வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கீரை வகைகள் 7

From மரபு விக்கி

Jump to: navigation, search
Imagesakathikeerai.jpg

கீரை வகைகள் 7

முடக்கத்தான் கீரை: முடக்கு வாதத்தைக் குணப்படுத்தும் இந்தக் கீரையில் கால்சியம் சத்து அதிகமாய் உள்ளது. மூட்டுவலி, எலும்புகளில் தேய்மானம் உள்ளவர்களுக்கு நல்லது. எலும்புகளுக்கிடையே திசுக்களை வளர்க்கும் தன்மை கொண்டது. வாய்க் குடைச்சல், வாதத்தினால் ஏற்படும் வலி, வீக்கம் போன்றவற்றைப் போக்கும்.

இந்தக்கீரையைப் பறித்து வந்து ஆய்ந்து கொண்டு நன்கு கழுவிச் சுத்தம் செய்து கொண்டு அரைத்து எடுத்துக்கொண்டு தோசை மாவில் கலந்து தோசையாகச் சுட்டுச் சாப்பிடலாம். கொஞ்சம் கசப்புத் தெரியும் என்பதால் காரமான சட்னியுடன் உண்ணவேண்டும்.

அல்லது இரண்டு கிண்ணம்புழுங்கலரிசியுடன் இரண்டு கைப்பிடிக் கீரையைக் கலந்து அரைத்தும் தோசை சுட்டுச் சாப்பிடலாம்.


சிறு கீரை: இதில் அதிக அளவுக்குப் பச்சையம், குறைவான கொழுப்புச் சத்தும், கால்சியம் சத்தும் இருக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கணையம் நன்கு செயல்பட்டு இன்சுலின் சுரக்க ஆரம்பிக்கும். போதை மருந்து, மது அருந்துவோர் பழக்கத்தை விடவேண்டுமென்றால் இந்தக் கீரையை சூப் செய்து தொடர்ந்து மூன்று, நான்கு மாதங்கள் சாப்பிட்டால் நன்கு பலன் தரும்.

கீரையை அது எந்தக்கீரையானாலும் குக்கரில் வேக வைக்கவேண்டாம். மூடி போட்டு வேக வைக்காமல் திறந்த பாத்திரத்தில் வேக வைக்கவும். கீரையில் உள்ள கிருமிகள் அப்போதுதான் அழியும். என்னதான் சுத்தம் செய்தாலும் மூடி போட்டு வேக வைத்தால் சத்துக் குறைவு. கீரையை நன்கு வேக வைத்துக்கொண்டு முடிந்தால் மத்தினால் மசிக்கலாம். இல்லை எனில் மிக்சியில் அடித்துக்கொண்டு, வெந்த பாசிப்பருப்புச் சேர்த்துக்கொண்டு, மிளகாய், துவரம்பருப்பு, தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்துவிடலாம்.

வெங்காயம், பூண்டு வதக்கியும் சேர்க்கலாம். மற்ற மருந்துகளைச் சாப்பிடுகையில் கீரையைத் தவிர்க்கவும். இது உஷ்ணத்தை அதிகரித்து, நஞ்சை முறிக்கவும்.



அகத்திக்கீரை: பலவிதமான பலன்களைக் கொடுக்கும் கீரை இது. ஆனால் ஜீரணிக்க நேரம் எடுக்கும். ஆகவே வயதானவர்களும் நோயாளிகளும் சூப்பாகக் குடிக்கலாம்.

அகத்திக்கீரைக்கு ரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. அதோடு குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மாரகளுக்குப் பால் சுரக்கும். கண் எரிச்சல், கண்வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகியவை அகத்திப்பூவைக் கண்களில் வைத்துக் கட்டிக்கொண்டால் குறையும். வைசூரி என்னும் பெரியம்மை நோய்களுக்கு அகத்திப் பட்டையைத் தண்ணீரில் காய்ச்சி வடித்துக்கொண்டு குடிநீராய்க் குடிக்கலாம். எலும்புக்கும், பல்லுக்கும் உறுதியைத் தருவதோடு, வயிற்றுப் புழுக்களை நீக்கி மலச்சிக்கலைக் குணப்படுத்தும். கீரையின் சாறில் இரண்டு சொட்டு எடுத்து மூக்கில் விட்டுக் கொண்டால் சுரம் நீங்கும். வாய்ப்புண், தொண்டைப்புண், குடல்புண் போன்றவற்றுக்கு அருமருந்து. ஆனால் மற்ற மருந்துகள் சாப்பிடுகையில் இதனைச் சாப்பிட்டால் மருந்தின் வீரியம் குறைந்துவிடும். அடிக்கடியும் இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது. வாயுக் கோளாறு உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தவிர்க்க வேண்டும்.

அகத்திக்கீரை என்று சொல்கிறோமே தவிர இது மரமாகவே காணப்படும். அகத்தின் தீ குறைவதால் அகத்தி என்ற பெயர் வந்ததாய்ச் சொல்வார்கள்.

அகத்திக்கீரையை நன்கு ஆய்ந்து, நறுக்கி வைத்துக்கொண்டு, பயத்தம்பருப்பைச் சேர்த்துக் கொண்டு நன்கு வேக விடவேண்டும். உப்புச் சேர்த்து வேக வைத்ததும், நீரை வடிகட்டிக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொண்டு, கீரையைப் போட்டுத் தேங்காய் துருவல், ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தூள் சேர்த்து வதக்கவும்.


--Geetha Sambasivam 21:06, 27 அக்டோபர் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 27 October 2011, at 21:06. This page has been accessed 3,242 times.