வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 31

From மரபு விக்கி

Jump to: navigation, search
வளவனூர் சண்முக சுவாமிகள் மடம்

விழுப்புரம் -- புதுச்சேரி முதன்மைச் சாலையில் விழுப்புரத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகான அமைதியான ஊர் வளவனூர்.  இதன் மையப்பகுதியில் முதன்மைச் சாலையில் அமைந்துள்ள திருமடம் நமது சண்முக சுவாமிகள் திருமடம்.

இத்திருமடத்தை ஸ்தாபித்தவர், கோவிலூர்த் திருமடத்தின் இரண்டாவது மடாதிபதி ஶ்ரீமத் துறவாண்டவருடைய மாணாக்கர் ஶ்ரீமத் சண்முக சுவாமிகள்.  இது ஏறக்குறைய 150 ஆண்டுகள் அமைந்துள்ள அற்புதமான மடம்/
**************************************************************************************

மேட்டுப்பாளையம் சபாபதி சுவாமிகள் மடம்

திருவண்ணாமலை --  வேலூர் சாலையில் கலசப்பாக்கம் கிராமத்தின் அருகில் செய்யாற்றங்கரையில் அமைந்திருக்கும் சிற்றூர் தென்பள்ளிப்பட்டு(மேட்டுப்பாளையம்)

ஆற்றங்கரையில் அழகான சோலைக்கட்டு நடுவே ஶ்ரீமத் சபாபதி சுவாமிகளின் அதிஷ்டானத் திருக்கோவிலும் மடமும் அமைந்துள்ளன.

இது பிராமண சந்நியாசியான சபாபதி சுவாமிகளால் ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட மடம்.

சபாபதி சுவாமிகள் கோவிலூர் குருமூர்த்திகள் யாருடைய சீடர் இவர் என்பது தெரியவில்லை.  ஆனால் இவர் கோவிலூர் மரபு வேதாந்தப் பாடம் குறைவற நடத்திப் பல ஞானிகளை உருவாக்கியுள்ளது தெரிகிறது.  அங்கு உள்ள பல மடங்கள் இவருடைய சீடர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளன எனத் தெரிய வருகிறது.

இது தற்போது திருவண்ணாமலை ஈசான்ய மடத்தின் பொருளாதார ஆதரவால் நடைபெற்று வருகிறது.
***************************************************************************************

மானாமதுரை நாராயண சுவாமிகள் மடம்

கோவிலூர் மடாதிபதி சிதம்பர சுவாமிகளின் மாணவரான நாராயண சுவாமிகள் மானாமதுரையில் துறவியாக இருந்து பிச்சை ஏற்று வந்தார்கள்.  14 ஆண்டுக்காலம் மானாமதுரையில் இருந்து அங்கேயே 1901--இல் பரிபூரணம் அடைந்தார்கள். நாராயண சுவாமிகளின் மாணவர்கள் அங்கு அவ்வூரில் ஒரு மடம் அமைத்து அதற்குத் தம் ஆசிரியரின் பெயரை இட்டார்.  அவருக்குப் பின் கோவிலூர் மடாதிபதி திருக்களர் ஆண்டவரின் மாணவரான சதாசிவ சுவாமிகள் 1912 முதல் மடாதிபதியாக இருந்தார்கள்.

அவர்கட்குப் பின்னர் ரங்கநாத சுவாமிகளும் பின்னர் பொன்னம்பல சுவாமிகளும் மடத்தை நிர்வாகம் செய்து வந்தார்கள்.  2006 இல் ஶ்ரீமத் பொன்னம்பல சுவாமி பரிபூரணம் அடைந்ததும் கோவிலூர் மடத்தின் நேரடி நிர்வாகத்தில் உள்ளது.

1. நாராயண சுவாமி

2. சதாசிவ சுவாமிகள்

3. ரங்கநாத சுவாமிகள்

4. பொன்னம்பல சுவாமிகள்

2006-இல் பரிபூரணம் அது முதல் கோவிலூர் ஆதீனத்தின் நேரடிப்பார்வையில் இருந்து வருகிறது.  இப்பொழுது மடத்தை மராமத்துச் செய்து, புதிய அறைகள் கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன் முதன்மைச் சாலைப்பக்கம் உள்ள இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடவும் வடபுறத்தில் ஒரு பாலர் பள்ளி (மான்டிசோரிமுறையில்) தொடங்கவும் கட்டிடங்கட்குத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன.  விரைவில் கட்டிடப் பணி தொடங்கப் பெறும்.
***************************************************************************************

திருப்பூவணம்  காசிகாநந்த சுவாமி மடம்

மானாமதுரை--மதுரைச் சாலையில் மதுரைக்கு அருகில் வைகைக் கரையில் அமைந்துள்ள திருப்பூவணம்  பாடல் பெற்ற சிவத்தலம்.  முக்தித் தலங்களுள் ஒன்று.

இங்கே கோவிலூர் மடாலயத்தின் ஐந்தாவது மடாதிபதியான ஶ்ரீமத் வீரசேகர ஞானதேசிகர்ரின் சீடரான ஶ்ரீமத் காசிகாநந்த சுவாமிகள் வேதாந்தம் கற்பிக்கவும் பயிலவும் வசதியாகத் திருமடம் ஒன்று 1930-இல் அமைத்தார்கள்.  இவர்கள், தமிழ் வடமொழி, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வல்லுனர்.  காசி முதலிய பல நகரங்களில் ஒன்பது ஆண்டுகள் தங்கி பற்பல சசத்திர நூல்களையும் உபநிஷத்துக்களையும் கற்றுத் தேர்ந்தவர்.  நூற்றுக்கும்மேலான வெதாந்த நூல்களையும் உரை நூல்களையும் எழுதியவர்.

இவர்கள் தம் காலம் வரையிலும் வேதாந்த சாத்திரங்களை நூற்றுக்கணக்கானவர்கட்கும்  கற்பித்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியும் வந்தார்கள்.

இம்மடம் தற்போது கோவிலூர் மடத்தின் நேரடிப் பார்வையில் உள்ளது.

காளையார் கோவில் செல்லப்பசுவாமி வேதாந்த மடம்

செந்தமிழ் நாட்டிலே சங்க காலம் முதற்கொண்டு சிறப்புற்று விளங்கும் சிவத் தலங்களில் காளையார் கோயிலும் உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலம்.  பாண்டிய மன்னர்கள் வேங்கையார்ப்பன், உக்கிரப் பெருவழுதி ஆகியவர்களாலே ஆட்சி செய்யப் பெற்று வரலாற்றில் இடம் கொண்ட தலம். அண்மைக்காலங்களில் மருது சகோதரர்களின் வரலாற்றாலும் புகழ் பெற்ற இடம்.

இத்தலத்தில் கோவிலூர் மடாலயத்தின் நான்காவது மடாதிபதியான ஶ்ரீலஶ்ரீ இராமசாமி ஞான தேசிகரின் சீடரும் பின்னர் மதுரை குட்டைய சுவாமிகள் மடத்தின் மடாதிபதியாகப் பொறுப்பேற்று இருந்தவரும் ஆன ஶ்ரீமத் செல்லப்ப சுவாமி அவர்கள் பற்பல நகரத்தார்களின் வேண்டுகோளின்படி ஒரு திருமடம் நிறுவினார்கள்.

காளையார் கோவிலில், யானை மடு என்னும் திருக்குளத்தின் தென்புறம் அழகிய தோற்றப் பொலிவுடன் கூடிய அளவிலும் பெரிய திருமடம் அமைத்து வேதாந்தப் பாடம் கற்பித்து வந்தார்கள்.  இவர்கள் குறிப்பாக வேதாந்த சூடாமணி நூலை வெகு தெளிவாகப் பாடம் சொல்வார்களாம்.

அந்நூல் கற்பிக்கும் காலத்தே எல்லா நூல்களின்  சாரத்தையும் பிழிந்து தந்து விடுவார்களாம்.

இவர்கட்கு சீடர்கள் மிக அதிகம்.  அதில் பலர் பின்னர் பல இடங்களில் கோவிலூர் மரபு வேதாந்தப் பாடம் கற்பித்தும் மடங்கள் தோற்றுவித்தும் உள்ளனர்.

இவர்கட்குப் பின்னர்

உலகம்பட்டி இலக்குமண சுவாமிகள்

நாட்டரசன் கோட்டை (சிக்கல்) மெய்யப்ப சுவாமிகள்

முத்தையா ஞான தேசிக சுவாமிகள்

ஜமீந்தார் அருணாசல சுவாமிகள்

தேனிப்பட்டி அருணாசல சுவாமிகள்

அரு.இராமநாத சுவாமிகள்

அரு. இராமநாத சுவாமிகள் கோவிலூரில் பத்தாவது மடாதிபதியாக இருந்தவர்கள்.  இவர்கள் காலத்தில் காளையார் கோவில் மடமும் கோவிலூர் மடத்தின் நேரடிப் பார்வையில் இருந்தது.

இவர்கட்குப் பின்னர்

சிவாநந்த சுவாமிகளும், நாராயண சுவாமிகளும் நிர்வாகம் செய்து வந்தனர்.  2003-இல் நாராயண சுவாமிகள் பரிபூரணம் எய்திய பின்னர், திரும்பவும் கோவிலூர் மடாதிபதிகள் மேற்பார்வையில் உள்ளது.

**************************************************************************************

பிரம்மானந்த சுவாமிகள் மடம், மதுரை

கோவிலூர் ஆண்டவரின் மாணாக்கரான அரசப்ப சுவாமிகளின் சமாதி ஆலயம் மதுரையில் தெற்கு வெளிவீதி 164--ஆம் எண் உள்ள கட்டிடத்துக்குத் தென்பால் இருக்கிறது.  அரசப்ப சுவாமிகளுடைய மாணாக்கரான பிரம்மானந்த சுவாமிகள் கி.பி. 1850 அளவில் மதுரை தெற்கு வாசலுக்கு அப்பால் அருப்புக் கோட்டைச் சாலையில் ரயில்பாதை அருகே ஒரு மடாலயத்தை நிறுவினார்கள்.

பிரம்ம நாமாவளி சுலோகம், பஞ்சதசி பதவுரை, பிரம்மானந்த அநுசந்தான யுக்தி ரத்நாகரம் முதலிய நூல்களை பிரம்மானந்த சுவாமிகள் ஆக்கியுள்ளார்கள்.

இந்த மடாலயத்தில் அதிபர்களாக இருந்தவர்கள்.

1. பிரம்மானந்த சுவாமிகள்

2. பாலானந்த சுவாமிகள்

3. சுந்த பிரம்மானந்த சுவாமிகள்

4. சங்கரானந்த சுவாமிகள்

5. அத்வைதாநந்த சுவாமிகள்

6. சோமசுந்தர சுவாமிகள்

7. சின்மயானந்த சுவாமிகள்

1977-- ஜூன் திங்களில் சின்மயானந்த சுவாமிகள் பரிபூரணம் அடைந்த பிறகு காசி வாசி ஶ்ரீ சுவாமி யோகானந்த கிரி சுவாமிகள் இந்த மடாலயத்தில் தலைமையேற்றுப் பட்டத்தில் இருந்து வருகிறார்கள்.  இவர்கள் பல்லாண்டுகள் காசியில் ஶ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்திலே தங்கி சமய சாத்திரங்களையும் வடமொழியையும் முறையாகப் பயின்றிருக்கிறார்கள்.

இப்போது சத்சங்கம் நடத்தியும் வேதாந்த பாடங்களைக் கற்பித்தும் வருகிறார்கள்.  புது மாகாளிப்பட்டிச் சாலையில் சங்கர ஆசிரமம் நிறுவி அதில் ஆதி சங்கரருடைய வெண் பளிங்குப் படிமத்தை நிலை நாட்டியுள்ளார்கள்.

--Geetha Sambasivam (பேச்சு) 12:43, 4 ஜூலை 2014 (GMT)


Contributors

Geetha Sambasivam

This page was last modified on 4 July 2014, at 12:43. This page has been accessed 1,601 times.