வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கீரை வகைகள் 8

From மரபு விக்கி

Jump to: navigation, search

கீரை வகைகள் 8

தூதுவளைக்கீரை: இரும்புச் சத்து நிறைந்தது. தாது உப்புக்கள் உள்ளன, விட்டமின் சி இருக்கிறது. கடும் ஜலதோஷம் இருக்கையிலோ அல்லது காதில் நீர் கோர்த்துக்கொண்டு இருந்தாலோ, அல்லது ஆஸ்த்மா நோயாளியானாலோ இந்தக் கீரையை நெய்யில் வதக்கிக் கொண்டு, ரசம் வைத்தோ அல்லது சுக்கு, மிளகு, துளசி சேர்த்துக் கஷாயமோ வைத்துச் சாப்பிடலாம்.

உடல் சூடு இருந்தாலோ, மூல நோய் இருந்தாலோ இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது. நுரையீரலில் சளி இருந்தால் கரைக்கும். நரம்புகள் வலுவாகும்.

தூதுவளைக்கீரை ஒரு கைப்பிடி நெய்யில் வதக்கிக் கொண்டு அதோடு துளசி இலைகள், புதினா இலைகள், சுக்கு ஒரு துண்டு பொடியாக்கிப் போட்டு, மிளகு உடைத்துப் போட்டுக் கொண்டு ஆறு தம்ளர் நீரை விட்டுக் கொதிக்க விடவும். ஆறு தம்பளர் நீர் ஒரு தம்ளராக வற்றும்வரை கொதிக்க விட்டுப் பின்னர் அதை எடுத்துக் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கையிலேயே குடிக்கவும். தொண்டைக்கு இதமாக இருப்பதோடு இருமல், சளியும் குறையும்.

தூதுவளைக்கீரையை நெய்யில் வதக்கிக் கொண்டு, புளி ஜலம் இரண்டு கிண்ணம் சேர்த்துக்கொண்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துப் பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடவும். மிளகாய் வற்றல், துவரம்பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்துப் பொடி செய்து போடவும். நீர் விட்டு விளாவவும். நுரைத்து வருகையில் இறக்கி நெய்யில் கடுகு, கருகப்பிலை தாளிக்கவும்.


கற்பூரவல்லிக் கீரை: எங்கு வேண்டுமானாலும் வளரும் இதை ஓமவல்லி என்றும் அழைப்பார்கள். சிறு குழந்தைகளுக்கு வயிற்றுக்கு நன்மை தரும். இந்த இலைகளைப் பறித்துச் சுத்தம் செய்து பஜ்ஜி மாவில் தோய்த்துக் குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கலாம். கடும் கல் போன்ற இறுகிய சளியையும் கரைக்கும். பசியைத் தூண்டும்., இருமலைக் குறைக்கும். உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுத்து தொண்டை அடைப்பையும் நீக்கும். சளி தொந்திரவால் அவதிப்படுப்வர்களுக்கு நல்லது இது.


சோழிக்கீரை: அசைவ உணவு உண்பவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். தாது உப்புக்கள் நிறைந்தது. மலச்சிக்கலைப் போக்கி மலக்குடலை வறட்சியில்லாமல் வைக்கும். பசியைத் தூண்டும்.


ஆராக்கீரை: இதுவும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. விட்டமின் ஏ சத்து உள்ள இந்தக் கீரையைத் தொடர்ந்து உண்டால் வாயில் ருசியை அதிகரித்து செரிமானத்தை ஏற்படுத்தும்.


--Geetha Sambasivam 21:21, 27 அக்டோபர் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 27 October 2011, at 21:21. This page has been accessed 2,317 times.