்து அமைய ஒரு வெண்பா இயற்றினார். உடனே நடனம் மிகவும் சிறப்பாக நடைபெறலாயிற்று.


குரு நமச்சிவாயர் மீண்டும் மனமுருகி வெண்பா ஒன்றினைப் பாட திருநடனம் நின்றது. அதற்கு மேல் தில்லை மூவாயிரவர் கூடி, "குரு நமச்சிவாயர் பரிபூரணத்தை அடைந்து காரணமானதால் நாங்கள் பூசிப்போம்." என்று சொல்லிக்கொண்டார்கள். குரு நமச்சிவாயர் மேல் குடிமக்களும் பெருஞ்செல்வரும், வள்ளல்தன்மையுடையவர்களும், குறுநில மன்னர்களும், அளவற்ற அன்பு கொண்டு அவர் பெயரால் நடைபெறும் அம்பலவாணர் திருக்கோயில் திருப்பணிக்கு நிறைவான பொருளைக் கொடுத்தனர். பல்வேறு அறக்கட்டளைகளை ஏற்பட்டன. அன்றியும் எழுபத்திரண்டு தம்பிரான்களுக்குப் பல்லக்கும் விருதும் மற்றும் கொடுத்து நாடெங்கும் அனுப்பிக் கோயில் திருப்பணிகளும், அறக்கட்டளைகளும் விரிவாகவும் சிறப்பாகவும் நடைபெற வழி வகுக்கப் பெற்றது. இவ்வாறாகக் குரு நமச்சிவாய சுவாமிகள் காலத்தில் சைவம் தழைத்து ஓங்கிற்று. கோயில் திருப்பணிகள் விரிவாக நடைபெற்றன. பல்வேறு அறக்கட்டளைகள் உண்டாயின.


குரு நமச்சிவாய மூர்த்தி, தல யாத்திரையாகப் பல இடங்களுக்குச் சென்று ஆங்காங்குள்ள பெருஞ்செல்வர்கள் தானமாகக் கொடுத்த பல கிராமங்களைத் திருமடத்தில் நடைபெறும் அன்றாட தருமங்களுக்காகவும், அம்பலக்கூத்தர் திருக்கோயிலில் நடைபெறும் சர்வ கட்டளைக்காகவும், சிலாசாசனம் செய்து வைத்தார். இவ்வாறாகப் பல சிவ தருமங்கள் சிறப்பாக நடைபெற வழி வகுத்த பின்னரும் பல்லாண்டு வாழ்ந்திருந்து திருப்பெருந்துறை சென்று அங்கே இலிங்காரம் ஆயினார்.


"வத்தீச்சுரவருடம் வைகாசி தேதி நவம்
இந்து நானாழிகை யேழரை மேல் -வந்த குரு
தானா மருணகிரி தாணு சிவலிங்கத்துள்
ஆனால் நமச்சிவாயன்.


குரு நமச்சிவாயர் அம்பலக்கூத்தருக்கு அளித்த நிலங்கள், தோப்புகள், அணிகலன்கள் பற்றிய கல்வெட்டுக்கள் தில்லைக் கோயிலிலும் பிற இடங்களிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன என்று சொல்லப் படுகிறது.


எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்

--Geetha Sambasivam 07:55, 25 மார்ச் 2011 (UTC)



Contributors

Geetha Sambasivam

This page was last modified on 25 March 2011, at 08:22. This page has been accessed 2,081 times.