வீர. சுப்பைய சுவாமிகள் மடம், சென்னை
விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே
திருமூலர்
"இறைவனை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒவ்வோர் உயிரும் இறுதிப் புகலிடமாக இந்நாட்டிலே வந்து சேர வேண்டும். மனித குலத்தின் மேன்மை, இரக்கம், தூய்மை, அமைதி ஆகிய பண்புகளின் உயர்ந்த நலங்கள் இங்கே ஓங்கி வளர்ந்துள" எனச் சுட்டிக்காட்டியுள்ளார் விவேகானந்த சுவாமிகள். இந்த நிலைக்கு ஓர் அடிப்படைக் காரணம் பிறநாடுகள் அறிவு பெறாததற்கு முன்னரே மெய்ஞ்ஞானிகள் பலர் நம் நாட்டில் தோன்றி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ததுமன்றி அவ்வுபதேச உரைகளை எட்டின் வடிவிலே நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். இத்தகைய மெய்ஞ்ஞானிகள் வாழையடி வாழையாக வந்த திருமரபில் உதித்துள்ளார்கள். அத்தகைய திருமரபில் தோன்றியவர் வீர. சுப்பையா சுவாமிகள். பின்னர், இவர்கள் ஶ்ரீ ஜகத்குரு பீடம் நியாய சந்திர வேதாந்த பாஸ்கர மகா மண்டேஸ்வர ஶ்ரீ வீர. சுப்பைய ஞான தேசிகேந்திர சுவாமிகள் என்னும் அரும்பெரும் பெயருடன் விளங்கினார். அறிவுடையோர் ஒருவர் ஒரு விளக்கினைக் கொண்டு பல விளக்குகளை ஏற்றி எங்குமே ஒளியைப் பரப்புவார். இது போன்றே முற்றறிவுடையவராகிய கடவுள் மெய்ஞ்ஞானி ஒருவரைக் கொண்டு மற்றவர்களுக்கு ஞானம் புகட்டுகின்றார். இவ்வகையில் நெடுந்தொலைவிலுள்ள ஊர்கள் உட்படப் பல இடங்களிலுள்ள மக்களுக்கு ஞானோபதேசம் புரிந்தும் ஞான நூல்களை மொழி பெயர்த்தும் பல நூல்களுக்கு உரை கண்டும் செயற்கரியவற்றை யெல்லாம் செய்தவர்கள் வீர. சுப்பைய சுவாமிகள் ஆவார்கள்.
தோற்றம்
உலகப் படைப்பில் முதலில் தோன்றியது தமிழகம் என்பது ஆன்றோர் கருத்து.
"வழங்குவதுள் வீழ்த்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று."
என்னும் திருக்குறளுக்கு உரை கண்ட பரிமேலழகர் "தொன்று தொட்டு வருதல், சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக்காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்" எனக் குறிப்பிட்டுள்ளார். மதுரை மீனாட்சியம்மையாருக்கும், சுந்தரேஸ்வரருக்கும் நிகழ்ந்த திருமணத்திற்கு முதல் முதலில் முதன்மையாக வந்திருந்தவர் கொங்கு நாட்டரசர் எனப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில் காட்டுகின்றார். எனவே, தமிழ் மக்களது தொன்மை கால வரம்பிற்கு உட்பட்டதன்று என்பது உணர்ந்து கொள்ளத் தக்கது. இத்தகைய பெருமை சார் மக்களில் ஒரு பகுதியினர் வாழ்ந்தது கொங்கு நாடாகும். இதில் தற்போதுள்ள கோவை மாவட்டப்பகுதி மையமாகவும், நீலகிரி, சேலம், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய மாவட்டங்களின் பகுதிகள் சுற்றிலுமாகவும் சேர்ந்துள்ளன. இக் கொங்கு நாட்டில் மலை வளமும் புனல் வளமும் அணிகளாக உள்ளன.
"இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு."
என்னும் குறளில் உள்ள வேளாண்மை என்னும் சொல்லுக்கு உபகாரம் என்பது பொருளாகும். விருந்தோம்பும் வகையில் உபகாரம் (வேளாண்மை) செய்வதற்காக அமைந்தது இல் வாழ்க்கை இது போன்றே எல்லோருக்கும் உணவு அளிக்கும் வகையில் அமைந்தது வேளாண்மைப் பணி. இவ் வேளாண்மையில் மெய்யாக உழைப்பவர்களாகிய வேளாளர்கள் மிக்க நாடு கொங்கு நாடு. இதில் முருகப் பெருமான் கோவில்கள் பலவுள. சிவபெருமான் திருக்கோயில்களும் ஆங்காங்கு உள எனத் திரு வி. கலியாண சுந்தர முதலியார் இவ்வுண்மைகளை விளக்குகிறார்.
மக்கள் தமை முதலளித்த
மாண்புடைய தமிழ்நாட்டில் மன்னுநாடு!
மிக்கமலை புனல் வளமும்
வேளாளர் மெய்வளமும் மேவு நாடு!
எக்கலையும் உடை நாடென்று
இசைப்புலவர் திருக்குட்டமெய்து நாடு!
குக்குடத்தான் கோயிலோடு
குழைக்காதன் கோயில் கொளும் கொங்கு நாடே!
இத்தகைய தெய்வ வழிபாடுடைய சைவ வேளாளர் நற்குலத்தில் தோன்றியவர் சுப்பைய சுவாமிகள். இவர்கள் தந்தையார் மருதாசலம் பிள்ளை. இவரது ஊர் கோயம்புத்தூருக்கு மேற்கே எட்டுமைல் தூரத்திலுள்ள தொண்டாமுத்தூராகும். இவர் தம் துணைவியார் பெரிய அம்மணி அம்மாள் ஊர் கோயம்புத்துர் ஆகும். திருமணம் செய்து கொண்ட பின்னர் மருதாசலம் பிள்ளை கோயம்புத்தூரில் வசிக்கத் தொடங்கினார். பெரிய் அம்மணி அம்மாளின் பெற்றோர்கள் கோவையில் வசித்து வந்த சின்னக்கடைத்தெருவில் மருதாசலம் பிள்ளையும் தம் மனைவியாருடன் இல்லறம் நடத்தினார். இவர்கள் இவ்வாறு வாழ்க்கை நடத்தியது கோயம்புத்தூர் நகரத்தில் இடையர் தெருவும் சின்னக்கடைத்தெருவும் சந்திக்கும் இடத்திலிருந்து அரை பர்லாங்கு தெற்கே சின்னக்கடை வீதி முனையிலே இருந்த இல்லமாகும். தொண்டாமுத்தூருக்கு வடக்கே எழுமைல் தொலைவில் வடவழி மருதமலை என்னும் குன்றுள்ளது. இதிலியற்கைச் சுனையுடன் சோலை வளமுள்ளது. இதன் பேரில் முருகப் பெருமான் கோயிலை மருதமலை ஆண்டவன் கோவில் எனக் கூறுவார்கள்.
இப்பெருமான் பெயரே சூட்டப்பெற்ற மருதாசலம் பிள்ளை தாம் நடத்தி வந்த இல்லறமாகிய நற்றவ வாழ்க்கையில் தோன்றிய ஆண்மகவுக்கு முருகப் பெருமானின் திருப்பெயராகிய சுப்பிரமணியன் என்னும் பெயர்ச் சுருக்கமாகிய சுப்பையன் என்னும் பெயரைச் சூட்டினார். (இப்புனிதமான பெயரை நம் சுவாமிகள் எக்காரணங்கொண்டும் மாற்றிக் கொள்ளவில்லை.) மருதாசலம் பிள்ளைக்கு செல்வச் சூழ்நிலையில் வாழ்க்கை அமையாவிடினும் வருத்தமின்றி வாழ்க்கை நடத்துவதற்காக வியாபாரத்திலும் ஓரளவு வேளாண்மையிலும் வருமானம் அவர் பெற்று வந்தார். தம் அருமை மைந்தன் அக்காலத்திய ஆங்கில முறையில் கல்வி கற்குமாறு ஏற்பாடு செய்தார். தம் பெரிய மாமனார் மைந்தராகிய சுப்பிரமணியன் என்பாரும் தம் மைந்தருடன் கல்வி கற்று வந்தது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. பின்னர் தொடர்ந்து மேல் படிப்பு மேற்கொள்ள நிதி வசதியும் மற்ற வசதிகளும் கிடைக்கவில்லை. ஆதலால் பள்ளிப்படிப்புடன் நிறுத்திக் கொண்ட தம் மைந்தன் மருந்து கலக்கிக் கொடுக்கும் பணிக்குரிய பயிற்சி பெறுமாறு ஏற்பாடு செய்தார். இப்பயிற்சியைச் சுப்பிரமணியனும் மேற்கொண்டார். சுப்பிரமணியத்தின் தம்பி நாராயணசாமி என்போர் ஆங்கிலக் கல்வி பயிலாது தமிழ்ப்படிப்புடன் அக்காலத்தில் துறவியாக இருந்து வந்த திருமுடி சுவாமிகள் என்பாரிடம் மாணவராக இருந்து அவரிடமிருந்து தமிழ்ச் சித்த மருத்துவம் கற்றுக் கொண்டார். நாராயணசாமியுடன் கொண்ட தொடர்பாலும் திருமுடி சுவாமிகள் அருளாலும் சித்த வைத்தியத்திலும் சுப்பைய சுவாமிகளுக்கு ஓரளவு அனுபவம் கிடைத்தது. மருந்து கலக்கிக் கொடுக்கும் பயிற்சிக்குரிய கால அளவு ஓராண்டுக்கும் சற்றுக் குறைந்ததே. இப்பயிற்சியைச் சிறந்த முறையில் பெற்றுக் கொண்ட பின்னர் இப்பயிற்சிக்கேற்ற பணியை நாடினார். இக்காலத்தில் இவர் ஈட்டக்கூடிய வருமானத்தைப் பெற்றோர்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். இக்காலத்திற்குச் சற்று முன் மருதாசலம் பிள்ளையின் உறவினர் இராயப்ப பிள்ளை தல நிதிப் பொறியாளர் அலுவலக மேலாளராகப் (Manager Local Fund Engineer's Office) பணியாற்றி இருந்தார். அதற்குப் பின் பல ஆண்டுகள் குப்புசாமி பிள்ளை என்பார் தாலுகாத் தலைமை எழுத்தராகப் பணியாற்றி இருந்தார். இவர்களுக்கு அக்காலத்தில் செல்வாக்கு மிகுதியாக இருந்தது. இத்தகைய சூழ்நிலைகளில் சுப்பைய சுவாமிகள் வேட்டைக்காரன்புதூர் தல நிதி மருத்துவமனையில் (Local Fund Dispensary at Vettaikkaranpudur) மருந்து கலக்கிக் கொடுக்கும் அலுவலராகச் சுலபமாக நியமிக்கப்பட்டார். இப்போது அவருக்கு வயது பதினாறு. இந்நியமனத்தின் விளைவாக இவர்கள் தம் பெற்றோர்களும் வேட்டைக்காரன்புதூரில் வசிக்கத் தொடங்கினார்கள்.
2. வேட்டைக்காரன்புதூர் வாழ்க்கை
வேட்டைக்காரன் புதூரில் சுவாமிகள் நான்கு ஆண்டுகள் மருந்து கலக்கிக் கொடுப்பவராகப் பணி ஆற்றி வந்தார்கள். இக்காலத்தில் இவர்கள் வேட்டைக்காரன் புதூருக்கு ஒரு மைல் தூரத்தில் ஆனை மலையில் உள்ள தம் உறவினர்கள் இல்லத்திற்குச் சென்று வருவதுண்டு. முன்பு திருமுடி சுவாமிகள் மீது கொண்டிருந்த அன்பின் விளைவாகப் பின்னர் வேட்டைக்காரன் புதூரில் புகழ் கொண்ட அழுக்கு சுவாமிகள் என்ற பெரியார் மீது பெருமதிப்புக் கொள்வாராயினர். இப்பெரியார் சித்திகள் கைவரப் பெற்றவர். குளிக்கவே மாட்டார்.. தம் எதிரே நேரில் வந்தவர்களுக்கு அருள் பாலிப்பார். இத்தகையவர் வரவைப் பலர் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அழுக்கு சுவாமிகள் முக்தி அடைந்தது வேட்டைக்காரன் புதூரில். இவர்களுக்கு ஆண்டு தோறும் இவ்வூரில் குரு பூஜை விமரிசையாக நடைபெற்று வருகிறது.
மருந்து கலக்கிக் கொடுக்கும் பணி புரிந்து வருங்காலத்தில் மருத்துவமனை நோக்கி வருபவர்களுக்குத் தக்க வகையில் கருணை பூத்த முகத்துடன் உதவி அளித்து ஆறுதல் கூறுவது வழக்கமாகச் சுவாமிகள் கொண்டிருந்தார். திருக்குறள் மருந்து அதிகாரத்தில் நான்கு கூறுகள் விளக்கம் பெறுகின்றன. 1.. நோயுற்றவர், 2. நோய் தீர்க்கும் மருத்துவர், 3. நோயுற்றவருக்கு மருந்து முதலியவற்றைக் கொடுத்து உதவி புரிபவர். 4. நோயுற்றவருக்கு மருத்துவர் கொடுக்கும் மருந்து ஆகிய நான்குமாகும்.
"உற்றவன், தீர்ப்பான், மருந்துழைச் செல்வானென்று
அப்பானற் கூற்றே மருந்து!"
என்னும் குறட்பா கூறுகிறது. இவற்றில் மூன்றாம் நிலையில் உள்ளவர் மருந்து கொடுத்து உதவுபவர். 'இவர் 'மருந்துழைச் செல்வான் ஆவார். அக்காலத்தில் மருத்துவ மனையில் தங்கிச் சிகிச்சை பெறுவோர்களுக்கும் (inpatients)வந்து சென்று சிகிச்சை பெறுவோர்களுக்கும் (out patients) மருந்து கொடுப்பவர் ஒருவரே. இக்காலத்தில் தங்கிச் சிகிச்சை பெறுவோருக்கு உதவி அளிப்பதற்கெனவே செவிலியர்(nurse) என்னும் பெயர் தாங்கிப் பணியாற்றுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சிற்சில சமயங்களில், மருத்துவருக்குச் சிந்தித்துப் பார்ப்பதற்கு நேரமில்லாத நிலை ஏற்படலாம். அப்போது மருந்துழைச் செல்வான் தக்க முறையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு கதை கூறுவதுண்டு.
கார்க்கோடகன் என்னும் கொடிய நச்சுப்பாம்பிற்கு ஒரு காலத்தில் வயிற்று வலி ஏற்பட்டது. அவனுக்கு அந்நோய்க்காக அகத்தியர் மருந்து கொடுத்தார். அம்மருந்தை உட்கொண்டதும், கார்க்கோடகனுக்கு முன்னிலும் வயிற்று வலி மிகுந்தது.
இதைப்பொறுக்க மாட்டாத கார்க்கோடகன், அகத்தியர் மாணவராகிய தேரையரை அணுகினான். மருத்துவத் துறையில் தேர்ந்தவர் தேரையர் என்பது அவரது பெயரிலிருந்தே தெரிய வரும். தேரையரும் தம் குருநாதர் கார்க்கோடகனுக்குத் தந்த மருந்தையே மீண்டும் தந்தார். ஆனால் அம்மருந்தை ஒரு மூங்கில் குழலில் இட்டு அதனுடன் தண்ணீரும் சேர்த்து அந்நீருடன் கூடிய மருந்து கார்க்கோடகன் பற்களில் படாதவாறு கார்க்கோடகன் தொண்டை வழியே செலுத்தி விட்டார். இவ்வாறு செய்ததால் கார்க்கோடகன் நச்சுப் பற்களிலிருந்து நஞ்சு மருந்தினுட் கலக்கவில்லை. கார்க்கோடகனும் வயிற்று வலி நீங்கப்பெற்றான். தேரையர் கையாண்ட முறைகளைப் போன்ற வழிகள் பலவற்றில் மருந்துழைச் செல்வானுக்குரிய அரும்பெரும் பணிகளை நம் சுவாமிகள் ஆற்றினார்கள். இத்தகைய வியத்தகு பணிகளை ஆற்றி வரும்போது "இவர்கள் மருத்துவருக்குரிய கல்வி கற்காமல் இருந்து விட்டார்களே, இத்தகைய கல்வி கற்றிருந்தால் எவ்வளவோ பரோபகாரமாக இருக்குமே," எனச் சிலர் வருந்தியதுண்டு. இச்சமயம் இவர்களுடன் பயிற்சி பெற்ற சுப்பிரமணியனும் மருந்து கலக்கிக் கொடுக்கும் பணியேற்றார். நாராயணசாமி மட்டும் தமிழ்ப்படிப்புடன் மேற்கொண்டு சித்த மருத்துவப் பணியைத் தொடங்கினார்.
வேட்டைக்காரன் புதூரில் தம் பெற்றோர்கள் மகிழும் வண்ணம் சுவாமிகள் பணியாற்றி வந்தார்கள். ஒழுக்க நெறியினின்றும் ஒரு சிறிதும் தவறாமல் இளம் தவ யோகி போல் தம் கடமைகளை ஆற்றி வந்தார். உடற்கட்டுடன் உள்ளத் தூய்மையுடையவராயும் இறை வழிபாட்டில் திளைத்தவராயும் இருந்து வந்ததால் அனைவரும் இவர்களை நன்கு மதித்தார்கள். விநாயகப்பெருமான் இவர்களுக்குத் தோன்றாத் துணையாகவும் வழிபடு தெய்வமாகவும் வழி காட்டி வந்தார்.
3. துறவும் பின் நிகழ்வுகளும்
சுவாமிகளுக்கு ஏறத்தாழ 21 வயது இருக்கலாம். அது சமயம் அவருக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டுமென அவர் தம் பெற்றோர்கள் விரும்பினார்கள். இவருக்கு வாழ்க்கைத் துணைவியாக இருக்கத்தக்க பெண் இன்னார் என்பது பற்றிப் பேச்சு எழுந்தது. தக்கவர் ஒருவர் தம் புதல்வியை இவருடைய இல்லக்கிழத்தியாக்க முன் வந்தனர். இதையறிந்த சுவாமிகள் திருமணம் செய்து கொள்ளத் தமக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனப் பெற்றோர்கள் இவர்களை வற்புறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து தாங்க மனம் இசையவில்லை; இல்லத்தை விட்டுத் துறந்தார்கள்.
விநாயகப் பெருமானே தமக்கு வழிபடு தெய்வமாகக் கொண்டவர் ஆதலால், அவ்வூர் விநாயகர் கோயிலில் இறுதியாகக் காணப்பட்டவர், பின்பு அவ்வூர் வாசிகள் பார்வைக்குத் தென்படவில்லை. நேராகத் திருக்குற்றாலம் சேர்ந்தார். ஆங்கு வீற்றிருந்த விநாயகப் பெருமானை வணங்கித் திரும்பும்போது திருக்கோவிலூரில் ஶ்ரீ வீரசேகர ஞான தேசிக சுவாமிகளின் மாணவராகிய பழையூர்ப்பட்டி அருணாசல சுவாமிகளைச் சந்தித்தார். சுப்பையா சுவாமிகளின் தீவிரமான ஆர்வத்தை உணர்ந்து கொண்ட அருணாசல சுவாமிகள் கோவிலூர் வேதாந்த மடாலயம் உள்ளது. அங்கு நீவிர் சென்று நன்மை அடைக என அறிவுறுத்தினார். அவ்வாறே கோவிலூர் மடத்தை அடைந்த சுப்பையா சுவாமிகள், அம்மடத்தின் அதிபராகிய ஶ்ரீ வீரசேகர ஞான தேசிக சுவாமிகளிடம் தமது விருத்தாந்தத்தைத் தெரிவிக்க ஞான தேசிக சுவாமிகளும் சுப்பைய சுவாமிகளை ஏற்றுக் கொண்டார். வேதாந்த நூல்களை முறையாகக் கற்கத் தொடங்கினார்.
இந்நிலையில் சுப்பையா சுவாமிகளின் பெற்றோர்கள் தம் அருமை மைந்தன் பிரிவைத் தாங்க இயலாமல் தங்கள் மைந்தனைக் கண்டு பிடிக்கும் வகையில் துறவிகள் பலரையும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்காகத் துறவிகள் பலரை வரவழைத்து அவர்களை விசாரித்துப் பின்னர் தங்கள் மைந்தன் இருக்கக் கூடிய இடம் இன்னதெனத் தெரிவிக்குமாறு அவர்களிடம் கேட்பது வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒரு சமயம் துறவிகள் சிலர் தந்த தகவலின் பேரில், சுவாமிகளின் பெற்றோர்கள் திருக்கோவிலூருக்குச் சென்று அங்குள்ள மடத்தில் சுவாமிகளைச் சந்தித்தார்கள். அங்குள்ளவர்கள் தம்மை விசாரித்த போது, 'குடியிருந்த வீடு' எனத் தம் தாயாரைச் சுவாமிகள் சுட்டிக் காட்டினாராம். மைந்தன் தம்மை விட்டு ஓடி விடக் கூடுமே என அஞ்சி அன்னையார் கண் விரியாது அன்றிரவு முழுவதும் இருக்கத் தொடங்கினார். ஆனால் தாயார் சற்றுக் கண் அயர்ந்த வேளையில் சுவாமிகள் அங்கிருந்து ஓடி விட்டார்கள். பின்னர் மைந்தனால் கைவிடப்பட்ட தாயார் வருத்தத்துடன் தம் கணவருடன் வேட்டைக்காரன் புதூருக்குத் திரும்பினார்.
இனித் தம் ஊருக்கு அருகிலோ சற்று தூரத்திலுள்ள ஊரிலோ தங்கியிருந்தால் பெற்றோர்கள் தமது முயற்சிக்குத் தடையாக இருப்பார்கள் என உணர்ந்து சுப்பைய சுவாமிகள் வடக்கே சென்று விட்டார். காசி அடைந்தார். அங்குள்ள மடங்களில் தங்கிப் பல ஆண்டுகள் வரை வடமொழி கற்று விற்பன்னரானார். நிஷ்டை கைவரப் பெற்று ஞானியாயினார்.
இது சமயம் தந்தையார் மருதாசலம் பிள்ளை இறந்தார். அப்போது சுவாமிகளுக்கு இருபத்தைந்து ஆண்டு வயதிருக்கலாம். பின்னர் சுவாமிகள் தெற்கே வந்தார். சுவாமிகளைக் கண்ணுற்ற பெருமக்கள் தங்கள் தங்கள் ஊர்களுக்குச் சுவாமிகளை அழைத்துச் செல்லுவதும் அவர்களிடமிருந்து உபதேசம் பெறுவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
சுவாமிகள் துறவு பெறுவதற்கு முன்பும், பின்பும் கொண்டிருந்த நண்பர்கள் வேட்டைக்காரன் புதூர் சாம்பசிவ முதலியார், அவர் தமையனார் சதாசிவ முதலியார் அவர்கள் சகோதரி கண்ணம்மாள், லண்டன் மாணிக்கம், சித்தூர் கோபால முதலியார் முதலிய பெருமக்கள், இவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களும் உறவினர்களுமாகியோர் கரூருக்கு அண்மையில் ஐந்து மைல் தொலைவிலுள்ள விசுவநாதபுரியில் உள்ளவர்கள் இவர்களது விருப்பத்திற்கிணங்க, சுப்பைய சுவாமிகள் விசுவநாதபுரிக்குச் சென்று சில நாட்கள் அங்கிருந்தார்கள். இது விபரம் எவ்வாறோ தெரிந்து கொண்ட அன்னையார் சுவாமிகளைத் தேடிச் செல்ல முயற்சி செய்தார். தம் கணவனை இழந்த நிலையில் சிறு வியாபாரம் செய்து கொண்டு தம் வாழ்க்கையை நடத்தி வந்த அன்னையாருக்குப் பல ஊர்களுக்குச் செல்லப் பண வசதி கிடைக்கவில்லை. இதற்காகத் தம்முடைய தங்க நகைகளைக் கோவையிலுள்ள ஒரு பாங்கில் அடைமானம் வைத்துப் பணம் பெற்றுக் கொண்டு விசுவநாதபுரியை அடைந்தார். தம் அன்னையார் வந்தது தெரிந்தோ அவர்கள் வருவதற்கு முன்னதாகவோ சுவாமிகள் விசுவநாதபுரியை விட்டுச் சென்றுவிட்டார். தம் மைந்தனைக் காணாது தாயார் அங்கு தங்கினார். தங்கிய இடம் ஒரு கோயில் கட்டிடத்தருகில். அன்றிரவே வயிற்றுப் போக்குக் காரணமாக விசுவநாதன் திருவடியடைவார் போன்று அங்கே உயிர் நீத்தார். அவர்களுடன் சென்றிருந்தவர்களும் அவ்வூரிலுள்ளவர்களும் சேர்ந்து அவரது உடலை அவ்வூரிலே அடக்கம் செய்தார்கள்.
சில ஆண்டுகள் கழிந்தன. சுவாமிகள் மறுமுறையாகக் கோவைக்கு வந்திருந்தார். அதுசமயம் கோவை பாங்கியில் தம் தாயார் அடைமானம் வைத்திருந்த நகைகளைப் பற்றித் தம் சிற்றன்னை தெரிவிக்க விபரம் தெரிந்து கொண்டார்கள். சுவாமிகள் கோரிக்கை செய்யாதவகையில் அந்நகைகள் திரும்பிக் கொடுக்கப்படமாட்டா என்ற நிலை ஏற்பட்டது. இதைத் தெரிந்த சுவாமிகள் தம் பூர்வாசிரமத்துச் சிற்றன்னையாகிய சின்ன அம்மணி அந்நகைகளைத் தம் தமக்கையார் (சுவாமிகள் தாயார்) வாரிசாகப் பெற்றுக் கொள்ளலாம் என்பதாகத் தம் இசைவைத் தெரிவித்தார்கள். அவ்வாறே சிற்றன்னையும் அவற்றைப் பெற்றுக் கொண்டாள்.
இதன் பின் சுவாமிகள் சென்னையில் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளிடம் தொடர்பைக் கொண்டார். தம் கரத்தையே பாத்திரமாகக் கொண்ட கடுந்துறவியாதலால் இப்பெயர் அவர்களுக்கு அமைந்தது. இச்சுவாமிகள் சுப்பையா சுவாமிகளுக்கு முழு ஆதரவு அளித்தார்கள். இக்காலத்தில் சுப்பைய சுவாமிகளுக்குச் சிறந்த மாணவர்களாக அமைந்தவர்கள் ஶ்ரீ சண்முகாநந்த சுவாமிகள், அனந்தானந்த சுவாமிகள் ஆகிய இருவரும் ஆவார்கள்.
சென்னையில் சூளையில் ஒரு மடத்தை நிறுவி ஆயிரக் கணக்கில் அடியார்கள் அன்பர்கள் எல்லோருக்கும் சொற்பொழிவாற்றும் வகையில் ஞான உபதேசம் தொடர்ந்து செய்து வந்தார்கள். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாக இவர்கள் இவ்வாறு அரும் செயல்களை மேற்கொண்டார்கள். இவர்கள் சென்னை, சூளையில் ஆனந்த ஆசிரமத்தில் தலைவராக இருந்ததோடன்றி, திருவாரூரில் மடப்புரத்திலுள்ள தக்ஷிணாமூர்த்தி மடத்திற்கு அதிபதியாக இருந்துள்ளார். ஆயிரத்தில் ஒருவர் பேச்சால் புகழ் பெறுகிறார். இலட்சத்தில் ஒருவர் செயலால் புகழ் பெறுகிறார். பேச்சாலும் செயலாலும் புகழ் பெறுபவர் மிகச் சிலரே. இவ்வாறு பேச்சாலும் செயலாலும் காசி முதல் கன்னியாகுமரி வரையிலும் சென்று ஆங்காங்கு வேதாந்தம் மட்டுமின்றி ஒழுக்க நெறி உலக வாழ்க்கை முதலிய பல பொருள் பற்றித் தேன்மழை சிந்துவது போலத் தெவிட்டாத இயல்போது,
கேட்டார்ப்பிணிக்கும் தகைவாய் கேளாரும்
வேட்பமொழிவதாம் சொல்"
என்ற உண்மைக்கிணங்கச் சொற்பொழிவு ஆற்றியவர்கள் சுவாமிகள். சுவாமிகள் பேச்சில் அடுக்குமொழிகளோ துடுக்குச் சொற்களோ இரா. மிக மிகத் தெளிவான நடையில் சிக்கலித்தாத உச்சரிப்பு முறையில் வேகமாகவோ மந்தமாகவோ இல்லாதவாறு பேசுவார்கள் சுவாமிகள். சுவாமிகள் கருத்துக்களைக் கூறி வரும்போது கேட்போர்கள் தங்கள் தங்களுக்குத் தான் தாங்கள் திருந்துவதற்காகத் தங்கள் செயல்களை ஞானத்தினால் அறிந்து கொண்டு கூறுகிறார்களோ என எண்ணி அவர்களது உபதேசத்தினால் திருந்தியவர்கள் பலர்.
ஒரு சமயத்தில் காரைக்குடி பிரம்ம வித்தியா பிரசார சபையில் துவைதிகள் தோல்வியுறுமாறு சொற்பொழிவாற்றி வெற்றி கண்டார்கள்.
சுவாமிகள் வடமொழியிலிருந்து 25 நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள். இந்தியிலுள்ள பெரிய நூல்கள் இரண்டைத் தமிழில் எழுதியுள்ளார்கள். தமிழில் 20 நூல்கள் இயற்றியுள்ளார்கள். ஆயிரம் கவிகள் அருளியுள்ளார்கள். இப்பெரும் செயல் அற்புதமாகவும் கொள்வார்கள் பலர். இந்நூல்களின் பட்டியல் பிறிதோரிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
1931 ஆம் ஆண்டு பிரசோற்பத்தி ஆண்டு புரட்டாசி மாதம் 26 ஆம் நாள் திங்கட்கிழமை சென்னை சூளை, ஆனந்தா ஆசிரமத்தில் தம் மாணவர்கள் பலர் சூழ்தரச் சுவாமிகள் விதேக கைவல்யம் அடைந்தார்கள்.
சுவாமிகளுக்குப் பின்னர் அவர்கள் தம் மாணவராகிய ஆனந்தானந்த சுவாமிகள் சென்னை சூளை வீர சுப்பைய சுவாமிகள் மடத்தின் அதிபதியாகித் தம் கடமை ஏற்றுக் கொண்டார்கள். 1956 ஆம் ஆண்டு வரை தம் கடமை ஆற்றினார்கள். அவர்கள் விதேக முக்தி அடைந்த பின்னர் ஶ்ரீ வித்யானந்த கிரி சுவாமிகள் அத்தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
சுப்பைய சுவாமிகளின் முதல் சீடராக விளங்கிய ஶ்ரீ ஷண்முகானந்த சுவாமிகள் தற்சமயம் திருவாரூர் மடப்புரம் தக்ஷிணாமூர்த்தி திருமடத்தின் அதிபராக உள்ளார்கள்.
சொல்லுறுங் கலியை யாயிரத்தோடு
தோயுமுப்பத்திரண்டதனில்
துதைந்தடும் பிரஜோத பத்தியாம் ஆண்டு
துணும் புரட்டாசியாம் மாதம்
புல்லுறு மிருபத்தாறாதாந் தேதி
புகன்றிடுஞ்சோமவாரத்தே
பொருந்திடும் பூர்வ பிரதமை திதியார்
புனித சுவாதியாம் உடுநாள்
நல்லுதயாதி இருபத்தாறே கால்
நாழிகை வேளையில் சென்னை
நகருறு சூளை நியாய சந்திரமும்
ஞாநவே தாந்த பாஸ் கரரும்
வெல்லுமா மகிமை மண்டலேசுரரும்
விளங்கு சொன் முகிலுமாம் திருவார்
வீர சுப்பைய ஞான தேசிகனார்
விதேக முத்தியுற்றனரே.
கலியுக ஆண்டு 5032, பிரஜோத்பத்தி வருடம், புரட்டாசி மாதம் 27 ஆம் நாள், திங்கட்கிழமை உதயம் நாழிகை 26-1/4 (பிற்பகல் 41/2 மணி) ஆங்கில ஆண்டு 12--10--1931 பூர்வ பக்ஷப் பிரதமை திதி சுவாதி நட்சத்திரம் விதேக முக்தி அடைந்தார்கள்.