வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சாரங்கபாணி திருககோவில்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 


அருள்மிகு சாரங்கபாணி திருககோவில்

                                                                                    
T 500 644.jpg


மூலவர் : சாரங்கபாணி, ஆராவமுதன்
அம்மன்/தாயார் : கோமளவல்லி -
தீர்த்தம் : ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்குடந்தை
ஊர் : கும்பகோணம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:

மங்களாசாஸனம்
ஆண்டாள், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்


பாலாலி லையில் துயில் கொண்ட பரமன் வலைப் பட்டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே
கோலால் நிறை மேய்த் தாயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி
நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறி மென்குழல் சூட்டீரே

-ஆண்டாள்


தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.

மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமி சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும், சுற்றுப்புற சுவர்களில் அழகிய சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் 236 அடியும், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் 165 அடி உயரமும் கொண்டவை. இதற்கடுத்த மூன்றாவது உயரமானது கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோபுரமே ஆகும். 11 நிலைகளையுடைய இது, 150 அடி உயரம் கொண்டது. இத்தலத்து தேரும் விசேஷமானது. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பாடல், "ரதபந்தம்' என்று அழைக்கப்படுகிறது.

தலபெருமை:

உத்தான சயன பெருமாள் : பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு "உத்தான சயன' கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், "நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!' என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், "அப்படியே காட்சி கொடு!' என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை "உத்தான சயனம்' என்பர்.

திவ்ய பிரபந்தம் தந்த திருமால் : பெருமாளை குறித்து, பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவார்.ஆம்! நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை "ஓராயிரத்துள் இப்பத்தும்' என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, "இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா!' என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி - தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே "நாலாயிர திவ்ய பிரபந்தம்' ஆனது. ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, "ஆராவமுதாழ்வார்' என்ற பெயரும் உண்டானது.

அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் : திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாதாள சீனிவாசன் மேட்டு சீனிவாசன் : திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், "பாதாள சீனிவாசர் சன்னதி' என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக' தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரம்மச்சாரிகள், இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெற முடியும் என்ற வாழ்க்கை தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக உள்ளது.

வில்லுடன் பெருமாள் : பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், "சார்ங்கபாணி' என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.


தல வரலாறு:

ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. ""உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், ""அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும், என்றார். லட்சுமிதாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள். தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "கோமளவல்லி' என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், "சாரங்கபாணி' எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.

திருவிழா:

சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:39, 14 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 15 April 2011, at 03:48. This page has been accessed 2,981 times.