வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 27

From மரபு விக்கி

Jump to: navigation, search
ஶ்ரீமத் குட்டையசுவாமிகள் மடாலயம்

டாக்டர் சுப.அண்ணாமலை, முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை

கோவிலூர் ஆதீனத்தோடு தொடர்புடையதாய் மதுரை மாநகரில் அமைந்தது ஶ்ரீமத் குட்டைய சுவாமிகள் மடாலயம் ஆகும்.  இதன் தோற்றமும் சிறப்பும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மதுரையம்பதியில் தெற்கு வீதியின் தென்பால் 164 ஆம் கதவு இலக்கம் கொண்டு அமைந்துள்ளது ஶ்ரீமத் குட்டைய சுவாமிகள் திருமடம்.  இதனை நிறுவியர் பெயரே இதற்கு அமைந்தது.  ஶ்ரீமத் குட்டைய சுவாமிகள் கி.பி. 1847 ஆம் ஆண்டு அளவில் இத்திருமடத்தை நிறுவினர்.  25 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்து மதுரை அருள்மிகு மீனாக்ஷி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல திருப்பணிகள் எய்து 1972 ஆம் ஆண்டு பரிபூரணம் அடைந்தனர்.  பின்னர் ஶ்ரீ சின்னையா சுவாமிகள், ஶ்ரீ கண்ணப்ப சுவாமிகள், ஶ்ரீ செல்லப்ப சுவாமிகள், ஶ்ரீ சிவானந்த சுவாமிகள், ஶ்ரீ சிதம்பர சுவாமிகள், ஶ்ரீ அருணாசல சுவாமிகள் ஆகிய பெரியோர்கள் முறையே மடாதிபதிகளாக வீற்றிருந்து பரிபூரணம் அடைந்தனர்.  இப்பொழுது ஶ்ரீ அரு.இராமநாத சுவாமிகள் தலைவராக வீற்றிருந்து வருகின்றார்கள்.

ஶ்ரீ குட்டைய சுவாமிகள் கோவிலூர் மடாலயத்தில் ஶ்ரீ முத்திராமலிங்க தேசிக சுவாமிகள் சீடராக விளங்கியவர். அவர் பூர்வாசிரமத்தில் தேவகோட்டையில் நகரத்தார் குலத்தில் நகர்க்கோவில் ஒன்பதனுள் ஒன்றாகிய இலுப்பைக்குடிக் கோயிலைச்  சேர்ந்த 'ஐந்து வீட்டார்' என்னும் குடும்பத்தில், முத்துராமன் செட்டியார் என்பவரின் நான்காவது மைந்தராகப் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.  அவருடைய பூர்வாசிரமப் பெயர் ஆதப்பன் என்பது.  அவர் இளமையில் கற்பன கற்று, இறைவனை அறியும் ஞான வேட்கை உடையவராய்க் கோவிலூருக்குச் சென்று, அங்கு வேதாந்த மடாலயம் நிறுவி அருள் ஆட்சி செலுத்தி வந்த முத்திராமலிங்க தேசிக ஆண்டவரின் திருவடிகளைப் பணிந்து அவரால் துறவும் பிரம்மோபதேசமும் அளிக்கப் பெற்றுச் சீடராயினர்.  அங்கேயே குரு பணியும் இறை பணியும் ஞானவேள்வியும் இயற்றிக் கொண்டு இருந்தார்.

அநாட்களில் ஒருநாள், கோவிலூர் ஆண்டவரைத் தரிசிக்க வந்த வேம்பத்தூர்ப் புலவர்கள், 'சிவரகசியம்' என்ற நூலில் கூறியவாறு 25 மூர்த்தம் வைப்பது சிறந்த சிவப்பணி என்று கூறினர்.  அதைக் கேட்டருளிய ஆண்டவர், அச்சிவப் பணியை மதுரையம்பதியில் செய்ய வேண்டும் என்று திருவுள்ளத்து அனைத்துப் புலவர்களிடம், "இது என்ன பிரமாதம்? நமது குட்டையனை அனுப்பினாலும் செய்துவிடுவான்." என்று கூறித் தம் சீடர் ஶ்ரீ குட்டைய சுவாமியை அழைத்து அதனைப் பணிக்க, அவரும் தம் ஞானாசிரியரின் பணியைத் தலைமேற்கொண்டு, மதுரையம்பதிக்குப் புறப்பட்டார்.

மதுரையில் தெற்கு வெளி வீதியில் திருமடம் நிறுவினார்.  அங்கு தலைவராக வீற்றிருந்து, ஞான வேட்கையுடன் தம்மை வந்தடையும் சீடருக்குப் பிரம்மோபதேசம் செய்த வண்ணம் மதுரைத் திருக்கோவில் திருப்பணியை மேற்கொண்டார்.  ஶ்ரீ சொக்கலிங்கப் பெருமானே தம்மைத் திருப்பணி செய்ய அருளாணையிட்டு அழைத்ததாக உணர்ந்து, மிக்க ஆர்வத்துடன் சிறப்பாகத் திருப்பணியைத் தொடங்கி நந்தி மண்டபத்தில் விசித்திரக் கால் விசேடச் சித்திர வேலை, அம்மை, அப்பர் மூலஸ்தான விமானங்கட்குப் பொன் தகடு வேய்தல், கொடி மரத்திற்குப் பொற்கவசம் அமைத்தல், சுவாமி கோயில் இரண்டாம் பிராகாரத்தில் கல் தள வரிசை அமைத்தல், ஆடி வீதி முன்புறம் கல் தள வரிசை அமைத்தல் முதலிய திருப்பணிகளைச் செய்தனர்.  சுவாமி சந்நிதியில் கொடிமரத்தைச் சூழச் சிற்பக் கலை எழிலுடன் அமைந்துள்ள மண்டபமே நந்தி மண்டபம். இது நகரத்தார் செய்த திருப்பணியில் அமைந்ததாகும். இதற்குத் தூண்டுகோலாக இருந்து, நகரத்தார்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்து, இம்மண்டபத்தை உருவாக்கியவர் ஶ்ரீ குட்டைய சுவாமிகளே ஆவர். இப்பொழுது இம்மண்டபத்தைக் கம்பத்தடி மண்டபம் என்று அழைப்பர்.  இந்த இடத்தில் முன்பு கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் நான்கு தூண்கள் கட்டிய அளவில் துவாரபாலருடன் கூடியதாக மட்டுமே இருந்தது.  1877 ஆம் ஆண்டு நகரத்தார்கள் பொருள் உதவி செய்து, எட்டுத் தூண்கள் புதியனவாகச் சிற்பக் கலையெழில் பொங்க அமைத்து, அவற்றின் மேல் கருங்கல் விதானம் அமைத்து இடைவெளியை நிரப்பி மண்டபம் உருவாக்கினர்.  இதற்குக் காரணபுருடராக விளங்கியவர் ஶ்ரீ குட்டைய சுவாமிகளே ஆவர்.


இந்த மண்டபத்தில் 25 மூர்த்திகள் உள்ளன.  அவையாவன:

1. கயிலாசரூடர்

2. சந்திரசேகரர்

3. இடபாந்திகர்

4. இலிங்கோத்பவர்

5. காமதகனர்

6. நடராசர்

7. சுகாசனர்

8. காலசம்மாரர்

9. மார்க்கண்டேயர்

10.சோமசுந்தரர்

11.கலியாண சுந்தரர்

12.திரிபுராந்தர்

13.சங்கர நாராயணர்

14.அர்த்த நாரீசுவரர்

15.இடபாரூடர்

16.ஏகபாத மூர்த்தி

17.சக்ரதாரர்

18.சலந்தரானுகிரஹர்

19.தக்ஷிணாமூர்த்தி

20.கஜசம்ஹாரர்

21.சண்டேசானுகிரஹர்

22.சோமசுந்தரர்

23.கிராதார்சுனர்

24.உருத்திரர்

25.பிக்ஷாடனர்

ஶ்ரீ சுவாமிகள் மதுரைக் கோயிலில் திருப்பணிகளை முடித்து, கும்பாபிடேகம் செய்து வைத்தருளுமாறு கோவிலூர் மடாலயத்தில் அப்பொழுது தலைவராக விளங்கிய ஶ்ரீ கருணாநிதி சுவாமிகளை வேண்டிக் கொண்டனர்.  அவர்கள் ரெங்கூனுக்குத் தந்தி அனுப்பி, பர்மாவெங்கும் இருந்த நகரத்தார் பெருமக்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு மாத ஊதியம் நன்கொடையாகத் தருமாறு குறிப்பித்து அவ்வண்ணமே பெற்றுத் தாமே முன் நின்று மதுரைத் திருக்கோயில் கும்பாபிடேகத்தை நிறைவேற்றியருளினர்.  ஶ்ரீ குட்டைய சுவாமிகள் இத்திருப்பணிகளை முற்றுவித்ததோடு, ஶ்ரீ சொக்கலிங்கப் பெருமான் அஷ்டமிப் பிரதக்ஷிணத்தில் தெற்கு வெளி வீதிக்கு எழுந்தருளுவதற்கு என வெள்ளி இடப வாகனம் செய்வித்துத் திருக்கோயிலுக்கு அளித்தனர்.  சுவாமிகள் இத்திருப்பணியில் பல லக்ஷம் ரூபாய்களை ஈடுபடுத்தினார்.

மதுரைத் திருக்கோயிலில் மேலும் எஞ்சிய திருப்பணிகளைச் செய்யுமாறு சுவாமிகள், அமராவதிப் புதூர் வயிநாகரம் குடும்பத்தினரை வேண்டிக் கொண்டனர். அவர்கள் திருக்கலியாண மண்டபம், ஆடிவீதிக் கல் தள் வரிசை, வடக்குக் கோபுர நிறைவு முதலிய திருப்பணிகளை மிகவும் சிறப்பாக அந்நாளில் 25 லக்ஷம் ரூபாய் செலவில் செய்து அமைத்தனர்.

ஶ்ரீ குட்டைய சுவாமிகள் வேதாந்த நூல்களில் விற்பன்னர் ஆவார்.  அவர் மதுரைத் திருமடத்தில் வீற்றிருந்தபோது பிரம்மவித்தாய், பல முமூட்சுக்களுக்குப் பிரம்ம வித்தையை உபதேசித்துக் கொண்டு அருளாட்சி செய்தனர்.  அவரது ஆட்சிக்காலம் காலயுக்தி வருடம், கி.பி.1847 முதல் ஆங்கிரச வருடம், கி.பி. 1872 வரை ஆகும்.  சுவாமிகள் ஆங்கிரச ஆவணி 5 ஆம் நாள் திங்கட்கிழமை, கிருஷ்ண பக்ஷம், பிரதமை திதி, சதய நக்ஷத்திரத்தில் விதேக கைவல்லியமாகிய பிரம்மப் பிராப்தி அடைந்தார்.

நாயக்க மன்னர்களின் வழித்தோன்றலான அன்பர் ஒருவர், சுவாமிகளின் சமாதியினை அமைக்கத் தம் தோட்டத்தை வழங்கினார்.

ஶ்ரீ குட்டைய சுவாமிகள் திருமடத்தின் மூன்றாவது தலைவர் ஶ்ரீ கண்ணப்ப சுவாமிகள், 16 ஆண்டுகள் பட்டத்தில் வீற்றிருந்து, ஒரு லக்ஷ ரூபாய் செலவு செய்து திருமடத்தையும் ஶ்ரீ குட்டைய சுவாமிகளின் சமாதிக் கோயிலையும் கல் திருப்பணியாக அமைத்தனர்.  திருமடத்தில் துறவிகளுக்கு உணவிற்காக குருந்தனி, சம்பக்குளம் என்ற இரு சிற்றூர்களில் உள்ள நிலங்களை விலைக்கு வாங்கினர்.

ஶ்ரீ மீனாக்ஷி அம்மைக்கு நாள் தோறும் நிகழும் அர்த்தசாமக் கட்டளையில் மூக்குத்தி மாலை ஶ்ரீ குட்டைய சுவாமிகள் மடாலயத்திலிருந்து அனுப்பி அணிவிக்கப்படுகிறது.

ஶ்ரீ அருணாசல சுவாமிகள் 11--12--1970 இல் பரிபூரணம் அடைந்த பின் இப்போழுது ஶ்ரீ அரு. இராமநாத சுவாமிகள் அதிபதியாக இருந்து திருமடத்தைப் பரிபாலித்து வருகின்றார்கள்.

பதிப்பாசிரியர் குறிப்பு:

மதுரைக் கோயிலில் பார்ப்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் சிற்பங்கள் நிறைந்த பகுதி கட்டுரையில் குறிக்கப் பெற்றிருக்கும் கம்பத்தடி மண்டபமே.

கோவிலூர் ஆதீனகர்த்தர் விரும்பிய வண்ணம் உருவான இந்தக் கலைக்கூடம் சுவாமி சந்நிதியில் இரண்டாம் சுற்றில் உள்ளது.  நந்தி மண்டபம், பலிபீடம் (பிற்காலத்தில் தங்கத் தகடு போர்த்தப்பட்ட) கொடி மண்டபம் ஆகியவற்றை 1494 இல் கிருஷ்ண வீரப்ப நாயக்கர் என்ற மதுரை மன்னர் அமைத்தார்.  இவற்றை நகரத்தார் பிரித்து, திருத்தியமைத்து, இவற்றைச் சுற்றி, உயரமான எட்டுக் கருங்கல் தூண்களை நிறுத்தி அவற்றில் சிவபெருமானின் பல்வகைத் தோற்றங்களைக் கவினுறு சிற்பங்களாக வடித்தனர்.  

மீனாக்ஷியம்மன் திருமணக் கோலத்தைச் சித்தரிக்கும் சிற்பமாக இப்போழுது எங்கும் புகழுடன் பரவியுள்ள காட்சி, இங்கே தான் அமைந்துள்ளது.  அதில் மணமகன் கோலத்தில் நிற்கும் சிவபெருமானின் எடுப்பான தோற்றமும் மணமகள் கோலத்தில் நிற்கும் அங்கயற்கண்ணியின் நாணமும் புன்சிரிப்பும் இயல்பான ஆண், பெண் மனநிலைகளைக் காட்டுவதோடு மண நாளில் இவ்வாறு இருப்பீர் என்று வருங்கால மண மக்களுக்குக் கற்பிக்கும் ஒளிக்காட்சிப் பாடமாகவும் உள்ளன.

ஒவ்வொரு தூணிலும் நாற்புறங்களிலும் சிற்பங்கள் வடிக்கப் பெற்றுள்ளன.  திருமணக் காட்சி தரும் தூணில் சோமசுந்தரரைக் காணுகிறோம்; தாரகாட்சன், கமலாட்சன் வித்யுன்மாலி, என்னும் முப்புர அசுரர்களையும் சிவபெருமான் எரித்தார் என்பதை நினைவூட்டும் சித்திரத்தையும் காணுகிறோம்.

வலப்புறமாக வந்தால் இரண்டாவது தூணில் மார்க்கண்டேயனுக்காகக் காலனைக் கொல்லும் காட்சியே வெளிப்புறத்திலும் சுக ஆசனர் திருவுருவத்தை உட்புறத்திலும் காணலாம்.

அடுத்த தூணில் நடராசரும் காமதகனரும் உள்ளனர்.  நான்காவது தூணில் சந்திரசேகரர், காளை வாகனத்தில் சிவபெருமான், மாலடி காணாச் சிவபெருமான் இராவணன் கயிலையைத் தூக்கும் காட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இனி, வட வரிசையில் உள்ள தூண்களைக் காணலாம்.  சந்நிதிக்கு அருகேயுள்ள தூணில் சங்கர நாராயணர், அர்த்த நாரீசுவரர், ரிஷபாரூடர், ஏகபாத மூர்த்தி, சக்ரதரர் முதலிய மூர்த்திகளின் வடிவங்கள் உள்ளன.

அடுத்த தூணில் வெளிப்புறத்தில் சலந்திர அனுக்கிரஹரும் உட்புறத்தில் தட்சிணாமூர்த்தியும் உள்ளனர்.

அடுத்த தூணில் வெளிப்புறத்தில் யானைத் தோல் போர்த்திய சிவபெருமானும் (கஜ சம்ஹாரர்) உட்புறத்தில் சண்டேசுவரர்க்கு மாலையிடும் சிவபெருமானும் சித்திரிக்கப் பெற்றுள்ளனர். 

எட்டாவது தூணில் சோமாஸ்கந்தர், கிராத அர்ச்சுனர், உருத்திரர், பிட்சாடனர் முதலிய மூர்த்திகளின் கோலங்கள் இருக்கின்றன. இதன் அடியில் நவக்கிரகச் சிற்பங்கள் உள்ளன.  திருமாலின் பத்து அவதாரக் காட்சிகள் தூண்களின் உட்புறங்களில் அமைக்கப் பெற்றுள்ளன.

சிவபெருமானுக்கு உரிய பல மூர்த்தங்கள் இந்த எட்டுத் தூண்களிலும் அழகாக வடிக்கப்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு மூர்த்தமும் ஒரு கதையைச் சொல்லுகிறது.  மேலும் இம்மண்டபத்தில் பிட்டுக்கு மண் சுமத்தல், நாரைக்கு முத்தி கொடுத்தல் போன்ற திருவிளையாடல் நிகழ்ச்சிகளும் காட்டப்பெற்றுள.  ஒரு தூணில் யானையின் தலையும் பெண்ணின் உடலும், புலியின் காலும் கொண்ட சிற்பம் உள்ளது.  இம்மண்டபத்தின்  கலை நயங்களைக் கண்டின்புறக் கண்கள் பல வேண்டும்.

இவ்வளவு நுண்ணிய சிற்பங்களைப் படைத்தவர்களால் ஹளேபேடு, பேலூர், கொனாரக் போன்று விரசமான காட்சிகளையும் வடித்திருக்க இயலும். ஆனால் இம்மண்டபம் கோவிலூர்த் துறவிகளின் மேற்பார்வையில் அவர்கள் ஆணையின்படி அமைக்கப் பெற்றது அல்லவா?

குட்டைய சுவாமிகள் மடத்தின் மடாதிபதிகள்

1.ஶ்ரீலஶ்ரீ குட்டைய சுவாமிகள்

2. ஶ்ரீலஶ்ரீ சின்னைய ஞான தேசிக சுவாமிகள்

3. ஶ்ரீலஶ்ரீ கண்ணப்ப ஞான தேசிக சுவாமிகள்

4. ஶ்ரீலஶ்ரீ செல்லப்ப ஞான தேசிக சுவாமிகள்

5. ஶ்ரீலஶ்ரீ சிவானந்த ஞான தேசிக சுவாமிகள்

இதன் பின்னர் இம்மடத்தை இதன் கிளை மடமான காளையார் கோவில் மடத்தில் இருந்து கொண்டு மடாதிபதிகள் நிர்வகித்து வந்துள்ளார்கள்.

தற்போது இம்மடம் கோவிலூர் மடாலயத்தின் நேரடிப் பார்வையில் உள்ளது.

இம்மடத்தைப் புதுப்பித்து வருவாய் அதிகரிக்கும் வகையில் விரிவாகக் கட்ட கோவிலூர் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ நாச்சியப்ப சுவாமிகள் அருள் ஆணை இட்டுள்ளார்கள்.



--Geetha Sambasivam (பேச்சு) 11:45, 30 ஏப்ரல் 2014 (GMT)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 30 April 2014, at 11:46. This page has been accessed 1,427 times.