வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 8

From மரபு விக்கி

Jump to: navigation, search
கோவிலூர்ப் புராணம்

கி.வா. ஜகந்நாதன்

சிவபெருமான் பாரத நாட்டில் எழுந்தருளியுள்ள தலங்கள் ஆயிரத்தெட்டு என்று பொதுவாக ஒரு கணக்குச் சொல்வதுண்டு.  ஆனால் அவற்றைத் திட்டமாக இன்னவை தாம் என்று சுட்டிச் சொல்ல முடியாது.  என்றாலும் காசி, கேதாரம், முதலிய வடநாட்டுத் தலங்களும், தில்லை, மதுரை முதலிய தென்னாட்டுத் தலங்களும் யாவராலும் போற்றப் பெறும் திருப்பதிகள்.  

தென்னாட்டில் தான் சிவ வழிபாடும் சிவத்தலங்களும் மிகுதி.  தேவாரம் பெற்ற தலங்கள் சிவத்தலங்களில் சிறப்புடையவை.  திரு நொடித்தான் மலை முதல் திருக்குற்றாலம் வரையில் பல தலங்கள் மூவரால் பாடப்பெற்றவை.  அவை 274.  அவற்றைப் பாடல் பெற்ற தலங்கள் என்று சொல்வது வழக்கு.

அவற்றில் சிலவற்றிற்குப் புராணங்களும் பிரபந்தங்களும் இருக்கின்றன.  பாடல் பெற்ற தலங்களுக்கு அடுத்தபடியாகச் சிறப்பைப் பெற்று விளங்குபவை புராணம் பெற்ற தலங்கள்.  பல தலங்களுக்கு மூவர் பாடல்கள் இல்லாவிட்டாலும் புராணங்கள் இருக்கின்றன.  காசி அத்தகையவற்றுள் ஒன்று.  மேலைச் சிதம்பரம் என்று சிறப்பிக்கப் பெறும் பேரூருக்குத் தேவாரப் பதிகம் இல்லை; என்றாலும் அதற்கு ஒரு அழகிய புராணம் இருக்கிறது.

அந்த அந்தத் தலங்களில் வாழ்ந்த வடமொழி வாணர்கள் தல புராணங்களை இயற்றினர்.  பிறகு அவற்றைத் தமிழ்ப் புலவர்கள் தமிழ்ச் செய்யுள் வடிவத்தில் மொழி பெயர்த்தார்கள்.  வடமொழியில் உள்ள தல புராணங்களுக்கு இலக்கிய மதிப்பு இருப்பதில்லை.  ஆனால் தமிழில் உள்ள தல புராணங்கள் பல, சிறந்த இலக்கியங்களாக இருக்கின்றன.  பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சுருக்கமான முறையில் பல தமிழ்ப் புராணங்கள் இருந்தாலும், திரிகூட ராசப்பக் கவிராயர், சைவ எல்லப்ப நாவலர், சிவப் பிரகாச சுவாமிகள், சிவக்கொழுந்து தேசிகர், சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர், உமாபதி சிவாசாரியார், புராணத்திருமலை நாதர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலிய பெரும்புலவர்கள் பாடிய புராணங்கள் இலக்கியச் சுவை மிகுந்தனவாய், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, சைவ சமயச் சிறப்பு முதலியவற்றைக் கூறுவனவாய் விளங்குகின்றன.  ஒரே தலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புராணங்கள் உள்ளன.  மதுரை, சிதம்பரம், மாயூரம், திருப்பெருந்துறை போன்ற தலங்களுக்கு வெவ்வேறு கவிஞர்கள் இயற்றிய வேறு வேறு புராணங்கள் இருக்கின்றன.

புராணம் பாடிய கவிஞர்களுள் அதிகமான புராணங்களைப் பாடியவர் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.  அவர் இருபத்திரண்டு புராணங்களைப் பாடி இருக்கிறார்.  தலங்களுக்குப் பழைய புராணங்கள் இருந்தாலும் பிள்ளையவர்களைக் கொண்டு புதிய புராணம் பாடச் செய்வதில் அக்காலத்துத் தமிழ் மக்கள் ஆர்வங்காட்டினர். நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, துதிகள், வர்ணனைகள், சைவ சமயக் கருத்துக்கள் ஆகியவற்றை அப்புலவர் அமைத்துப் பாடுவதில் வல்லவராக இருந்தமையால் அவரைக் கொண்டு புராணங்களை இயற்றுவித்தனர்.  மாயூரம், திருப்பெருந்துறை முதலிய தலங்களுக்குப் பழைய புராணங்கள் இருந்தாலும் புதிய புராணங்களைப் பிள்ளையவர்கள் இயற்றினார்.  அவரை, "புராணம் பாடும் புலவன்", என்று ஒருவர் பாராட்டியிருக்கிறார்.

பிள்ளையவர்கள் பாடிய புராணங்களுள் ஒன்று கோவிலூர்ப் புராணம்;  செட்டிநாட்டிலுள்ள பல தலங்களுக்கு அவர் புராணம் பாடியிருக்கிறார்; அப்படிப் பாடியதால் அவருக்குப் பொருள் வருவாய் கிடைத்தது.  கோவிலூரில் உள்ள வேதாந்த மடத்தை நிறுவியவரும் முதல் ஞானாசிரியருமான முத்திராமலிங்க தேசிகர் அத்தலத்துத் திருக்கோயிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்து விரிவாக அமைத்தார்; அது முதல் அவ்வாலயம் செவ்வனே பராமரிக்கப்பட்டு வருகிறது.  அவருக்குப் பின் ஆதீனத் தலைவராக எழுந்தருளியிருந்தவர் அருணாசல தேசிகர்.  அவருக்குப் பின் ஞானாசிரியராக வந்தவர் சிதம்பர தேசிகர்.  அவர் காலத்தில் தான் கோவிலூர்ப் புராணம் இயற்றி அரங்கேற்றப் பெற்றது.

மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் தாம் எழுதிய, "மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தில் இந்தத் தலத்தின் புராணம் தோன்றிய வரலாற்றை எழுதியிருக்கிறார்கள்.  அது வருமாறு:

"அடிக்கடி நேரும் பொருள் முட்டுப்பாட்டினால் இவர் வருந்துவதை இவரிடம் பாடம் கேட்டு வந்த தேவிகோட்டை நாராயணச் செட்டியாரென்பவர் அறிந்து, இவருக்கு எவ்வண்ணமேனும் பொருள் வருவாய் செய்விக்க வேண்டுமென எண்ணினார்.  பாண்டிய நாட்டில் நகர வட்டகையிலுள்ள சிவஸ்தலங்கள் சிலவற்றிற்கு இவரைக் கொண்டு புராணம் இயற்றுவிக்கலாமென்றும் அங்கங்கேயுள்ள பிரபுக்கள் மூலம் அவை காரணமாக இவருக்குத் தக்க பரிசில்கள் கொடுக்கச் செய்யலாமென்றும் நிச்சயித்து, அதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்து வருவாராயினர்.  நகர வைசியப் பிரபுக்கள் இக்கவிஞர் கோமானது பெரும் புகழை அறிந்திருந்தவர்களாதலின், நாராயணச் செட்டியாருடைய முயற்சிகள் பயனுற்றன.  கோயிலூர் வேதாந்த மடத்துத் தலைவராக இருந்த ஶ்ரீ சிதம்பர ஐயாவின் விருப்பப்படி கோயிலூர்ப் புராணம் இவராற் பாடப் பெற்றது,  இவரைக் கோயிலூருக்கு வருவித்துத் தக்கவர்கள் கூடிய சபையில் அந்நூலை அரங்கேற்றுவித்து ஶ்ரீ சிதம்பர ஐயா இவருக்கு உயர்ந்த சம்மானம் செய்ததன்றிப் பல வகையான உதவிகளும் செய்வித்தார்..... சிதம்பர ஐயாவின் விருப்பத்தின்படி வடமொழியில் உள்ளவாறே அந்நூலுள் வேதாந்த விஷயங்கள் அங்கங்கே பலவகையில் அமைக்கப்பெற்றன."

கோயிலூர், காரைக்குடிக்கு அருகில் உள்ளது.  அங்குள்ள வேதாந்த மடாலயம் மிகச் சிறப்புற்றது; வேதாந்த நூல்களை முறைப்படி பாடம் சொல்லி வந்தமையால், அங்கே பயின்ற பல துறவிகள் தமிழ்நாடு முழுவதும் அக்காலத்தில் இருந்தார்கள்.

கோயிலூர்ப் புராணம் பாயிரம், திருநாட்டுப் படலம், திரு நகரப் படலம், நைமிசப் படலம், தல விசேடப் படலம், வீர பாண்டியன் சமிவனம் அடைந்த படலம், மாயப்புலி நீங்கிய படலம், கொற்ற வாளீசப் படலம், உபநிடதப் பொருளுரைத்த படலம், மதுப் பிரியர் துதியுரைத்த படலம், சுவேதராசப் படலம், அன்னதான மகிமை உரைத்த படலம், சுதன்மை அருள் பெறு படலம், தீர்த்த மகிமைப் படலம், சாபவிமோசனப் படலம் ஆகிய பதினைந்து படலங்களையும் 849 செய்யுள்களையும் உடையது.

கோயிலூருக்கு இந்தப் புராண வாயிலாக சமிவனம், வன்னிவனம், சாலிவாடிபுரம், கழனி ஶ்ரீவல்லபம் என்ற பெயர்கள் உண்டென்று தெரிய வருகிறது. வரலாற்றின் மூலமாக, கழனி வாயில், ஏழகப்பெருந்திரு, வீரபாண்டியபுரம், மருதேந்திரபுரம் என்ற பெயர்கள் இத்தலத்திற்கு அமைந்தன என்பதை அறிகிறோம்.

கோயிலூர்ப் புராணத்தில் வரும் வரலாறுகளின் சுருக்கம் வருமாறு:

பாண்டி நாட்டில் உள் திருக்கானப் பேராகிய காளையார் கோயிலில் வீர பாண்டியன் என்னும் அரசன் ஆண்டு வந்தான்.  அவன் அத்தலத்தில் எழுந்தருளிய காளீசரை வழிபட்டு ஒரு வாளைப் பெற்றான்.  அந்த வாளைக் கொண்டு போரில் பகைவரை வென்றான்.  அதனால் அது கொற்றவாள் என்ற சிறப்புடன் விளங்கியது.

ஒரு நாள் வீரபாண்டியன் வேட்டையாடும் பொருட்டு வடக்கே உள்ள காட்டுக்குப் போய்ப் பல விலங்குகளை வேட்டையாடினான்.  அப்போது அவன் முன் ஒரு மான் எதிர்ப்பட்டது.  அது அவன் கைக்கு அகப்படாமல் தப்பியோட அரசன் தன் கைவாளோடு அதைத் துரத்திக் கொண்டு சென்றான்.  அது சமிவனம் என்ற இடத்திற்குச் சென்று மறைந்து விட்டது.

பாண்டியன் அங்கிருந்த பொய்கையில் நீராடிக் கனிகளை உண்டு ஒரு மரத்தின் நிழலில் படுத்து உறங்கலானான்.  அங்கே ஓரிடத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருந்த திருபுவனேசன் அரசனுடைய வடிவாளைக் கவர்ந்தருளினான்.  ஒரு புலியையும் அது உண்பதற்காகத் துரத்தி வரும் மறையவன் ஒருவனையும் இறைவன் தோற்றுவித்தான்.  மறையவன் புலிக்குப் பயந்து பாண்டியனுக்கருகில் வந்து, "அபயம், அபயம்!" என்று கூக்குரலிட்டான்.

பாண்டியன் துயிலுணர்ந்து தன் வாளைப் பார்த்தான்.  காணவில்லை.  அதைத் தேடுவதை விட்டு விட்டு மறையவனைக் காப்பாற்றப் புகுந்தான். புலியைப் பார்த்து, "இந்த மறையவன் உணவின்றி எலும்பும் தோலுமாக இருக்கிறான்.  இவனை உண்டால் உன் பசி தீராது.  இவன் எலும்புகளைக் கடித்தால் உன் பல் தான் நொறுங்கும்.  நான் நன்றாக உணவு உண்டு கொழுத்திருக்கிறேன்.  இவனை விட்டு விட்டு என்னை உண்டு பசியாறு!" என்றான் பாண்டியன்.  "நீ பலரைக் காப்பாற்றுகிறவன்.  உன்னை நம்பிப் பலர் வாழ்கிறார்கள்.  இவனுக்கோ யாரும் இல்லை.  ஆகையால் இவனையே உண்பேன். " என்று அந்த மாயப் புலி கூறியது.  "என் வாள் இருந்தால் உன்னோடு பொருது வென்று இம்மறையவனை மீட்பேன்.  அது கிடைக்கவில்லை.  இந்த மாய உடம்பினால் ஒரு பயனும் இல்லை.  நீ மறுக்காமல் உண்." என்று மறுபடியும் அரசன் வற்புறுத்தினான்.  புலி அவன் சொன்னதைக் கேட்கவில்லை.

வேறு வழி ஒன்றும் தெரியாமல், பாண்டியன் திறந்திருந்த புலிவாயில் தன் தலையைக் கொடுத்தான்.  அந்தக் கணத்தில் புலி மறைய மறையவனும் மறைந்தான்.  பாண்டியன் தனியே நின்றான்.  புலியும் மறையவனும் மறைந்தது கண்டு வியப்படைந்து மயங்கி நின்றான்.

அரசன் போன இடம் தெரியாமல், அவனுடன் வந்தவர்கள் அவனைத் தேடிக் கொண்டு சமி வனத்தையடைந்து அவன் தனியே நிற்பதைக் கண்டார்கள். அவனோடு உரையாடி மகிழ்ந்தார்கள்.

அப்போது அரசன், " இந்த வனத்தைச் சுற்றிப் பார்த்து ஏதேனும் அதிசயம் இருந்தால் அறிந்து வாருங்கள்" என்று அவர்களை விடுத்தான்.  அவர்கள் அவ்வாறே சென்றபோது ஒரு வன்னி மரத்தடியில் ஒரு சுயம்புலிங்கத்தையும் அதனருகில் வாளையும் கண்டனர்.  அங்கே கீழ்ப்பக்கத்தில் ஒரு பொய்கையும் இருந்தது.  அவற்றைப் பார்த்துவிட்டு அரசனிடம் சென்று தாம் கண்டதைச் சொன்னார்கள் வீரர்கள்.

பாண்டியன் அவ்விடம் சென்று சிவலிங்கப் பெருமானைத் தரிசித்துப் போற்றினான். இறைவன் இடபாரூடனாக அவனுக்குக் காட்சி கொடுத்தருளினான். "நாமே உனக்கு அகப்படாமல் வந்த மானையும் புலியையும் மறையவனையும் தோற்றுவித்தோம்.  உன் வாளைக் கவர்ந்தோம்.  அதை நீ எடுத்துக் கொள்." என்று இறைவன் அருளினான். பாண்டியன் அந்தக் கொற்ற வாளை எடுத்துக்கொண்டு இறைவனைப் பணிந்தான்.  "இந்தத் தலத்துக்கு வன்னி வனம் என்ற பெயரும், தேவரீருக்குக் கொற்ற வாளீசர் என்ற திருநாமமும் இனி வழங்க வேண்டும், தேவரீரைப் பணிந்து வழிபடுபவர்கள் தாம் வேண்டும் வரங்களையும் பெற வேண்டும்." என்று அரசன் வேண்டிக் கொள்ள இறைவன் "அவ்வாறே ஆகுக!" என்று அருள் புரிந்து இலிங்கத்துள் மறைந்தான்.

வீரபாண்டியன் அந்தக் காட்டை அழித்து ஆலயம் உண்டாக்கி, அதில் எல்லா வகையான சந்நிதிகளையும் அமைத்து, பூசை, விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தான்.  அங்கே ஒரு நகரத்தையமைத்துப் பல வகையினரையும் குடியேற்றி வாழச் செய்தான்.

ஒரு சமயம் அகத்திய முனிவர் அங்கே எழுந்தருளினார்.  அவர் பாண்டியனுக்கு இந்தத் தலப்பெருமையை மிக விரிவாக எடுத்துரைத்தார்.


(தொடரும்)

--Geetha Sambasivam (பேச்சு) 09:44, 4 ஜனவரி 2014 (GMT)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 4 January 2014, at 09:44. This page has been accessed 1,534 times.