வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சந்திரசேகரர் -சிவ வடிவங்கள்

From மரபு விக்கி

Jump to: navigation, search
நால்வர்.jpg
மூன்றாம் பிறையன்று தேய்ந்திருந்த சந்திரனைச் சேகரம் செய்து தன் முடியில் சூடியதால், சந்திரசேகரர் என்ற பெயர் பெற்றார் ஈசன். சேகரன் என்பதற்குக் காப்பவன் என்ற பொருளும் வருகின்றது. முழுதுமாய்த் தேய்ந்துவிடாமல் சந்திரனைக் காத்து அருளியதாலும் இந்தப் பெயர் எனக்கொள்ளலாம். சந்திரசேகரத் திருமேனி மூன்று வகை என்று கேள்விப் படுகின்றோம். கேவல சந்திரசேகரர், உமா சந்திரசேகரர், ஆலிங்கன சந்திரசேகரர் ஆகியவை அவை ஆகும். கேவல என்ற சொல்லுக்கு இங்கே அது மட்டும், அல்லது தனித்த என்ற பொருள் தான் வரும். நாம் பொருள் கொள்ளும் கேவலம்=மட்டம் என்ற பொருளில் வரும். அது இல்லை. கேவல என்பது வடமொழிச் சொல். வடமொழியை எடுத்துக் கொண்டே இந்த இடத்தில் அர்த்தத்தைப் பார்க்க வேண்டும்.

தன்னந்தனியாக அம்பிகை இல்லாமல் ஈசன் மட்டும் பிறை சூடியவனாய்க் காட்சி அளிக்கும் கோலத்திற்கே “கேவல சந்திரசேகரர்” என்ற பொருள் வரும். “பித்தா, பிறைசூடி, பெருமானே! அருளாளா!” என்று பக்தர்கள் அனைவரும் போற்றித் துதித்து மெய்ம்மறந்து போகும் இந்தச் சந்திரசேகர மூர்த்தம், கையில் மான், மழுவுடனும், அபய ஹஸ்தங்களுடனும், ஊரு ஹஸ்த முத்திரைகளுடனும் காணப் படுவார். ஊரு என்ற வடமொழிச் சொல்லுக்குத் தொடை என்ற பொருள் வரும். கையைத் தொடையில் பதிந்த வண்ணம் காட்சி தருவார் இந்தச் சந்திரசேகரர். மிகச் சிலக் கோயில்களிலேயே இந்த மூர்த்தம் காணப் படுவதாயும், மாமல்லபுரம் திருமூர்த்தி குகையிலும், பட்டீஸ்வரம் கோயிலிலும் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. இரண்டு இடங்களுமே பார்த்திருந்தாலும் பல வருடங்கள் ஆனபடியால் நினைவில் இல்லை.

அடுத்து உமா சந்திரசேகரர். அன்னை உமையுடன் காட்சி தருவார் இவர். அநேகமாய் எல்லாச் சிவாலயங்களிலும் உற்சவ மூர்த்தியாய்ப் பஞ்சலோகத்தில் வடிவமைக்கப் பட்ட இந்தத் திருமேனி பக்கத்தில் அன்னை உமை, கையில் மலர் ஏந்தும் பாவனையுடனும், இடக்கரத்தைத் தொங்கப் போட்ட வண்ணமும் காண முடியும். சந்திரசேகரர் பின்னிரு கைகளில் மான், மழுவும் முன்னிரு கரங்களில் அபய முத்திரையோடும் காணப் படுவார். முக்கியமாய்ப் பிரதோஷத்தன்று உலா வரும் மூர்த்தம் என்றும் சொல்லப் படுகின்றது. சில கோயில்களில் கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்னால் இவ்வடிவம் அமைந்திருப்பதாயும் அவற்றில் திருவீழிமிழலை கோயிலும் ஒன்று எனவும் தெரியவருகின்றது.

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 8 December 2010, at 11:39. This page has been accessed 1,261 times.