வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 23

From மரபு விக்கி

Jump to: navigation, search
கோவிலூர் ஆதீனகர்த்தர்கள்

எந்நாட்டவர்க்கும் இறைவனாம் தென்னாடுடைய சிவபெருமான் அருள்மிகு உமையோடு அமர்ந்து அருள் காக்கும் ஆலயங்கள் ஆயிரமாயிரம் இருப்பினும் சிவபெருமான் தன் நாடு எனக் கொண்டது தென்பாண்டி நாடே!

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வீரசேகர பாண்டியன் ஈசனிடம் ஏற்பட்ட ஈடில்லா நேசத்தின் காரணமாக சிவனுக்கு ஸ்தலம் அமைக்க எண்ணி, "ராஜ கட்க பரமேசுவரர்" என்னும் கொற்றவாளீசுவரர் திருநெல்லையப்பன் சமேதராக காரைக்குடிக்கு மேற்கே கோவிலூரில் அமைத்தார்.

இத்திருத்தலம் கிழக்கே திருப்பெருந்துறையும் தெற்கே திருக்கானப்பேரும், மேற்கே திருப்பத்தூரும் வடக்கே திருமெய்யரும் ஆன பாடல் பெற்ற திருத்தலங்கள் சூழ அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க புராணப் பெருமையுடன் விளங்கும் இப்புனிதப்பதி, "ஶ்ரீவல்லபம்", "சமிவன க்ஷேத்திரம்", "வன்னிவனம்", என்னும் சிறப்புப் பெயர்களூடன் "கழனிவாயில்", "ரசத் பெருந்தெரு" "வீரபாண்டியபுரம்", "மருகேந்தீரபுரம்", என்னும் வேறு பெயர்களாலும் புகழ்ந்து பல ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது.  இவ்வூரில் மதுப்பிரிய முனிவர் என்னும் மகான் தவம் செய்த காரணத்தால் இவ்வூர்க்குளத்துக்கு மதுபுஷ்கரணி என்றும் இவ்வூரில் ஓடும் நதிக்குத் தேனாறு என்றும் வேறு பெயர்களும் உண்டு.  இத்தெய்வீகத் திருத்தலத்தை திரிசிரபுரம் ஶ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கோவிலூர்ப் புராணம் என தெள்ளு தமிழில் புகழ்ந்து தலபுராணம் பாடியுள்ளார்.

இன்றைக்கு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி நகரத்தார் வழியில் தோன்றிய முத்திராமலிங்கம் தன் பெற்றோருடன் நாகப்பட்டினம் அருகில் உள்ள சிக்கலில் வசித்து வந்தார்.  தன் தந்தையுடன் ஒருநாள் அருகிலுள்ள சிற்றூரான பொருள் வைத்த சேரிக்குச் சென்றார்.  அவ்வூரில் நெசவுத் தொழிலை ஜீவனத் தொழிலாகக்  கொண்டு ஶ்ரீ உகந்தலிங்க சுவாமிகள் திருவள்ளுவரைப்போல நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை மூன்று பங்குகளாகப் பிரித்து முதல் பகுதியை மறுநாள் நெய்வதற்கு நூல் வாங்கவும், இரண்டாம் பகுதியை வீட்டுச் செலவுக்கும், மூன்றாம் பகுதியை அடியார்களுக்கு அமுது அளிக்கவும் பயன்படுத்தி வந்தார்.  வேதாந்த நூல்களைக் கற்பித்துப் பலருக்கும் வேதாந்த ஞான உபதேசகராகவும் விளங்கினார்.  இவர் சிருங்கேரி மடத்தின் அருளாளர்களை குருஸ்தானமாகக் கொண்டு ஞான மார்க்கத்தை உபதேசித்து வந்தார்.

முத்திராமலிங்கத்துக்கு ஶ்ரீ உகந்தலிங்க ஸ்வாமிகளிடம் அளவிடமுடியாத பக்தியும், பாசமும் ஏற்பட்டது.  அன்று முதல் அவரும் ஒரு மாணவராகப் பாடம் கேட்டு வந்தார். ஒரு சமயம் வடநாட்டு சாது இவரைச் சந்தித்தபொழுது இவரிடம் உள்ள தெய்வீக உள்ளுணர்வை உணர்ந்து "இவன் உலகத்துக்கே உபதேசிக்கப் பிறந்தவன்" என வாழ்த்தி அனுப்பினார்.  அன்று முதல் முத்திராமலிங்கத்தை எல்லோரும் "ஆண்டவர்" என அழைக்கத் தொடங்கினார்கள்.  வேதாந்த ஞான நூல்களான "நாநாஜீவ வாதக்கட்டளை", "கீதாசாரத் தாலாட்டு", "சசிவன்ன போதம்", "மஹாராஜத் துறவு", "அஞ்ஞைவதைப் பரணி", "வேதாந்த சூடாமணி" , "விவேக சூடாமணி," "பஞ்சதசி", "கைவல்ய நவநீதம்", "ஈசுவர கீதை", பகவத்கீதை", "ப்ரம்ம கீதை" "ஞான வாசிட்டம்", எனும் பதினாறு நூல்களாகும்.  இந்தப் பதினாறாவது நூலான ஞான வாசிட்டத்துடன் பாடம் பூர்த்தி செய்வது முறை.  வசிட்ட முனிவர் ஶ்ரீ ராமபிரானுக்கு உபதேசித்த வேத நூலின் சாரமே இப்பதினாறாவது நூலாகும்.

ஶ்ரீ ஆண்டவர் சுவாமிகள் தன் குருநாதரைப் போலவே சிருங்கேரி  ஆதிசங்கராச்சாரியாரின் மரபில் வந்த அருளாளர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி வந்தார்.  ஞான மார்க்கத்தில் ஈடுபட மனப்பக்குவத் தகுதி தேவை எனவும், வேதாந்தத்தில் பூர்ணத்துவம் பெற மதம், குலம், ஜாதி, சம்பிரதாயங்கள் தடையில்லை என்றும், பக்தியே முக்திக்கு வழி எனவும் உபதேசித்தார்.  கோவிலூரில் வேதாந்த பாடத்தை நிறுவியர் ஶ்ரீ ஆண்டவர் சுவாமிகளேயாகும்.  வேதாந்த வடமொழி நூல்கள் அனைத்தையும் எல்லோரும் எளிதாகப் படித்துப் பக்குவம் பெறத் தமிழிலேயே மொழி மாற்றம் செய்து எளிய தமிழில் பாடங்களைச் சொல்லும் முறையையும் ஏற்படுத்தினார்.  வேதாந்த மடங்களை நிறுவி சாதுக்கள் எவ்வித விசாரமுமின்றி வேதாந்த பாடம் கற்க ஏற்பாடு செய்தார்.

ஒரு சமயம் ஶ்ரீ ஆண்டவர் சுவாமிகள் திருநெல்லை அம்மன் சமேத கொற்றவாளீசுவரர் கோவிலுக்குத் தரிசனம் செய்யச் சென்றார்.  அங்கு செம்பூரான் கல்லினால் கட்டப்பட்ட அக்கோவில் சுவர்கள் சேதமடைந்து மேல் கீற்றுக் கூரையும் காற்றினால் சரிந்து கிடந்ததைக் கண்ணுற்றார்.  மிகவும் மனம் கலங்கிய நிலையில் எவ்வாறேனும் இவ்வாலயத்தைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ய முடிவு செய்தார்.  ஶ்ரீமத் ஆண்டவனின் எண்ணம் நிறைவேற நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தாராளமாகப்பொருள் உதவி செய்தனர்.  ஶ்ரீமத் ஆண்டவரின் திருக்கரத்தால் வரையப் பெற்று அடிகோலப் பெற்றதான இத்திருக்கோவில் அடுத்து வந்த ஶ்ரீலஶ்ரீ சிதம்பர ஞான தேசிகராலும், திருக்களர் ஆண்டவர் என போற்றப்படும் ஶ்ரீலஶ்ரீ வீரசேகர ஞான தேசிகராலும், ஶ்ரீலஶ்ரீ இராமநாத ஞான தேசிகராலும் திருப்பணி செய்யப்பட்டு, குடநீராட்டு விழா நடத்தி, சீரும் சிறப்பும், வனப்பும் மிக்க ஒப்புயர்வு பெற்ற பெரும் திருக்கோவிலாக எல்லா அங்க அமைப்புகளுடன் நிறை செய்து, சுற்றுவீதிகள், திருக்குளம், மையமண்டபம் நுழைவாயில், ரதக் கூடங்கள், வளைவுடன் கூடிய ரதமேருகள் அனைத்தையும் நிறுவிப் புதுப்பித்து, வேத பாடசாலை, குடியிருப்புகள் ஆகிய நற்பணிகளையும் நகரத்தார் பலரும் பொருள் உதவி செய்யச் செவ்வனே செய்து முடித்தார்கள்.  அரசர்கள் காலத்து கோவில் திருப்பணிகளுக்குப் பின்பு முதல் முதலாகக் கோவில் திருப்பணி செய்தவர் ஆண்டவரே. நாட்டுக்கோட்டை நகரத்தார்களைக் கோவில் திருப்பணியில் முழுமையாக ஈடுபடச் செய்த பெருமை ஶ்ரீமத் ஆண்டவர் சுவாமிகளையே சாரும்.  கோவிலூர் மடத்தில் ஶ்ரீ குட்டைய சுவாமிகள் ஶ்ரீ ஆண்டவரின் சிஷ்யராக விளங்கினார்.  அவர் தேவகோட்டை நகரத்தார் வழியில் ஐந்து வீட்டார் என்னும் குடும்பத்தில் பிறந்தவர்.  ஶ்ரீ ஆண்டவர் இவரை சிவரகசியம் என்னும் நூலில் 25 மூர்த்தம் வைப்பது சிவப்பணி எனக் கூறி மதுரைக்கு அனுப்பி வைத்தார்.  அதை ஶ்ரீ குட்டைய சுவாமிகள் சிறப்பாக நிறைவேற்றி வைத்தார்கள்.

இவர் ஶ்ரீ மீனாட்சி அம்மனுக்கு நாள் தோறும் நிகழும் அர்த்தசாமக் கட்டளையில் மூக்குத்தி மாலை அனுப்பிக் கட்டளை நிறைவேற்றி வைப்பது வழக்கம்.  இவ்வழக்கு இன்றும் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது மடாதிபதியாக தேவகோட்டை ஶ்ரீலஶ்ரீ அருணாசல ஞான தேசிகர் பரிபாலனம் செய்தார்கள்.  மடத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வந்த அவர் ஒன்றரை ஆண்டு காலத்துக்குப் பின் தன் உடன்பிறந்த தம்பி கருணாநிதி என வழங்கும் ஶ்ரீலஶ்ரீ சிதம்பர ஞான தேசிகரிடம் ஒபடைத்தார்.  இவர் ஶ்ரீமத் ஆண்டவர் விட்டுச் சென்ற ஆன்மிகப் பணிகளைத் திறம்படச் செய்து சிதம்பரம்--ஈஸ்வரன் கோவில், மதுரையில் சொக்கநாதர் மீனாட்சி அம்மனின் கும்பாபிஷேஹம், கோவிலூரில் திருக்குளமும், மையமண்டபமும் அமைத்தார்கள்.  லட்சணாவிருத்தி, பிரும்ம நாமாவளி, குரு ஸ்துதி குசுமாஞ்சலி, என்ற நூல்களையும் வெளியிட்டார்கள்.  மடத்துக்கு விளை நிலங்கள், தென்னை தோப்புகள் வாங்கி விஸ்தரித்தார்.  இவரிடம் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் வேதாந்த பாடம் பயின்றார்கள்.  96 ஊர் நகரத்தார்களின் கூட்டம் நடைபெறப் பெரும் கல்யாண மண்டபத்தைக் கோவிலூரில் நிறுவினார்கள்.

இவருக்குப் பின் நான்காவது மடாதிபதியாகக் காரைக்குடி ஶ்ரீலஶ்ரீ ராமசாமி ஞானதேசிகர் பட்டத்துக்கு வந்தார்.  சுமார் ஏழு ஆண்டுகள் இவர் அருளாட்சி செய்தார்.  கோவிலூரில் ஶ்ரீ ஆண்டவர் கோவிலைச் சுற்றி மதில் சுவர் கட்டி, அஷ்டலட்சுமி மண்டபமும் மடத்துக்கு உணவு படைக்கும் கூடமும் கட்டினார்கள். 

ஐந்தாவது மடாதிபதியான திருக்களர் ஆண்டவர் எனப் பெயர் பெற்ற ஶ்ரீலஶ்ரீ வீரசேகர ஞான தேசிகர் அவர்கள் தஞ்சை ஜில்லா மன்னார்குடியை அடுத்துத் திருக்களரில் அமிர்தவல்லி சமேத பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவிலையும், வேதாந்த மடம், பிரும்ம சபை, நெற்களஞ்சியம், மலர்மிகு நந்தவனம், பசுமடம் ஆகிய திருப்பணிகளைச் செய்தார்.

1908-ஆம் ஆண்டு சிருங்கேரி மடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஶ்ரீ சச்சிதானந்த சிவ அபிநய நரசிம்ம பாரதி முன்னிலையில் திருநெல்லை அம்மன் சமேத கொற்றவாளீசுவரர் குட நீராட்டு விழாவைச் சிறப்பாகச் செய்தார்கள்.  சிருங்கேரியில் சாரதாம்பாள் கோவிலையும் கருங்கற்களால் நிர்மாணித்து இத்திருப்பணிச் செலவும் முழுவதும் கோவிலூர் மடத்தின் மூலமாகவே செலவு செய்தார்கள்.  இன்றும் சாரதாம்பாள் கோவிலும் திருநெல்லையம்மன் ஆலயமும் ஒரே மாதிரித் தோற்ற அமைப்பில் உள்ளதைக் காணலாம்.  திருக்களரில் பஞ்ச மூர்த்திகளுக்கு ஐந்து தேர்கள் செய்து வைத்தார்கள். இவருக்கு ராஜரிஷி என்ற பட்டமும் உண்டு.  சிருங்கேரி பீடத்திற்கும் கோவிலூர் மடத்துக்கும் இவர் காலத்தில் மிக்க நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.


திருநெல்லையம்மன் சந்நிதியில் எதிரே உள்ள மஹாமண்டபம், சிற்ப விசித்திர வேலைப்பாடுகளுடன் கூடியது.  ஒரே கல்லினால் செய்த தூண்களில் அதிசயிக்கும்படியான சிற்ப வடிவமைப்புக்களைக் காணலாம்.  ஒரு தூணில் ஶ்ரீ சாரதாதேவி அலங்கார பூஷிதையாக தரிசனம் தர, மற்றொன்றில் ஊர்த்துவ தாண்டவராஜாவின் பாதங்களுக்கு அருகில் காரைக்காலம்மையார், வேறு தூணில் குடமுழா வாசித்துக் கொண்டு கரம் குவித்த நிலையில் பிரம்மா, மீனாட்சி கல்யாணச் சிற்பம், எல்லாவற்றையும் ஶ்ரீமத் ஆண்டவன் அம்பாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து சரணாகதி தத்துவத்தை விளக்கி, ஞானத்தை விட பக்தியே சிறந்தது பக்தி செய்தாலே முக்தி என்னும் பிறவிப் பயனை அடையலாம் என்ற தத்துவத்தை இச்சிற்பம் வலியுறுத்துகிறது.

நான்காவது பட்டம் வரை மடாதிபதிகள் முழங்கால் வரை வெண்மையான வஸ்திரமும், கழுத்தில் வெண்மையான ரிப்பன் போன்ற துணியில் உத்திராட்சம் அணியும் வழக்கம் இருந்து வந்தது.  ஐந்தாவது மடாதிபதியான ஶ்ரீ திருக்களர் ஆண்டவர் சிருங்கேரி குரு பீடத்தின் முறையைப் பின்பற்றிக் காவி உடையையே அணியலானார்.   இன்று வரை அப்பழக்கம் கோவிலூர் மடாதிபதிகளால் அனுசரித்து வரப்படுகிறது.  இவரிடம் உள்ள வாக்கு பலித்ததால் எல்லோரும் இவரை மிகவும் போற்றி மதித்தனர்.  கோவிலூர் மடம் மேலும் விஸ்தரிக்கப்பட்டு திருவண்ணாமலை, பொருள் வைத்த சேரி, திருக்களர், சிதம்பரம், திருப்புவனம் ஆகிய ஊர்களிலும், கிளை மடங்களாக வளவனூர், மேட்டுப்பாளையம், எறும்பூர், தத்துவராய சுவாமிகள் மடம், காரியனூர், மதுரை போன்ற ஊர்களிலும் பரவியது.

இவர் அருளாட்சி செய்த காலத்தைப் பொற்கால ஆட்சி என மக்களால் புகழப்படுகிறது.  கல்கி பத்திரிகையில் காஞ்சி பரமாச்சாரியார் இவரை துர்வாச முனிவரின் மறு அவதாரம் எனப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.

அதன் பின் ஆறாவது மடாதிபதியாக தேவகோட்டை ஶ்ரீலஶ்ரீ அண்ணாமலை ஞான தேசிகர் பட்டத்துக்கு வந்தவுடன் திருக்களர்  ஆண்டவர் விட்டுச் சென்ற தெய்வீகத் திருப்பணிகளை நிறைவு செய்தார்கள்.  சிருங்கேரியில் நரசிம்ம பாரதி சுவாமிகளின் சமாதிக்குக் கோயில் எழுப்பினார்.  இவர் காசியில் இருந்தபொழுது இருவருக்கும் நெருங்கிய ஆன்மிகத் தொடர்பு உண்டு. சிருங்கேரியில் ஶ்ரீ சாரதா தேவிக்குக் கும்பாபிஷேஹம் நடக்க ஏற்பாடு செய்தார்.  மைசூர் மஹாராஜா கிருட்டின இராஜேந்திரர் இவரைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று கெளரவித்துள்ளார்கள்.

ஏழாவது மடாதிபதியாக தேவகோட்டை ஶ்ரீலஶ்ரீ மகாதேவ ஞான தேசிகர் தன் குரு திருக்களர் ஆண்டவர் ஊரான திருக்களரில் மடாலயத்தையும் ஆண்டவர் சமாதிக் கோவிலையும் சிறப்பித்து இரண்டிலும் அமுதுபடி செலவும் நடத்தி வந்தார்கள்.  விளை நிலங்கள் சுமார் நானூறு ஏக்கருக்கும் மேல் இவர் காலத்தில் வாங்கப் பெற்றது.  நானூறு மாணவர்கள் இவர்களிடம் வேதாந்த பாடம் கற்றுப் பல கிளை மடங்களை உருவாக்கியுள்ளார்கள். அந்நாளில் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகளும், ஶ்ரீ ரமண மஹரிஷிகளும் திருவண்ணாமலை மடத்தில் தினமும் இவரிடம் சம்பாஷித்து மடத்தில் தினமும் உணவு அருந்திச் சென்றுள்ளார்கள்.  மூலிகைகளைக் கொண்டு மருந்துகள் தயாரித்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்து குணப்படுத்தி வந்துள்ளார்கள். இவர் காலத்தில் கோவிலூர் மடம் சீரும் சிறப்புமாக ஆன்மிகப் பொலிவுடன் சிறந்து விளங்கியது.

அதன் பின் எட்டாவது மடாதிபதியாகக் காரைக்குடி ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஞானதேசிகர் பட்டத்துக்கு வந்தார்கள்.  

இவர் கோவிலூர், சிதம்பரம், எறும்பூர், திருக்களர், பொருள் வைத்த சேரி மானாமதுரை ஆகிய பல மடங்களுக்கும் தாமே ஏக மடாதிபதியாக இருந்து பரிபாலனம் செய்தார்கள்.  சிருங்கேரி மடாதிபதி ஒரு சமயம் இவரிடம் எல்லாத் திருப்பணிச் செலவுகளையும் கோவிலூர் மடத்தின் மூலமாகவே சிருங்கேரியில் செலவிடுகிறீர்கள்.  கோவிலூர் மடத்தையும் கவனிக்க வேண்டாமா எனக் கனிவுடன் கூறியுள்ளார்.

அதன் பின் ஒன்பதாவது மடாதிபதியாகப் பட்டத்துக்கு வந்த ஶ்ரீலஶ்ரீ ராமநாத ஞான தேசிகர் கோவிலூர் மடத்தைத் தற்கால வசதிக்கேற்ப நவீன முறையில் புதுப்பித்து இருமுறை மலாய் நாடு சென்று பொருள் ஈட்டி வந்து திருவண்ணாமலை அம்பாள் கோவிலுக்குத் தேர் செய்து வைத்தார்கள். திருவண்ணாமலையில் சேவாஸ்ரமம் நிறுவி, ஏழை மாணவர்களுக்குக் கல்வியும் உறைவிடம், உணவு, சீருடை அளித்து ஆங்கில மொழிப் பயிற்சியும் அளித்து வந்தார்கள்.  இன்று அப்பள்ளி மிகவும் வளர்ச்சியடைந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இளமையிலிருந்தே சுவாமிகளுக்கு அருணகிரி நாதரிடம் ஈடுபாடு அதிகம்.  முதன்முதலில் திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு விழா துவக்கியதோடு, ஆண்டு தோறும் அவ்விழா சிறப்புற நடத்தப் பேராதரவும் கொடுத்து வந்தார்கள்.  கோவிலூரில் இவர் காலத்தில் முகப்புத் தேர் மண்டபங்கள் பழுது பார்க்கப்பட்டன.

கோவிலூர் ஶ்ரீ ஆண்டவர் மடத்துக்குப் பத்தாவது மடாதிபதியாக ஶ்ரீலஶ்ரீ அரு.ராமநாத ஞான தேசிகர் பரிபாலனம் செய்தார்.  அதன் பின் 1986--ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16--ஆம் நாள் ஶ்ரீ காசி விஸ்வநாத ஞான தேசிகர் அவர்கள் பட்டத்துக்கு வந்தவுடன் எல்லா மடங்களையும் கோவிலூர் மடத்தின் மேற்பார்வையில் கொண்டு வந்து, அந்தந்த மடங்களின் வரவு செலவுகளைச் சீர் செய்து அந்தந்த மடமே செலவிட உத்தரவிட்டார். மாதந்தோறும் சிந்தனைப் பூங்கா நடத்த ஏற்பாடு செய்தார்.  சிதைந்து போன தேர்களைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்துள்ளார்.  வேதாந்த வகுப்புகள், மக்கள் சேவை, ஏழை மாணவர்களுக்குக் கல்வியுடன் உணவு, உடை, மருத்துவச் செலவு ஆகிய எல்லா உதவிகளையும் செய்தார்.

திருமந்திரம், சித்தர் பாடல் ஆகியவற்றில் எந்நேரமும் ஆழ்ந்த பற்றும், கற்பதும் கேட்பதும் முருகனின் அற்புதம் எனக் கந்தனின் திருமந்திரத்தை எல்லோருக்கும் உபசரிப்பார்.  தேவி, தேவி என ஆசீர்வதித்துத் திருநீறு இட்டு மனமுருக வாழ்த்துவார்.  குழந்தைகளிடம் ஆன்மிக உணர்வு வளரத் தம்பி, பாப்பா, படித்துப் பாரு எனப் புத்தகங்கள் இன்னும் பல ஆன்மிக உணர்வு கொண்ட புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்கள்.  தற்போது பன்னிரண்டாவது மடாதிபதியாகப்பொறுப்பேற்று இருப்பவர் ஶ்ரீலஶ்ரீ நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள்.  நம் நகரத்தார் பெருமக்களை, மன்னர் பின்னோராக ஆலயத்திருப்பணீகளில் ஈடுபடச் செய்தவர்களும் உலகம் முழுவதும் வேதாந்தத்தைப் பரப்பிய கோவிலூர் திருமடத்தை உருவாக்கியவர்களுமான, கோவிலூர் ஆண்டவர் என வழங்கும் ஶ்ரீலஶ்ரீ முத்திராமலிங்க ஞான தேசிக சுவாமிகளின் மகன் வழி 6 ஆவது தலைமுறைப் பேரன் ஆவார்கள் நமது நாச்சியப்ப சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


காரைக்குடியில் பிறந்த பிள்ளையார்பட்டிக் கோவிலைச் சேர்ந்த நாச்சியப்ப சுவாமிகள் தமது 15 ஆவது வயதில், காரைக்குடிக்கு இனி வருவது இல்லை என்ற வைராக்கியத்துடன் சென்னை வந்து, திருவான்மியூர் "கலாக்ஷேத்ரா"வில் திருமதி ருக்மிணி அருண்டேல் அம்மையாரின் ஆதரவில் படிப்பை முடித்து, அம்மையார் நிறுவிய ஆலமரம் போன்ற கலாக்ஷேத்ரா தொண்டு நிறுவனத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு சிறு வயது முதலே தொண்டு மனப்பான்மையுடன் வளர்ந்தவர்கள்.

அச்சுக்கலையின் நுணுக்கங்களை ஜெர்மன் நாட்டுக்குச் சென்று பயின்று கலாக்ஷேத்ராவின் ஓர் அங்கமான, "கலாக்ஷேத்ரா அச்சகம்" மற்றும் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகியாக நீண்டகாலம் பணியாற்றிப் பின்னாளில் அம்மையாரின் ஆசியோடு அதன் உரிமையாளராக ஆனார்கள்.

அச்சுக்கலையிலும், புகைப்படக்கலையிலும் கை தேர்ந்த நிலையில் வெளிநாட்டு நூல்களுக்கு இணையாக இங்கு சென்னையில் பதிப்பித்து நூல்களை அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தமது அயராத உழைப்பின் மூலம் பெரும் பொருள் ஈட்டினார்கள்.

கோவிலூர் ஆதீனமாகத் தாம் பொறுப்பேற்று இருப்பது தமக்கு குருநாதர் இட்ட கட்டளை என்ற பணிவோடும், கோவிலூர் மடத்தை மகாதேவ ஞான தேசிகர் காலத்தில் இருந்தது போல் ஆன்மிகக் கல்வி வழங்கும் தலை சிறந்த மடமாக விளங்கச் செய்ய வேண்டும் என்ற துடிப்போடும் நிர்வகித்து வருகிறார்கள்.

திருநெல்லையம்மை தம்மை இந்த நோக்கம் நிறைவேற ஒரு தொண்டனாகவே பணி செய்ய வாய்ப்புத் தந்திருக்கிறார் என்று நம்பிப் பல பணிகளைத் தொடங்கி இருக்கிறார்கள் சுவாமிகள்.

சுவாமிகள் மடாதிபதியாகப் பதவி ஏற்ற தினமே கோவிலூரில் ஒரு சிறுவர் பள்ளி தொடங்கப்பெற்றது.

குழந்தைக்கல்வியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நாச்சியப்ப சுவாமிகள் சின்னஞ்சிறு வயதில் வெறும் ஏட்டுக்கல்வி கற்றுக் கொடுப்பது மட்டும் போதாது நல்லொழுக்கம், தெய்வபக்தி, கலைத்திறமை, கைவினைத் திறன் இவற்றையும் சொல்லிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத உறுதி உடையவர்கள்.

கோவில்கள் இருக்கின்றன. மக்களுக்குப் பக்தியும் இருக்கிறது.  ஆனால் கோவிலில் பணி செய்வோர் குறைந்து வருகிறார்கள்.  போதிய ஊதியம் இன்மை தான் காரணம்.  பல்லாயிரம் ஆண்டுகளாகத் தழைத்து வேரூன்றிய கோவில் கலாசாரம் நம் கண் எதிரே மங்கிக் கொண்டு வருகிறதே எனக் கவலை கொண்ட சுவாமிகள், மேல் நாட்டினர் பலர் பொருளாதார வளர்ச்சியினால் மட்டுமே வாழ்க்கை செம்மையாக அமைய முடியாது என்பதை உணர்ந்து ஆன்மிக அனுபவத்தைத் தேடி பாரத நாட்டை நோக்கி வருகிறார்கள் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

அப்படி இருக்கும்போது நமது நாட்டில் ஆன்மிகம் தழைத்தோங்க என்னென்ன செய்ய வேண்டும்?

தவத்திரு நாச்சியப்ப சுவாமிகள் மடாதிபதியாகப் பதவி ஏற்ற மூன்று மாதத்துக்குள் கோவிலூரில் வேதாகமப் பாடசாலை, திருமுறைக்கல்லூரி, நாதசுரத்  தவில் இசைக்கல்லூரி எல்லாம் தொடங்கப்பெற்றுள்ளது.  மேலும் தேர் செய்யும் பயிற்சிக்கூடம், வாகனங்கள் செய்முறை, திருவாபரணங்கள் செய்முறை போன்றவை கற்றுக் கொடுக்க வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்துள்ளார்கள்.  தேர் வாகனக் கல்லூரி, சிற்பக்கல்லூரிகள் தொடங்கப் பெற்றன.

தென் நாட்டுக் கோவில்களும் கோவில்களைச் சார்ந்து வளர்ந்த எல்லாக் கலைகளும் மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும், நாட்டில் ஆன்மிகம் தழைக்க வேண்டும்.  இந்தியப் பண்பாடு நிலைபெற வேண்டும் என்பதை எல்லாம் குறிக்கோளாகக் கொண்டு ஶ்ரீலஶ்ரீ நாச்சியப்ப சுவாமிகள் பாடுபட்டு வருகிறார்கள்.

மேலும் கோவிலூர் மடாலயம் ஒரு பல்கலைக் கழகமாகத் திகழ வேண்டும் என்று பெரு விருப்பம் கொண்டு செயலாற்றி வருகிறார்கள்.

இந்த எண்ணத்தைச் செயலாக்கும் பொருட்டு முதலில், இந்தியப் பண்பாடு--ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Indology) என்ற ஆய்வு மையத்தை நிறுவியுள்ளார்கள்.  இதன் மூலம் நாடு தழுவிய பண்பாடுகளையும் மரபுகளையும் ஆராய்ச்சி செய்யவும் நூல்கள் வெளியிடவும், அ/றிஞர்களை ஊக்குவிக்கவும் மொழிகளையும் மற்ற பல வேறுபாடுகளையும் கடந்து இந்த ஆராய்ச்சிகள் நடைபெறவும் தவத்திரு நாச்சியப்ப சுவாமிகள் திருவுளம் கொண்டு பணி புரிந்து வருகிறார்கள்.

இதற்கு அடுத்து "சனாதன தர்ம உலகப் பல்கலைக் கழகம்" ஒன்றைக் கோவிலூரில் 250 ஏக்கர் நிலப்பரப்பிலும் ஆரம்பிக்கப் பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  சனாதன தர்மத்துக்கு உட்பட்ட எல்லாக் கலைகளையும் மொழிகளையும் இலக்கியங்களையும் பழம்பெரும் சின்னங்களையும் ஆராய்ந்து வெளியிட இப்பல்கலைக் கழகம் ஊக்குவிக்கும்.

இந்திய நன்னாட்டின் மேம்பாட்டுக்காகவும் சனாதன தர்மத்தை நிலை நிறுத்தவும் கோவிலூர் தவத்திரு நாச்சியப்ப சுவாமிகள் மேற்கொண்டுள்ள இந்தப் பணிகளுக்கு உலகம் முழுவதிலுமுள்ள அன்பர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டுகிறோம்

 

--Geetha Sambasivam (பேச்சு) 11:39, 16 பெப்ரவரி 2014 (GMT)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 30 April 2014, at 11:38. This page has been accessed 4,465 times.