வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சத்சங்க மஹிமை 3

From மரபு விக்கி

Jump to: navigation, search

யேசு கிறிஸ்து.

Jesus, the Christ.

சிறுவயது ஞாபகம். சின்ன சின்ன புத்தகங்களாக காஸ்பல் நூல்களை திருச்சியில் அங்கங்கே கொடுத்துக்கொண்டிருப்பார்கள். வழ வழ என்று இருக்கும் பக்கங்கள். அச்சு கலை, கலர் எல்லாம் நிறைந்த அச்சு.

அநேகமாக ஓர் ஆட்டுக் குட்டியைச் சுமந்தபடி ஒருவர். அல்லது கைகளை விண்ணோக்கி விரித்தபடி - அவரது முகம் கூரிய விழிகள்.

அடுத்து பைபிளில் வாசித்து, பைபிளைப்பற்றி வாசித்து, ஆங்கில இலக்கிய மணமும், தமிழ் இலக்கிய மணமும், வடமொழி இலக்கிய மணமும், பிரெஞ்சு இலக்கிய மணமும் ஒருங்கே கமழ்ந்த வீடு எங்களுடையது.

என் தந்தை ஸ்ரீ ஆர் வேணுகோபால் அவர்களும், அவரது ஆசான் ஆங்கிலப் பேராசிரியர் சி எஸ் கமலாபதி - இருவரும் சேர்ந்து எனக்கு அறிமுகப்படுத்தாத துறையே இல்லை எனலாம்.

Love of books and learning இவர்கள் எனக்கு அளித்த ஆசீர்வாதம்.

திரு சி எஸ் கமலாபதி அவர்களின் வீடு எனக்காக பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்ட நூலகமாகத் திகழ்ந்தது. அன்றே உலகில் எங்கு புதிய திசைகள் திறந்தாலும் அதைப் பற்றி ப்ராண்ட் ந்யூ நூல்களைத் தருவித்துத் தானும் வாசித்து, நான் தொணப்பி வாங்கி வாசிக்க வசதியாக இருந்தவர். 1971, 1972 லேயே இவர் தொடர் சொற்பொழிவுகள் தந்துகொண்டிருந்தார் ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூலில், இலக்கியம், உள இயல் துறைகள், மேலை நாட்டு கருத்தியல் துறைகள் ஆகியன பற்றி. தந்தையும், அவரது நண்பர்களும் மும்முரமாக அவரது சொற்பொழிவுகளை நடத்துவிப்பதில் ஊக்கமாக இருக்க, எனக்குச் சிறு வயதிலேயே உலகம் எங்கும் மன சஞ்சாரம்.

வில் ட்யூரண்டின் The Pleasures of Philosophy என்று ஒரு நூல். இதை நூலாக நானாக வாசித்தது பின்னால். ஆனால் அதற்கு முன்னமேயே சிறு வயதிலேயே இந்த நூலைத் தந்தை படிக்கக் கேட்டும், ஞாயிறு அன்று உணவுக்குப் பின் தந்தைக்குத் தூக்கம் வரும் வரை படித்துக் கொண்டிருந்துமே பல முறை இந்த நூலைப் படித்தும் கேட்டும் முடித்திருக்கிறேன். நிச்சயம் என்னைப் போல் Educational curriculum, both ancient and modern, both eastern and western ஒருங்கே அனுபவித்தவர்கள் மிகவும் அருமைதான்.

எனது தந்தையும், அவரது அண்ணா ஸ்ரீ ஆர் பத்மநாப ஐயங்காரும் சேர்ந்து பேச ஆரம்பித்தால் ஸ்ரீவைஷ்ணவத்தைப் பற்றியும், பூர்வாசாரியர்கள் பற்றியும் அங்கே வேறு ஓர் உலகம் திறந்துவிடும். இரவு 10 மணி, 12 மணி, மற்றவர்கள் தூங்கத் தொந்தரவாய் இருக்குமோ என்று அக்கறை பிறந்து மேலே  மொட்டை மாடிக்குப் போய் இருவரும் தொடரும் சம்பாஷணை 2 மணி வரை - சமயத்தில் பெரியப்பா ஊரிலிருந்து வந்தால் இந்தக் கொண்டாட்டம் எனக்கு. தூக்கம் எல்லாம் எனக்குப் பறந்துவிடும். அவர்களுடன் ஓரமாகச் சுருண்டு அடித்து முடங்கியபடிக் கேட்டுக் கொண்டிருப்பேன். 'ஏண்டா உனக்குத் தூக்கம் வல்லையா?' என்று பெரியப்பா எப்பொழுதாவது கேட்டால் எரிச்சலாக வரும். ஏனென்றால் சமயத்தில் தந்தை ஏதோ ஒரு மூடில் 'ஏய் போ போய்ப் படு.' என்று துரத்திவிட்டுவிட்டால்..! என்ன செய்வது. அதனால் அவர் கேள்வி ரிஜிஸ்டர் ஆகுமுன் ஏதாவது கேள்வி கேட்டு வேறு ஓர் அன்க்டோட்டுக்குத் திருப்பி விட்டுவிடுவேன் பேச்சை. எத்தனை பிறவிகள் பிறந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதே பெற்றோருக்கு, அதே பெரியப்பாக்களுடன் அமையும் என்றால்... எனக்கு மோக்ஷம் எல்லாம் வேண்டாம். மீண்டும் மீண்டும் ஸ்ரீரங்கத்தின் வீடுகளில் பிறப்பேனாக. ஆனால் என் தந்தை என்னை மீண்டும் மகனாகப் பெறுவதற்குச் சம்மதிப்பாரா என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான். போதுமே ஒரு பிறவிக்கு.. என்று அவர் கைகூப்பாத குறையாக நடந்துகொண்டிருந்திருக்கிறேனோ என்ற குற்ற உணர்வு எனக்கு உண்டு.

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் பைத்தியம் கொண்ட பிறகு, விவேகாநந்த இலக்கியம் என்று ஊறிய பிறகு டிசம்பர் 25 எனக்கு முழு இரவு விஜில், விரதம், ஜபம், கிறிஸ்துமஸ் தியானம். அப்பொழுது நான் அந்த மேய்ப்பாளருடன் தான் சுற்றிக்கொண்டிருப்பேன். மொத்தத்தில் என் கடந்த கால வாழ்க்கை ஒரு பைத்தியக் காரன் வாழ்க்கையாய்க் கழிந்திருக்கிறது. போகட்டும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதுவும் பேராசிரியர் திரு சி எஸ் கமலாபதி அவர்கள் எனக்கு ஒரு கோல்டு பார்டரிட்ட பைபிள் ஒன்றைப் பரிசளித்திருந்தார் அல்லவா! ஆங்கில இலக்கியத்தின் இனிய ஊற்றுகளில் ஒன்று பைபிள்.  

  •  

மகாபாரதம் 18 பர்வங்கள் தமிழில் கொண்டு வந்த பெரியவர் மணலூர் ஸ்ரீ வீரவல்லி ராமானுஜாசாரியார் அவர்களைப் பற்றிப் பலமுறை எழுதியிருக்கிறேன். பல வித்வான்களைக் கொண்டு 1906ல் தொடங்கி 30 வருடங்கள் விடாமல் முயன்று சாதித்த சாதனை. அதற்காக மனிதர் தம் வீடு வயல் எல்லாவற்றையும் விற்று கொண்டு வந்தார். அப்படிப்பட்டவருடைய மகள் லக்ஷ்மி மாமி என்பவர் தி நகரில் இருப்பதாக சேதி தெரியவே, விடாமல் தேடி அவரைச் சந்திக்கப் போனேன். இது 1990களின் கதை. அப்பொழுது ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்தது. எங்கு வேண்டுமானாலும் சுற்றுவதற்கு. தேடி, அந்த மாமியைப் பார்க்கப் போனால் ஒரு வயதான பெண் வெளியே வந்தார். ஹரே கிருஷ்ணா இயக்கத்து நெற்றித் திலகம். அவரிடம் கேட்டேன். ராமானுஜாசாரியார் பெயரைச் சொல்லி, அவருடைய மகள் இங்கு இருக்கிறாராமே என்று. 'தெரியல்லியே' என்ற பதில் வந்தது. சரி என்று திரும்பலாம் என்றால், நல்ல வேளை உள்ளே இருந்து, யார் வேண்டும்? எந்த ராமானுஜாசாரியார்? என்று கேட்ட படி ஒரு மாமி வெளியே வரவும் பிழைத்தேன். 


கடைசியில் பார்த்தால் நான் பார்த்த அந்த முதல் வயதான பெண் ராமானுஜாசாரியாரின் பேத்தியாம். பாவம் என்னால் அந்தப் பெண்ணிற்கு அம்மாவிடம் நல்ல டோஸ் விழுந்தது. அங்கு பேசிக் கொண்டிருந்த பொழுதுதான் கல்யாணி மாமி என்ற ஒருவரைச் சந்தித்தேன். என்ன ஒரே மாமிகள் சந்திப்பாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? என்ன விசேஷம் என்று உங்களுக்கே போகப் போகப் புரியும். 

கல்யாணி மாமிக்குப் பாவம் காதுதான் கண்களும். ஆனால் குரலை வைத்தே, பேச்சை வைத்தே ஒருவருடைய படிப்பு எவ்வளவு அவருக்கு எவ்வளவு தெரியும் என்பதைத் துல்லியமாகக் கணக்கு போடும் சாமர்த்தியம் அவரிடம் இருந்தது. அது நான் கண்டு அதிசயித்த ஒன்று. பார்வை பிற்காலத்தில் போயிற்றோ தெரியவில்லை. ஆனால் மாமியிடம் ஏராளமான நோட்டுப் புத்தகங்கள்! எல்லாம் அவர் சிறுவயதிலிருந்து பல வித்வான்களிடம் காலக்ஷேபம் கேட்ட குறிப்புகள், எங்கு என்ன கதை பிரசங்கம் நடந்தாலும் அந்தக் காலத்தில் மாமியை நோட்டும் கையுமாய்ப் பார்க்கலாமாம். விடாமல் சிறந்த நூதன விஷயங்களைக் குறிப்பெடுத்து வைத்து அந்த நோட்டுக் கிடங்குகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார் கல்யாணி மாமி. 'உனக்கே எல்லாம் தந்துட்றேன் நீ ஏதாவது செஞ்சுக்கோயேன்' என்று அழாக்குறையாக ஒரு நாள் மாமி என்னைக் கேட்ட பொழுது நான் கண் கலங்கிவிட்டேன். அப்பொழுது என் மனத்தில் தோன்றிய எண்ணம். 'என்ன ஆனாலும் நாம் நம் வாழ்க்கையில் இந்த மாதிரி நோட்டுகளில் குறிப்பெடுக்கும் வேலை மட்டும் வைத்துக்கொள்ளக் கூடாது' என்று. ஆமாம் அப்புறம் அதைக் கட்டி மேய்த்து ஆள் தேட வேண்டும்.! 

ஆனால் மாமியிடம் பேசும் போது என்ன ஞானம்! என்ன சம்ப்ரதாயமான விஷயங்களில் பரிச்சயம்! பெண் கல்வி என்பது ஏதோ ஒரு விதத்தில் மீறி வளர்ந்து கொண்டுதான் நின்றிருக்கிறது. ஆனால் அவரைக் கவனிக்க அவரது உற்றார் உறவினர்கள் யாரும் இல்லை போலும், அல்லது இருந்தும் இல்லையோ என்னவோ..! எங்கோ முதியோர் இல்லங்களில் புகல் தேடிக் கொண்டிருந்தார் அந்த மாமி. எனக்குச் சமுதாயத்திடம் முழுதும் மரியாதை போவதற்குக் காரணமாய் இருந்த காட்சிகளில் அதுவும் ஒன்று. 

யார் யாரோ பெரியவர்களிடம் எல்லாம் கேட்டிருக்கிறார் மாமி. குறிப்புகள் அந்த விவரங்களைத் தந்தன. ஆனால் என்ன நோட்டில் என்ன குறிப்பு இருக்கிறது என்ற மாஸ்டர் நிரல் மாமியின் மூளைக்குள் இருந்தது ஆச்சரியம்! இத்தனையாவது நம்பர் போட்ட நோட்டை எடுங்கோ என்பார். அதில் இத்தனையாவது பக்கத்தில் நீங்க கேட்டதற்கான குறிப்புகள் இன்னார் சொன்னது இருக்கும் பாருங்கள் என்பார். அப்படியே இருக்கும். ஆனால் அவரால் பார்த்து எடுக்க முடியாத நிலை. 

மாமியின் சொந்தக்காரர் ஒருவரோடு எனக்கு ஒரு நாள் வாக்கு வாதம். அவர் மாமியின் சொந்தக்காரர் என்று தெரியாது. வைணவ சம்பிரதாயத்தில் அவர் ஏதோ சொல்லப் போக, அதை நான் மறுத்து ஒன்றைக் கூற, அவர் 'நீங்க ஒண்ணு. நான் இந்த வித்வான், அந்த வித்வான் அவரிடமே இதைப் பற்றி விசாரித்திருக்கிறேன். உங்களுக்கு ரொம்ப தெரியுமோ?' என்று சாடவும், 'சரி ஐயா! ஏதோ தோன்றியது சொன்னேன்' என்று வாபஸ் வாங்கிப் போய்விட்டேன். பல நாள் கழித்து, எங்கோ தெருவில் நின்று கொண்டிருந்தவனை, வண்டியை ரிவர்ஸ் அடித்து வந்து நிறுத்தி ஒரு கூலிங்க் க்லாஸ் இறங்கியது. பார்த்தால் இந்த மனிதர்! என்ன முரளி? என்றேன். 'சார்! நீங்க இப்படிப் பட்டவர்னு முன்ன்மே எங்க கிட்ட சொல்ல வேண்டியதுதானே... நான் ஒண்ணு...நீங்க யாருன்னு தெரியாம, உங்க கிட்ட மோதிண்டு...ஏன் சார்?' என்று ஆரம்பித்துவிட்டார். 

எனக்குக் கொஞ்சமாக பயமாக இருந்தது. இப்படி தணிவாகப் பேசுவது போல் ஆரம்பித்து மனிதர் ஏதாவது கடுமையாக வம்பு வழக்கு என்று திரும்பிவிடுவாரோ என்று பயம். எதற்கு நமக்கு இந்த வம்பு என்று நானும் உஷாராக 'அதுனால என்ன சார்? எனக்கு ஏதோ கொஞ்சம் தெரிஞ்சத உளறினேன். தப்ப நினைககதீங்க' என்று அடக்கம் காண்பித்துத் தப்பிக்க நினைத்தேன். ம் ம் மனிதர் விடுவதாக இல்லை. அப்புறம்தான் ஏதோ விஷயம் சீரியஸ் என்று தோன்றவே என்ன ஆயிற்று என்று விசாரித்தேன். பார்த்தால், கல்யாணி மாமி அவருக்கு ஏதோ வழிச் சொந்தமாம். கலயாணி மாமி என்றால் அவர்கள் வீட்டில் அவவ்ளவு மரியாதையாம். அவர் வீட்டிற்கு வந்திருந்த பொழுது இந்த நண்பர் நாங்கள் பேசிக் கொண்டிருந்த பிரச்சனையை, வைணவ சம்ப்ரதாயக் கருத்தைப் பற்றி விளக்கம் கேட்டிருக்கிறார். மாமியும் சொல்ல ஆரம்பித்துவிட்டு, 'இதற்கு உனக்கு நல்ல விளக்கம் வேண்டும் என்றால் மோகனரங்கன் என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் சரியான விளக்கம் உனக்கு இதற்குத் தருவார். போய்ப்பார்!' என்று சொல்லவும், மனிதர் அதிர்ந்து போய், 'யாரு யாரு...' என்று கேட்க விவரங்களைக் கூறி மாமி சிலாகிக்கவும், மனிதர் பேந்த பேந்த விழித்திருக்கிறார். 

இப்படியெல்லாமும் நடந்த காலங்கள் உண்டு. அதுதான் நான் கல்யாணி மாமியைப் பற்றிக் கேள்விப் பட்டது. அப்புறம் நானும் கேள்விப் படவில்லை. என்னுடைய விசாரங்களும் பல திசைகளில் செல்லத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டின் பிராசீன கல்வி வாய்ந்த பெண் திலகங்கள் சிலரையாவது நான் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் பத்தி யதிராஜம்மா, கல்யாணி மாமி, லக்ஷ்மி மாமி இவர்களையெல்லாம் பார்க்கும் சந்தர்ப்பம் ஏன் என்னை நாடி என் வழியில் வரவேண்டும்! தெரியவில்லை. காலமே சில காட்சிகளைச் சிலரிடம் பிரத்யேகமாகக் காட்டிவைக்கும் போலும்! 

இப்படி எவ்வளவு கல்யாணி மாமிகள் கேட்பாரற்று, சமுதாயம் என்ற மெத்தனம் தான் பாட்டுக்குப் போகும் போக்கில்...ம் .. ம் யாரையும் குற்றம் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் சில நாட்களாக இப்படி ஏன் பழம் நினைவுகள் வந்து முந்துகின்றனவோ தெரியவில்லை.! கல்யாணி மாமியின் பார்வையற்ற விழிகள் கொஞ்சும் முகம் மனத்தில் நன்கு நிழலாடுகிறது. ஜீவன்கள் சிலவும் பலவுமாய் உண்டு உயிர்த்து உரையாடிச் செல்லும் வாழ்வில் இப்படி உன்னத கணங்கள் நினைவில் குளப்படி நீராய்த் தேங்கி அதில் நம் முகம் பிரதிபலிக்கும் போது.....! எங்கோ ஒரு குழலோசை கேட்கத்தான் செய்கிறது. அது எங்கே என்று அறிந்துவிடும் ஆர்வத்தில்தான் உயிர்கள் சென்றவண்ணம் உள்ளனவோ! 

***

Contributors

Srirangam V Mohanarangan

This page was last modified on 10 June 2015, at 10:25. This page has been accessed 1,988 times.