வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 2

From மரபு விக்கி

Jump to: navigation, search
கோயில் திருப்பணிகள்

குருமஹாசந்நிதானம் சீர் வளர்சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் பட்டத்திற்கு வந்த பின் அவர்களுடைய பொருளுதவியாலும், அருள் ஆசியாலும் ஏராளமான அறப்பணிகள் எல்லாத்துறைகளிலும் செய்யப்பட்டுள்ளன.  

அவற்றுள் முதலில் கோயில் திருப்பணிகளைப் பார்ப்போம்.

திருவண்ணாமலை--ஈசான்ய மடம்

1.1997 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி திருவண்ணாமலை -- ஈசான்ய மடத்தில் உள்ள ஈசான்ய ஞானதேசிக சுவாமிகளின் ஜீவ சமாதியைப் பழுது நீக்கி வண்ணமுறப் புதுப்பித்துக் குடமுழுக்கு விழா நடைபெற்றது.  தற்போது ஈசான்ய ஞானதேசிகரின் சமாதி முன்னுள்ள முன் மண்டபத்தை கான்க்ரீட் தரை அமைத்து (தற்போது ஆஸ்பெஸ்டாஸ் கூரை உள்ளது) 2008--2009 இல் மறு கும்பாபிஷேஹம் நடத்துமாறு அருள் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

பொருள் வைத்த சேரி--கோவிலூர் ஆதீனம்

(கோ.ஆ.பொ.மடம்)

2. பொருள் வைத்த சேரி மடம் (கோ.ஆ.பொ.மடம்) 2002--ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அருள்மிகு செளந்தரவல்லி உடனாய சுவர்ணபுரீச்வரர் திருக்கோயில் ஏறக்குறைய ரூபாய் பதினைந்து லட்சம் செலவில் திருப்பணி செய்யப் பெற்றுக் கும்பாபிஷேஹம் செய்யப் பெற்றது.

3. அதே நன்னாளில் ஶ்ரீமத் உகந்தலிங்க ஞானதேசிக சுவாமிகளின் திருக்கோயில் திருப்பணி செய்யப் பெற்றுக் கும்பாபிஷேஹம் செய்யப் பெற்றது.

திருக்களர்--கோவிலூர் ஆதீனம், வீரசேகர ஞான தேசிகர் மடாலயம்

(கோ.ஆ.வீர.மடம்)

4. திருக்களர் மடத்தின் பொறுப்பில் இருப்பதும், நம்முடைய கிராமமுமான மருதவனம் அருள்மிகு பாலாம்பாள் உடனாய மருதவனேஸ்வரர் திருக்கோவில் ஏறக்குறையப் பத்து லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி செய்யப் பெற்றுப் புதிய துர்க்கை சந்நிதியும் உருவாக்கப் பெற்று 26--1--2004-இல் கும்பாபிஷேஹம் மிக விமரிசையாக நடைபெற்றது.

5. 2004 மே மாதம் 24 ஆம் தேதி கோவிலூர் ஆதீனம் ஐந்தாவது பட்டம் வீரசேகர ஞானதேசிக சுவாமிகளின் அதிஷ்டானக் கோவில் சுமார் 5 லட்சம் செலவில் திருப்பணி செய்யப் பெற்றுக் கும்பாபிஷேஹம் செய்யப் பெற்றது.

சிதம்பரம்--கோவிலூர் ஆதீனம் சிதம்பர சுவாமி மடம்

(கோ.சித.மடம்)

6. 2005- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஆறு லட்சம் செலவில் திருப்பணி செய்யப் பெற்றுச் சுவர்ச் சித்திரங்கள் புதுப்பிக்கப் பெற்றுக் கும்பாபிஷேஹம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் சபாபதி சுவாமிகள் மடம்

7.திருவண்ணாமலைக்கருகில் உள்ள மேட்டுப்பாளையத்தில் ஶ்ரீமத் சபாபதி சுவாமிகளின் அதிஷ்டானம் திருப்பணி செய்யப்பெற்று முன் மண்டபம் கான்கிரிட் கட்டிடமாகக் கட்டப்பெற்று--8--6--2006 அன்று கும்பாபிஷேஹம் செய்யப் பெற்றது.

எறும்பூர்

(கோ.சித.மடம்)

8. ஶ்ரீமத் தத்துவராய சுவாமிகளின் அதிஷ்டானம் மீண்டும் முழுக்கக் கற்றிருப்பணியாக  ஏறக்குறைய 28 லட்சம் செலவில் புதிய இராஜ கோபுரத்துடன் திருப்பணி செய்யப்பெற்று 4--5--2007 அன்று மிக விமரிசையாக பூஜ்யஶ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் நம் குருமகாசந்நிதானம் தலைமையில் சிதம்பரம் தீட்சிதர்களால் கும்பாபிஷேஹம் செய்விக்கப் பெற்றது.

ஶ்ரீமத் தத்துவராய சுவாமிகளின் வேதாந்த நூல்களின் பெருமை, முக்கியத்துவம் கருதி வேதாந்த சொற்பொழிவு, இன்னிசைக்கச்சேரிகளுடன் மிக மிக விமரிசையாக கும்பாபிஷேஹம் நடத்தப் பெற்றது.

தற்சமயம் நடைபெற்று வரும் திருப்பணிகள்

1.திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலமான திருக்களர்  கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு அமிர்தவல்லி உடனாய பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில்--திருப்பணி நடந்து வருகிறது.  நம் சுவாமிகளின் பொருள் உதவியால் பெரும்பாலான திருப்பணிகளும் கோயம்புத்தூர் திருப்பணிச் செல்வர் உயர்திரு வசந்தகுமார் பொருள் உதவியால் ராஜகோபுரத் திருப்பணியும், இந்து சமய அறநிலைத்துறை சார்பாக சில திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.  சர்வதாரி வரும் ஆண்டு ஆனிமாதம் 30 ஆம் தேதிக்கு 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி குட நீராட்டு விழவிற்குத் தேதி குறித்துள்ளது.

2. திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவிலுக்குப் புதிய திருத்தேர் ஒன்று இந்து சமய அறநிலைத்துறையின் பொருள் உதவியுடனும் நம் சுவாமிகளின் பொருள் உதவியுடனும் செய்யப்பட்டு வருகின்றது.

3. வளவனூர் சண்முக சுவாமி மடத்தைச் சீரமைத்துச் செய்து புதுப்பிக்க வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடுத்துவரும் உடனடித் திருப்பணிகள்

1. வரும் ஆண்டு ஆவணி மாதம் கோவிலூரில் அருள் பாலித்து வரும் அருள்மிகு திருநெல்லை அம்மன் உடனாய கொற்றவாளீசர் திருக்கோவில் கும்பாபிஷேஹத் திருப்பணி தொடங்கப் பெறும்

2. திருவண்ணாமலை ஈசான்ய ஞானதேசிகர் அதிஷ்டான முன் மண்டபத்தை கான்க்ரீட் தளமாக மாற்றி அமைத்துக் கும்பாபிஷேஹம் செய்வதற்கான வேலைகள் வரும் வைகாசி மாதம் தொடங்கப் பெறும்

கல்விப் பணிகள்

தற்போது நடந்து வரும் கல்வி நிலையங்கள்

1. ஶ்ரீ முக்திராமலிங்க ஆண்டவர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி

2. திருமுறைக் கல்லூரி

3. வேத ஆகமக் கல்லூரி

(கோவிலூரில் நடைபெறும் வேத ஆகமக் கல்லூரி தவிர , நம் குரு மகா சந்நிதானம் மேலும் பதினொரு வேத ஆகமப்  பள்ளிகட்கு ஏறக்குறைய 200 மாணவர்களுக்குப் பொருள் உதவி செய்து வருகிறார்கள்.)

4. நாதஸ்வரக் கல்லூரி

5. தவில் கல்லூரி

6. கோவில் நிர்மாணம் மற்றும் சிற்பக் கல்லூரி

7. பஞ்ச லோகக் கல்லூரி

8. தேர் வாகனக் கல்லூரி

9. 2007 ஆம் ஆண்டு முதல் --கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சிக் கல்வியியல் கல்லூரி தொடங்கப் பெற்றுள்ளது.
                 


(தொடரும்)


  
--Geetha Sambasivam (பேச்சு) 09:47, 24 டிசம்பர் 2013 (GMT)

 

 

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 25 December 2013, at 09:52. This page has been accessed 4,166 times.